எஸ்.வி. வெங்கட்ராமன் -6
வெற்றிவானில் ஒரு சந்திரோதயம்
ஒரு மிகச் சிறந்த இசை அமைப்பாளராக எஸ்.வி. வெங்கட்ராமனை அடையாளம் காட்டி அவரை வெற்றிச் சிகரத்துக்கு அழைத்துச் சென்ற பெருமை "கண்ணகி" திரைப்படத்துக்கு உண்டு.
அவரை மட்டும் அல்ல - அந்தப் படத்தில் பங்கு கொண்ட அனைவரையும் வெற்றிச்சிகரத்தை எட்ட வைத்த பெருமையும் இந்தப் படத்துக்கு உண்டு.
திரையிட்ட ஊர்களில் எல்லாம் ஐம்பது வாரங்களுக்கு மேலாக ஓடி மாபெரும் வெற்றியைக் குவித்த படம் இது. வசனம், பாடல்கள், உயிரோட்டமான நடிப்பு என்று அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கிய படம் இது.
தமிழ் திரை உலகில் பாடல்களுக்கு மட்டுமே அதுவரை இடம் என்று இருந்த நிலையை மாற்றி வசனங்களுக்காக படங்கள் என்ற நிலைக்கு அடிக்கல் நாட்டிய முதல் திரைப்படம் இதுதான்.
வசனகர்த்தா இளங்கோவன் - தனது வசங்களின் மூலம் எட்ட முடியாத உயரத்துக்கு உயர்ந்தார். தமிழ் திரை உலகில் வசனங்களில் முதல் முதலாக மாற்றத்தை கொண்டுவந்த படம் "கண்ணகி" தான். அதற்கு முன் வெளிவந்த படங்களில் எல்லாம் "பிராம்மணர்கள்" அவர்கள் வீடுகளில் பேசும் முறையே இருந்து வந்தது. (முன்பென்ன.. இதற்கு பிறகு இளங்கோவன் வசனம் எழுதி சரித்திரம் படைத்த "ஹரிதாஸ்" படத்திலும் இதே பாணிதான்!). ஆனால் செந்தமிழ் வசங்களுக்கு திரை உலகில் முதல் முதலாக இடம் கொடுத்த படம் கண்ணகி தான்.
கதாநாயகன் பி.யு.சின்னப்பாவிற்கு "நட்சத்திர" அந்தஸ்து பெற்றுக்கொடுத்ததும் கண்ணகிதான். அதுபோலவே நாயகி கண்ணாம்பாவை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திர நடிகையாக உயர்த்தியதும் இந்தப் படம் தான்.
படத்தில் கோவலனாக சின்னப்பாவும், கண்ணகியாக கண்ணாம்பாவும் நடித்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. மாதவியாக பி.எஸ்.சரோஜாவும், கவுந்தி அடிகளாக யு.ஆர். ஜீவரத்தினமும் நடித்தனர். நகைச்சுவை பகுதிக்கு.. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மதுரம்...
தயாரிப்பாளர் திரு. எம். சோமசுந்தரம் அவர்களின் ஜூபிடர் நிறுவனம் தென்னிந்தியாவின் மிகச் சிறந்த வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டதும் இந்தப் படத்தின் மூலமாகத்தான். இந்தப் படத்தின் வெற்றியானது எம்.சோமசுந்தரம் அவர்களையும் பாகஸ்தரான எஸ்.கே. முகைதீன் அவர்களையும் கோவையில் இருந்த சென்ட்ரல் ஸ்டுடியோவை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு ஒரே நேரத்தில் பல தயாரிப்புகளை உருவாக்கும் நிலைமையை ஏற்படுத்திக்கொடுத்தது.
இன்னும்.... கண்ணகி படத்தின் சிறப்புக்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நமக்கு முக்கியம் இந்தத் தொடரின் நாயகர் எஸ்.வி. வெங்கட்ராமன் அடைந்த உயர்வுகள் தானே?
படத்தின் இசையில் அவரது பங்களிப்பு எப்படி இருந்தது?
