வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 5

பி.ஜி.எஸ். மணியன்  

"படத்தில் என்னுடைய நடிப்பு எப்படி அமைந்திருக்கிறதோ எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் இசை மட்டும் நிச்சயமாக மிகச் சிறப்பான ஒன்றாகத்தான் இருக்கும்" - ஜி. ராமானதனின் இசை அமைப்பைப் பற்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

ஆர்யமாலா படத்தில் பாம்பாட்டி வேடத்தில் பி.யு. சின்னப்பா.

"பக்ஷி ராஜா" பிலிம்ஸ் - கோவையில் உருவான ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனம். எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு என்ற இளைஞர் ஏற்படுத்திய ஸ்தாபனம்
இது. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவை துவங்கியவர்களுள் இவரும் ஒருவர்.

இவர் தயாரித்த படம் தான் ஆர்யமாலா. பாமரர்களின் வாழ்வுடன் கலந்த காவல் தெய்வங்களில் ஒருவராக கருதப் படும் "காத்தவராயன்" கதை தஞ்சை மாவட்ட மக்களிடையே மிகப் பிரபலமாக விளங்கியது.

இந்தக் கதையைத்தான் "ஆர்யமாலா" என்ற தலைப்பில் படமாக தயாரித்தார் ஸ்ரீராமுலு நாயுடு. கதாநாயகன் காத்தவராயனாக நடித்தார் பி. யு. சின்னப்பா. சின்னப்பாவின் திரை உலக வாழ்வில் ஒரு மைல் கல்லாக இந்தப் படம் அமைந்தது என்றால் அது மிகை ஆகாது.

உத்தம புத்திரன் படத்தில் முதல் முதலாக இரட்டை வேடம் ஏற்று நடித்த பி.யு. சின்னப்பா இந்தப் படத்தில் முதல் முதலாக பத்து வேடங்களில் நடித்து அபாரமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தார். ஆம். முதல் முதலாக பத்து வேடங்களில் நடித்த கதாநாயகன் அவர்தான். அவருக்கு இணையாக எம். எஸ். சரோஜினி நடித்தார். (இந்தப் படத்தில் லபாரடரியில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்த கிருஷ்ணன், படத் தொகுப்பில் உதவியாளராக வாழ்க்கையை துவங்கிய பஞ்சாபகேசன் ஆகிய இருவரும்தான் படிப்படியாக உயர்ந்து பின்னாளில் பல வெற்றிப்படங்களை இணைந்து இயக்கிய இரட்டையர்கள் "கிருஷ்ணன்-பஞ்சு" என்பது கூடுதல் தகவல்).

தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடுவே படத்தை இயக்கினார். இசை படத்தின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

கருப்பு வெள்ளையில் உலகத்தரம் வாய்ந்த ஒரு திரைப்படமாக "ஆர்யமாலா" அமைந்தது என்று திரை விமரிசகர்கள் குறிப்பிடுகிறார்கள். கதையோடு இணைந்த பாடல்கள் படத்தின் சிறப்பம்சமாக குறிப்பிடப்பட்டது.

(சும்மா எதையோ படித்துவிட்டு சொல்வதாக இருக்கக்கூடாதே என்பதற்காக பாடல் காட்சிகள் அடங்கிய குறுந்தகடை வாங்கிப் பார்த்துவிட்டே இதை எழுதுகிறேன்.)

பாடல்களிலும் இசையிலும் ராமநாதன் "ராக"நாதனாக இருக்கிறார். பாடல்களுக்காக அவர் தேர்ந்தெடுத்திருக்கும் ராகங்களும் அவற்றை அவர் பயன்படுத்தியிருக்கும் விதமும்.. நம்மை வியக்கவைக்கின்றன.

கதையோடு இணைந்து வந்திருக்கும் பாடல்களில் முதல் இடம் "சிவக்ருபையால் புவிமேல் மாதா உன்னை தெரிந்து உள்ளமே மகிழ்ந்தேன்" - என்ற பாடலுக்குத்தான்.

