இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 11
"அவருக்கு சில ராகங்கள் பிடிக்கும் என்பது போல ராகமாலிகைகள் அமைப்பதும் மிகவும் பிடிக்கும். ஒரு ராகத்திலிருந்து இன்னொரு ராகத்துக்கு மாறும் வழி மிக நேர்த்தியாக இருக்கும்." - சென்னைப் பல்கலைக் கழக இசைப் பேராசிரியை டாக்டர் திருமதி. பிரமீளா குருமூர்த்தி. (ஆதாரம் : வாமணன் அவர்கள் எழுதிய சங்கீத சக்ரவர்த்தி ஜி. ராமநாதன்
|
டி. எம். சௌந்தரராஜன் - ஐம்பதுகளில் தொடங்கி எழுபதுகளின் இறுதிவரை தமிழ்த் திரை உலகையே தனது இசையால் வசமாக்கிகொண்ட பாடகர். முதல் முதலாக ஜி. ராமனாதனின் இசையில் "சுதர்சன்" படத்தில் தான் குழுப் பாடகர்களுள்
ஒருவராக தனது திரை இசைப் பயணத்தை தொடங்கினார்.
அந்நாளில் பிரபலமாக இருந்த கதாநாயகன் நரசிம்ம பாரதி இவரது நண்பர். இருவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர் கதாநாயகனாக நடித்த "கிருஷ்ண விஜயம்" படத்தில் நரசிம்மபாரதிக்கு பின்னணி பாடும் வாய்ப்பு கிடைத்தது.
தனது படங்களில் தொடர்ந்து தனக்கு பின்னணி பாட சௌந்தரராஜனையே பரிந்துரைப்பதாக வாக்களித்த நரசிம்மபாரதி அதன்படியே நடக்கவும் செய்தார்.
அது கதாநாயகர்களின் ஆட்சி ஆரம்பித்த காலகட்டமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நரசிம்மபாரதி அப்படி ஒரு வாக்குறுதியை சௌந்தரராஜனுக்கு கொடுத்திருக்க முடியாது.
வருங்காலத்தைப் பற்றி வளமான கற்பனைகளோடு சேலம் வந்து சௌந்தரராஜனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
"பொன்முடி" படத்தில் இடம் பெறும் பாடல்களில் கதாநாயகனுக்கான அனைத்துப்
பாடல்களையும் இசை அமைப்பாளர் ஜி. ராமநாதன் அவர்களே பாடவிருப்பதாகவும்
அடுத்த படத்துக்கு சொல்லி அனுப்புவதாகவும் கூறி சௌந்தரராஜனை திருப்பி அனுப்பி விட்டார்கள்.
மற்ற பட நிறுவனங்களுக்கும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்கும் அதுதான் வித்தியாசம். யாருடைய பரிந்துரையும் அங்கு ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. அதிபர்
சுந்தரத்தைத் தவிர வேறு யாருடைய அதிகாரமும் அங்குசெல்லாது. படைப்பாளிகளுக்கு
சுதந்திரம் கொடுக்கும் அதே நேரத்தில் அவர்களுடைய எல்லையையும் துல்லியமாக வகுத்து வைத்திருந்தார் டி.ஆர். சுந்தரம். எந்த ஒரு விஷயத்திலும் கருத்துக்களை சொல்ல உரிமை உண்டு. ஆனால் முடிவெடுக்கும் உரிமை மட்டும் அவருக்கே. அதே சமயம் ஒருவர் சொல்வதில் நியாயம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள அவர் தயங்க மாட்டார்.
அதனால் தானோ என்னவோ.. பொன்முடி படத்தில் கதாநாயகனுக்கான அனைத்து பாடல்களையும் இசை அமைப்பாளர் ஜி. ராமநாதனும் நாயகிக்காக டி.வி. ரத்னமும் பாடுவது என்று தீர்மானமானது. விளைவு.. டி.எம். சௌந்தரராஜன் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டது.
"பொன்முடி" -ஐம்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த இந்தப் படம் ஏற்படுத்திய பரபரப்பு இருக்கிறதே.. அப்பப்பா!
