டி. ஜி. லிங்கப்பா - 3
வெற்றிப்பயணம்
அப்போது "நாம் இருவர்" படத்தின் கதாநாயகன் T.R. மகாலிங்கம், B.R. பந்துலுவை தன்னுடைய படத்தயாரிப்பில் மேலாளராக சேர்த்துக் கொண்டு சொந்தப்பட தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்திருந்தார்.
அவருடைய முதல் படமான "மச்ச ரேகை"க்கு C.R. சுப்பராமன் இசை அமைத்திருந்தார்.
அதனை தொடர்ந்து "மோகன சுந்தரம்" என்ற படத்தை T.R. மகாலிங்கம் தயாரிக்கலானார். அப்போதுதான் யாருமே எதிர்பாராத விதமாக C.R. சுப்பராமன் அகால மரணம் அடைந்து விடவே அந்தப்படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு "நாம் இருவர்" காலத்திலிருந்தே T.R. மகாலிங்கத்தின் நெருங்கிய நண்பராகிவிட்ட டி.ஜி. லிங்கப்பாவுக்கு கிடைத்தது.
"மோகன சுந்தரம்" படத்தில் T.R. மகாலிங்கமும் S. வரலக்ஷ்மியும் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள். மகாலிங்கமும் வரலக்ஷ்மியும் இணைந்து பாடிய "ஒ..ஜெகமதில் இன்பம் தான் வருவது எதனாலே" என்ற டூயட் பாடல் டி.ஜி. லிங்கப்பாவின் இசையில் மிகவும் பிரபலமான பாடலாகி அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
"மோகன சுந்தரம்" படத்தில் குறிப்பிடப்படவேண்டிய இன்னொரு முக்கியமான பாடல் டி. ஆர். மகாலிங்கம் தனித்துப்பாடும் பாடலாக அமைந்த "பாட்டு வேணுமா?" என்ற பாடல் தான்.
கே.டி. சந்தானம் எழுதிய இந்தப்பாடல் காலமாறுதல்களால் சமுதாயத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை அருமையாக படம் பிடித்துக்காட்டுகிறது.
"பகுத்தறிவாளன் பேசும் ஜாதி பாகுபாடு சீர்திருத்தப் பாட்டு வேணுமா.
ஞானம் பிறந்த தமிழ் நாட்டில் இன்று நாஸ்திகம் வந்ததற்கு பாட்டு வேணுமா.
வான் மழை வறண்டது போலவே நல்ல வைதீகம் கெட்டதற்கு பாட்டு வேணுமா" -
என்பது போன்ற கருத்தாழமிக்க கவிஞரின் வரிகளுக்கு மிக அருமையாக சிந்துபைரவி, கௌரி மனோகரி, பீம்ப்ளாஸ், மோகனம், மாண்ட் ஆகிய ராகங்களில் அருமையான ராகமாலிகை பாடலாக அதே சமயம் மெல்லிசையும் கலந்த "லைட் கிளாசிகல்" பாடலாக டி. ஜி. லிங்கப்பா இசை அமைக்க அருமையாக பாடி பாடலை பிரபலமாக்கினார் டி. ஆர். மகாலிங்கம்.
இந்தப்பாடல் "விஸ்வநாதன்-ராமமூர்த்தி" காலத்துக்கு முந்தைய ரசிகர்களின் நினைவில் இன்றும் நிற்கும் பாடல்.
டி.ஆர். மகாலிங்கமும் லிங்கப்பாவும் கர்நாடக இசையில் கை தேர்ந்தவர்கள். ஆகவே இருவரும் கலந்துபேசி கருத்தொற்றுமையுடன் இணைந்து பணியாற்றியதால் பாடல்கள் அருமையாக அமைந்து படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும் டி. ஜி. லிங்கப்பாவின் கலை உலக வாழ்வுக்கு சரியான அஸ்திவாரமிட்டு கொடுத்தன.
மோகன சுந்தரம் படத்தில் தான் J.B. சந்திரபாபு தன்னுடைய முதல் பாடலை பாடி நடித்து திரை உலகில் அறிமுகம் ஆனார். அந்த பாடல்," ஹல்லோ மை டியர் டார்லிங். மை ரோஸ் சார்மிங்" என்ற பாடல்.
