வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


எஸ்.வி. வெங்கட்ராமன் -1

பி.ஜி.எஸ். மணியன்  

"இசை அரசி" எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய திரை இசைப் பாடல்களில் முதல் இடம் பிடிப்பது "காற்றினிலே வரும் கீதம்" தான்.

பண்டிதர் முதல் பாமரர் வரை - தலை முறைகளைக் கடந்து இன்றும் அனைவராலும் ரசிக்கப்படும் அற்புதப் பாடல் அது.

அது போலவே அவர் நடித்த படங்களில் முதல் இடம் பிடிப்பதும் "மீரா" திரைப்படம் தான்.

புலன்களை ஊடுருவி பார்ப்பவரை பரவசத்தில் ஆழ்த்தும் அற்புதச் சித்திரம் அது.

பாடல்கள், பின்னணி இசை, காட்சி அமைப்பு, படப்பிடிப்பு, பங்கேற்ற நட்சத்திரங்களின் நடிப்பு என்று அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கிய படம் அது.

வண்ணப்படம் அல்ல. ஆனால் எண்ணத்தில் எந்நாளும் நிலையாக நிலைத்திருக்கும் அற்புதக் காவியம் அது.

"மீரா" - படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முழு முதற் காரணம் பாடல்களும் இசையும் தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

கேட்பவரை மெய்மறக்கச் செய்யும் வண்ணம் அமைந்த பாடல்கள்.:

"நந்தலாலா"

"காற்றினிலே வரும் கீதம்"

"கிரிதர கோபாலா"

"கண்ணன் லீலைகள் புரிவானே"

"பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த"

"மறைந்த கூண்டிலிருந்து"

"எங்கும் நிறைந்தாயே"

”எனது உள்ளமே"

"மறவேனே எந்நாளும்"

"ஹே. ஹரே. தயாளா"

"ஜனார்த்தனா ஜெகன்னாதா"

- ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் அமைந்த பாடல்கள்.

அவை அனைத்தையும் அற்புதமாக வடிவமைத்துக்கொடுத்த பெருமைக்குரிய இசை அமைப்பாளர் தான் திரு. எஸ். வி. வெங்கட்ராமன்.

அபாரமான இசை ஞானம் அவருக்கு கடவுள் கொடுத்த வரப்ரசாதம்.

எப்படிப்பட்ட சூழ்நிலைக்கும் தகுந்த மாதிரி பாடல்களை தன்னால் கொடுக்கமுடியும் என்று நிரூபித்தவர்.

எம்.எஸ். அம்மாவுக்காக "காற்றினிலே வரும் கீதம்" தந்த அவரால் சந்திரபாபுவுக்காக"கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே" என்ற ஜனரஞ்சகமான பாடலையும் கொடுக்க முடிந்தது.

"மிகுந்த திறமைசாலி.. ஆனால் குறைவாக மதிப்பிடப்பட்டவர்" (talented but sadly under-rated film music composer) என்று அவரைப்பற்றி "ஹிந்து" நாளிதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் திரு. "ராண்டார் கை" அவர்கள்.

இது உண்மை தானா?

வாருங்கள். அவரது வாழ்க்கை சரிதத்தில் நுழைந்து நாமே தெரிந்து கொள்வோம்.

------------------------------------------------------------------------------------------------------

சோழவந்தான் வரதராஜன் வெங்கட்ராமன் என்னும் நமது எஸ்.வி. வெங்கட்ராமன் பிறந்தது அய்யம்பாளையம் சிவன் கோவில் வாசலில். 1911 - ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி பிறந்தார்.

வெங்கட்ராமனின் தாயார் லக்ஷ்மி அம்மாள் கர்ப்பவதியாக இருக்கும் போது அய்யம்பாளையத்தில் தனது சகோதரியின் வீட்டுக்கு வரும் போது சிவன் கோவில் வாசலில் பிரசவ வலி ஏற்பட அங்கேயே அப்போதே ஈன்றெடுத்த பாலகன் தான் வெங்கட்ராமன்.

அவரது தந்தை வரதராஜ அய்யர் சோழவந்தானில் ஒரு கம்பவுண்டராக பணியாற்றி வந்தார்.