படத்தில் சிறப்பான அம்சங்கள் இருந்த அதே நேரத்தில் "என்ன இது? இப்படியா?" என்று புருவம் சுருங்க வைத்த விஷயமும் இருந்தது.
முதலில் சிறப்பம்சங்களை பட்டியலிட்டு விடுகிறேன்.
புரட்சிக்கவி பாரதிதாசன் எழுதிய பிரபலமான கவிதை நடையில் அமைந்த குறுநாவலே "பொன்முடி" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.
தனது படைப்பிற்கு பாரதிதாசன் அவர்கள் தந்திருந்த தலைப்பு "எதிர்பாராத முத்தம்".
அதே தலைப்பில் படம் எடுத்தால் படத்தை மக்கள் - குறிப்பாக - பெண்கள் நிராகரித்துவிடுவார்கள் (நான் சொல்வது 1950இல்.) என்பதால் கதாநாயகனின் பெயரான "பொன்முடி" என்பதையே படத்தின் தலைப்பாக வைத்து தயாரித்தது மாடர்ன் தியேட்டர்ஸ்.
கதை திரைக்கதை வசனம் எழுதியதும் பாரதிதாசனே. நல்ல ஆற்றொழுக்கு போன்ற எளிய அதே சமயம் கருத்தாழம் மிக்க வசனங்கள் படத்தின் பலமாக இருந்தது. ஆனால் பாடல்களை பாரதிதாசன் எழுதவில்லை.
முதல் முதலாக மாடர்ன் தியேட்டர்ஸில் கவி கா. மு. ஷெரீப் அவர்களும் பாடலாசிரியர் மருதகாசி அவர்களும் கால் பதித்ததும் இந்தப் படத்தின் மூலம் தான். ஆம்.. இவர்கள் இருவரும் தான் பாடல்களை எழுதினர்.கதாநாயகனாக நரசிம்மபாரதியும், அவருக்கு இணையாக மாதுரிதேவியும் நடித்தனர். நகைச்சுவைக்கு காளி என். ரத்தினம். இசை
அமைத்து பாடியவர் ஜி. ராமநாதன். பெண் குரலுக்கு டி.வி. ரத்னம். படத்தை இயக்கியவர் எல்லிஸ். ஆர். டங்கன். ஆம்."மீரா", "ஹரிதாஸ்" படங்களை இயக்கிய அதே டங்கன்தான்.
படத்துக்கு ஜே. ஜி. விஜயம் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். சமீபத்தில் எனக்கு மிகவும் பரிச்சயமான - ஐம்பதுகளில் இளைஞராகஇருந்த தர்மபுரியைச் சேர்ந்தவருமான திரு. ராமமூர்த்தி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அவரிடம்பொன்முடி
படத்தை பற்றி எதேச்சையாக குறிப்பிட்டேன். உடனே அவர் கண்கள் அகல சொன்ன முதல் வார்த்தையே, "பொன்முடியா? அந்தப் படத்துலே ஜே. ஜி. விஜயத்தோட காமெரா வொர்க் பிரமாதம் சார்."
அசந்து போனேன் நான். பிறகென்ன?
ஐம்பதுகளுக்கு பிறகு இன்றுவரை தமிழ் சினிமா தனது எழுபத்தைந்து ஆண்டு காலத்தை பூர்த்தி செய்தாகிவிட்டது. எத்தனையோ படங்கள் - எத்தனையோ ஒளிப்பதிவாளர்கள் வந்துவிட்டனர். அறிவியல் வளர்ச்சி ஒளிப்பதிவுத் துறைக்கு எத்தனையோ அதிநவீன
முன்னேற்றங்களை கொண்டுவந்து விட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் - 1950 -இல் வெளியான ஒரு திரைப்படத்தின் ஒளிப்பதிவு - அதுவும் கருப்புவெள்ளைப் படத்தின் ஒளிப்பதிவு - இன்றைக்கும் மறக்க முடியாமல் படத்தின் பெயரைச் சொன்னதுமே "பளிச்"சென்று மின்னல் வெட்டியது போல ஒரு ரசிகனின் நினைவுத் திரையில் நிழலாடுகிறது என்றால்..அசந்து போகாமல் இருக்கமுடியுமா?
