இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 12
"மந்திரி குமாரி" என்று படத்தின் பெயரைச் சொன்னதுமே ஐம்பது, அறுபது, எழுபதுகளில் மட்டும் அல்ல இன்றும் கூட நம் உதடுகள் உடனே "வாராய் நீ வாராய்" என்று பாட ஆரம்பித்துவிடும்.
அந்த அளவுக்கு மக்கள் மனத்தில் பசுமையாக இடம் பிடித்த ஜி. ராமநாதனின் பாடல் இது. கதை அமைப்பை அப்படியே படம் பிடித்துக் காட்டும் கவிஞர் மருதகாசியின் சிலேடை நயம் மிக்க வரிகளுக்கு தனது இசையால் மகுடம் சூட்டி இருக்கிறார் ஜி. ராமநாதன். முதல்முதலாக ஜி.ராமநாதனின் இசையில் பாடவந்த பின்னணிப் பாடகி திருமதி. ஜிக்கிக்கு இந்தப் படத்தின் மூலம் மக்கள் மனதில் நிலையான ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார் ஜி.ராமநாதன். அதுவும் எப்படி.. ?
அதற்கு முன்பாக 1948 -இல் வெளிவந்த "ஞான சௌந்தரி" படத்தில் சிறுவயது கதாநாயகிக்காக பாடிய சிறுமி ஜிக்கியின் குரலை அதிலும், அடுத்து வந்த பந்துலம்மா, தியாகய்யா, மனதேசம் முதலான தெலுங்கு படப் பாடல்களிலும் கேட்டபோது.. அதில் இருந்த ஜீவன் ராமநாதனை கவர்ந்தது.
அதுவரை சிறுவயது கதாபாதிரங்களுக்கே பாடிவந்த அந்த சிறுமியை "மந்திரி குமாரி" படத்தில் கதாநாயகிக்கு முழுப் பாடலையும் பாட வைப்பது என்று முடிவெடுத்த
ராமநாதன் அந்தச் சின்னப்பெண்ணை சேலத்துக்கு வரும்படி தந்தி மூலம் தகவல் அனுப்பினார்.
|
கதாநாயகிக்கு பின்னணி பாட வந்திருக்கும் அந்த பதின்மூன்று வயதுப் பெண்ணை பார்த்ததும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்துக்கு புருவம் சுருங்கியது.
"இந்தச் சின்னப்பெண்ணா ஹீரோயினுக்கு பாடப்போகிறாள்?" - சந்தேகத்துடன் கேட்டார் அவர்.
"ஆமாம். இவள் குரல்லே நான் எதிர்ப்பர்க்கிற ஜீவன் இருக்கு. நான் போட்டிருக்குற டியூன்களுக்கும் , சங்கதிகளுக்கும் இவளுடைய சாரீரம் தான் சரியா இருக்கும். நான் சொல்லிக்கொடுக்கிற சங்கதிகளை இவளாலே நன்னா பாடமுடியும்.
எதிர்காலத்துலே இவ ஒரு பெரிய பாடகியா வருவா.." அடித்துப் பேசி பலமாக சிபாரிசு செய்து ஜிக்கியை பாடவைத்தார் ஜி. ராமநாதன்.
ஏற்கெனவே மந்திரி குமாரி படத்தில் பாடுவதற்காக அப்போது பிரபலமான பின்னணிப் பாடகிகள் இருந்தனர். கே.வி. ஜானகி, யு.ஆர். சந்திரா, ஏ. பி. கோமளா, பி. லீலா, இவர்களுக்கெல்லாம் மேலாக எம்.எல். வசந்த குமாரியும் இருந்தார். அவர்களை எல்லாம் விடுத்து அந்த பதின்மூன்று வயது சின்னப் பெண்ணை கதாநாயகிக்கு பாடவைக்கவேண்டும் என்றால் - அதுவும் ராமநாதன் போடும் சங்கதிகளை எல்லாம் அவளைப் பாடவைக்கவேண்டும் என்றால் அதற்கு எப்படிப்பட்ட நம்பிக்கை வேண்டும்.? அந்த நம்பிக்கை ஜி. ராமநாதனுக்கு இருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.
