சி. ஆர். சுப்பராமன் - 7
நடிகை பானுமதியின் "பரணி பிக்சர்ஸ்" நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றி வந்தவர் D. L. நாராயணா.
இவரது நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் வேதாந்தம் ராகவையா, சமுத்ராலா ராகவாச்சர்யா, சி.ஆர். சுப்பராமன் ஆகிய மூவரும் இருந்தனர்.
படத் தயாரிப்பில் நல்ல அனுபவம் பெற்றதும் D.L. . நாராயணா சொந்தமாகப் படம் எடுக்க விரும்பினார். அவருக்கு உற்ற துணையாக நண்பர்கள் மூவரும் இருந்தனர். நால்வரும் பங்குதாரர்களாக இணைந்து "வினோதா" பட நிறுவனம் தொடங்கப் பட்டது.
உயர்ந்த ரசனை கொண்டவரும், துணிச்சல் மிக்கவருமான நாராயணா தன்னுடைய ரசனைக்கு ஏற்ற படத்தை தயாரித்து அது ரசிகர்கள் நடுவே எடுபடாமல் போய்விட்டால்..? ஆகவே அந்த விஷப் பரீட்சையில் தானும் இறங்கி படம் பார்க்க வருபவர்களையும் சோதனைக்கு உட்படுத்த விரும்பவில்லை.
எனவே மக்கள் மத்தியில் ஏற்கெனவே பிரபலமாக இருந்த ஒரு கர்ண பரம்பரைக் கதையை முதலில் தயாரித்தார்.
1951ஆம் ஆண்டு நால்வரும் இணைந்து துவக்கிய வினோதா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக "ஸ்த்ரீ ஸாஹஸம்" என்ற படம் தெலுங்கிலும் தமிழிலும் வெளிவந்தது.
ஏ. நாகேஸ்வரராவ், அஞ்சலிதேவி இணைந்து நடித்த இந்தப் படத்தை இயக்கியவர் வேதாந்தம் ராகவையா - கதை வசனம் பாடல்கள் சமுத்ராலா - இசை அமைத்தவர் சி.ஆர். சுப்பராமன். படம் வெளிவந்தது. மாபெரும் வெற்றி பெற்றது.
"ஸ்த்ரீ ஸாஹஸம்" படத்தின் வெற்றி தந்த தெம்பில் வினோதா நிறுவனத்தின் அடுத்த படமாக புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் சரத் சந்திரர் எழுதிய "தேவதாஸ்" என்ற நாவலை தெலுங்கு மற்றும் தமிழில் தயாரிப்பது என்று முடிவு செய்தனர்.
ஏ. நாகேஸ்வரராவ் கதாநாயகன் தேவதாஸாகவும், கதாநாயகி பார்வதியாக ஜானகி என்ற அறிமுக நடிகையையும்
நடிக்க வைப்பது என்று தீர்மானித்திருந்தனர்.
அதன் பிறகு திரைக்கதை அமைப்பு. இது இந்த நால்வர் அணியைப் பொறுத்தவரை மிகவும் சுலபமாகிப் போனது. ஏனென்றால் இதற்கு முன்பே ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் தேவதாஸ் திரைப்படமாக தயாரிக்கப்பட்டிருந்தது. அதுவும் தவிர தமிழில் ஒய்.வி. ராவ் தேவதாஸாக நடித்து இயக்கி இருந்த படமும் இருந்தது.
ஆகவே வேதாந்தம் ராகவையா, சமுத்ராலா, சி.ஆர். சுப்பராமன் ஆகியோர் அடங்கிய டி.எல். நாராயணாவின் டீம் தங்கள் திறமையை உழைப்பில் காட்ட ஆரம்பித்தனர்.
படத்துக்கான திரைக்கதையை (ஸீனாரியோ-என்று அந்தக் காலத்தில் குறிப்பிடுவார்கள்.) வேதாந்தம் ராகவையா அமைக்க தெலுங்குப் படத்துக்கான வசனம் - மற்றும் பாடல்களை சமுத்ராலா எழுதினார். தமிழ் படத்தின் வசனங்களை உதயகுமார் எழுத பாடல்களை உடுமலை நாராயணகவி மற்றும் கே. டி. சந்தானம் ஆகியோர் எழுதினார்கள்.
