வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


எஸ்.வி. வெங்கட்ராமன் -13

பி.ஜி.எஸ். மணியன்  

நெஞ்சில் குடியிருக்கும் பாடல்கள்....

"இரும்புத் திரை" - 1960 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் அன்று திரைக்கு வந்த படம் இது.

நடிகர் திலகம் அவர்களின் பொங்கல் வெளியீடுகள் எதுவும் அவ்வளவாக ஓடாது என்ற செண்டிமெண்டை தகர்த்து மாபெரும் வெற்றி பெற்ற படம். சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா, எஸ்.வி. ரங்காராவ், சரோஜாதேவி, தங்கவேலு, பண்டரிபாய், வசுந்தராதேவி என்று பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருந்தது. முதலாளி, தொழிலாளி பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம் இது.

பாடல்களை கொத்தமங்கலம் சுப்பு, பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் எழுதினர். நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில் நெஞ்சை அள்ளும் பாடல்கள் பிறந்தன.

"படிப்புக்கும் ஒரு கும்பிடு. பட்டத்துக்கொரு கும்பிடு. பாஸும் பெயிலும் போடும் இந்தப் பழக்கத்துக்கொரு கும்பிடு" - என்ற ஆரம்பப் பாடல் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வரும் பெண்களின் உற்சாகத் துள்ளலை அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. பி. லீலா மற்றும் ஜிக்கியின் குரல்களில் வெளிப்படும் உற்சாகம் கேட்பவரையும் தொற்றிக்கொள்கிறது.
அடுத்து ஒரு அருமையான கர்நாடக இசைப் பாடலை "கரஹரப்ரியா"வில் அற்புதமாகக் கொடுத்திருக்கிறார் எஸ்.வி. வெங்கட்ராமன். பாபநாசம் சிவனின் அற்புத வரிகளை அனுபவித்துப் பாடி இருக்கிறார் ராதா-ஜெயலக்ஷ்மி.

"என்ன செய்தாலும் என் துணை நீயே. என் அன்னையே உமையே - என்னை நீ என்ன செய்தாலும் என் துணை நீயே" - பல்லவிக்கு பிறகு அனுபல்லவிக்கு முன்பாக வரும் இணைப்பிசையில் மனதை வருடுகிறார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

"சின்ன வயது முதல் உன்னையே நம்பினேன்" என்ற வரிகளுக்கு பிறகு வரும் குழலிசை "பிட்"அனுபவித்துக் கேட்கவேண்டிய ஒன்று.

"சினந்தென்னை அடித்தாலும் பரிந்தெடுத்(து) அணைத்தாலும் - நீ - (என்னை செய்தாலும்..).
....அம்பிகையிடம் சரணாகதி அடைந்த பெண்ணின் மனப் பக்குவத்தை அற்புதமாக
வெளிப்படுத்தும் வரிகள். சரணத்துக்கு முன்பு வரும் இணைப்பிசை முதலில் வந்த இணைப்பிசையையே ஒத்திருக்கிறது.

"முன் வினையால் இன்ப துன்பங்கள் விளைந்திட
மூட மதியால் உன்னை நோவதென் பேதைமை .
என் விதியால் இடர் ஆயிரம் சூழினும் - எல்லாம் உன் திருவிளையாடல் என்றெண்ணி - நீ என்ன செய்தாலும்.." - பாபநாசம் சிவன் திரைப்படத்துக்கு எழுதிய கடைசி பாடலாக இது இருக்கவேண்டும்.

வைஜயந்திமாலாவின் நடனப் பாடலான "ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்ற பொழுது" - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் எளிமையான வரிகள் வெங்கட்ராமனின் இனிமையான இசை அமைப்பில் பி. லீலாவின் குரலில் காட்சிக்கேற்ற நயத்துடன் ஒலிக்கிறது.

காட்சியின் சூழலுக்கு ஏற்றபடி ராகத்தை கையாள்வதில் தான் வல்லவர் என்று இந்த இரண்டு பாடல்களின் மூலம் மறுபடியும் எஸ்.வி. வெங்கட்ராமன் நிரூபித்தார்.

அடுத்து - "நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று புரியுமா?" - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் காதல் வானில் சிறகடித்துப் பறக்கும் இளம் உள்ளங்களின் உணர்வுகளை எளிமையாக வெளிப்படுத்த டி.எம். சௌந்திரராஜன் அவர்களும் பி. லீலாவும் அருமையாகப் பாடிய இந்தப் பாடலுக்கு ஷண்முகப்ரியா ராகத்தில் நெஞ்சை அள்ளும் விதத்தில் அருமையாக மெட்டமைத்திருந்தார் எஸ்.வி. வெங்கட்ராமன்.
அடுத்து மிக எளிமையான சமத்துவப் பாடல் "ஏரைப் புடிச்சவனும் இங்கிலீசு படிச்சவனும்" - வர்க்க பேதத்தை சாடிய இந்தப் பாடலை திருச்சி லோகநாதனைப் பாடவைத்து பிரபலமாக்கினார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

"கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியலே" – விலைவாசி உயர்வால் நடுத்தர வகுப்பினர் படும் அவஸ்தைகளை நகைச்சுவை இழையோட சொல்லிய பாடல். பாடியவர் திருச்சி லோகநாதன்.

