எஸ்.வி. வெங்கட்ராமன் -8
மீராவில் இடம் பெற்ற பாடல்களில் முதன்மை ஸ்தானம் வகிப்பது "காற்றினிலே வரும் கீதம்" தான். கல்லும் கசிந்து உருகும் வண்ணம் எம். எஸ். அவர்கள் அற்புதமாகப் பாடியிருக்கும் பாடல் இது.
"ஆ. என் சொல்வேன் மாயப் பிள்ளை வேய்ங்குழல் பொழி கீதம்" என்ற வரிகளில் முதலில் வரும் "ஆ" என்ற ஒற்றைச் சொல்லில் எம்.எஸ். அவர்கள் வெளிப்படுத்தும் பாவம்.... அதை வருணிக்க வார்த்தைகளே இல்லை. இத்தனைக்கும் இந்தப் பாடலுக்கான மெட்டு ஒரு "இரவல்" மெட்டு என்றால் நம்புவதற்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் .. உண்மை அதுதான்.
அந்தக் காலத்தில் வங்காளத்தில் "ஜூதிகா ராய்" ஒரு பிரபலமான பாடகி. அவரது ரெக்கார்டுகள் அந்த நாளில் தென்னகத்தில் மிகவும் பிரபலமாக இருந்தன. அவர் பாடி நாடெங்கும் பிரபலமான ஒரு பாடலின் மெட்டு அமரர் கல்கி அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போக அவர் எழுதிய "காற்றினிலே வரும் கீதம்" பாடலை அந்த மெட்டிலேயே அமைக்கும்படி இசை அமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனிடம் கேட்டுக்கொண்டார். அந்த மெட்டை அப்படியே தழுவி விடாமல் அதில் சிற்சில மாற்றங்களை செய்து எம்.எஸ். அவர்கள் பாடுவதற்கு ஏற்றபடி அமைத்துக்கொடுத்தார் எஸ்.வி. வெங்கட்ராமன். இன்று ஜூதிகா ராய் அவர்கள் பாடிய பாடல் இல்லை. ஆனால் எம்.எஸ். அவர்கள் பாடிய "காற்றினிலே வரும் கீதமோ" தலைமுறைகளைக் கடந்து அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. http://www.youtube.com/watch?v=PCiqqFVY4Xw
சித்தூரில் மகாராணா கட்டித்தந்த கண்ணன் கோவில் கும்பாபிஷேக விழாவில் மீரா பாடுவதாக அமைந்த பாடல் "கிரிதர கோபாலா" - அருமையான மோகன ராகத்தில் அற்புதமாக இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார் எஸ்.வி.வெங்கட்ராமன். http://www.youtube.com/watch?v=PCiqqFVY4Xw
இதுபோலவே "எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே" - செஞ்சுருட்டி ராகத்தின் இனிமை முழுவதையும் அப்படியே தனியாக எடுத்து அமைத்தது போல இசை வடிவம் என்றால் (http://www.youtube.com/watch?v=P8eGwrkziak&feature=related) "பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ" சிந்துபைரவியை இவ்வளவு இனிமையாக வார்த்தெடுக்க முடியுமா என்று வியக்கவைக்கிறது.
கதைப்போக்குக்கும், கதை மாந்தரின் மனத்தில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பவர்களை அப்படியே பாடல் காட்சியுடன் ஒன்றிப்போக வைப்பது ஒரு சிறந்த இசையமைப்பாளரின் திறமையில் தான் அடங்கி இருக்கிறது. சூழ்நிலைகளுக்கு ஏற்றமாதிரி பாடலுக்கான ராகத்தை தேர்ந்தெடுப்பது பெரிய விஷயம் என்றால் அதை விட முக்கியம் அதை அனைவரும் ரசிக்கும்படி கொடுப்பது. அந்த வகையில் எஸ்.வி. வெங்கட்ராமனுக்கு ஒரு தனி இடம் உண்டு. இதற்கு சான்றாக "மீரா" படத்திலேயே இன்னொரு காட்சி.
