வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 7

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

"ஜி. ராமநாதன் மிகவும் நல்லவர். யாரையும் கழிக்க மாட்டார். என்னுடைய ஆரம்ப காலத்திலேயே என்னை மதித்தவர்." - கவியரசு கண்ணதாசன்.

சிவகவி படத்தில் பாடல்களுக்கு ஜி. ராமநாதன் கையாண்ட ராகங்கள் அவரது மேதாவிலாசத்துக்கு சாட்சியம் கூறுபவையாக அமைந்து விட்டிருக்கின்றன.

படம் - சொப்பன வாழ்வில் மகிழ்ந்து பாடல் காட்சி.

"அம்பா மனம் கனிந்து உனது கடைக்கண் பார்" - பந்துவராளியில் இந்தப் பாடலை ராமநாதன் அமைத்திருக்கும் அழகே அலாதி. பாடல் வரிகளும் இசை அமைப்பும் ஒன்றுக்கொன்று இசைந்து அம்பிகையின் கருணையை யாசிக்கின்றன. ராகத்தின் முழுப் பரிமாணமும் பளிச்சிடுகிறது. சரணத்தில் அம்பிகையிடம் வேண்டுவதை எல்லாம் அழகாகப் பட்டியல் போடுகிறார் பாபநாசம் சிவன். "பந்த உலகில் மதி மயங்கி" என்ற வரிகளுக்கு ராமநாதன் கொடுத்திருக்கும் சங்கதிகள் பாடலின் அர்த்தத்துக்கு ஒரு அழுத்தம் கொடுப்பதாக அமைந்துவிட்டிருக்கின்றன.

இதுவரை வேறு எந்தத் திரைப்படப் பாடலுக்கும் கிடைக்காத ஒரு தனிச் சிறப்பு இந்தப் பாடலுக்கு கிடைத்திருக்கிறது. அது என்ன தெரியுமா?

பொதுவாக ஆலயங்களில் எந்தத் தெய்வம் முதன்மை பெறுகிறதோ அந்தத் தெய்வத்துக்கான துதிகளை கல்வெட்டாக சுவற்றில் பதித்து வைப்பார்கள். சிவன் கோவில் என்றால் பிரகாரச் சுற்றுச் சுவர்களில் தேவாரம், திருவாசகம்: பெருமாள் கோவில் என்றால் ஆழ்வார் பாசுரங்கள், திருப்பாவை:; அம்பிகை பிரதானமான ஆலயம் என்றால் சௌந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி... இப்படி.

ஆனால் எந்த ஒரு ஆலயத்திலாவது ஒரு திரைப்படப் பாடலை - அது எவ்வளவுதான்
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட அமைந்த பாடல் என்றாலும் அதனை ஆலயத்து சுற்றுச் சுவரில் கல்வெட்டில் பதித்து வைக்க மாட்டார்கள். இந்த விதிக்கு விலக்காக - சிவகவி படத்தில் இடம்பெற்ற இந்த "அம்பா மனம் கனிந்து" பாடலை நமது சென்னை மாநகரத்திலேயே - புரசைவாக்கம் பகுதியில் உள்ள பொன்னி அம்மன் ஆலயத்து சுற்றுச் சுவரில் கல்வெட்டாக பதித்து வைத்திருக்கிறார்கள் என்றால்...எழுதிய பாபநாசம் சிவன், இசை அமைத்த ஜி.ராமநாதன், இசைத்த தியாகராஜ பாகவதர் ஆகிய மூன்று கலைங்கர்களுக்கும் கிடைத்திருக்கும் மகத்தான இந்தக் கெளரவம் வேறு எந்தக் கலைஞருக்கும் கிடைக்காத ஒன்று. (இந்தப் பாடலைக் கண்டும் கேட்டும் இன்புற இணைப்பு : http://www.youtube.com/watch?v=X3DJ9e3Vlo0)

அடுத்து "கவலையைத் தீர்ப்பது நாட்டியக்கலையே" என்ற டி.ஆர். ராஜகுமாரியின் நாட்டியப் பாடல். நடனக்கலையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் இந்தப் பாடலை "நாட்டக்குறிஞ்சி" ராகத்தை பயன்படுத்தி வெகு நேர்த்தியாக இசை அமைத்திருக்கிறார் ஜி. ராமநாதன். இந்தப் பாடல் காட்சியை இயக்குனர் ராஜா சாண்டோ அவர்கள் மிகச் சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

எத்தனையோ ராகங்கள் இருந்தாலும் ஒவ்வொருக்கும் "ஸ்பெஷலான" ராகங்கள் என்று சிலது இருக்கும் அல்லவா. அந்த வகையில் இசை அமைப்பாளர் ஜி. ராமனாதனின் மனதிற்குகந்த ராகங்களில் "குறிஞ்சி"க்கு தனி இடம் உண்டு. அந்த குறிஞ்சி ராகத்தில் அவர் இசை அமைத்த "திருவருள் தர இன்னும் மனமில்லையோ" பாடல் செவிகளுக்கு இதமாக ஒலிக்கிறது.