"பாட்டுக்கொரு பட்டுக்கோட்டை" என்று சிறப்பிக்கப் பட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய இன்னும் இரு எளிமையும் கருத்தாழமும் நிறைந்த பாடல்களுக்கு எளிமையான மெட்டுக்களை கொடுத்து பிரபலமாக்கினார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

"மனிதரை மனிதர் சரி நிகர் சமமாய் மதிப்பது நம் கடமை" பாடல் சமத்துவத்தை போதிக்கிறது என்றால் –

"நன்றி கேட்ட மனிதருக்கு அஞ்சி நிற்க மாட்டோம். நாவினிக்க பொய்யுரைக்கும் பேரை நம்ப மாட்டோம்" - என்ற பாடல் தொழிலாளர்களின் உரிமைக் குரலாய் ஒலிக்கிறது.

இப்படி படம் நெடுக வியாபித்திருந்த பாடல்களுக்கு தன்னுடைய இசை அமைப்பினால் காட்சிகளுக்கே உயிரூட்டினார் எஸ்.வி. வெங்கட்ராமன் என்று சொன்னால் அது மிகையாகாது.

இரும்புத்திரையின் மகத்தான வெற்றி அவரை மீண்டும் சிவாஜி கணேசன் அவர்களுடன் "மருதநாட்டு வீரனில்" இணைய வைத்தது.

அரசர் காலத்து கதையில் "சுத்த காந்திய நெறியில் வாழ்ந்திடவே அவர் கண்ட கனவுகள் நனவாக-சமாதானமே தேவை" என்று நடிகர் திலகம் அப்போது அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் காந்தியக் கொள்கையை படங்களில் வலியுறுத்துவது வழக்கமாகி விட்டிருந்ததால் இந்த முரண்பாடு பெரிதாகத் தோன்றவில்லை.

ஆனால்.. இந்தப் படத்தில் காதலன் காதலியை நினைத்து வெண்ணிலவை பார்த்து பாடுவதாக அமைந்த பாடல் "பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா? இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா?".

இந்தப் பாடலை ஒரு மணி நேரத்தில் கவியரசு கண்ணதாசன் எழுதிக்கொடுக்க இரண்டு மணி நேரத்தில் மோகன ராகத்தில் அருமையாக மெட்டுப் போட்டு டி.எம்.எஸ். அவர்களை அற்புதமாகப் பாடவைத்தார் எஸ்.வி. வெங்கட்ராமன். மோகன ராகத்தில் சினிமாவில் எத்தனயோ பாடல்கள் இருப்பினும் இந்தப் பாடலில் அந்த ராகம் ஒருவித தனித் தன்மையுடன் கையாளப் பட்டிருக்கிறது.

அடுத்து டி.எம்.எஸ். - பி. சுசீலா பாடிய "விழி அலை மேலே செம்மீன் போலே" - பாடலுக்கு வெங்கட்ராமன் அமைத்திருக்கும் இசை இன்றும் பாடலை நிலைத்திருக்க வைக்கிறது. சரணத்துக்கு முன் வரும் நடை பேதம் மனதை உறுத்தாமலும் அதே சமயம் கொள்ளை கொள்ளும் வண்ணமும் அமைத்திருக்கிறார் அவர். சரணம் முடிந்த பிறகு டி.எம்.எஸ். - சுசீலாவின் குரலில் ஒரு அருமையான ஹம்மிங். அதன் பிறகு மீண்டும் "விழி அலை மேலே" என்று பல்லவியை இருகுரலிசையாக கொடுத்து கேட்பவர் காதுகளையும் மனங்களையும் ஒருசேர நிறைத்திருக்கிறார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

அடுத்து எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில் வெளிவந்த படம் "அறிவாளி". பல பிரச்சினைகளால் கிடப்பில் இருந்து தாமதமாக 1963 -இல் வெளிவந்த படம். சிவாஜி - பானுமதி இணைந்து நடித்த இந்தப் படப் பாடல்களால் அனைவரையும் மீண்டும் வசீகரித்தார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

"வேங்கடரமணா பங்கஜ சரணா" - ஏழுமலையான் மீதான ஒரு பக்திப் பாடலை கலப்படமில்லாத காம்போதி ராகத்தில் அருமையாக (வெங்கட்ராமன் மெட்டமைக்க தனது குரலால் அற்புதமாக அனுபவித்துப் பாடி அனைவரையும் வசீகரித்தார் பானுமதி.

டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் குரலில் "ஷண்முகப்ரியா" ராகத்தில் கே.டி.சந்தானம் அவர்கள் எழுதிய "அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே" - உண்மையிலேயே செவிகளுக்கு நல்ல விருந்து. இந்தப் பாடல் காட்சியில் கவிஞர், பாடகர், இசை அமைப்பாளர், வாயசைத்து நடித்திருக்கும் நடிகர் திலகம் அனைவருமே சேர்ந்து ஒரு இசை சாம்ராஜ்யமே நடத்தி இருக்கிறார்கள்.

இப்படி மூன்று படங்கள் எஸ்.வி. வெங்கட்ராமனின் திறமைக்கு நல்ல சான்றுகளாக அமைந்தன. ஆனாலும் வருடத்துக்கு ஒரு படம் தான் அவரது பெயரைச் சுமந்தபடி வந்தது.

அறிவாளி படம் வெளிவந்த அதே அறுபத்து மூன்றாம் ஆண்டில் இசை மேதை ஜி. ராமநாதன் அவர்களும் மறைந்துவிட திரை உலகம் முழுக்க முழுக்க இரட்டையர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி - மற்றும் கே.வி. மகாதேவன் ஆகியோர் வசம் வந்தது.

விளைவு - நெஞ்சில் குடியிருக்கும் அற்புதமான பாடல்களைக் கொடுத்த எஸ்.வி. வெங்கட்ராமன் என்ற நட்சத்திர இசை அமைப்பாளரை திரை உலகம் மறக்க ஆரம்பித்தது.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.