இந்த இடத்தில் இன்னொன்றையும் கண்டிப்பாக நினைவில் கொள்ளவேண்டும். இப்போது தான் பத்திரிகைகள் தமது திரை விமர்சனங்களில் தொழில் நுட்ப நுணுக்கங்களையும் குறிப்பிட்டு விமர்சனம் செய்கின்றன.
ஆனால் அந்த நாளில் வெளிவந்த பட விமர்சனங்களைப் பார்த்தோமென்றால் கதாநாயகன், நாயகியின் நடிப்பு, கதை அமைப்பு ஆகியவற்றைச் சுற்றியே இருக்கும். பாடல்களைப் பற்றி எழுதும் போதுகூட பொத்தாம்பொதுவாகத்தான் குறிப்பிட்டு எழுதுவார்களே தவிர இசை அமைப்பாளரின் திறமையை - அவர்கள் கையாண்ட இசை நுணுக்கங்களைப் பற்றியெல்லாம் கூட - இப்பொழுது எழுதுகிற அளவுக்குகூட எழுதமாட்டார்கள். (சந்தேகம் இருந்தால் இப்போது ஆனந்த விகடனில் வரும் "பொக்கிஷம்" பகுதியில் இடம்பெறும் திரை விமர்சனங்களை படித்தால் நமக்கே இது விளங்கும்.)
மக்களை அதிகமாக ஈர்க்ககூடிய பாடல்களுக்கே இந்த நிலை என்றால் மற்ற "டெக்னிக்கல்" அம்சங்களைப் பற்றியெல்லாம் எழுதி அவற்றை மக்கள் மனதில் பதியவைப்பது என்பது கனவில் கூட கற்பனை செய்யமுடியாத ஒன்று.
அப்படிப்பட்ட காலகட்டத்தில் வெளிவந்த ஒரு கருப்பு வெள்ளைப் படமான பொன்முடியில் இருந்த ஒளிப்பதிவின் தரம் அதற்க்கு பின் வெளிவந்த படங்களை எல்லாம் முந்திக்கொண்டு ஒருவரின் நினைவுத்திரையில் அழுத்தமாக பதிந்திருக்கிறது என்றால்..
அது உண்மையிலேயே வியக்க வைக்கும் ஒரு விஷயம் தானே!.
பெரியவர் ராமமூர்த்தி அவர்கள் இப்படிச் சொன்னதும் எனக்கு படத்தை கட்டாயம் பார்த்தே தீரவேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது.கோவையில் உள்ள பிரபல விற்பனையகம் தொடங்கி சிறு விற்பனையகம் வரை ஒன்று விடாமல் சல்லடை போட்டு சலித்து (பொன்முடியா.. அப்படி ஒரு படம் கேள்விப்பட்டதே இல்லையே சார்." என்னை ஒருமாதிரியாக ஏதோ ஒரு அபூர்வ ஜந்துவைப் பார்ப்பதைப்போல பார்த்தபடி சொன்னார் ஒரு கடைக்காரர்.) ஒரு வழியாக படத்தின் குறுந்தகடை வாங்கிப் போட்டுப் பார்த்தவன் நிஜம்மாகவே பிரமித்துவிட்டேன்.
அவ்வளவு துல்லியமாக, நயமாக, கண்ணில் ஒற்றிக்கொள்ளும் விதமாக படம் முழுதும் காமிராவைக் கையாண்டிருந்தார் ஒளிப்பதிவாளர் ஜே.ஜி. விஜயம்.இந்தப் படத்தின் ஒளிப்பதிவுக்காக அவருக்கு மேல்நாட்டின் விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.