படத்தின் டைட்டிலை பார்க்கும் போது "சங்கீத கவனம்" எஸ்.வி. வெங்கட்ராமன் என்றும் "கீத வாத்ய வினோதம் - என்.எஸ். பாலக்ருஷ்ணன் & கோஷ்டி" என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
அந்தக்காலத்து நடைமுறைப்படி பாடல்களுக்கு மட்டுமே இசை அமைப்பாளர்கள் தேவை. பின்னணி இசைக்கு ஆர்கெஸ்ட்ரா முறையே. இதே முறைதான் கண்ணகி படத்திலும் பயன் படுத்தப் பட்டிருக்கிறது. ஜனங்கள் வெகுவாக ரசிப்பது பாடல்களை மட்டும்தானே?
அதனை உணர்ந்து மிகச் சிறப்பான முறையில் காலத்தால் மறக்க முடியாத பாடல்களை கொடுத்திருந்தார் எஸ்.வி.வெங்கட்ராமன். பி. யு. சின்னப்பா, யு. ஆர். ஜீவரத்தினம் என்ற இரண்டு அருமையான "பாய்ஸ்" கம்பெனி நட்சத்திரங்களின் திறமையை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார் எஸ்.வி. வெங்கட்ராமன்.
பாடல்களை எழுதியவர் உடுமலை நாராயண கவி.
கவுந்தியடிகளாக வரும் யு. ஆர். ஜீவரத்தினம் சொந்தக்குரலில் பாடியதோடு நில்லாமல், மாதவியாக நடித்த பி.எஸ். சரோஜாவுக்கும் பின்னணி பாடி இருந்தார்.
இன்றும் இனிமையாக ஒலிக்கும் பாடல் - முதலிடம் பெற்ற ஒரு முத்தான பாடல் - .பி.யு. சின்னப்பா பாடிய "சந்திரோதயம் இதிலே..காணுவதுன் செந்தாமரை முகமே" - பாடல் தான். "சங்கராபரண" ராகத்தில் எஸ்.வி. வெங்கட்ராமன் அமைத்த மெட்டுக்களும், சின்னப்பா வெளிப்படுத்தும் சங்கதிகளும் வெகு அற்புதமான அழகுடன் மிளிர்கின்றன. (http://www.mediafire.com/file/c4ljhydzknz/Chandrodhayam-Kannaki-PUC 42.mp3)
"அன்பில் விளைந்த அமுதமே" - பி.யு. சின்னப்பா பாடும் பாடல் பாபநாசம் சிவனின் "நவரச கன்னட" ராகப் பாடலான "நான் ஒரு விளையாட்டு பொம்மையா" பாடலை நினைவு படுத்தினாலும் இணைப்பிசையில் தனித்துவம் காட்டி இருக்கிறார் எஸ்.வி. வெங்கட்ராமன். பிரபலமான கர்நாடக இசைப் பாடலில் சாயலில் பாடல் அமையவேண்டும் என்று நாடக மேடையில் பாடுவது வழக்கம். அதே மரபு இந்தப் பாடலிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. http://www.mediafire.com/file/mdhimgimzxl/Anbil Vizhaintha Amuthame-Kannaki42-PUC.mp3
அடுத்து மாதவியின் நடனப் பாடல் "மாலாகினேன் சுவாமி" காம்போதி ராகம் யு. ஆர். ஜீவரத்தினத்தின் குரலில் கணீர் என்று ஒலிக்கும் போது கேட்பவர்களை கட்டிப்போடத்தான் செய்கிறது.
கோவலனும் மாதவியும் பிரிவதற்கு காரணமாக இருக்கும் "கானல் வரிப்" பாடலான "தேவ மகள் இவள் யார்" - பாடல் பி.யு. சின்னப்பா - யு.ஆர்.ஜீவரத்தினம் ஆகிய இருவரின் வெற்றி மகுடத்தில் மற்றொரு வைரக்கல்.
