வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


எஸ்.வி. வெங்கட்ராமன் -14

பி.ஜி.எஸ். மணியன்  

"எல்லாப் புகழும் இறைவனுக்கே"

"அறிவாளி"க்குப் பிறகு சுமார் இரண்டு ஆண்டுகாலம் வாய்ப்பேதும் இல்லாமல் ஒதுக்கப்பட்டிருந்தார் எஸ்.வி.வெங்கட்ராமன்.

அதன் பிறகு 1966 -இல் "பெரிய மனிதன்" என்று ஒரு படம். டி.கே. ராமச்சந்திரன், "மேஜர்" சுந்தரராஜன், தங்கவேலு, மனோரமா என்று "star value " அதிகம் இல்லாத நடிகர்கள் நடித்த படம். இசை அமைத்ததோடு "அடுத்தவன் வாழ தன்னைக் கொடுப்பவன்அவனே பெரிய மனிதன்" என்ற பாடலை அவரே பாடினார். ஆனால் காட்சி அமைப்பு ஒரு பிச்சைக்காரனுக்கு அவர் பின்னணி பாடுவதாக அமைந்தது. நல்ல கதைக் கரு இருந்தாலும் அப்போது வெளிவந்த பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் படம் படு தோல்வி அடைந்தது.

அந்தத் தோல்வி ஒரு நீண்ட இடைவெளியை பட உலகுக்கும் அவருக்கும்
இடையில் ஏற்படுத்தி விட்டது.

எஸ்.வி. வெங்கட்ராமன் என்ற ஒரு இசை அமைப்பாளர் இருக்கிறார் என்பதையே அனைவரும் மறந்துவிட்டனர். கிட்டத்தட்ட பதினோரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு "அருட்செல்வர்" ஏ.பி. நாகராஜன் "ஸ்ரீ கிருஷ்ண லீலா" என்ற பக்திப் படத்தை இயக்கி தயாரித்து வெளியிட்டார். சிவகுமார், நாகேஷ், மனோகர், மேஜர் சுந்தரராஜன், ஜெயலலிதா, ஸ்ரீவித்யா, விஜயகுமாரி ஆகியோர் நடித்தனர். இதுவே எஸ்.வி. வெங்கட்ராமனின் இசை அமைப்பில் வெளியான கடைசிப் படம்.

முன்பு நாடகமேடையில் எஸ்.ஜி.கிட்டப்பா பாடி பிரபலப் படுத்திய "காமி சத்யபாமா கதவைத் திறவாய்" இப்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் ஒலித்தது.

புதிய அலை பரவிய காலத்தில் புராணக் கதைகள் சுத்தமாக மதிப்பிழக்கத் தொடங்கிய காலகட்டத்தில் வெளி வந்த 'ஸ்ரீ கிருஷ்ண லீலா"வின் தோல்வி, "மச்சானைப் பாத்தீங்களா" என்று கேட்டுக்கொண்டே வந்த இசை ஞானி இளையராஜாவின் பிரவேசம், எல்லாமாகச் சேர்ந்து கொண்டு எஸ். வி. வெங்கட்ராமன் என்ற சங்கீதச் சிங்கத்தை வலுக்கட்டாயமாக ஓய்வுக்கு தள்ளிவிட்டது.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் கலைத்துறையில் இருந்தும் சரியான அங்கீகாரம் எதுவுமே அவருக்கு அளிக்கப் படவில்லை.

"ரொம்ப ஐஸ்வர்யமானது" என்று அவர் கருதிய கோபாலபுரத்தில் இருந்த சொந்த வீட்டை விற்றுவிட்டு நகரை விட்டு ஒதுக்குப் புறமாக இருந்த பாலவாக்கத்தில் வீடு வாங்கிக்கொண்டு இருக்கவேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது.

குறைந்த பட்சம் ஒரு கலைமாமணி விருதுக்கு கூட பரிந்துரைக்கப் படாமல் அந்தச் சாதனையாளர் ஒதுக்கப் பட்டது கொடுமையிலும் கொடுமை.

"என் கலைச் சேவைக்காக யாரவது என்னை கௌரவப் படுத்தினால் தேவலை" என்று அந்த பெரிய மனிதர் வெட்கத்தை விட்டு வாய் விட்டுக் கேட்டும் கூட அது யார் காதிலும் விழவே இல்லை.