பாடல் பதிவில் ராமநாதன் சேர்க்கும் சங்கதிகள் .. அவற்றைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும். தேர்ந்த இசை வல்லுனர்களால் மட்டுமே பாட சாத்தியமானவை அவை. அனாயாசமாகப் பாடிக்காட்டுவார் அவர். அவர் பாடியதில் எதை விடுவது, எதைப் பாடுவது என்று பாடகர் திக்குமுக்காடிப்போவார். உச்சஸ்தாயியில் சங்கதிகள் வைப்பார் அவர். ஒன்றில் கீழிருந்து மேலே புரளும் குரல் மற்றதில் மேலிருந்து கீழே வரவேண்டும். "இது உனக்கு வராது. ரெண்டு நாள் ப்ராக்டிஸ் பண்ணிட்டு வா." என்று ஜிக்கியிடம் அவர் சொன்னால் உடனே அவரோ, "எனக்கா சார் வராது. இப்பவே பாடிக்காட்டறேன் பாருங்க." என்று சொல்லிவிட்டு அங்கேயே பலமுறை முயற்சி செய்து சரியாக பாடிக்காட்டி அவரிடம் பாராட்டை வாங்கி விடுவார்.
ஜிக்கியுடன் இணைந்து பாடியவர் திருச்சி லோகநாதன். "என்னோட கற்பனைகளை நூத்துக்கு நூறு அப்படியே குரலில் வடிப்பவன் இந்த லோகு" என்று ராமநாதனின் பாராட்டுக்கும், பேரன்புக்கும் பாத்திரமான பாடகர்.
மந்திரி குமாரியில் ஜிக்கியும் திருச்சி லோகநாதனும் இணைந்து பாடிய "உலவும் தென்றல் காற்றினிலே" பாடலும், "வாராய் நீ வாராய்" பாடலும் படம் வெளிவந்து அறுபது ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இன்றும் நிலைத்திருக்கின்றன என்றால்.. அதற்கு காரணம் ஜி. ராமநாதன் தான்.
இந்த " வாராய் நீ வாராய்" பாடலையே எடுத்துக்கொள்வோமே!
கதாநாயகியின் கணவன் அவளை வஞ்சகமாக மலை உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அவளை அதல பாதாளத்தில் தள்ளிக் கொலை செய்யத் திட்டம் தீட்டி அவள் மீது அன்பாக இருப்பது போல நடித்து ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்வதுபோல காட்சி அமைப்பு.
"வாராய் நீ வாராய்" என்று பல்லவி ஆரம்பாகிறது கிடாரின் அதிர்வுடன்.
"போகும் இடம் வெகு தூரமில்லை” என்று தொடரும் இடத்தில் வெளிப்படும் தபேலாவின் தாளக்கட்டு இருவரின் உள்ளத்திலும் ஏற்படும் சந்தோஷத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஆம். இருவர் மனத்திலும் சந்தோஷம் தான். ஆனால் அதற்கான காரணங்கள் தான் வேறு.
அதுவரை தன்னிடம் பாராமுகமாக இருந்த கணவன் மனம் மாறி உல்லாசமாக வெளியே அழைத்துச் செல்வதால் அந்த அப்பாவி மனைவியின் மனதில் உற்சாகம்.
"இன்றோடு இவளை தொலைத்து தலை முழுகி விட்டால் நாளை அரசகுமாரியை மணந்து கொண்டு புதுவாழ்வு தொடங்கலாம்" - என்ற கற்பனை தந்த உற்சாகம் அவனுக்கு.
இருவரின் உற்சாகமும் தாளக்கட்டில் பிரதிபலிக்கும் விதமாக ஜி. ராமநாதன் அமைத்திருக்கும் அழகே அலாதி. தேர்ந்தெடுத்திருக்கும் ராகமோ அவருக்கு மிகவும் பிடித்தமான "பீம்ப்ளாஸ்" . ராமநாதனின் உற்சாகத்துக்கு கேட்கவா வேண்டும்?