அரண்மனை வாழ்வையும் அரசபோகத்தையும் துறந்து கண்ணனை நாடி பற்றினை துறந்த துறவியின் மனத்தில் ஏற்படும் அளவிடமுடியாத ஆனந்த நிலையில் மீரா. உயிருக்குயிராக நேசித்த காதல் மனைவியின் பிரிவால் ஏற்படும் அளவிடமுடியாத சோகத்தில் மேவார் ராணா. ஒரே சமயத்தில் இந்தப் பாடல் காட்சியில் பார்ப்பவர் மனத்திலும் சந்தோஷமா, துக்கமா என்று சொல்லமுடியாத இனம் புரியாத உணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் காட்சியை அமைத்திருந்தார் இயக்குனர் எல்லிஸ். ஆர். டங்கன். காட்சிக்கு பொருத்தமான பாடல் வரிகளை "தமிழ்த் தியாகய்யா" பாபநாசம் சிவன் அவர்களோ அற்புதமாக அமைத்துக் கொடுத்துவிட்டார். காட்சிக்கான உணர்ச்சியை பார்ப்பவர் மனத்தில் ஏற்படுத்துவதற்கு எம்.எஸ். அவர்கள் இருக்கவோ இருக்கிறார். இந்த பாடல் காட்சிக்கு ராகமும் இசை அமைப்பும் பொருத்தமாக அமையவேண்டும். "மறைந்த கூண்டிலிருந்து விடுதலை பிறந்த பறவை விரைந்தோடுதே" என்று துவங்கும் இந்தப் பாடல் காட்சிக்கு பொருத்தமான ராகமாக எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்கள் தேர்ந்தெடுத்த ராகமோ "கமாஸ்". கமாஸ் அவரை கைவிடவில்லை. இன்று பார்த்தால் கூட நிம்மதியா,
மகிழ்ச்சியா, சோகமா, துக்கமா என்று இனம் பிரித்து உணரமுடியாத ஒரு உணர்வு வ்யாபிப்பதை உணர முடியும்.
அந்த அளவுக்கு இயக்குனர், நட்சத்திரங்கள், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று அனைவரும் கூட்டணி அமைத்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட காட்சி இது. வண்ணப்படங்களே நிறைந்திருக்கும் இன்றைய காலகட்டத்திலும் நம் எண்ணத்தில் என்றும் பசுமையாக நிலைத்திருக்கிறது இந்த கருப்பு-வெள்ளைப் படக்காட்சி.
இதை அடுத்து ஒரு விருத்தம். ஒரு மலையுச்சியில் நின்றபடி இறை அருளை வேண்டி உருக்கமாக மீரா பாடுவதாக அமைந்த காட்சி. "உடல் உருக உள்ளம் உருக" என்று துவங்கும் விருத்தம். மீரா படப்பாடல்களிலேயே இதற்கு ஒரு தனி இடம் உண்டு. இந்த விருத்தத்தை ராக மாலிகையில் அமைத்திருக்கிறார் எஸ்.வி. வெங்கட்ராமன். பூர்வி கல்யாணியில் துவங்கி சஹானாவில் மனதை தீண்டி மாயா மாளவ கௌளையில் முடியும்.
பொதுவாக ஒரே ராகத்திலோ அல்லது ராகமாலிகையிலோ விருத்தம் பாடும் போது ராகத்துக்கு தான் முதல் இடம் கொடுப்பார்கள். ஆனால் மீராவில் இடம் பெறும் இந்த விருத்தம் வித்தியாசமானது. ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். பாடுபவரோ இசைக் குயில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள்.. இந்த விருத்தத்தை அவர்கள் எப்படி பாடினாலும் ரசிக்கத்தான் செய்வார்கள். "ஒவ்வொரு ராகத்தோட சொரூபத்தையும் அந்த அம்மா என்னமா கொண்டுவந்துட்டாங்க!" என்று கேட்பவர்கள் அசந்து போகும் வகையில் கூட பாடல் அமைந்திருக்கலாம். இந்தப் பாடலை இதுவரை கேட்காதவர்கள் இந்த நினைப்போடு கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஏமாற்றம் நிச்சயம். ஏனென்றால் அனாவசியமாக எந்த ஒரு சங்கதியும் இல்லை. அதிகப்படியாக நீட்டி முழக்கும் ஆலாபனைகளும் கிடையாது. காட்சி அமைப்பை மட்டுமே பிரதானமாக கொண்ட வகையில் அதே சமயம் இப்போது சொல்லுகிறோமே அதுபோல "சும்மா நச்சுன்னு" இந்த விருத்தத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார் எஸ்.வி. வெங்கட்ராமன். அதனை தானும் உணர்ந்து கொண்டு ஒரு திரைப்படப் பாடலில் ஒரு விருத்தம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு ஏற்றபடி அதே சமயம் ஒரு ராகத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறும் இடத்தில் கேட்பவர் மெய் சிலிர்க்கும் வகையில் பாடி நடித்திருக்கிறார் எம்.எஸ். அவர்கள். http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001347
அடுத்து இதே போல இன்னொரு பாடல்.. மீராவின் பாடல்கள் நாடெங்கும் பரவுவதை உணர்த்தும் பாடல் "கண்ணன் லீலைகள் புரிவானே" பாடல். எம்.எஸ். அவர்களுடன் குழுவினரும் இணைந்து பாடிய பாடல். மிக எளிமையான நாடோடிப் பாடல் வடிவாக அமைந்து கேட்பவர் மனதை கொள்ளை கொள்ளும் பாடல். "மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான் மீளா அடிமை கொண்டான்" என்ற இடத்தில் கோரஸ் ஒலிக்க "ஜெயமீரா.." என்று ஆரம்பித்து எம்.எஸ். அவர்கள் கொடுக்கும் ஒரு நிமிட நேர கார்வை மெய்மறக்க வைக்கும் ஒன்று. இதே போல விஷத்தை அருந்திய தன்னைக் காத்த கண்ணனின் கருணையை நினைந்து நெஞ்சம் நெகிழ்ந்து மீரா பாடும் "பரஸ்" ராகப் பாடலான "மறவேனே என்னாளிலுமே கிரிதாரி உனதருளே" பாடலும் குறிப்பிடப் படவேண்டிய பாடல் தான்.
