டி. ஜி. லிங்கப்பா - 4
வெற்றிப்பாதையில் தொடர் பயணம்.
பி. ஆர். பந்துலு தனது இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து டி. ஜி. லிங்கப்பாவை தனது படங்களுக்கு ஆஸ்தான இசை அமைப்பாளராகவே நியமித்துக் கொண்டுவிட்டார்...
பந்துலுவின் சிறப்பான குணம் என்னவென்றால் ஒருவரிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்துவிட்டார் என்றால் அதில் குறுக்கிடவே மாட்டார். ஆகவே லிங்கப்பாவுக்கு இசை அமைப்பதில் பூரண சுதந்திரம் கிடைத்ததால் "பத்மினி பிக்சர்ஸ்" நிறுவனப் படங்களில் அன்றும் இன்றும் என்றுமே அமரத்துவம் வாய்ந்த சிறப்பான பாடல்களை அவரால் தர முடிந்தது.
அதற்கு ஒரு நிலையான சான்று "அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ" பாடல்தான்.
.
"தங்கமலை ரகசியம்" - படத்தில் கு.மா. பாலசுப்ரமணியம் எழுதிய இந்த அற்புதமான பாடலை மோகன ராகத்தில் ஹிந்துஸ்தானி கலப்போடு டி.ஜி. லிங்கப்பா அருமையாக இசை கொடுக்க அமுதைப்பொழியும் குரலால் பாடலுக்கு பி. சுசீலா உயிர் கொடுத்தார் என்றால் அது மிகையாகாது.
படத்தில் இந்தப்பாடல் இரண்டு முறை இடம் பெறும். சந்தோஷமான சூழலில் ஒருமுறை, சோகமான சூழலில் ஒரு முறை என்று.
ஒரே மெட்டுத்தான். ஆனால் வாத்தியங்களை மட்டும் சற்று வேறுபடுத்தி சந்தத்தில் சிறு மாற்றம் கொடுத்து பாடல் காட்சியின் சூழலை நம் மனதில் உலவ விட்டிருப்பார் லிங்கப்பா.
"மனதில் ஆசையை மூட்டிய பின்னே மறைந்தே போய்விடலாமோ" என்ற வரிகளை இன்பச் சூழலில் பாடும்போது வரிகளுக்கு பின்னே வரும் சுசீலாவின் அருமையான துரிதகால ஹம்மிங் துன்பச் சூழலில் பாடல் ஒலிக்கும் போது தவிர்க்கப்பட்டு இருக்கும்.
இன்பச் சூழலுக்கு வயலின், மற்றதற்கு ஷெனாய் என்று வாத்தியங்களை மட்டும் மாற்றிக் கையாண்டு ஒரே மோகன ராகத்தில் இரு வேறுபட்ட உணர்வுகளை லிங்கப்பா உலவ விட்டிருப்பார். பி. சுசீலாவின் புகழ் மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரக்கல்லாக இந்தப்பாடல் அமைந்தது.
தங்கமலை ரகசியம் ஹிந்திப் பதிப்புக்கும் டி.ஜி. லிங்கப்பாவே இசை அமைத்தார். ஹிந்தியில் வேறு எந்தமெட்டும் எடுபடாத காரணத்தால் தமிழில் கையாண்ட அதே மெட்டில் ஹிந்திப் படத்துக்கும் இசை அமைக்க ஹிந்தியிலும் "அமுதைப் பொழியும் நிலவே" அமோக வரவேற்பை பெற்றது. ஹிந்தியிலும் பி. சுசீலாவே "அமுதைப் பொழியும் நிலவை" அழைத்தார்.
இந்தப் பாடல் தவிர "தங்கமலை ரகசியத்தில்" இடம் பெற்ற இன்னொரு அருமையான டூயட் பாடல் டி.எம். சௌந்தரராஜன் - பி. லீலாவின் குரலில் மலர்ந்த "இக லோகமே இனிதாகுமே" - என்ற இனிமையான பாடல்.