அடுத்த சிறப்பம்சம்.. பாடல்கள்.. ஜி. ராமநாதனின் இசை அமைப்பும் அவர் பாடியிருந்த பாடல்களும் கதாபாத்திரத்தின் உணர்ச்சியை -அதுகாதலா, இன்பமா, துன்பமா - எதுவாயினும் சரி சற்றே கனத்த அந்தக் குரலின் வழியாக கேட்பவர் மனத்திலும்
ஏற்படுத்துகின்றன என்றால்.. அதை என்னவென்று சொல்வது?
அவரது "ஸ்பெஷாலிட்டி"யான ராகமாலிகை அமைப்பு இந்தப் படப் பாடல்களிலும் பளிச்சிடுகின்றன. ராகங்களை அவர் இணைக்கும் விதமே அலாதிதான். ஒரு சரணத்தில் இருந்து அடுத்த சரணத்துக்கு ராகம் மாறுவது என்பது வெகு இயல்பான ஒன்றாக இருக்கும்.இந்தப் படத்தில் அப்படி அமைந்த ஒரு டூயட் பாடல் தான் "ஆருயிரே ப்ரேம அமுத வாரியில் நாமும் கலந்து மகிழ்வோம்". சஹானாவில் இருந்து கல்யாணிக்கு மாறுவதும், அதிலிருந்து "தேஷ்" ராகத்தை கையாண்டு ரசவாதம் புரிவதும்..இன்று கேட்டாலும் மனசை அப்படியே கொள்ளை கொண்டுவிடும். (http://www.jointscene.com/movies/Kollywood/Ponmudi/3038)
ராமநாதனின் குரல் வளம் - அதைப் பற்றி கட்டாயம் இரண்டொரு வார்த்தைகள் சொல்லியே ஆகவேண்டும். பின்னணிப் பாடகர்களுக்கு - குறிப்பாக ஆண்பாடகர்களுக்கு - இருக்கவேண்டிய குணாதிசயமாக அவர் கருதும் அழுத்தம் அந்தக் குரலில் இருக்கிறது. "சாரீரத்துலே ஆண்மை இருக்கணும் என்று அவர் அடிக்கடி சொல்லுவார்" என்று டி.எம்.எஸ். அவர்கள் ஜி.ராமநாதனைப் பற்றி சொல்லும்போது குறிப்பிடுவார். ஆண்மையின் கம்பீரமாக அவர் வலியுறுத்தும் அந்த அழுத்தம் அவர் குரலில் இயல்பாகவே இருக்கிறது. எந்த ஒரு உணர்ச்சியையும் அந்தக் குரல் அனாயாசமாக வெளிப்படுத்திவிடும். ஒரு கோடி காட்டினாலே போதும். அந்தக் குண விசேஷம் "பொன்முடி" படப் பாடல்களில் கொட்டிக்கிடக்கிறது.
அந்தக் காலத்தில் இப்போது போல டேப் ரெக்கார்டர் எல்லாம் கிடையாது. ஆகவே இசை அமைப்பாளர்கள் தாங்கள் நினைத்த பாவம் பாடகர்களின் குரலில் வரும் வரை திரும்பத் திரும்ப அலுக்காமல் சளைக்காமல் சொல்லிக்கொடுத்து பாடவைக்க வேண்டும்.
அந்த வகையில் ஜி.ராமநாதனின் இசை அமைப்பில் பாடியவர்கள் எல்லாரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லவேண்டும்.
பின்னணிப்பாடகி திருமதி. டி.வி. ரத்னத்துக்கு இந்தப் படம் ஒரு மறக்க முடியாத மைல்கல் எனலாம்.
பின்னணி இசையும் பாடல்களுக்கு சரி, காட்சி அமைப்புகளுக்கும் சரி உயிரூட்டும்
வகையில் அமைந்திருந்தது.
இப்படி கோர்வையான கதை அமைப்பு, கவிநயம் மிக்க ஒளிப்பதிவு, நெஞ்சை அள்ளும் இசை, நேர்த்தியான இயக்கம் என்று எல்லாம் இருந்தாலும் பொன்முடி படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வி கண்டது.
காரணம் - முன்பே குறிப்பிட்ட பரபரப்பை ஏற்படுத்திய அம்சம் தான்.