உடுமலை நாராயண கவியின் கவிதையில் அற்புத நயம் தெரிகிறது. http://www.mediafire.com/file/2memnmntxoq/Theva magal IvalYaar-Kannaki41942-PUC.mp3
மனம் திருந்தி வந்த கோவலனின் நிலைமையை வெளிப்படுத்த வேண்டும். தன்னால் உதாசீனம் செய்யப்பட்ட மனைவியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று நினைத்து அவள் மீது அவனுக்கு ஏற்படும் இரக்கம், பரிவு ஆகியவை அழகாக வெளிப்பட வேண்டும். ரக்தி ராகமான 'சஹானாவை" விட இந்த சூழலுக்கு பொருத்தமான ராகம் வேறு என்ன இருக்க முடியும் என்று சொல்வது போல "பத்தினியே உன்போல் இத்தரை மீதினில் உற்றவர் யார் புகல்வாய்." பாடலை அருமையான சஹானாவில் பி.யு. சின்னப்பாவின் குரலில் அற்புதமாக பதிவாக்கி இருக்கிறார் எஸ்.வி. வெங்கட்ராமன். மனைவியின் பெருமையைச் சொல்லும் ஒரு அற்புதமான பாடல் இது.
"சத்தியமாகவே தாய்க்குப் பின் தாரம் - தாரத்தினால் அல்லவோ சம்சாரம்" - என்று அனுபல்லவியில் சஹானாவில் உணர்ச்சிப் ப்ரவாஹத்தில் தானும் தோய்ந்து நம்மையும் மெய்மறக்கச் செய்துவிடுகிறார் சின்னப்பா.
தொடரும் சரணத்திலோ -
"பந்து ஜனமெல்லாம் வீண் பரிவாரம் - பாரினில் அவரால் ஏது உபகாரம்.
அந்தரம் தனிலுன் உறவுதான் அவதாரம் - ஆபத்து வேளையில் ஆகும் ஆதாரம்" -
என்ற கடைசி வரிகளை தொடர்ந்து "தர்ம... பத்தினியே உன்போல்" என்று சின்னப்பா பல்லவியை எட்டும்போது போது ஒரு கச்சேரி கேட்கும் நிறைவு இந்தப் பாடலில் ஏற்படுகின்றது.
எளிமையான சுலபமான பாமரருக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் உடுமலை நாராயண கவி வடிவமைத்த இந்தப் பாடலை ஒரு அற்புதமான மேடைக்கச்சேரி கேட்கும் நிறைவை கொடுக்கும் வண்ணம் எஸ்.வி. வெங்கட்ராமன் வடிவமைக்க தனது அற்புதமான குரல் வளத்தால் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் பி.யு. சின்னப்பா என்றால் அது மிகையாகாது.
"எந்த ஊரிலும் பெயர் வாங்கினாலும் தஞ்சாவூரில் பெயர் வாங்குவது ரொம்ப கஷ்டம்" என்பது சங்கீத விற்பன்னர்களும் ஆர்வலர்களும் ஏற்றுக்கொண்ட ஒரு விஷயம். அப்படிப்பட்ட தஞ்சாவூர் ஜில்லாவில் நீண்ட காலத்துக்கு "சந்திரோதயம் இதிலே" பாடலும், "பத்தினியே உன் போல்" பாடலும் அனைவர் உதடுகளிலும் ஒட்டிக்கொண்டிருந்தன என்பது குறிப்பிடப் படவேண்டிய விஷயம்.
ராகங்களின் ஜீவ ஸ்வரங்களை எடுத்துக்கொண்டு கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அதில் ஏற்றி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி இசை அமைப்பது எஸ்.வி. வெங்கட்ராமனின் தனித்துவமாக இருந்தது.
"விதியதாம்" என்ற ராகமாலிகைப் பாடலும் புதுமையாக அமைக்கப் பட்டிருக்கிறது. கணவனை பிரிந்த கண்ணகி தன் நிலையை எண்ணி அம்மனிடம் முறையிடுவதும் அப்போது அசரீரியாக பாடல் முறையில் பதில் கொடுப்பது.. வசனமும் பாடலும் இணைந்த இந்தப் பாடலில் யு.ஆர்.ஜீவரத்தினத்தின் குரலை அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தார் எஸ்.வி. வெங்கட்ராமன். தேஷ், மாண்ட், காபி ஆகிய ராகங்களில் இந்தப் பாடல் விருத்தமாக அமைக்கப் பட்டிருக்கிறது.