பூவுலகில் தவம் செய்ய வானகம் துறந்து வந்த அன்னை காமாட்சியின் தவத்துக்கு காவலாக சிவனால் படைக்கப் பட்டவன் தான் காத்தவராயன். ஆனால் ஒரு கன்னிகையை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சிவனால் பல ஜென்மங்கள் எடுத்த பிறகு கடைசி பிறவியில் அவளை மணக்கும் நேரம் கழுவில் எற்றப்படுவான் என்ற சாபத்துக்கு ஆளாகிறான். அந்த வகையில் பூவுலகில் குழந்தையாக பிறக்கும் அவனை அம்பிகை வேடுவர் தலைவனிடம் கொடுத்து வளர்த்து வரும் படி பணிக்கிறாள்.

வேடர் குலத்தில் வளர்ந்து வாலிபனாகும்போது அவன் தெய்வப் பிறவி என்றும் அவனுடைய தாயான அன்னை காமாட்சி கம்பா நதிதீரத்தில் தவம் செய்து வருவதையும் அறிந்து தெய்வத்தாயை தரிசிக்க வரும் காத்தவராயன் அன்னையைப் பார்த்ததும் பாடும் பாடல் தான் இது.

இந்தப் பாடலை "சரஸ்வதி" என்ற சுத்தமான கர்நாடக ராகத்தில் அற்புதமாக அமைத்திருக்கிறார் ஜி. ராமநாதன். இந்தப் பாடலின் சிறப்பம்சம் என்று சொல்லவேண்டும் என்றால் அது இதன் அமைப்புதான்.

நமது கர்நாடக சங்கீதத்தில் "யதி" என்று ஒரு அமைப்பு உண்டு. நாம் தமிழில் அணி என்கிறோமே அது போன்றது தான் இது. இது பலவகைப்படும்.. அவற்றில் "கோபுச்ச யதி" என்று ஒன்றும் "ச்ரோதோவக யதி" என்றும் ஒன்று உண்டு.

"கோபுச்ச யதி" - என்றால் பசுவின் வாலைப்போல ஆரம்பத்தில் அகலமாக இருந்து போகப்போக குறுகி வரும் பாடல் அமைப்பு. முமூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதரின் ஆனந்த பைரவி ராக கீர்த்தனை "தியாகராஜ யோக வைபவம்" இதற்கு சரியான உதாரணம். "தியாகராஜ யோக வைபவம், அகராஜ யோக வைபவம். ராஜயோக வைபவம், யோக வைபவம், வைபவம், பவம், வம்" என்று கீர்த்தனையின் ஆரம்பத்தில் இந்த கோபுச்ச யதிக் கிரமத்தை கையாண்டிருக்கும் தீட்சிதர். சரணத்தில் "ச்ரோதோவக யதி" வகையை அமைத்து முடித்திருக்கிறார்.

"ச்ரோதோவக யதி" - என்றால்..? எப்படி ஒரு ஆறு உற்பத்தியாகும் இடத்தில் ஆரம்பத்தில் குறுகியும், போகப்போக விரிந்தும் செல்லுகிறதோ அது போன்ற ஒரு ஆற்றொழுக்கு போன்ற பாடல் அமைப்புக்கு "ச்ரோதோவக யதி"என்று பெயர். மேலே குறிப்பிட்ட தீட்சிதர் கீர்த்தனையின் சரணத்தில் "பிரகாசம், தத்வப் பிரகாசம், சகல தத்வப் பிரகாசம்" என்று இந்த "ச்ரோதோவக யதி" கிரமம் அமைந்திருக்கிறது.

