எஸ்.வி. வெங்கட்ராமன் -3
முதல் நாடகத்தில் கிடைத்த பரிசும், பாராட்டுக்களும் வெங்கட்ராமனுக்குள் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தின.
நாடக மேடையில் "ராஜபார்ட்" - அதாவது கதாநாயக நடிகனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவரது இசை ஞானம் பெரிதும் உறுதுணையாக இருந்தது. இரண்டாவதாக நடித்த "பட்டினத்தார்" நாடகத்தில் கதாநாயகன் பட்டினத்தாராக நடித்தார் அவர். பட்டினத்தாரின் பாடல்களுக்கு தானே ராகங்கள் அமைத்து விருத்தமாகவும், பாடலாகவும் பாடி நடித்து பெரும் பாராட்டைப் பெற்றார் அவர்.
"இது என்ன அதிகப் பிரசங்கித்தனம்? நேற்று வந்த பையன் தன்போக்கில் நடிப்பதாவது?" என்றெல்லாம் யாரும் அவரிடம் கேட்கவில்லை. எப்படிக் கேட்கமுடியும்? நாடகத்தின் வெற்றிக்கு அவரது இசைப் புலமை காரணமாக அமைந்ததால் அவருக்கு தன்னுடைய வேடத்துக்கான பாடல்களுக்கு தானே இசை அமைத்துக்கொண்டு தன் போக்கிலேயே பாடிக்கொள்ள முழு சுதந்திரம் கிடைத்தது. நாடக உலகில் வெங்கட்ராமன் நுழைந்தபோது அவருக்கு முன்னதாக அங்கு பல திறமைசாலிகள் இருந்தனர். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை. எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, கே. சாரங்கபாணி, பி.டி. சம்பந்தம், ஏ.பி. நாகராஜன் என்று பின்னாட்களில் புகழ் பெற்ற நடிகர்களுக்கு மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துக்கொண்டு அதை தக்கவும் வைத்துக்கொண்டார் எஸ்.வி. வெங்கட்ராமன்.
அவரது திறமையைப் பாராட்டி, ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து அவருடன் இருந்த கலைஞர்கள் அவரது வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்தார்கள் என்கிற செய்தி - இந்தக் காலத்து கலை உலகில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வியப்பான ஒன்று.
காலம் கடந்தது கொண்டிருந்தது. இப்போது வெங்கட்ராமன் இருபதை கடந்த இளைஞன்.
வருடம் 1935 . பேசும் சினிமா வர ஆரம்பித்த சமயம் அது. சினிமாவுக்கான கதைக்காக யாரும் சிரமமே படவில்லை. அதுவரை வெற்றிகரமாக நடந்து வந்த மேடை நாடகங்கள் திரைப்படமாக ஆரம்பித்தன.
நாடகத்தில் பிரதான வேடத்தில் நடித்த நடிகர்கள் திரைப்படங்களில் தோன்ற ஆரம்பித்தனர். அவர்கள் நடித்து ஏற்கெனவே பிரபலமான நாடகங்கள் சினிமாவாக உருமாறிய பொழுது அதே வேடத்தில் வெள்ளித் திரையிலும் அவர்களே நடிக்க ஆரம்பித்தனர். இல்லை இல்லை. பாட ஆரம்பித்தனர்.
ஆம். பாடல்கள். பாடல்கள். பாடல்கள். இவைதான் படங்களில் பிரதானமாக இருந்தன.
"செவிக்கினிய ஐம்பத்திரண்டு பாடல்கள் இடம் பெற்ற டாக்கியை காணத் தவறாதீர்கள்" என்று தான் விளம்பரப் படுத்தப் பட்டன.
"அவை டாக்கி இல்லை. பாட்டி" என்று அமரர் கல்கி தனது விமரிசனத்தில் நகைச்சுவையாக குறிப்பிடுவார்.
பாடல் ஒலிப்பதிவுக்கு என்று தனியாக ஒலிப்பதிவுக் கூடம் எல்லாம் ஒன்றும் கிடையாது. அது போல இசை அமைப்பாளர் என்று தனியாக யாரும் கிடையாது.