சிவனைத் தவிர வேறு எவரையும் பாடமாட்டேன் என்று கொள்கைப் பிடிப்புடன் இருக்கும் பொய்யாமொழிப் புலவரிடம் முருகனைப் பாடும்படிக் கேட்டால் எப்படிப் பதில் வரும்? "வள்ளலைப் படும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ?" என்று நிந்தாஸ்துதி வகையில் பாபநாசம் சிவன் இயற்றிய பாடல் கண்ணிகளாக மலர்கின்றது.

இந்தப் பாடலுக்கு செஞ்சுருட்டியில் வெகு அற்புதமாக மெட்டமைத்து கேட்பவர் மனங்களை எல்லாம் அப்படியே சுருட்டி தன வசப்படுத்திக் கொண்டு விட்டார் ஜி.ராமநாதன்.

சிவகவி படப்பாடல்களில் ஒன்றைச் சட்டென்று சொல்லும்படிக்கேட்டால் அந்தக் காலத்துப் பெரியவர்கள் சட்டேன்று குறிப்பிடும் பாடலாக "சொப்பன வாழ்வில் மகிழ்ந்து" பாடல் தான். அந்த அளவுக்கு வெகுஜன ஈர்ப்புக்கு ஆளான இந்த வெற்றிப் பாடலை விஜயநாகரி, புவனகாந்தாரி ஆகிய ராகங்களைக் கையாண்டு ஜி. ராமநாதன் படைத்திருக்கிறார். http://www.youtube.com/watch?v=hWpHBIVAg38

இவை தவிர "வசந்த ருது மனமோகனமே" பாடலை வசந்தா, யதுகுலகாம்போதி, குந்தலவராளி, சுருட்டி ஆகிய ராகங்களை வெகு நேர்த்தியாக கையாண்டு அருமையானதொரு ராகமாலிகையாக கொடுத்திருக்கிறார் ஜி. ராமநாதன். அவருடைய தன்னிகரில்லாத தனித்திறமைக்கு இந்த ராகமாலிகைப் பாடல் ஒரு சரியான எடுத்துக்காட்டு. இப்படி அருமையான ராகங்களை அற்புதமாகக் கையாண்டு ஜி. ராமநாதன் அளித்த பாடல்கள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை கடந்து நிலைத்திருக்கின்றன.

"சிவகவிI"க்கு பிறகு ஜி. ராமநாதனின் இசையில் வெளிவந்த அடுத்த படமும் பக்ஷிராஜா நிறுவனத்தின் படம் தான். இம்முறை ஸ்ரீராமுலு நாயுடு பி. யு. சின்னப்பாவை வைத்து "ஜகதலப் பிரதாபன்" படத்தைக் கொடுத்தார்.

பாடல்களிலும் காட்சி அமைப்பிலும் பல புதுமைகளைக் கொண்ட இந்தப் படத்தில் தேவலோகத்தில் தான் ஒரு சகல கலா வல்லவன் என்று நிரூபிக்க கதாநாயகன் பிரதாபன் (பி.யு. சின்னப்பா) பாடும் "தாயைப் பணிவேன்" என்ற பாடல் ஜி. ராமநாதனின் புகழ்க் கிரீடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்லாக மின்னுகின்றது.

முகப்பிசை, இணைப்பிசை ஒன்றுமே கிடையாது. சின்னப்பா கச்சேரி செய்வதாக காட்சி அமைப்பு. கல்யாணி ராகத்தில் பாபநாசம் சிவனின் கீர்த்தனைக்கு உருவம் கொடுத்திருந்தார் ஜி.ராமநாதன் என்றால் தன்னுடைய குரலாலும் நடிப்பாலும் காட்சிக்கே உயிர் கொடுத்திருந்தார் பி.யு. சின்னப்பா.

இந்த ஒரே காட்சியில் ஐந்து சின்னப்பக்கள் மேடையில் தோன்றுகின்றனர். ஒருவர் பாட, அடுத்தவர் வயலின் வாசிக்க, மற்றும் இருவர் முறையே மிருதங்கம், கஞ்சிரா வாசிக்க, கடைசி சின்னப்பா கொன்னக்கோல் (ஜதி சொல்வது) சொல்கிறார். (இதுபோன்ற ஒரு பாடல் காட்சியை அறுபதுகளில் வெளிவந்த "திருவிளையாடல்" படத்தில் பார்த்த நினைவு வருகிறதா? அந்தப் படத்தில் இடம் பெற்ற "பாட்டும் நானே பாவமும் நானே" பாடல் காட்சிக்கு இந்தப் படம் தான் முன்னோடி.)