இதில் இந்த "வாராய் நீ வாராய்" என்ற பல்லவிக்கு ராமநாதன் ஒவ்வொரு முறையும் போட்டிருக்கும் சங்கதிகள் திருச்சி லோகநாதனின் குரலில் ஒவ்வொருமுறையும் வெளிப்படும்போது ஒவ்வொரு பாவனை காட்டும் வண்ணம் அருமையாக அமைத்திருக்கிறார் இசைச் சக்கரவர்த்தி ஜி.ராமநாதன்.
"அவளை அவன் அன்போடு அழைத்தால் தானே வருவாள். தன் எண்ணமும் ஈடேறும்." ஆகவே முதல் "வாராய்" அன்பு பொங்க அழைப்பது போல சங்கதி.
"இதனினும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய். அன்பே ... நீ.. வாராய்" என்று அழைக்கும் போது தன் திட்டம் விரைவில் பலிக்கப் போகிறது என்ற எண்ணம் தந்த உற்சாகம் இந்த முறை “வாராய்” என்று இழுக்கும்போது வெளிப்படுகிறது.
அவனுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்காமல் நிதானமாக இயற்கை அழகை ரசித்தபடி அவள் வருவதால் ஏற்படும் காலதாமதம் அவனை அவசரப் படவைக்கிறது. அதனால் ஏற்படும் எரிச்சலால் குரல் உயர்கிறது.
"முடிவிலா மோன நிலையை நீ மலை முடியில் காணுவாய் .. அங்கே......வாரா..ஆ.. ய். " என்று அழைக்கும் போது ஒரு அவசரம் வெளிப்படும் "வாராய்".
இப்படி உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தும் வண்ணம் மருதகாசியின்
சிலேடை நயம் மிக்க வரிகளுக்கேற்ப ஜி. ராமநாதனின் "பீம்ப்ளாஸ்" கொஞ்சுகிறது. குழைகிறது. அவசரப்படுத்துகிறது. கேட்பவர் மதியையும் மயக்குகிறது. (இந்தக் காட்சியின் ஜே. ஜி. விஜயத்தின் அருமையான ஒளிப்பதிவு - அதுவும் அலாதி அழகுதான்.)
ஆனால் இந்தப் பாடல் பதிவாக்கப்பட்டு காட்சியும் படமாக்கப் பட்டபிறகு ஒரு திடீர் சோதனை ஒன்று வந்தது.
படத்தின் "ரஷ்" பதிவைப் பார்த்த அதிபர் சுந்தரம் அவர்களுக்கு உச்ச கட்ட காட்சிக்கு முன்பாக வரும் இந்தப் பாடல் அதன் வேகத்துக்கு ஒரு தொய்வை ஏற்படுத்துவதாக ஒரு சந்தேகம் தோன்றியது.
"இந்தப் பாட்டு ஸீன் வேண்டாம். கட் பண்ணிடலாம்." –
என்றார் நிர்த்தாட்சண்யமாக. அதிர்ந்து போனார் ஜி. ராமநாதன்.
"அருமையா எழுதி இருக்கார் மருதகாசி. உயிரைக்கொடுத்து லோகநாதன் உழைச்சு பாடி இருக்கான். அந்த சின்னப்பொண்ணு ஜிக்கியுமே பாவம் ரொம்ப உழைச்சுப் பாடி இருக்கா. பாட்டும் நல்லா வந்திருக்கு. இதைப் போய் நீக்குவதாவது? '" - உழைத்தவர்களுக்கு தானே தெரியும் அதன் அருமை.
"இல்லை. இல்லை.. இது இருக்கட்டும். ஜனங்க ரொம்ப ரசிப்பாங்க. இந்தப் பாட்டாலே தான் படமே ஜெயிக்கும்." என்று வாதாடினார் அவர்.
சுந்தரம் மசிவதாக இல்லை. ராமநாதனும் விடுவதாக இல்லை.
கடைசியாக "ஒண்ணு பண்ணுங்கோ. முதல் நாள் மட்டும் இந்தப் பாட்டு ஸீன் படத்துலே இருக்கட்டும். ஜனங்க ரசனை எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். அவங்களுக்கு பிடிக்கலை என்று தோன்றிவிட்டால் எடுத்துவிடலாம்." என்று கெஞ்சாத குறையாக கேட்டுக்கொண்டார் ஜி. ராமநாதன்.
