வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 1

பி.ஜி.எஸ். மணியன்  

வருடம் 1960 . எகிப்து நாட்டின் தலை நகரம் கெய்ரோ - ஆசிய-ஆப்ரிக்க திரைப்பட விழா.

இந்தியாவின் சார்பாக அனுப்பப் பட்ட ஒரு தமிழ் திரைப்படம் அனைவரின் கண்களையும் கருத்தையும் கவர்ந்திருந்தது. அந்தப் பட விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரது மனைவி கமலா அம்மையாருடனும், தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு. பி. ஆர். பந்துலு, மற்றும் "நாட்டியப் பேரொளி" பத்மினியுடனும் கெய்ரோ வந்திருந்தார். அனைவரும் அங்கு அமர்ந்து படவிழா நிகழ்வுகளை ரசித்துக் கொண்டிருந்தனர். விழா அரங்கம் மக்கள் வெள்ளத்தாலும் பத்திரிகை நிருபர்களாலும் நிரம்பி வழிந்தது.

இன்னும் சற்று நேரத்தில் ஆசியாவிலேயே சிறந்த படம் எது, நடிகர் யார், மற்றும் உள்ள தொழில் நுட்ப கலைஞர்கள் யார் யார் என்றெல்லாம் அறிவிக்கப் போகிறார்கள். பரிசை அறிவித்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மேடை ஏறிச் சென்று எகிப்து அதிபரின் மனைவியின் கையால் பரிசை பெற்றுக் கொள்ளப்போகிறார்கள்.

எந்தப் படம் பரிசு பெறப் போகிறது? ஜப்பானியப் படமா? சீனத்து திரைக்காவியமா? ஆங்கிலமொழிப் படமா? இத்தாலியத்தின் இனிமைப் படைப்பா?

பல விதமான யூகங்களும் ஹேஷ்யங்களும் ஒவ்வொரு குழுவாக வந்துகொண்டிருந்தன.

இதோ பரிசை அறிவிக்க அறிவிப்பாளர் ஒலிவாங்கிக்கு முன் வந்து விட்டார்.
"நண்பர்களே.. அனைவருக்கும் வணக்கம்...என்று ஆரம்பித்து........... தனது பேச்சை தொடர்ந்து ...... இறுதியில்....இந்த விழாவில் ஆசியா கண்டத்திலேயே சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது .....என்று சொல்லி நிமிட நேரம் அனைவரின் இதயத் துடிப்பையும் வேகமாக ஓடவிட்டு - "வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ்த் திரைப்படம்". என்று அறிவித்ததும் எழுந்த கைதட்டல்கள் அடங்க வெகு நேரமாயின.

அடுத்து "ஆசியாவிலேயே சிறந்த நடிகராக "வீரபாண்டிய கட்டபொம்மன்" படத்தில் நடித்த திரு. சிவாஜி கணேசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்" என்று அறிவிப்பு வந்ததும் கரவொலி அரங்கம் முழுதும் நிறைத்தது. பந்துலுவும் சிவாஜி கணேசனும் சென்று பலத்த கரவொலிக்கும் வாழ்த்தொலிக்கும் இடையே பரிசை பெற்று திரும்பினார்கள்.

அவர்கள் வந்து அமர்ந்ததும் செய்த அடுத்த அறிவிப்பு அவர்களை சந்தோஷத்தில் இன்னும் திக்குமுக்காட வைத்தது.

"நண்பர்களே.. இன்னொரு சிறப்பு பரிசும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்துக்காக அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்துக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் திரு. ஜி. ராமநாதன் அவர்கள் ஆசியாவிலேயே சிறந்த இசை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பதை மட்டற்ற உவகையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.- என்றது தான் தாமதம்-
.
நிகழ்ச்சியை கவனித்துக்கொண்டிருந்த "நாட்டியப் பேரொளி" பத்மினி அப்படியே உற்சாகத்தில் துள்ளினார்.

"நம்ம அய்யருக்கு அவார்டு" என்ற சந்தோஷம் அவர் மனதை நிறைத்தது. ஆனால் விழாவுக்கு ஜி.ராமநாதன் அவர்கள் வரவில்லை. ஆகவே அவர் சார்பாக தானே சென்று அவருக்கான பரிசை வாங்கிக்கொண்டார் பத்மினி.