இசை அமைப்பை மேற்கொண்டார் சி.ஆர். சுப்பராமன். பாடல்களுக்கான ஸ்வரக் குறிப்புகள், காட்சிகளின் பின்னணி இசைக்கான சேர்க்கைகள் அனைத்தையும் தயார் செய்துவிட்டார் அவர்.
தேவதாஸ் படத்தின் பாடல்கள் சிறப்பாக தயாராகிக்கொண்டிருந்தன. அனைத்துப் பாடல்களும் அற்புதமாக காலத்தை வென்று நிற்கும் வண்ணம் உருவாகிக் கொண்டிருந்தன.
"தேவதாஸ்" படத்தில் அனைத்துப் பாடல்களுமே ஈடு இணை சொல்லமுடியாதவை. அந்தப் படத்தைப் பற்றியும் பாடல்களைப் பற்றியும் எவ்வளவு எழுதினாலும் அது குறைவாகவே இருக்கும்" - என்கிறார் திரை ஆய்வாளரும் பிரபல எழுத்தாளருமான "ராண்டார் கை".
நினைத்ததை குரலில் கொண்டு வர கண்டசாலா, அற்புதமான பாடல்களை கற்பனையில் வடிவமைத்து தெலுங்கில் சமுத்ராலாவும், தமிழில் உடுமலை நாராயண கவி, கே.டி. சந்தானமும் சுப்பராமனுக்கு உறுதுணையாக இருக்க சுப்பராமன் போட்டு மெட்டுக்கள் அவரை வெற்றிச் சிகரத்தின் உச்சிக்கே கொண்டு சென்று நிறுத்தின
"துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே" - இந்தப்பாடல் சி.ஆர். சுப்பராமனின் அசாத்தியமான கற்பனை வளத்துக்கு ஒரு உதாரணமாக அமைந்த பாடல். கல்யாணி ராகத்தின் அடிப்படையில் எழுந்த இந்தப் பாடலில் 'ஸ ப ஸ" ஆகிய ஸ்வரங்களை குறைவாக பயன்படுத்தி புது அணுகுமுறையில் மெட்டமைத்தார் அவர்.
"சந்தோஷம் தரும் சவாரி போவோம்", "ஓ ஓ தேவதாஸ்" , "எல்லாம் மாயைதானா". "கனவிதுதான்", உலகே மாயம் வாழ்வே மாயம்" - இன்று கேட்டால் கூட மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்கள். கண்டசாலாவின் குரலில், உடுமலை நாராயண கவி, கே.டி. சந்தானம் ஆகியோரின் பாடல் வரிகளுக்கு அற்புதமான இசைச் சேர்க்கைகள்.
முழுப்படத்துக்கும் பின்னணி இசைக்கான ஸ்வர வடிவங்கள். எந்த எந்த இடத்தில் எந்த எந்த வாத்தியம் எந்த எந்த அளவில் இசைக்கப் படவேண்டும் என்று முழுமையாக தயார்படுத்திவிட்டார் அவர்.
அதே சமயம் "சண்டிராணி"க்காக இரண்டு பாடல்களையும் பதிவு செய்துவிட்டிருந்தார்.
பாடல்கள் தேவதாஸ் படத்துக்காக எழுதப் பட்டு இசைச் சேர்க்கையும் அமைந்துவிட்டிருந்த நிலையில்..
இருபத்தேட்டே வயதான சி. ஆர். சுப்பராமன் யாரும் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் மரணம் அடைந்தார்.
இருபத்தெட்டு வயதில் அந்த இசை மேதையின் வாழ்க்கை கணக்கை தீர்ப்பதற்கு காலதேவனுக்கு அப்படி என்ன அவசரமோ.?
வற்றாத ஜீவநதியாக வந்துகொண்டிருந்த ஒரு இசைப் பிரவாகத்தை திடீர் என்று வறண்டு போக வைத்துவிட்டான் அவன்.
தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்பட உலகங்கள் சுப்பராமனின் திடீர் மறைவால் அப்படியே ஸ்தம்பித்துப் போயின.
அவர் இசை அமைத்துக் கொண்டிருந்த பல படங்கள் பாதியில் அப்படியே நின்றன.