அரை மனதுடன் சம்மதித்தார் சுந்தரம்.
அந்த "முதல் நாள்" வந்தது. அதற்கு முந்தைய நாள் இரவு வரை ராமநாதன் தூக்கத்தை தொலைத்திருப்பார் என்பது நிச்சயம்.
ஆனால்.. முதல் நாள் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் "வாராய் நீ வாராய்' என்று பாடிக்கொண்டே சென்றபோது அந்தப் பாடலில் சம்பந்தப் பட்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருந்தது.
அனைவரின் வரவேற்பையும் பெற்றுவிட்ட மாபெரும் வெற்றிப்பாடலாக - மந்திரி குமாரி என்றால் உடனே "வாராய் நீ வாராய்"தான் என்று சொல்லும்படி பாடல் அமைந்து விட்டது. (http://www.youtube.com/watch?v=yty0qfGTG18)
இதே போல திருச்சி லோகநாதனும் சிக்கியும் இணைந்து பாடிய இன்னொரு வெற்றிப்பாடலான "உலவும் தென்றல் காற்றினிலே" பாடலும் இன்றுவரை மாறாமல் பசுமையான இளம் தென்றலாக நினைவலைகளில் உலவி வந்து கொண்டிருக்கிறது.
ஆம். தென்றலுக்கு வயதேது..?
******
முன்பு "பொன்முடி" படத்தில் பாடுவதற்காக முதலில் அழைக்கப்பட்டு பிறகு திருப்பி அனுப்பப் பட்ட டி.எம். சௌந்தரராஜனுக்கு சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் கதவு "மந்திரி குமாரி"க்காக மறுபடியும் திறந்து கொண்டது.
ஜி.ராமனாதனின் இசை அமைப்பில் "அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே எண்ணம் கொண்ட பாவிகள் மண்ணாய்ப் போக நேருமே" என்ற விருத்தம் பாதி, தாளக்கட்டு பாதி என்று அமைந்த அசரீரிப் பாடல் ஒன்றைப் பாடினார்
டி.எம். சௌந்தரராஜன்.
அசரீரிப் பாடல் என்றால் .. ஐம்பதுகளில் தொடங்கி இன்று வரை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சம்பிரதாயங்களில் இந்த அசரீரிப் பாடலும் ஒன்று.
பெரும்பாலும் சோகக் காட்சிகளில் சோகத்தின் தாக்கத்தை அதிகமாக்க பயன்படுத்தப் பட்டுவந்த பாடல் காட்சி அமைப்பு இது.
நாயகனோ நாயகியோ சோகத்தில் மிதக்கும் போது அவர்களுக்கு பதிலாக பின்னணியில் பாடல் ஒலிக்குமே அதுதான் அசரீரிப் பாடல். (இப்போது காதல் டூயட்களுக்கும்
கூட அசரீரிப் பாடல் பயன்படுகிறது. தமிழே தெரியாத நட்சத்திரங்களின் தப்பும் தவறான உதட்டசைவைத் தவிர்க்க இது ஒரு வரப்பிரசாதம். ஏதோ..செம்மொழியான தமிழ் மொழிக்கு அவர்களால் முடிந்த ஒரு சிறு தொண்டு!)
இந்த வகையான பாடலைத்தான் டி.எம்.எஸ். அவர்கள் ஜி. ராமனாதனின் இசையில் முதல் முதலாக பாடினார்.
இந்தப் பாடல் பதிவின் போதும் டி.எம்.எஸ். அவர்களின் குரலில் பிசிறு இருப்பதாகவும், அது பதிவு செய்யவே லாயக்கற்ற குரல் என்றும் ஒலிப்பதிவாளர் கூற அதனை ஏற்க மறுத்து டி.எம். சௌந்தரராஜனைப் பாடவைத்தார் ஜி. ராமநாதன்.
ஆகக்கூடி 1950ஆம் ஆண்டு வெளிவந்த பகுத்தறிவுப் பிரச்சாரப் படமான - மந்திரி குமாரி - அமோக வெற்றி பெற்றது.