இப்படி ஆசியப் பெருங்கண்டத்திலேயே சிறந்த இசை அமைப்பாளர் என்று உலக அளவில் அங்கீகாரம் பெற்ற முதல் இசை அமைப்பாளர் – அதுவும் ஒரு தமிழ்ப் படத்துக்கு இசை அமைத்து அந்த அங்கீகாரத்தைப் பெற்ற - ஒரே இசையமைப்பாளர் "ஜி. ராமநாதன்" அவர்கள் தான். இன்று வரை அந்தச் சாதனை வேறு எந்த இசையமைப்பாளராலும் முறியடிக்கப் படவில்லை.

மேதைகளுக்கெல்லாம் மேதையான அவரைப் பற்றி நான் எழுத முடியுமா? அவரைப் பற்றி புத்தகமே வெளிவந்து விட்டிருக்கிறது.

அவரை பற்றி நான் என்ன சொல்வது. ?

அந்த மாமேதையின் இசைத் திறமையை அளவிட்டு சொல்லும் அளவுக்கு நான் தகுதியானவன் அல்ல.

இருந்தாலும் "சிகரம் தொட்டவர்கள்" தொடரின் முக்கிய நோக்கமே அறிவியல் வளர்ச்சி சிறிதும் இல்லாத காலகட்டத்தில் தங்கள் திறமையையும், துணிச்சலையும் மட்டுமே துணையாகக் கொண்டு சாதனை படைத்த இசை அமைப்பாளர்களை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வது என்பதாக இருப்பதால் ஜி. ராமநாதன் அவர்களை பற்றி எழுதாமல் இருக்கவே முடியாது.

கூட்டுப்புழுவாக இருக்கும் பொழுது அந்தப் புழு தன்னைச் சுற்றி கூடு கட்டும் வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து தானும் அப்படி ஆகவேண்டும் என்று சதா நினைத்துக்கொண்டே இருக்குமாம். அதுபோலவே ஆகியும் விடுமாம். - என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம்..

சிகரம் தொட வந்தவரே ஒரு சிகரமாக உருமாறி உயர்ந்து நின்ற விந்தையை செய்து காட்டிய முதல் இசை அமைப்பாளர் திரு. ஜி. ராமநாதன் அவர்கள் தான்.

ஐரோப்பிய இசை மேதை ஷூபர்ட் என்பவரைப் பற்றி சக இசை மேதையான ஷூமன் என்பவர் குறிப்பிடும்போது "whatever he touches turns to music" என்று சொல்லியிருக்கிறார். இந்த வார்த்தைகள் ஜி.ராமநாதன் அவர்களுக்கு சர்வ நிச்சயமாகப் பொருந்தும்.

"பறவைகள் எழுப்பும் சப்தத்துக்கு கூட ஸ்வரம் சொல்லக்கூடியவர்" என்று ஜி. ராமநாதனைப் பற்றி பெருமையுடன் குறிப்பிடுகிறார் பிரபல தமிழ் திரைப்பட கதை வசனகர்த்தா திரு. ஆரூர் தாஸ் அவர்கள்.

"ராமநாத அய்யரோட இசை அமைப்பிலே அவர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே சரியாக ஒரு பாடகன் பாடிவிட்டால் வேறு எந்த மியூசிக் டைரக்டருடைய இசையிலும் சுலபமா பாடிவிட முடியும்" - என்று அவரைப் பற்றி சொல்லி இருக்கிறார் தமிழ் திரை இசையில் சகாப்தம் படைத்த பாடகர் திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்கள்.

"கர்நாடகத்தில் மெட்டமைக்க அவருக்கு பத்து நிமிடங்கள் போதும்" - இப்படி சொல்கிறார் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

ஒரு பாடலை பார்த்த மாத்திரத்திலேயே எந்த ராகத்தில் இசை அமைத்தால் கேட்பவர் இதயங்களில் நிலைத்திருக்கும் என்று முடிவெடுக்கக் கூடியவர்.

நமது பாரம்பரிய இசை என்பது ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் மட்டுமே ரசிக்கக்கூடியது அல்ல. ஜமீன்தார்களும் மிட்டா மிராசுகளுக்கு மட்டுமே எட்டக்கூடியது அல்ல. சாதாரண குப்பனும் சுப்பனும் கூட அதை ரசிக்க முடியும் என்கிற அளவுக்கு ஜனரஞ்சகமாக்கி ராகங்களுக்கு புது முகவரி கொடுத்தவர்.

கர்நாடக இசை மேடைகளில் கூட அதுவரை மிக "அபூர்வமாகவே" பாடப்பட்டு வந்த ராகங்களைக்கூட பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியவர்.