அடுத்து எஸ்.வி. வெங்கட்ராமனின் தனித் திறமைக்கு இன்னொரு சான்றாக அமைந்தது தான் "எங்கும் நிறைந்தாயே.." பாடல். பாடலில் துவக்கத்தில் வரும் முன்னிசையும் சரி, இடையில் வரும் இணைப்பிசையும் சரி - காட்சி அமைப்பை கண்முன் நிறுத்துகின்றன. பாலைவனத்தில் ஒட்டகத்தின் மீது மீரா அமர்ந்தபடி துவாரகை நோக்கி பயணப்படும் போது பாடுவதாக அமைந்த பாடல் இது. மெட்டும் பாடல் வரிகளும் சூழலைப் பிரதிபலிப்பதில் போட்டிபோட்டுக்கொண்டு அமைந்திருக்கின்றன. "இதில் உள்ள பின்னணி சங்கீதமோ முடிவில்லாத பாலைவனத்து வெட்ட வெளியையும், அதில் ஒட்டகங்கள் அசைந்தாடிச் செல்வதையும் சப்த ரூபமாகச் சித்தரிக்கின்றன" என்று பாராட்டுகிறார் அமரர் கல்கி அவர்கள்.
இந்தப் பாடலைப்பற்றி ஒரு சுவையான சம்பவத்தை எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்களே நினைவு கூர்ந்திருக்கிறார். "மீரா படத்தை இதுவரை பார்த்தே இருக்காத ஒரு ஓவியர் ஒருவரிடம் இந்த பாடலைப் போட்டுக்காட்டி அவர் மனசில் என்ன நிறங்கள் பாடலைக் கேட்கும் போது தோன்றுகின்றன என்று கேட்டேன். பாடலை முழுதும் கேட்டவர் "மஞ்சளும் நீலமும் தான் தோன்றுகிறது.. வேறு எதுவும் இல்லை" என்றார். அப்படியே அசந்து போய்விட்டேன். மீரா படத்தில் இந்தப் பாடல் காட்சியில் தோன்றுவதும் மஞ்சள் நிறமான பாலைவன மணலும் நீல வானமும் தானே? " என்கிறார் எஸ்.வி. வெங்கட்ராமன். இந்தப் பாடலில் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்-கை பாடியவர் எஸ்.வி. வெங்கட்ராமன்தான்.
இறுதியில் உச்சகட்ட காட்சியில் துவாராகையில் கண்ணன் ஆலயக்கதவம் திறப்பதற்காக மீரா பாடும் "ஹே. ஹரே. ஜனார்த்தனா" பாடலை அருமையான ஹிந்தோளத்தில் வெகு சிறப்பாக வடிவமைத்துத் தந்திருக்கிறார் எஸ்.வி. வெங்கட்ராமன். பாடல் வரிகளில் பாபநாசம் சிவன் அவர்களும் கவித்துவத்தின் எல்லையையே எட்டி இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். உச்சகட்ட காட்சிக்கே உரித்தான விறுவிறுப்புடன் இசை படத்தை வெற்றியின் சிகரத்துக்கே இட்டுச் செல்கிறது.
அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற "மீரா" படத்தை இந்தியா முழுவதும் அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு படத்தை ஆறுமாத காலம் தீவிர முயற்சிக்கு பிறகு ஹிந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டார் திரு. சதாசிவம். மொழி மாற்றம் என்றாலும் பார்ப்பவர்களுக்கு ஒரு டப்பிங் படம் பார்ப்பது போல இல்லாமல் இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காக எம்.எஸ். அவர்களும், பால மீராவாக நடிக்கும் ராதா விஸ்வநாதன் அவர்களும் ஹிந்தி மொழியை துல்லியமாக கற்றுக்கொண்டு அவர்களே ஹிந்தியில் பேசி நடித்தனர். இதனால் தமிழ் மீரா வெளிவந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே ஹிந்தி மீரா வெளிவந்தது.
எஸ்.வி. வெங்கட்ராமனின் இசை அமைப்பில் எம். எஸ். அவர்களின் தேன் குரலில் பாரதம் முழுவதும் காற்றினிலே மீராவின் பாடல்கள் பவனி வந்தன.
சிகரம் தொடுவோம்... |