ஆம். J.B. சந்திரபாபுவை முதல் முதலாக ஒரு பாடகராக அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்கள் தான்.
"மோகன சுந்தரம்" - படப்பாடல்கள் பெரிதும் பேசப்பட்டதால் தனது அடுத்த படங்களான "சின்ன துரை", "விளையாட்டு பொம்மை", ஆகிய படங்களுக்கும் லிங்கப்பாவையே இசை அமைப்பாளராக்கினார் டி. ஆர். மகாலிங்கம்.. ஆனால் படங்கள் வெற்றிபெறாமல் மகாலிங்கத்துக்கு பலத்த சரிவை ஏற்படுத்தின.
இந்த சமயத்தில்தான் மகாலிங்கத்திடம் மேலாளராக பணியாற்றி வந்த B.R. பந்துலு அவரை விட்டு விலகி பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து முதல் படமாக ப. நீலகண்டன் அவர்களின் இயக்கத்தில் 1954-ஆம் ஆண்டு "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" என்ற முழுநீள நகைச்சுவைத் திரைப்படத்தை தயாரித்தார்.
சிவாஜி கணேசன், பத்மினி இணைந்து நடித்த இந்தபடத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு டி.ஜி. லிங்கப்பாவுக்கே கிடைத்தது..
இந்தப்படத்தில் அவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் மிகச் சிறப்பாக அமைந்து அவருக்கு பெரும் புகழை சம்பாதித்துக் கொடுத்தன.
"வெண்ணிலாவும் வானமும் போலே" என்ற பாரதிதாசனின் பாடல் அப்போது மேடைகளில் M.M. தண்டபாணி தேசிகரால் பாடப்பட்டு வந்தது. டி. ஜி. லிங்கப்பா அந்தப் பாடலை சில மாறுதல்களுடன் "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" படத்தில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். லிங்கப்பா அமைத்த மெட்டு பாரதிதாசனுக்கு பிடித்துப்போகவே மனமுவந்து சம்மதம் தந்தார் அவர்.
இந்தப்பாடலுக்கு இசை அமைப்பதற்கு முன்னால் டி.ஜி. லிங்கப்பா தண்டபாணி தேசிகரை சந்தித்து அவர் பாடிவந்த வசந்தசேனா ராகத்தின் சொருபத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு அதே ராகத்தை அவருடைய அனுமதியுடன் இன்னும் ஜனரஞ்சகமாக மாற்றினார் என்பது வாமனன் அவர்களின் "திரை இசை அலைகள்" மூலமாக தெரியவருகிறது.
தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்புடன் என்றுமே அவர் செயல்பட்டதில்லை. தண்டபாணி தேசிகர் போன்ற இசை வல்லுனர்களிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் அவர் என்பதும் இதன் மூலம் தெரியவருகிறது.
ராதா-ஜெயலக்ஷ்மி பாடிய அந்தப்பாடல் பன்னிரண்டு டேக்குகளில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.. அதன் பிறகு அதில் சிறந்த பகுதிகள் மட்டும் எடிட் செய்யப்பட்டு பிலிம் சுருளில் பதிவு செய்யப்பட்டன.
இன்றைக்கும் என்றைக்கும் அனைவராலும் முணுமுணுக்கக் கூடிய ஒரு பாடலாக இந்தப்பாடல் அமைந்துவிட்டது.
அது மட்டுமல்ல. கர்நாடக இசைப்பாணியிலேயே மிகுந்த பாண்டித்தியம் பெற்றிருந்த காரணத்தால் அதுவரை க்ளாசிக்கல் பாடகராகவே அடையாளம் காணப்பட்டிருந்த வி.என். சுந்தரம் இந்தப்படத்தில் பிரபலமான "கவியின் கனவில் வாழும் காவியமே" என்ற நகைச்சுவை பாடலை பாடினார். இந்தப்பாடலில் மெல்லிசையையும் சாமா ராகத்தையும் அருமையாக இணைத்து மெட்டமைத்து இருந்தார் லிங்கப்பா.