"நடிகருக்காக பாடகர் அல்ல. பாடலுக்காகவே பாடகர். அந்தப் பாடகர் குரலில் வெளிப்படுத்தும் பாவத்தை தனது நடிப்பின் மூலம் கொண்டு வருபவரே நடிகர்" என்ற அழுத்தமான நம்பிக்கை கொண்டவர். அதனால் தான் அவரால் - அவர் ஒருவரால் மட்டுமே - ஒரே படத்தில் ஒரே நடிகருக்கு மூன்று பாடகர்களை பாட வைத்து அந்தப் பாடல்கள் அனைத்தையும் "ஹிட்" பாடல்களாக்க முடிந்தது.

அறுபதுகளில் இளைய தலைமுறையாக இருந்தவர்கள் யாரிடம் சென்று "ஜி.ராமநாதன்" என்று சொன்னாலே புருவங்கள் விரிய கண்களும் மனமும் உற்சாகத்தில் துள்ள அவரது பாடல்களைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

இப்போது அறிவியல் வளர்ச்சி இசை அமைப்பை வெகு சுலபமாக்கி விட்டிருக்கிறது. ஆனாலும் இப்போது கேட்கும் பாடல்கள் அடுத்த படம் வரும்போதே மனதை விட்டு ஓடிவிடுகின்றன.

ஆனால்.. நாற்பதுகளில் தொடங்கி அறுபது வரை ஜி.ராமநாதன் இசை அமைத்த பாடல்கள் காலத்தை வென்று இன்றும் நிலைத்திருக்கின்றன.

தமிழ் இசைக்கு தரமான பல பாடல்களை அளித்த அவரது வாழ்க்கை சரிதத்தை சுவையாக ஏற்கெனவே பிரபல எழுத்தாளர் வாமனன் அவர்கள் விஸ்வரூபம் எடுத்து காட்டி இருக்கிறார்.

அவர் ராமனாதனின் இசையில் முழுக்க முழுக்க தோய்ந்தவர்.

நானோ... விவரம் அறியும் வயது வரும்போது ஜி.ராமாநாதன் அவர்களைப் பற்றி பிறர் சொல்லக் கேள்விப்பட்டே அவரது இசையில் மனதை பறிகொடுத்தவன்.

அந்த தன்னிகரில்லாத இசைச் சக்ரவர்த்தியைப் பற்றி இன்றைய தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு தமிழ் ஸ்டூடியோ மூலமாக தெரியப் படுத்தவேண்டும் என்ற ஒரே ஆசை தான் என்னை எழுதத் தூண்டுகிறது.

கண் வழி புகுந்த பாடல் வரிகள் அவரது கருத்தில் கலந்து இசை வடிவம் பெற்று வந்தபோது.. "வாராய் நீ வாராய்" என்று வரவேற்காத உள்ளங்களே இல்லை.

மரபு வழி வந்த கர்நாடக இசையா, நாட்டியப் பாடலா, தெம்மாங்கு மெட்டா, நாட்டுப்புறப் பாடலா, எதுவானாலும் சரி அதில் இனிமையின் உச்சத்தை தொட்ட இசை நாயகன் அவர்.

ராகங்களை கோர்த்து அவர் அமைத்த "ராகமாலிகைப்" பாடல்கள் நம் செவிகளில் விழும் போது மனமும் சேர்ந்து நிறைகிறதே..அந்த விந்தையை அவரால் எப்படி சாதிக்க முடிந்தது.

மிகச் சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவரால் ஆசிய கண்டத்திலேயே சிறந்த இசை அமைப்பாளர் - என்ற பெருமையை தமிழ் அன்னைக்கு வாங்கித் தர எப்படி முடிந்தது?

ராக தேவதையின் பரிபூரண ஆசிகளையும் அருளையும் ஒருங்கே பெற்ற செல்லக் குழந்தை அவர்.

அந்த இசைச் சிகரத்தைப் பற்றி அவரது இசையின் ஆளுமை பற்றி எனக்கு தெரிந்த விதத்தில் என் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.

தவறு ஏதேனும் தென்பட்டால் உடனே என்னை திருத்துங்கள். நிறைகள் தென்பட்டால் அவை அந்த இசைச் சக்கரவர்த்திக்கே சமர்ப்பணம்.

மகத்தான அந்தச் சாதனையாளரைப் பின்தொடர்ந்து நாமும்....

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.