ஜி.ராமனாதனின் புகழ்க் கொடிபட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்தது.
அதன் விளைவு - தொடர்ச்சியாக மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார் ஜி. ராமநாதன். அவர்களது அடுத்த தயாரிப்பான "தேவகி" யில் "பேரின்பமே வாழ்விலே " என்ற பி.லீலா - திருச்சி லோகநாதனின் இணைப்பாடல் - மற்றொரு உற்சாகமான பாடல். ஜி. ராமனாதனின் அபிமானத்துக்குரிய "பீம்ப்ளாஸ்" ராகத்தில் அமைந்த இன்னொரு ஏ-கிளாஸ் பாடல்.
சற்றேறக்குறைய அதே காலகட்டத்தில் சிறையில் இருந்து விடுதலையான எம்.கே. தியாகராஜ பாகவதர் தன்னை மீண்டும் திரை உலகில் நிலை நிறுத்திக்கொள்ள சொந்த தயாரிப்பில் இறங்கினார்.
அவரது "ராஜமுக்தி" சி. ஆர். சுப்பராமனின் இசையில் வெளிவந்தது. அருமையான இசை இருந்தும் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
அடுத்து பாகவதர் தயாரித்த "சியாமளா" படத்துக்கு ஜி. ராமநாதன் தான் இசை அமைத்தார். ஆனால் தனியாக அல்ல. டி.ஏ. கல்யாணத்துடன் இணைந்து. தயாரிப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக படம் பாகவதருக்கு பலத்த அடியைக் கொடுத்தது.
ஆனால் இதிலும் ஜி. ராமநாதன் தன்னுடைய தனி முத்திரையை பதிக்கத் தவறவில்லை. வெற்றிப்பாதையில் பீடு நடை போட்டுக்கொண்டிருந்தார் ஜி. ராமநாதன்.
ஆனால் அவரை அப்படியே விட்டுவிட மனம் இல்லாத விதி அவரை சறுக்க வைப்பதற்காக தனது வேலையை செய்ய ஆரம்பித்தது.
சொந்தப் படம் எடுக்கும் ஆசை ஜி. ராமநாதனுக்கு வந்தது. இன்னொரு தயாரிப்பாளருடன் பாகஸ்தராக இணைந்து "ஜமீன்தார்' என்ற படத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ராமநாதன். படம் சரியாகப் போகவில்லை.
அவரது நல்ல காலம் .. அதில் அவருக்கு பெரிதாக பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை.
ஆனால் அதோடு நிற்காமல், "இந்த கூட்டுத் தயாரிப்பின் மூலமாக நமக்கு நல்ல அனுபவம் கிடைத்து விட்டிருக்கிறது. ஆகவே நாமே நேரடித் தயாரிப்பில் இறங்கினால் என்ன?" என்று நினைத்தவராக நேரடியாகவே படத்தயாரிப்பில் இறங்க ஆரம்பித்தார் ராமநாதன்.
"புது யுகம்" - ஜி.ராமனாதனின் சொந்தப் படம் பூஜை போடப்பட்டு பாடல் பதிவு ஆரம்பமானது.
தஞ்சை ராமையாதாஸ் எழுதிய நகைச்சுவைப் பாடல் தான் முதலில் பதிவு செய்யப்பட்டது.
டி.எம். சௌந்தரராஜன், எஸ்.சி. கிருஷ்ணன், ராமநாதனின் உதவியாளர் வி.டி. ராஜகோபால் ஆகியோர் சேர்ந்து பாடிய பாடலுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார் ஜி. ராமநாதன்.
பாடலின் பல்லவி இதுதான்.. "பைசாவும் நாஸ்திதான். பாக்கெட்டும் காலிதான்."
பின்னால் இப்படி ஒரு நிலை ஏற்படப் போகிறது எனபது தெரிந்திருந்தால் இப்படி ஒரு பாடலை இசை அமைத்து தனது சொந்தத் தயாரிப்பை ஜி. ராமநாதன் தொடங்கி இருப்பாரா என்ன?
சிகரம் தொடுவோம்...
|