அது சரி.. இதற்கும் ஜி. ராமானாதன் இசை அமைத்த "சிவ கிருபையால்" என்ற சரஸ்வதி ராகப் பாடலுக்கும் என்ன தொடர்பு? இந்தப் பாடலில் சரணத்தில் "ச்ரோதோவக யதி" அமைப்பை லாவகமாகக் கையாண்டிருக்கிறார் ஜி. ராமநாதன். அதுவும் கதைக்குப் பொருந்தி வரும் விதத்தில்...

முற்பிறவியில் தேவ மங்கையை பலாத்காரம் செய்த பாவத்தினால் தானே காத்தவராயன் இப்போது வேடுவர் குலத்தில் பிறந்திருக்கிறான். அம்பிகையை அவன் பார்த்த அளவிலே அந்தப் பாவங்கள் தாமாகவே விலகிவிடுவதாக உணர்ந்து உள்ளம் நெகிழ்ந்து பாடுகிறான் அவன்.

இந்த இடத்தில்
"பாபங்கள் தாமாகப் பறந்திடுதே.
ஜென்ம பாபங்கள் தாமாகப் பறந்திடுதே.
பூர்வ ஜென்ம பாபங்கள் தாமாகப் பறந்திடுதே.
என் பூர்வ ஜென்ம பாபங்கள் தாமாகப் பறந்திடுதே" -


என்று "ச்ரோதோவக யதி" வகையை அழகாகக் கையாண்டிருக்கிறார் ஜி.ராமநாதன்.

அது மட்டுமல்ல நிதானமாக மென்னடை போட்டு வரும் பாடலில் இடையில் திஸ்ரநடையைக் கையாண்டு "பயமேதினி ஜெயமே. மலர்ப் பதமே துதித்தேன்" என்று துள்ளல் நடையில் உற்சாகத்தை இடையில் புகுத்தி மறுபடி மென்னடை போடும் அமைப்பு ஒரு நதியின் போக்கைப போலவே அமைந்து மீண்டும் மீண்டும் பாடலைக் கேட்கத் தூண்டுகிறது. அந்தக் காலத்தில் பெருவெற்றி பெற்ற பாடல் இது.

இந்த ஒருபாடலில் மட்டும் என்று அல்ல. ஆர்யமாலாவின் பாடல்கள் அனைத்திலுமே முத்திரை பதித்தார் ஜி. ராமநாதன். அவை அனைத்தையும் எழுதுவது என்றால் அதற்கே நான்கைந்து இடுகைகள் ஆகிவிடும். ஜனரஞ்சகமான ஒரு படத்திற்கு இசை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு சிறப்பாக சகல தரப்பினரையும் திருப்தி செய்யும் வகையில் இசை அமைத்திருந்தார் ராமநாதன்.

ஆம். கர்நாடக ராகங்களை கையாளுவதில் மட்டும் அல்ல. நாட்டுப்புற மெட்டிலும் நானே ராஜா என்பது போல ஒரு வேடர் பாட்டும் பாமரர்களை திருப்தி செய்யும் வகையில் அமைத்திருந்தார். நாற்பதுகள் முழுக்க முழுக்க அவரது சாம்ராஜ்யமாகவே அமைந்துவிட்டதற்கு "ஆர்யமாலா" படப் பாடல்களே அஸ்திவாரமாக அமைந்தது.

மக்களிடம் "சினிமா மோகம்" என்று சொல்கிறோமே அது உருவாவதற்கு காரணமான படமாக ஆர்யமாலா அமைந்தது. தமிழ் சினிமாவின் முதல் ஜனரஞ்சகப் படம்.

ஆர்யாமாலாவின் வெற்றி தந்த உற்சாகத்தால் அடுத்த தயாரிப்புக்கு இசை அமைப்பாளர் ஜி. ராமநாதனுடன் தயாரானார் ஸ்ரீராமுலு நாயுடு. ஆனால் இந்த முறை சின்னப்பாவுடன் அல்ல. அன்றைய உச்ச நட்சத்திரம் எம்.கே. தியாகராஜ பாகவதருடன்...

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.