காமிராவின் முன்னால் நடிகர் நடித்துக்கொண்டு (பாடிக்கொண்டு) இருப்பார். அவர் அசைவுக்கு ஏற்றபடி வாத்தியங்களைத் தூக்கிக்கொண்டு வாத்திய கோஷ்டியினர் காமிராவில் தங்கள் முகம் பதிவாகாத தூரத்தில் பின்தொடர்ந்து வாசித்துக்கொண்டே செல்வார்கள்.
அதனால் தானோ என்னவோ அப்போதெல்லாம் மிகக் குறைந்த வாத்தியங்களே இசை அமைப்புக்கு பயன் படுத்தப் பட்டன. ஒரு ஹார்மோனியம், ஒன்றிரண்டு வயலின்கள், மிருதங்கம், ஒரு கிளாரினெட், ஒரு புல்லாங்குழல் - இவ்வளவுதான் இசை அமைப்புக்கு பயன்படுத்தப் பட்டன. (இவற்றில் ஒன்றிரண்டு எண்ணிக்கையில் கூடுதல் குறைதல் இருக்கலாம்.)
நடிக்க வந்தவர்கள் அனைவருமே பாடத்தெரிந்தவர்கள் என்பதால் அவர் அவர் மனம் போன போக்கில் பாடிக்கொண்டு நடித்தார்கள்.
வசீகரமான தோற்றமும், இயல்பான இசை ஞானமும் ஒருங்கே சேர்ந்திருந்த காரணத்தால் எஸ்.வி. வெங்கட்ராமனும் திரை உலகில் அறிமுகமாக ஆரம்பித்தார். இங்கும் எடுத்த எடுப்பிலேயே ஹீரோவாகத்தான் அவர் அறிமுகமானார்.
படம் : நள தமயந்தி. இந்தப் படத்தில் கதாநாயகன் நளனாக எஸ்.வி. வெங்கட்ராமன் நடித்தார். படம் வெற்றிபெற்றது. நளதமயந்தி படத்தின் பாடல்கள் இப்போது புழக்கத்தில் இல்லாத காரணத்தால் வெங்கட்ராமனின் சாரீர வளம் பற்றி அறிய முடியவில்லை. ஆனால் அந்தக் காலத்தில் இது வெற்றிப் படமான காரணத்தினால் பாடல்கள் பிரபலமானவையாகவே இருந்திருக்க வேண்டும்.
நளதமயந்தி படத்துக்கு பிறகு சமூகப் படமான "சந்திரமோகன் (அல்லது) சமூகத் தொண்டு" என்ற படத்தில் அடுத்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் இந்தப் படத்தில் அவருக்கு கிடைத்தது வில்லன் வேடம்.
"நான் முதல் படத்துலே ஹீரோவா நடிச்சேன். இப்போ வில்லனா நடிக்கறதாவது?" என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. வில்லன் வேடத்திலும் தன்னால் மக்களைக் கவர முடியும் என்று காட்ட நினைத்தார்.
படத்தில் கதாநாயகனும் வில்லனும் வாள் சண்டை போடுவதாக ஒரு காட்சி. அப்போது ஏற்பட்டது தான் அந்த விபத்து. ஹீரோ வீசிய வாள் வெங்கட்ராமனின் இடது கரத்தை தாக்கிவிட அந்தக் கரம் செயலிழந்து போனது. அந்த விபத்து அவரது நடிப்புலக வாழ்க்கையை ஒரே புரட்டாக புரட்டிப் போட்டு அதற்கு ஒரு முற்றுப் புள்ளியையே வைத்துவிட்டது.
மனம் உடைந்து போயிருந்த அந்த நேரத்தில் அவருக்கு அவரது நாடக உலகத்தில் ஆருயிர் நண்பனாக இருந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களிடம் இருந்து வந்த கடிதம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்போது பெங்களூரில் தனியாக நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார் எம்.ஆர். ராதா. தன்னுடன் வந்து சேர்ந்து கொள்ளுமாறு வெங்கட்ராமனுக்கு அழைப்பு விடுத்திருந்தார் அவர். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பெங்களூருக்கு பயணமானார் எஸ்.வி. வெங்கட்ராமன்.
அந்தப் பயணம் அவர் வாழ்க்கையில் சற்றும் எதிர்பாராத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி முற்றிலும் புதிய பாதைக்கு அவரை அழைத்துச் செல்லப்போகிறது என்பது அவருக்கு அப்போது தெரியாது.
சிகரம் தொடுவோம்... |