திரை இசையில் ஜாஜ்வல்யமாக பிரகாசித்துக்கொண்டிருந்த தீபம் மரணம் என்ற புயல் காற்றால் அணைக்கப்பட்டுவிட்டது.
சுப்பராமனின் மரணம் எப்படி நிகழ்ந்தது? எதனால் நடந்தது? என்பது இன்று வரை புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அவரது மரணத்தை சுற்றி பல தரப்பட்ட வதந்திகள்.
தேவதாஸ் திரைப்படம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அந்த இடைவெளியில் வினோதா நிறுவனம் "சாந்தி" என்ற தெலுங்குப் படத்தை குறுகிய காலத் தயாரிப்பாக வெளியிட்டது.
அதன் பிறகு தேவதாஸ் மறுபடி தயாரானபோது இன்னொரு சிக்கல் எழுந்தது. ஏற்கெனவே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கதாநாயகி ஜானகி தற்போது முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வந்ததால் தேவதாஸ் படத்துக்கு தேதிகள் கொடுக்கமுடியாத நிலை. ஆகவே புதியதாக யாரைப் பார்வதியாக நடிக்கவைப்பது என்று குழம்பியபோது தங்களது முந்தைய "சாந்தி" படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்த சாவித்திரி டி.எல். நாராயணாவின் நினைவுக்கு வந்தார்.
ஆகக்கூடி சாவித்திரி கதாநாயகியாக தேர்வுசெய்யப்பட்டு தேவதாஸ் படத்தில் நடித்தார்.
சி.ஆர். சுப்பராமன் இப்படி அகாலத்தில் மரணம் அடைந்துவிடுவோம் என்று முன்பே தெரிந்துதானோ என்னவோ படத்துக்கான முழுமையான இசைச்சேர்க்கைகளை தயார் நிலையில் வைத்திருந்ததால் அவரது உதவியாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் இணைந்து பணியாற்றி படத்தை முடித்துக்கொடுத்தார்கள்.
தேவதாஸ் படத்தில் "உலகே மாயம்" என்ற கண்டசாலாவின் பாடல், "சந்தோஷம் வேணுமென்றால்", "பாரா முகம் ஏனைய்யா" என்று பாலசரஸ்வதி பாடிய இரண்டு பாடல்கள் - ஆக மொத்தம் மூன்று பாடல்களுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். ஆனால் சி.ஆர். சுப்பராமன் அவர்கள் தயாரித்து வைத்திருந்த இசைக்குறிப்புகளை ஒட்டியே விஸ்வநாதன் செயல்பட்டிருக்க வேண்டும். தனது குருவுக்கு உண்மையான சீடர் செலுத்திய மனப்பூர்வமான அஞ்சலி.
படத்தின் டைட்டில் கார்டில் பார்த்தோமானால் "சங்கீதம் - சி. ஆர். சுப்பராமன்" என்றும் "பின்னணி சங்கீதம்
"ராமமூர்த்தி - விஸ்வநாதன்" என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அது மட்டும் அல்ல. வினோதா நிறுவனம் தங்கள் ஆருயிர் நண்பனான சுப்பராமனின் நினைவுக்கே அந்தப் படத்தை காணிக்கையாக்கியது (தற்போதைய வழக்கப்படி சொல்வதென்றால் dedicate செய்தது.)
படத்தின் டைட்டிலில் ஆரம்பமாக :
"எங்களுக்கு பிராணன் போன்றவரும் சங்கீத டைரக்டருமான
எங்கள் இனிய நண்பர் சி.ஆர். சுப்பராமனுக்கு இந்தப் படத்தை
காணிக்கையாக்குகிறோம்"
என்று குறிப்பிட்டிருந்தனர்.
எட்டு ஆண்டுகள். சரியாக எட்டு ஆண்டுக்காலம் - திரை இசை உலகில் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடித்து நிமிர்ந்து நின்ற அந்த மாபெரும் இசைக்கலைஞனின் சகாப்தம் யாரும் எண்ணிக்கூட பார்க்க முடியாதபடி கண் சிமிட்டும் நேரத்துக்குள்ளாக முடிந்தே போய்விட்டது.