அடுத்து லிங்கப்பாவுக்கு சபாஷ் போடவைத்த படமாக வந்தது "சபாஷ் மீனா". இதுவும் பி. ஆர். பந்துலுவின் படம் தான்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற "சித்திரம் பேசுதடீ" - கு. மா. பாலசுப்ரமணியம் - டி.ஜி. லிங்கப்பா இணைப்பில் இடம் பெற்ற சிந்தையை மயக்கும் ஒரு பாடலாக அமைந்தது.
படத்தில் இந்தப்பாடல் ஆண்குரலில் ஒருமுறையும், பெண் குரலில் ஒரு முறையும் இடம் பெறும். ஆண்குரலுக்கு டி. எம். எஸ். அவர்களும், பெண் குரல் பாடலை சூலமங்கலம் ராஜலக்ஷ்மியும் பாடினார்கள்.
பெண் குரலில் இடம் பெற்ற பாடலை "தனக்கு மிகவும் பிடித்த பாடலாக" கவிஞர் வாலி கூறியிருக்கிறார். செவிக்கினிய "மிஸ்ர பெஹாக்" ராகத்தில் இந்தப்பாடலை வடிவமைத்திருந்தார் லிங்கப்பா. பட்டி தொட்டி எங்கும் அமோக வரவேற்பை அறுவடை செய்த பாடலாக இது அமைந்தது.
இந்தப்படத்தில் தனக்கு ஒரு மாறுபட்ட மெலடி பாடல் ஒன்று வேண்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் விரும்பினார். அவரது விருப்பப்படியே பாடலைத் தர இசைந்த லிங்கப்பா அவரிடம், "அந்தப் பாடலை டி.எம்.எஸ். பாடமாட்டார். வேறு ஒரு வித்யாசமான குரலைத்தான் பாடவைப்பேன். சம்மதமா?" என்று சிவாஜி கணேசனிடம் நிபந்தனை விதித்தார்.
"நீ யாரை வேணுமாலும் பாட வச்சுக்க. எனக்கு வேண்டியது பாட்டுத்தான்" என்றார் சிவாஜி.
அதன்படி டி. ஏ. மோதி - பி. சுசீலா இணைந்து பாடிய "பாகேஸ்ரீ" ராகப் பாடலான "காணா இன்பம் கனிந்ததேனோ" என்ற அருமையான பாடலை வடிவமைத்துக்கொடுத்தார் லிங்கப்பா.
சபாஷ் மீனா படத்தில் இன்னொரு குறிப்பிடத்தக்க பாடல் "ஆசைக்கிளியே கோபமா." என்ற பாடல். சொந்தக்குரலில் பாடி நடிப்பவரான சந்திரபாபுவுக்கு சீர்காழி கோவிந்தராஜனையும், சிவாஜிக்கு டி.எம்.எஸ் அவர்களையும் லிங்கப்பா பாட வைத்தார். நகைச்சுவைப் பாடலான இதுவும் அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது.
கிட்டத்தட்ட இதே சமயத்தில் தான் வெளிப்படமான "எங்கள் குடும்பம் பெரிசு" என்ற படத்துக்காக "ராதா மாதவ வினோத ராஜா" என்ற பாடலை டி.எம். சௌந்தரராஜன் - பி.சுசீலாவை இணைத்துப்பாட வைத்தார் டி.ஜி. லிங்கப்பா. அனைவராலும் பேசப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
இதே சமயத்தில் வெளிவந்த இன்னொரு படம் தான் "தேடி வந்த செல்வம்". இந்தப் படத்தில் இடம் பெற்ற "பங்குனி போய் சித்திரை வந்தா பத்திரிக்கை வந்திடும்" என்ற டி.எம். எஸ். - பி.சுசீலா பாடிய பாடலும் லிங்கப்பாவின் இசையில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு பாடலாக அமைந்தது.
சபாஷ் மீனாவின் வெற்றிக்குப் பிறகு பி. ஆர். பந்துலு தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் படங்களை தயாரிக்க ஆரம்பித்தபோது கன்னடத் திரை உலகுக்கு டி. ஜி. லிங்கப்பாவை அறிமுகப் படுத்தினார்.
கன்னடத் திரை உலகம் டி. ஜி. லிங்கப்பாவை மனம் நிறைந்து வரவேற்று தன்னுடன் ஸ்வீகரித்துக் கொண்டது.
சிகரம் தொடுவோம்...
|