"வெளிநாட்டுக்கு போற நம்ம மெல்லிசைக்குழுக்கள் கிட்டே அங்கிருக்கற ஜனங்க முப்பது வருசத்துக்கு முன்னே நான் போட்ட "நெஞ்சில் குடியிருக்கும்" பாட்டை விரும்பிக் கேட்கிறார்களாம். அதுவே என்னோட வெற்றிதானே" - என்ற திருப்தியும் ஆறுதலும் மட்டுமே அந்த மகத்தான கலைஞனுக்கு மிஞ்சியது. போகப் போக தன்னைப் பற்றி பேசுவதை கூட குறைத்துக்கொண்டார் அவர்.

எழுபதுகளில் கூட அவர் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்திருக்கிறார்.
நமது புருவத்தை ஆச்சரியத்தில் உயரவைக்கும் ஒரு புதிய செய்தியும் அவரைப் பற்றி உண்டு. திரைப்படங்களில் வாய்ப்பு இல்லாமல் போன எழுபதுகளில் அவர் இஸ்லாமிய பக்திப் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

ஆம். பிரபல பாடகர் நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் மிகப் பிரபலமான
"இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை" என்ற பாடலுக்கு இசை அமைத்தவர் நமது எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்கள்தான்.

இன்றும் இன, மத பேதங்களை கடந்து அனைவராலும் வெகுவாக ரசிக்கப்படும்
ஒரு பாடலாக இது இருக்கிறது. "அல்லாவை நாம் தொழுதால்" என்ற பாடலும் எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்களின் இசை அமைப்பில் வந்தது தான். இன்னும் சமீபத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற விழா மேடையில் இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இரு கை உயர்த்தி சொன்னாரே "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று. அந்த வார்த்தைகள் எஸ்.வி. வெங்கட்ராமன் இசை அமைத்து நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய பாடலின் ஆரம்ப வரிகள் தான். மொழி இன மத பேதங்களை கடந்து அனைவராலும் விரும்பப் படுவது இசை ஒன்று தான். பிரபலமான இந்தப் பாடல்களை இனி நாம் கேட்கும் போதெல்லாம் எஸ்.வி. வெங்கட்ராமன் என்ற அந்த மகத்தான உன்னதக் கலைஞனை ஒரு நிமிடமாவது நினைத்துக் கொள்ளவேண்டும். அவர் குடத்தில் இட்ட விளக்கு அல்ல. குடத்தில் அடைக்கப்பட்ட விளக்கு.

எண்பத்தாறு வயது வரை வாழ்ந்த எஸ்.வி. வெங்கட்ராமன் என்ற மாமேதை 1998 -ஆம் ஆண்டு காலமானார்.

"காற்றினிலே வரும் கீதத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் காற்றோடு கலந்துவிட்டாலும் தனது பாடல்களின் மூலமாக ரசிகர்களின் நெஞ்சிலே நிரந்தரமாக குடியிருப்பார். அவர் இசை அமைத்த பாடல்களை நாம் ரசித்திருப்போம், ரசித்தும் வருகிறோம் ... ஆனால் அவர்தான் அந்தப் பாடலுக்கு இசை வடிவம் கொடுத்தவர் என்பதை அறியாமலே.

இனிமேல் எப்பொழுதாவது ஒரு "காற்றினிலே வரும் கீதத்"தையோ, " இறைவனிடம் கையேந்துங்கள்", எல்லாப் புகழும் இறைவனுக்கே" போன்ற பாடல்களையோ நாம் கேட்க நேரும்போது உன்னதமாக அவற்றை வடிவமைத்துக்கொடுத்த எஸ்.வி. வெங்கட்ராமன் என்ற அற்புதக் கலைஞரை ஒரு கணம், ஒரே ஒரு கணமாவது நினைத்துக் கொள்வோம்.

அந்த ஆத்மாவுக்கு திருப்தி அளிக்க அது ஒன்றையாவது செய்வோமே?

(அடுத்து சிகரம் தொட வருகிறார் அன்றும் இன்றும் என்றுமே ஈடு சொல்லமுடியாத இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன்.)

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.