சுப்பராமன் இந்த உலகில் வாழ்ந்ததென்னவோ இருபத்தெட்டு வருடங்கள் தான். ஆனால் தனது இந்த இருபத்தெட்டு வருட வாழ்க்கையை சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாகவே
வைத்துவிட்டு சென்றிருக்கிறார் அவர்.
முதல் 16 வருடங்கள் அவரது அபாரமான கடுமையான உழைப்பு கண்முன்னே நிற்கிறது.
தான் ஏற்றுக்கொண்ட இசைத்துறையில் தனது அறிவு விசாலமாக ஆழமானதாக இருக்கவேண்டும் என்பதில் அவர் காட்டிய ஈடுபாடு பிரமிக்கவைக்கிறது. காலையில் கற்றுக்கொண்ட வர்ணத்தை மாலைக்குள் தன் வசப்படுத்திக் கொண்டதும், மயிலாப்பூரிலிருந்து திருவல்லிக்கேணி வரை நடந்தே சென்று மேற்கத்திய சங்கீதம் பயின்றதும் இதனால் தான்.
அடுத்து வாய்ப்பு கிடைத்து எச்.எம்.வியில் வாத்தியக்குழுவில் ஒருவராக சேர்ந்ததும் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி பிரதான இசை அமைப்பாளராக உயர்ந்தது - அந்த பதினாறு - பதினேழு வயது இளைஞனுக்குள் இருந்த உண்மையான ஒருமுகப்படுத்தப்பட்ட உழைப்புக்கு கிடைத்த பரிசு அது.
முதல் முழு இசை அமைப்பாளராகும் வாய்ப்பு கை நழுவிப்போன நிலையில் - அந்த ஏமாற்றத்தை சுலபமாக ஜீரணித்துக்கொண்டு அதற்காக முடங்கிவிடாமல் நிமிர்ந்து போராடி தனக்கென ஒரு நிலையான இடத்தை எட்டி அதே சமயம் "சுப்பராமன் பாணி" என்று ஒன்றை உருவாக்கி தனது பெயர் சொல்ல அருமையான சிஷ்ய பரம்பரையை உருவாக்கி - இதெல்லாமே தன் திறமை மீது அவர் வைத்திருந்த அசாத்தியமான நம்பிக்கையின் வெளிப்பாடு தான்.
பிறப்பும் இறப்பும் நம் வசம் இல்லை. ஆனால் இடைப்பட்ட காலத்துக்குள் மனதில் உறுதியும், நம்பிக்கையும், உண்மையாகவே சாதிக்கவேண்டும் என்கிற ஆர்வமும் இருந்தால் எந்த வயதிலும் சிகரம் தொடுவது சுலபம் என்பதை நிரூபித்தவர் சி.ஆர். சுப்பராமன்.
சி.ஆர். சுப்பராமனின் சகாப்தம் முடியவில்லை.
கன்னடப்பட உலகுக்கு ஒரு டி. ஜி. லிங்கப்பா....
தெலுங்குப் பட உலகுக்கு கண்டசாலா, வி. தட்சிணாமூர்த்தி, மாண்டலின் ராஜு...
தமிழ்ப் பட உலகுக்கு ஒரு விஸ்வநாதன் - ராமமூர்த்தி -
அவர்களது சிஷ்ய பரம்பரையாக ஜி.கே. வெங்கடேஷ், சங்கர்-கணேஷ், இசை ஞானி இளையராஜா -
அவரது அடியொற்றி ஏ. ஆர். ரஹ்மான்... .. ... ...
--- சி.ஆர். சுப்பராமனின் சகாப்தம் தொடர்கிறது.. தொடர்கிறது.... தொடர்ந்து கொண்டே இருக்கிறது...
(அடுத்து சிகரம் தொட வருபவர் தமிழ் சினிமாவின் முதல் "நட்சத்திர இசை அமைப்பாளர்" திரு. எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்கள்)
பின் குறிப்பு: சி.ஆர். சுப்பராமனை பற்றிய கட்டுரையில் எனக்காக தன்னுடைய வேலைப்பளுவுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி பாடல்களைக் கேட்டு மேற்கத்திய சங்கீதம் தொடர்பான சந்தேகங்களை தெளிவு படுத்திய என் நண்பரும் பியானோ இசைக் கலைஞருமான திரு மாக்ஸ் பாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
சிகரம் தொடுவோம்... |