சற்றும் எதிர்பாராத விதமாக அவர் இறந்தபோது வெங்கட்ராமனுக்கு இரண்டு வயசு.

அதன்பிறகு அவன் வளர்ந்ததெல்லாம் மானாமதுரையில் இருந்த அவனது சிற்றப்பாவின் ஆதரவில்தான். இளம் வயதிலேயே இசையில் அவனையும் அறியாமல் அவன் மனம் ஈடுபட்டது. பள்ளிப் படிப்பை விட பாட்டையே அவன் மனம் பெரிதும் விரும்பியது.

மூன்று வயதிலேயே காதில் விழுந்த கிராமபோன் இசைத்தட்டுப் பாடல்களை எல்லாம் பாட ஆரம்பித்தான் அவன். ஆனால் முறையாக ஒரு குருவிடம் பாட்டு கற்றுக்கொள்ள முடியவில்லை.. அந்த அளவு வசதியற்ற நிலை.

"மூணு வயசுலே எனக்கு பாட்டு வந்தது. அஞ்சு வயசுலே என்ன பாடறோம் என்கிற ஞானம் வந்தது." - எழுத்தாளர் திரு. வாமனன் அவர்களுக்கு அளித்த பேட்டியில் தன்னைப் பற்றி இப்படி குறிப்பிட்டிருக்கிறார் வெங்கட்ராமன்.

நமது சிறுவன் வெங்கட்ராமனுக்கு அழகான களையான முகம். துருதுருவென்றிருப்பான்.
நாடகத்தில் நடிக்க தேவையான வசீகரம் அவனிடம் இயற்கையிலேயே இருந்தது.
பாட்டு கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆவலும் சிறுவனுக்கு இருந்தது.

"நாடக கம்பெனியிலே பாட்டு, நடனம் எல்லாமே கற்றுக் கொடுப்பார்களாமே" - செவி வழி சேதி அவன் மனதில் அழுத்தமாக பதிந்தது.

ஆனால் அவன் குடும்பத்தாரிடம் இருந்து அவனது ஆசைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது..

"நம்ம அகத்துப் பிள்ளை ட்ராமா கம்பெனியிலே சேருவதாவது? " - என்று அவனது ஆசைக்கு ஆணை போடப்பட்டது. அப்போது சிறுவன் வெங்கட்ராமனுக்கு பத்து வயது.

ஒரு நாள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மானா மதுரைக்கு வந்திருந்த சென்னை பாவலர் கிருஷ்ணசாமி நாடகக் குழுவில் சேர்ந்து சென்னைக்கு வந்துவிட்டான்.

அவன் வீட்டினர் போலீசில் புகார் செய்து சென்னை வந்து சிறுவனை மீட்டுச் சென்று விட்டனர்.

வீட்டுக்கு வந்ததும் சிறுவனுக்கு பலத்த எதிர்ப்பு. தகப்பன் இல்லாத பையன். அடுத்தவர் ஆதரவில் வளரும்போது .. அவர்களுடைய எண்ணங்களுக்கு மாறாக செயல் பட்டால் என்ன நடக்குமோ அதுவே நடந்தது.

அந்தச் சமயத்தில் தான் அவனது தாயார் லக்ஷ்மி அம்மாள் யோசித்தார்.

"அப்பா இல்லாத குழந்தை. படிக்கவைக்கவோ வசதி இல்லே. பகவான் கிருபையிலே பாட்டு நல்லா வரது. டிராமா கம்பெனியிலே சேர்ந்து முன்னுக்கு வந்தா வந்துட்டு போகட்டுமே." என்று குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி பத்து வயது சிறுவனை நாடகத்தில் சேர ஆசி வழங்கி அனுமதித்தார் அவர்.

மதுரை ஜகன்னாத அய்யர் பாய்ஸ் கம்பெனியின் வாசல் கதவு பத்து வயது சிறுவன் வெங்கட்ராமனுக்காக திறந்து கொண்டது.

கண்ணுக்கு தெரியாத அவனது வெற்றிக்கான வாசல் கதவு திறந்துகொண்டதும் அப்போதுதான்.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.