பொன்முடி - ஒரு காதல் கதை. சிறுவயது முதல் ஒருவருக்கு ஒருவர் என்று வளர்க்கப்பட்ட பொன்முடியும், அவன் அத்தை மகள் பூங்கோதையும் பருவம் அடைந்ததும் சிறுவயது நேசம் காதலாக மாறுகிறது. ஆனால் குடும்பப் பகை அவர்களைப் பிரிக்கிறது. இறுதியில் தடைகளை வென்று ஒன்று சேர்கின்றனர். இதுதான் கதை.
இதனை ஒரு அழுத்தமான, அழிக்கமுடியாத காதல் காவியமாக பதிவு செய்ய விரும்பினார் எல்லிஸ். ஆர். டங்கன்.
'PONMUDI -A GREAT LOVE STORY "- என்றே விளம்பரப்படுத்தப் பட்டது. அதற்காக படத்தில் இடம் பெற்ற நெருக்கமான காதல் காட்சிகள் ஐம்பதுகளில் அனைவரின் புருவங்களையும் சுருங்க வைத்தன. இப்போதைய படங்களோடு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் படம் வெளிவந்த காலகட்டத்தில் இருந்த ரசிகர்களின் மனநிலையே வேறு. படமும், அதை இயக்கிய எல்லிஸ். ஆர். டங்கன் அவர்களும் பெருத்த கண்டனத்துக்குள்ளானர்கள்
"அமெரிக்க கலாச்சாரத்தை தமிழ் நாட்டில் பரப்ப எல்லிஸ். ஆர். டங்கன் முயற்சி செய்கிறார்" என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. கண்டனக்குரல்கள் ஒலித்தன.
ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்கள் "ரிபீட்டட் ஆடியன்ஸ்" -அதாவது திரும்பத் திரும்பப் பார்ப்பவர்கள் தானே. அப்படிப்பட்ட "ரிபீட்டட் ஆடியன்ஸ்" குறிப்பாக பெண்களின் ஆதரவு இந்தக் காரணத்தாலேயே படத்துக்கு கிடைக்காமல் போனது.
எல்லிஸ் ஆர். டங்கன் அவர்கள் முழுமையாக இயக்கிய கடைசித் திரைப்படமாக அது அமைந்தது.
ஆனால் இந்தத் தோல்வியால் அசரவில்லை டி.ஆர். சுந்தரம். ஏற்கெனவே அபூர்வ சிந்தாமணியின் மூலம் சொல்லி அடித்தவராயிற்றே!
அடுத்த படம் கண்டிப்பாக வெற்றிப்படம் தான் என்று முடிவே செய்துவிட்டவராக ஏற்கெனவே பொன்முடி படத்தில் வில்லனாக நடித்திருந்த எம்.ஜி. சக்ரபாணியின் தம்பியும் முன்னுக்கு வந்துகொண்டிருந்த இளம் கதாநாயகனுமான எம்.ஜி. ராமச்சந்திரன், எஸ்.ஏ. நடராசன், எம்.என். நம்பியார் என்று முற்றிலும் புதிய நட்சத்திரப் பட்டாளத்துடன் இசைக்கு ஜி. ராமநாதனை பக்க பலமாகக் கொண்டு மீண்டும் களமிறங்கினார் அவர்.
கதை..? அதுவரை கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரான "பக்ஷிராஜா" நிறுவனத் தயாரிப்பாளரான ஸ்ரீராமுலு நாயுடுவின் படத்திற்கும், ஜூபிடர் நிறுவனப் படங்களுக்கும் கதை வசனம் எழுதிக் கொஞ்சம் கொஞ்சமாக திரை உலகில் தன் பெயருக்கும் ஒரு தனி இடம் அமைத்துக்கொள்ள முயன்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை கதை வசனகர்த்தாவாக மாதம் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்தம் செய்தார் அவர்.
"வாராய் நீ வாராய்" என்ற அழைப்பை ஏற்று மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்குள் வலது காலெடுத்து வைத்து நுழைந்த அந்த இளைஞர்தான் இன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்.
படம்: மந்திரி குமாரி.
சிகரம் தொடுவோம்...
|