வி.என். சுந்தரம் பாடிய இன்னொரு பாடல் "அழகே பெண் வடிவமான பிம்பமே". காபி ராகத்தில் திஸ்ர கதியில் அமைந்த இந்தப் பாடல் லிங்கப்பாவின் பளிச்சிட வைக்கும் திறமைக்கு மற்றுமொரு உதாரணம்.
சந்திரபாபுவுக்கு சிவாஜிக்கு பின்னணி பாடும் வாய்ப்பு "ஜாலி லைப் ஜாலி லைப்." என்ற பாடலின் மூலமாக கிடைத்தது.
லிங்கப்பாவின் சகிப்புத் தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்தப் படத்தின் இயக்குனர் ப. நீலகண்டனுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்லலாம்.
லிங்கப்பா மெட்டுக்கள் போட்டதும் இயக்குனர் ப. நீலகண்டன் படக்கம்பெனியில் பணியாற்றிவரும் ஆபீஸ் பையன், டிரைவர் ஆகியவர்களை அழைத்து அவர்களிடம் "நன்றாக இருக்கிறதா" என்று லிங்கப்பாவின் முகத்துக்கு நேராகவே அபிப்பிராயம் கேட்பாராம்.
சங்கீத பாரம்பரியத்தில் வந்த லிங்கப்பாவை ப. நீலகண்டனின் இந்தப் போக்கு வெகுவாக பாதித்தது. ஆனாலும் தயாரிப்பாளர் பி. ஆர். பந்துலுவுக்காக பொறுமையைக் கடைப்பிடித்தார் லிங்கப்பா.
ஒரு சாதனையாளனாக சிகரம் தொட முயற்சி செய்யும் ஒவ்வொரு மனிதருக்கும் வேகம் எவ்வளவு தூரம் இருக்கிறதோ அதே அளவுக்கு பொறுமை, நிதானம் ஆகியவையும் மிக மிக அவசியம் என்பதை டி. ஜி. லிங்கப்பா நன்றாக புரிந்து வைத்திருந்தார்.
அதுவும் தவிர அவர் ஒரு மென்மையான மனிதர். யாரிடமும் அதிர்ந்துகூடப் பேசத் தெரியாதவர். சண்டைபோடத் தெரியாதவர். நட்பை மதிக்கத்தெரிந்தவர். ஆகவே மனதுக்கு சங்கடமான அந்தச் சூழலிலும் பொறுமையை கடைப்பிடித்தார் அவர்.
என்றாலும் ஒரு சந்தர்ப்பத்தில் ப. நீலகண்டனிடம் சீறவே செய்தார். "நான் சங்கீதப் பரம்பரையிலே வந்தவன்யா. சங்கீதம் என் ரத்தத்துலே ஓடுது. நீ யார் யாரையோ கேட்டுகிட்டு இருக்கே." - என்று முகத்துக்கு நேராகவே கேட்டுவிட்டார் அவர்.
"கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" படம் பெருவெற்றி பெற்றது. அதன் காரணமாக B.R. பந்துலு தன்னுடைய அடுத்த படத்துக்கும் டி.ஜி. லிங்கப்பாவையே இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்து கொண்டார்.
அடுத்து வந்தது "முதல் தேதி"
B.R. பந்துலுவின் "முதல் தேதி" திரைப்படத்திற்கு இசை அமைத்தபோது டி.ஜி. லிங்கப்பா அந்தப்படத்தில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களையும் இசை முரசு எம்.எம். தண்டபாணி தேசிகர் அவர்களையும் பாட வைத்தார்.
என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய "ஒண்ணுலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்" பாடல் மிகவும் பிரபலமாக ஆனது. என்.எஸ்.கே பாடிய ஹிட் பாடல்கள் வரிசையில் இடம் பிடித்தது.
எம்.எம். தண்டபாணி தேசிகர் பாடிய "துன்பம் வரும்போது நகைத்திடுவாய்" பாடல் மிகச் சிறப்பான பாடல்களில் ஒன்றாக அமைந்தது.
