வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


எஸ்.வி. வெங்கட்ராமன் -9

பி.ஜி.எஸ். மணியன்  

புகழ் மாலையில் சில தேன் துளிகள்.

1945 - இல் மீரா படம் தமிழில் வெளிவந்த பிறகு "மகா மாயா", "மகாத்மா உதங்கர்", "கோகுல தாசி" ஆகிய படங்கள் எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில் வந்து மறைந்தன. இதனை அடுத்து பி. யு. சின்னப்பாவின் "கிருஷ்ண பக்தி" என்ற படத்துக்கு எஸ்.வி. வெங்கட்ராமனுடன் ஜி. ராமநாதனும் இசை அமைத்திருந்தார். இதில் "சாரசம் வசீகரக் கண்கள் சீர் தரும், முகம் சந்த்ரபிம்பம்" - ஒரு உற்சாகமான ஜாவளி வகையில் அமைந்த இந்தப் பாடல் சின்னப்பாவின் வெற்றிப்பாடல்களில் ஒன்று. (இந்தப் பாடலுக்கு இசை அமைத்தது ஜி.ராமநாதன் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. ஆனால் ஒரு நேர்காணலில் இந்தப் பாடல் தன் கற்பனையில் வந்ததது தான் என்று எஸ்.வி. வெங்கட்ராமன் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். ) "எல்லோரும் நல்லவரே" என்று இன்னொரு பாடல் - முன்னது காதல் பெருக்கு என்றால் இது ஞான கீதம். (அவ்வப்போது பொதிகை தொலைக் காட்சியின் தயவால் "கிருஷ்ண பக்தி" காணக் கிடைக்கிறது.!)

அதன் பிறகு "மீரா" திரைப்படம் ஹிந்தியில் 1947 ஆம் வருடம் வெளியாகி பாரத தேசம் முழுவதையும் பரபரப்புக்குள்ளாக்கியது.

ஹிந்தி மீராவின் துவக்கத்தில் கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்கள் திரையில் தோன்றி அருமையான ஆங்கிலத்தில் முன்னுரை வழங்கி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களை உலகத்துக்கே அறிமுகப் படுத்தினார். நாடெங்கிலும் இருந்து புகழ் மாலைகள் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களுக்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தன.

ஹிந்தியில் வெளிவந்த மீரா தமிழர்களை இந்தியத் தலைநகரில் பெருமிதம் கொள்ளவைத்தது.

"பதினைந்து வருடம் அவகாசம் தருகிறேன். உங்கள் வடநாட்டு நட்சத்திரம் யாரையாவது தமிழையும் தமிழ் இசையையும் கற்றுக்கொண்டு இந்த மாதிரி ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்." என்று அன்றைய நிதி அமைச்சர் திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் தனது வட இந்திய நண்பர்களிடம் சவாலே விட்டார். (இன்று வரை அந்த சவாலை யாரும் எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடப் படவேண்டிய ஒரு விஷயம்!)
"இந்தப் படத்தைப் போலவே அனைவரும் படம் எடுப்பார்களேயானால் தணிக்கைத் துறை என்ற அமைப்பே தேவை இல்லை" - என்றார் அப்போதைய மும்பையின் உள்துறை அமைச்சராக இருந்த திரு. மொரார்ஜி தேசாய்.

"இவ்வளவு தூய்மையான சிறந்த படத்தையும், இவ்வளவு இனிமையான பாடல்களையும் நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை. கேட்டதும் இல்லை" - என்றார் மும்பையின் முதல் அமைச்சராக இருந்த திரு. பி.ஜி. கேர் அவர்கள்.

படத்தின் உச்சகட்ட காட்சியைப் பார்த்துவிட்டு, "அனைத்து அம்சங்களிலும் ஒரு குறையும் இல்லாத மேன்மை நிறைந்த இப்படி ஒரு காட்சியை நான் இதுவரை வேறு எந்தப் படத்திலும் பார்த்ததே இல்லை." என்றார் திரு. புல்லா ரெட்டி அவர்கள்.

படம் வெளியாகி ஏழு வாரங்களைக் கடந்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக மும்பை சென்ட்ரல் திரை அரங்கம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

கொல்கத்தாவில் "வஸுஸ்ரீ" திரை அரங்கில் பெருகி வந்த ஜனத் திரளைச் சமாளிக்க முடியாமல் படம் வெளியான நான்கு நாட்களுக்குள் "வீணா" திரை அரங்கிலும் படம் திரையிடப்பட்டது. வசுஸ்ரீ திரை அரங்கில் முதல் வாரத்தில் வசூலான தொகையே முப்பத்திரண்டாயிரத்தை தாண்டியது. (நினைவிருக்கட்டும் - வருடம் 1947 . இப்போது எத்தனை சைபர்கள் சேர்க்கவேண்டுமோ?) "MEERA BROKE ALL INDIA BOX OFFICE RECORD AT BASUSREE ... HEARTY CONGRATULATIONS" என்ற தகவலைக் கொண்ட தந்தி ஒன்று திரு. சதாசிவம் அவர்களுக்கு அனுப்பப் பட்டது.