இதைத் தவிர பொதுவாக ராகங்கள் குறித்த பரவலான மதிப்பீடு ஒன்றையும் தன்னுடைய அபாரமான திறமையால் தகர்த்தெறிந்திருக்கிறார் ஜி. ராமநாதன்.

பொதுவாக ஒவ்வொரு ராகத்தையும் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிக்கானதாக சொல்வது உண்டு. உதாரணமாக "முகாரி" என்றால் அது சோகத்துக்கானது. ஆனந்த பைரவி என்றால் அது இரக்கத்துக்கானது. கம்பீர நாட்டை என்றால் அது போருக்கானது என்று குறிப்பிடுவதுண்டு. இதுபோல "அடாணா" என்றால் அது கம்பீரத்துகானது. வீர ரசத்தை வெளிப்படுத்தக் கூடியது என்பது மரபு.

ஆனால் நமது ஜி.ராமநாதனோ ராகங்களை இப்படி ஒரு குறுகிய வட்டத்துக்குள் ராகங்களின் தன்மையை வரையறுப்பதில் நம்பிக்கை இல்லாதவர். சரியான முறையில் கையாண்டால் எல்லா ராகங்களையும் எல்லா உணர்ச்சிகளுக்கும் பயன்படுத்த முடியும் என்ற கொள்கை உள்ளவர். இதை நிரூபிப்பது போல "ஜகதலப் பிரதாபன்" படத்தின் திருப்புமுனையான ஒரு முக்கிய காட்சிக்கு "அடாணா" ராகத்தை அவர் பயன்படுத்தி இருக்கும் விதமே தனி.

தன் தந்தையால் நாடு கடத்தும் தண்டனைக்கு ஆளாகிறான் இளவரசன் பிரதாபன். அதற்கு தலை வணங்கி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக அம்பிகையின் விக்கிரகத்துக்கு முன் நெக்குருகி பாடிப் பணிந்து விட்டு வெளியேறுவதாக
காட்சி.

சோக ரசம் ததும்பும் இந்தக் காட்சி முழுமைக்கும் சோகத்துக்கானது என்றே கருதப்படும்
"முகாரி"யைப் பயன்படுத்தாமல் வீரத்துக்கான அடாணாவை கையாண்டு இசை அமைத்திருக்கிறார் ஜி. ராமநாதன்.

(இந்தப் பாடல் காட்சியின் வெற்றி கொடுத்த தன்னம்பிக்கையால் தான் பிற்காலத்தில் ஐம்பதுகளின் இறுதியில் தான் இசை அமைத்த அம்பிகாபதி படத்துக்காக "வாடா மலரே தமிழ்த் தேனே" என்ற சந்தோஷம் பொங்கும் காதல் கீதத்தை சோகத்துக்கான "முகாரியில்" அமைத்து பாராட்டுப் பெற்றார் ராமநாதன்.)

அது மட்டும் அல்ல. ஜி.ராமனாதனின் இந்த "அடாணா" ஏற்படுத்திய பாதிப்போ என்னவோ, பாபநாசம் சிவனும் இந்த ராகத்தை பயன்படுத்தி மனதை உருக்கும் பிரபலமான பாடலான "நீ இரங்காயெனில் புகல் ஏது?" பாடலைக் கொடுத்தார்.

ஆகக்கூடி - "ஜகதலப் பிரதாபன்" படத்தின் வெற்றியால் அந்தக் காலகட்டத்தில் யாராலும் தவிர்க்கமுடியாத ஒரு முன்னணி இசை அமைப்பாளராக உயர்ந்தார் ஜி. ராமநாதன்.

அடுத்து கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரான எம்.கே. தியாகராஜ பாகவதரின் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை பெற்றார் ஜி. ராமநாதன். "சுந்தர்ராவ் நட்கர்னி" அவர்களின் இயக்கத்தில் மதுரை ராயல் டாக்கீஸாரால் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் ஜி. ராமாநாதன் இசை அமைப்பில் வெளிவந்த பாபநாசம் சிவன் இயற்றிய பாடலால் அதுவரை கர்நாடக சங்கீதமேடைகளில் கூட வெகு அபூர்வமாகவே பாடப்பட்டு வந்த ஒரு மேளகர்த்தா ராகத்துக்கே புத்துயிரும் புது எழுச்சியும் கிடைத்தது என்றால் அது மிகை அல்ல..

அந்தப் பாடல் எதுவென்று உங்களில் தொண்ணூறு சதவிகிதம் வாசகர்கள் சரியாகவே
ஊகித்திருப்பீர்கள்.

மீதமுள்ள பத்து சதவிகித அன்பர்கள்........

அடுத்த இடுகை வரை சற்று காத்திருக்கலாமே....

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.