இதுபோலவே கவுந்தியடிகளாக வரும் யு.ஆர். ஜீவரத்தினம் கோவலன், கண்ணகியை மதுரைக்கு அழைத்துச் செல்லும்போது பாடுவதாக அமைந்திருக்கும் "மாநிலம் மீதில் ஜீவர்கள் வாழும்" என்ற பாடல் அந்தக் காலத்தில் பலத்த வரவேற்பைப் பெற்ற பாடலாகும். உச்சஸ்தாயிலேயே பாடக்கூடிய ஜீவரத்தினம் இந்தப் பாடலை நிதானமான மத்யம காலத்தில் ஆரம்பித்திருப்பது பாடலை முழுதும் கேட்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது. (துரதிர்ஷ்டவசமாக இந்த அருமையான பாடல் இப்போது புழக்கத்திலேயே இல்லாதது வேதனைக்குரிய விஷயம். கண்ணகி படத்தின் குறுந்தகடில் இந்தப் பாடல் பல்லவியோடு வெட்டப்பட்டிருக்கிறது.) திருவாரூரில் நடைபெற்ற கண்ணகி திரைப்படத்தின் 50ஆவது வார வெற்றிவிழாவில் யு.ஆர். ஜீவரத்தினம் இந்தப் பாடலுக்காகவே "கானக் குயில்" என்ற பட்டம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இப்படி பாடல்களுக்காவும், இசைக்காகவும், வசனத்துக்காகவும், நடிப்புக்காகவும் இன்றளவும் பேசப்படுகிற படங்களில் கண்ணகிக்கும் தனி இடம் உண்டு.
இசை அமைப்பாளர் என்ற முறையில் எஸ்.வி.வெங்கட்ராமன் பலராலும் நன்றாக இனம் கண்டுகொள்ளப் பட்டார்.
பொதுவாக ஒரு படம் பெரும் வெற்றி பெற்றுவிட்டால் அதில் பங்கு கொண்டவர்கள் அதிக வாய்ப்பைப் பெறுவார்கள். அந்த ரீதியில் இசை அமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிந்திருக்க வேண்டும். அப்படித்தான் அவரும் எதிர்பார்த்தார்.
ஆனால் அப்படி நடக்க முடியாதபடி ஒரு குறுக்குச் சுவராக வந்து நின்றது இரண்டாம் உலகப் போர்.
அந்தக் காலத்தில் திரைப்படத் தயாரிப்புக்கு தேவையான படச்சுருள்கள் (பிலிம் ரோல்) பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. இரண்டாம் உலக மகா யுத்தத்தினால் இறக்குமதிக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. திரைப்படங்கள் 11000 அடிக்கு மேல் இருக்கக்கூடாது என்று ஒரு சட்டமே நிலவியது. ஆகவே திரைப்படங்களின் தயாரிப்புகள் வெகுவாகக் குறைந்து விட்டிருந்தது. ஒரு துறைக்கு ஏற்படும் பாதிப்பு அதில்
ஈடுபட்டுள்ள அனைவரையுமே பாதிக்குமே.. அந்த வகையில் மாபெரும் வெற்றிப்படமான கண்ணகிக்கு இசை அமைத்தும் எஸ்.வி. வெங்கட்ராமன் மீண்டும் தக்கதொரு வாய்ப்புக்காக காத்திருக்கவேண்டியதாயிற்று.
காலம் கனிந்து வந்தது - சாதாரணமாக வரவில்லை.
காலத்தால் அழிக்கமுடியாத எம்.எஸ். சுப்புலட்சுமி என்ற மாபெரும் இசையரசியின் வெற்றிச் சரித்திரத்தில்
எஸ்.வி. வெங்கட்ராமனின் பெயரும் இடம் பெறும் வண்ணம் ஒரு அருமையான சந்தர்ப்பத்தைச் சுமந்துகொண்டு அவரைத் தேடி வந்தது.
சிகரம் தொடுவோம்... |