பத்திரிகை விமர்சனங்களிலோ வானளாவ புகழ்ந்து தள்ளி இருந்தார்கள்.

"பம்பாய் சென்ட்ரல் திரை அரங்கம் ஒரு யாத்திரை ஸ்தலமாக மாறிவிட்டிருக்கிறது. தெய்வீக மீராவைச் சந்திக்க திரளாக வந்து கொண்டிருக்கின்றனர்" - என்றது ஒரு மும்பை நாளிதழ்.

"படம் துவங்கியதும் அரங்கில் இருப்பதையே மறந்துவிடுகிறோம். காட்சிகளும் பாடல்களும் மந்திரம் போட்டது போல் மயங்க வைக்கின்றன. படம் முடிந்த பிறகுதான் இத்தனை நேரமும் ஒரு திரைப்படத்தைத் தான் பார்த்தோம் என்பதையே உணர்கிறோம்" - என்றார் "Free Press " பத்திரிகையின் விமர்சகர்.

புது தில்லியில் வெளியான "இந்தியன் நியூஸ்" பத்திரிகையின் விமர்சகரோ ஒரு படி மேலே போய்விட்டார். "நாத்திகர்களுக்கு ஒரு எச்சரிக்கை" என்று தலைப்பிட்டு "எப்படிப்பட்ட தீவிரமான நாத்திகரானாலும் "மீரா" படத்தை ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு பாடல்களையும் கேட்பாரானால் கண்டிப்பாக அவர் ஆன்மீகவாதியாக மாறிவிடுவார்" - என்று சவாலே விட்டார்.

"இந்தப் படம் தமிழில் இருந்து ஹிந்திக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட படம் என்பதை நம்பவே முடியவில்லை. ஒரு முழுமையான ஹிந்திப்படமாகவே தோன்றுகிறது." என்று பல விமர்சகர்கள் வியந்தனர்.

இப்படி இந்தியத் திரை உலகமே கொண்டாடும் அளவுக்கு எம். எஸ்.. அவர்கள் உயர்ந்த மீரா படத்துக்கு பிறகு திரு. எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்களுக்கு அகில இந்திய அளவில் சரியான அங்கீகாரமோ, பெருத்த வாய்ப்புகளோ வந்து குவியவில்லை. "மீரா" படத்தின் அதீதமான வெற்றி ஒரு எதிர்மறையான விளைவையே அவருக்கு ஏற்படுத்தி விட்டது.

படம் பார்த்தவர்களும் சரி, பாடல்களைக் கேட்டவர்களும் சரி "எம்.எஸ். என்னமா பாடி இருக்காங்க!, என்னமா நடிச்சு இருக்காங்க! " - என்று வியந்தபடியே தான் சென்றார்களே தவிர இசை அமைப்பாளரை பற்றி யார் நினைத்தார்கள்?

பண்டித நேரு முதல் பாமரர் வரை அனைவரும் கண்டுகொண்டதும் வானளாவப் புகழ்ந்ததும் அந்த இசை அரசி ஒருவரைத்தான். "மீரா" படத்தோடு எம்.எஸ். அவர்கள் மூதறிஞர் ராஜாஜி அவர்களது அறிவுரையை ஏற்றுக்கொண்டு தனது திரை உலக வாழ்வுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார்.

ஆகக்கூடி "மீரா"வின் புகழ் வெளிச்சம் முழுவதும் எம். எஸ். அவர்கள் மீதே படர்ந்ததால் மற்றவர்கள் சற்று மங்கித்தான் போனார்கள் என்பதை நாம் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனாலும் "எம்.எஸ். அம்மாவின் பெயர் நிலைத்திருக்கும் வரையிலும் மீரா படத்தின் பெயரும் நிலைத்திருக்கும். அதில் எஸ்.வி.வெங்கட்ராமன் என்ற மேதையின் பெயரும் கட்டாயம் இருக்கும்" - என்று சொல்லுகிற அளவுக்கு அந்த இசை அரசியின் வாழ்க்கைச் சரிதத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு விட்டார் எஸ்.வி.வெங்கட்ராமன்.

மீரா-படம் கண்ணனின் கருணைக்கு பாத்திரமான ஒரு பெண்ணின் கதை.. அதன் வெற்றிக்குப் பிறகு அடுத்த வெற்றிக்கான மாபெரும் வாய்ப்பு திரு. எஸ்.வி. வெங்கட்ராமனின் வாசலில் அவரை வரவேற்க காத்துக்கொண்டிருந்தது. இம்முறை - கர்த்தரின் கருணைக்கு பாத்திரமான ஒரு பெண்ணின் கதை வடிவமாக.

படம் : ஞான சௌந்தரி.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.