டி. ஜி. லிங்கப்பா - 2
சென்னை வந்த புதிதில் - இளமையில் தன்னுடைய பதினான்காவது வயதில் சிறுவன் லிங்கப்பா விஸ்வநாதன் என்பவர் தயாரித்த "காமதேனு" என்ற திரைப்படத்தில் நடிக்க முயற்சி செய்தான்.
ஆனால் விஸ்வநாதனோ அவனை நடிப்பதற்கு பதிலாக அந்தப் படத்தில் பாட வைத்து விட்டார். லிங்கப்பாவின் பாடல் நன்றாக அமைந்தது. விஸ்வநாதன் அவனை தன்னுடனேயே சில காலம் இருக்கும்படி வைத்துக்கொண்டார். லிங்கப்பவும் அவருடன் இருந்து அவரது அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானான்.
லிங்கப்பாவுக்கு பல தரப்பட்ட வாத்தியங்களை கையாளத்தெரிந்த காரணத்தினால் அவர் அப்போது பிரபலமாக இருந்த மயூரா பிலிம் ஆர்கெஸ்ட்ராவில் சேர்ந்துகொண்டு ஹார்மோனியம், மாண்டலின், கிடார் ஆகிய இசைக்கருவிகளை வாசிக்க ஆரம்பித்தார்.
இந்த இசைக்குழு திரைப்படங்களுக்கும் கிராமபோன் கம்பெனிகளுக்கும் வாசித்து வந்தது. அந்த வாத்திய கோஷ்டியில் ஒருவராக டி.ஜி. லிங்கப்பாவின் திரையுலக பிரவேசம் ஆரம்பித்தது.
இந்த இடத்தில் ஒரு சுவையான தகவலை குறிப்பிடவேண்டும். 1941-இல் வெளிவந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த படமான அசோக் குமார் படத்தில் இசை குழுவில் சேர்ந்து லிங்கப்பா பணியாற்றி இருந்திருக்கிறார். அதற்கு அவர் பெற்ற மாத வருமானம் முப்பது ரூபாய்.
அதோடு முடங்கி விடவில்லை அவர். மேலும் முன்னேறவேண்டும் என்பதற்காக அவராகவே தன்னுடைய அதிர்ஷ்டத்தை பரிசோதிப்பதற்காக ஜெமினி ஸ்டுடியோவுக்குள் நுழைந்தார்.
பிரபல இசை அமைப்பாளர் சி. ராமச்சந்திரா உள்ளிட்ட மூத்த இசைக் கலைஞர்கள் அங்கு இருந்தனர். அவர்களிடம் குழுவில் ஒருவனாக பணியாற்ற வாய்ப்பு கேட்டார் லிங்கப்பா.
ஆனால் அவருடைய இளம் வயதை காரணம் காட்டி அவரை தங்களுடன் இணைத்துக்கொள்ள ராமச்சந்திரா மறுத்துவிட்டார்.
மனம் உடைந்து போனாலும் முயற்சியை கைவிடாத லிங்கப்பா சேலம் நகரில் இருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை அணுகினார்.
அவர் சென்றபோது அங்கே இசை அமைப்பாளர்கள் T.R. பாப்பா மற்றும் கே. வி. மகாதேவன் இருவரையும் சந்தித்தார்.
கே.வி. மகாதேவன் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்காக அந்தக் காலகட்டத்தில் எந்தப் படத்துக்கும் இசை அமைக்கவில்லை.
பின்னாட்களில் தான் வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம் ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே இசை அமைத்தார்.
என்றாலும் நாற்பதுகளின் ஆரம்பத்தில் அவர்கள் அனைவருமே வாய்ப்புக்காக ஒவ்வொரு ஸ்டூடியோவாக அலைந்து கொண்டு இருந்தனர்.
அந்த சமயத்தில் T.R. பாப்பா, டி. ஜி. லிங்கப்பா, கே.வி. மகாதேவன் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
பின்னாட்களில் கே.வி. மகாதேவன் இசை அமைக்க தொடங்கியபோது அவரது இசைக்குழுவில் மற்ற இருவரும் இணைந்து பணியாற்றி அவரது மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.
அதன் பிறகு 1945 வாக்கில் லிங்கப்பா சென்னை திரும்பி பிரகதி ஸ்டூடியோவில் பிரபலமான இசை அமைப்பாளர் R. சுதர்சனம் அவர்களின் இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார்.
அந்த ஆண்டு ஏ. வி. எம். தயாரிப்பில் உருவான "ஸ்ரீவள்ளி" மற்றும் "நாம் இருவர்" ஆகிய படங்களில் லிங்கப்பாவின் பங்களிப்பும் இசைக்குழுவில் ஒருவராக தொடர்ந்தது.
பிறகு இசை அமைப்பாளர் C.R. சுப்பராமன் அவர்களுடன் சில காலம்.
தொடர்ந்து திரைப்படங்களில் பணியாற்றினாலும் குறிப்பிட்ட ஒரு இசை அமைப்பாளருடன் மட்டுமே அவர் தொடர்ந்து பணியாற்ற வில்லை.
ஆங்கிலத்தில் "Free Lance Musician" என்பார்களே அப்படித்தான் அவர் அனைவருடனும் இணைந்து பணியாற்றி வந்தார்.
அதனால் அவருக்கு ஒவ்வொரு இசை அமைப்பாளரின் இசை நுணுக்கங்களும் அத்துப்படி ஆயிற்று.
புதிய பலதரப்பட்ட இசைக்கருவிகளையும் தேடித் தேடி தனக்காக வருவித்துக்கொணடார் அவர். எலெக்ட்ரிக் கிட்டார் ஒன்றை இதற்காக லண்டனில் இருந்து வரவழைத்துக்கொண்டார். பலரும் அதிசயிக்கத்தக்க வகையில் கிட்டார் வாசிப்பில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார் லிங்கப்பா.
இசை மேதை G ராமநாத அய்யர், எஸ்.வி. வெங்கட்ராமன், கே. வி. மகாதேவன் போன்றவர்கள் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தார்கள்.
காலம் கனிந்து வந்தது.
1951- டி. ஜி. லிங்கப்பாவுக்கு முதல் முதலாக ஒரு திரைப்படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு இந்த ஆண்டில் தான் அவரைத் தேடி வந்தது.
சிகரம் தொடுவோம்...
|