இதை அடுத்து வந்த "வாழ்விலே ஒரு நாள்" டி. ஜி. லிங்கப்பாவுக்கு மட்டும் அல்ல பின்னணிப் பாடகர் டி.எம். எஸ். அவர்களுக்குமே உண்மையிலேயே ஒரு திருநாளாக அமைந்தது.
அந்தக்காலத்தில் மிகவும் பிரபலமான ஒரு சீனியர் பாடகி யு. ஆர். ஜீவரத்தினம் அவர்கள். இவர் டி.எம். எஸ். அவர்களுக்கு முந்தைய தலைமுறையை சேர்ந்தவர்.
"ஜீவரத்தினம் அம்மாவின் பரம ரசிகன் நான். அவங்க மாதிரி பெரிய பாடகர்களின் பாடல்களை கேட்டதாலேதான் நான் இந்த அளவுக்கு வர முடிந்தது" - என்று டி.எம்.சௌந்தரராஜன் அடிக்கடி குறிப்பிடுவாராம்.
ஜீவரத்தினம் அவர்களின் கணவர் வேங்கடசாமி 1956-இல் தயாரித்த திரைப்படம் தான் "வாழ்விலே ஒரு திருநாள்". சிவாஜி கணேசன் - ராஜசுலோச்சனா இணைந்து நடித்த இந்தப் படத்துக்கு மூன்று இசை அமைப்பாளர்கள்.
அந்தக்காலத்தில் ஒரு திரைப்படம் தயாரிப்பது ஒரு கம்பெனி அமைப்பாக இருந்ததால் தயாரிப்பு நிர்வாகத்தின் விருப்பப்படி ஒரு படத்தில் பத்துப்பாடல்கள் இருந்தால் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட இசை அமைப்பாளர்கள் பாடல்களுக்கு இசை அமைத்துக்கொடுப்பது உண்டு. பாடல் இசையோடு அவர்கள் பணி முடிந்துவிடும். மற்றபடி பின்னணி இசைச் சேர்க்கை அமைக்கவென்று தனியாக வாத்திய இசைக்குழு "ஆர்கெஸ்ட்ரா" என்று தனியாக இயங்கும்.
(இப்படிப்பட்ட வாத்திய இசைக்குழுவில் ஒன்றான "மயூரா பிலிம் ஆர்கெஸ்ட்ரா"வில் தான் டி.ஜி. லிங்கப்பாவும் தன் வாழ்க்கையை தொடங்கினார் என்பதை முன்பே பார்த்தோம்).
அந்த வகையில் தயாரிக்கப்பட்ட "வாழ்விலே ஒரு நாள்" படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். இதில் டி.ஜி. லிங்கப்பா ஐந்து பாடல்களுக்கும், சி. என். பாண்டுரங்கன் மூன்று பாடல்களுக்கும் எஸ்.எம். சுப்பையா நாயுடு ஒரு பாடலுக்கும் இசை அமைத்தனர்.
இந்தப்படத்தில் டி.ஜி. லிங்கப்பாவின் இசையில் டி.எம். எஸ். அவர்கள் தான் பெரிதும் மதித்துப் போற்றிவந்த பாடகி யு. ஆர். ஜீவரத்தினம் அவர்களுடன் இணைந்து "தென்றலே வாராயோ இன்ப சுகம் தாராயோ" என்ற அருமையான பாடலைப் பாடினார்.
இந்த வாய்ப்பை தனது வாழ்வில் பெரிய அதிர்ஷ்டமாகவே டி.எம்.எஸ். கருதினார்.
காலத்தை வென்று நிலைத்து நிற்கும் இந்த ஒரு பாடல் தான் இன்றைக்கும் யு. ஆர். ஜீவரத்தினம் என்ற ஒரு அருமையான பாடகி தமிழ் நாட்டில் இருந்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக எஞ்சி இருக்கும் ஒரே ஆவணம் என்பது வேதனைக்குரிய விஷயம்.
காலப்பெட்டகத்தில் உள்ள பொக்கிஷங்களை கை நழுவ விடுவதில் நமக்கு ஈடு இணை யாரும் இல்லை என்பது வெட்கப் படவேண்டிய ஒன்று.
சிகரம் தொடுவோம்...
|