சி. ஆர். சுப்பராமன் - 6
ராணி" - "THE LOVES OF CARMEN" என்ற ஆங்கிலப் படத்தை தழுவி ஜுபிடர் சோமு அவர்கள் தயாரித்த இந்தப் படத்துக்கு கதை வசனம் ஏ. எஸ்.ஏ.சாமி. டைரக்ட் செய்தவர் எல்.வி. பிரசாத். ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இருமொழிகளில் தயாரான படம் இது.
பானுமதி ராமகிருஷ்ணா - வீணை எஸ். பாலச்சந்தர் இணைந்து நடித்த படத்தின் பாடல்களை உடுமலை நாராயண கவி, கே.டி. சந்தானம், சுந்தர வாத்தியார், கு.சா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் எழுத சி.ஆர். சுப்பராமன் இசை அமைத்தார்.
இந்தப் படத்தின் பாடல்கள் இப்போது வழக்கொழிந்து போய் விட்டன. ஆனாலும் இணையத்தில் விடாமல் சலித்ததில் பி. பானுமதி பாடிய மூன்று பாடல்கள் கிடைத்தன.
அவற்றில் "மதி மயங்கும் மலர் வதனம்" என்று துவங்கும் பாடல். கேட்டபோது அசந்தே போய்விட்டேன். சுப்பராமன் தன்னுடைய ஆரம்ப காலத்தில் மயிலையில் இருந்து திருவல்லிக்கேணி வரை நடந்தே சென்று வெஸ்டர்ன் இசையை ஒரு பியானோ மாஸ்டரிடம் கற்றுக்கொண்டாரே... அந்த கஷ்டங்கள் எல்லாம் வீண் போகாமல் அவருக்கு கை கொடுத்திருக்கின்றன.
முழுமையான மேற்கத்திய சங்கீதத்தில் இந்தப் பாடலை இசை அமைத்திருக்கிறார் சி.ஆர். சுப்பராமன்.
பாடல் என்னவோ சிறியதுதான். மிக அழகான இந்தப் பாடல் "Major Scale "லில் சுலபமான காலப் பிரமாணத்தில் (Simple common time ) மெட்டமைக்கப்பட்டுள்ளது.
பாடலின் ஆரம்பத்தில் வரும் நீண்ட மேற்கத்திய பாணியில் அமைந்த முன்னிசை முழுக்க முழுக்க மேல்நாட்டு கிராமியப் பாணியில் (Country Western instrumental with Folk Style ) அமைந்திருக்கிறது. கால்களைத் தாளம் போட வைக்கிறது.
நீண்ட முகப்பிசைக்கு (Prelude ) பிறகு "மலர் மயங்கும் மதி முகம்" என்று பல்லவியை கவர்ச்சிகரமாக ஆரம்பித்து அனாயாசமாக பி. பானுமதி பாடுகிறார். சரணத்தில் பானுமதியின் குரலில் தென்படும் உற்சாகம், துள்ளல் கேட்டு கேட்டு ரசிக்கக்கூடியவை.
சரணத்துக்கு முன்பாக வரும் இணைப்பிசை (interlude) முதலில் நாம் கேட்ட முன்னிசைக்கு முற்றிலும் மாறுபட்ட காலப் பிரமாணத்தில் (different timing ) அமைக்கப் பட்டிருக்கிறது. புல்லாங்குழலிசையை மிகவும் துரிதமான வேகத்தில் (trio என்பார்கள்) மும்முறை (triple time ) சரளமாக அதே சமயம் முதலில் கேட்ட காலப் பிரமாணத்தை அனுசரித்தே அமைத்திருக்கிறார் சி.ஆர். சுப்பராமன்.
நினைத்துப்பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. அறிவியல் சாதனங்கள் மிகக் குறைவான காலகட்டத்தில் (1952 ) சி.ஆர். சுப்பராமன் ஒரு முழுமையான மேற்கத்திய சங்கீதத்தை இந்தப் பாடலில் நாம் கேட்டு அனுபவிக்கும்படி செய்திருக்கிறார். இந்தப் பாடலை அவர் கையாண்டிருக்கும் அழகை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கேட்டுத்தான் உணரவேண்டும்.
இன்றைக்கு "ட்ரெண்ட் செட்டர்" என்று முழங்கி வருகிறோமே இதிலும் முன்னோடியாக இருந்திருக்கிறார் சி.ஆர். சுப்பராமன் என்பது இந்தப் பாடலைக் கேட்டால் தெரிந்துவிடும்.
ஆனாலும் - ஒரு படத்தில் பாடல்கள் எடுபடவேண்டும் என்றால் அந்தப் படம் வெகு ஜன வரவேற்பை பெற்றிருக்க வேண்டும். துணிச்சலான முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம், திறமையான நட்சத்திரங்கள், அற்புதமான இசை என்று இருந்த போதும் - "ராணி" - படம் படு தோல்வி அடைந்தது. அதன் காரணமாக சுப்பராமனின் சிறந்த புதுமையான இசை அமைப்பு எடுபடாமலே போய்விட்டது. காலப் போக்கில் "ராணி" படத்தின் பாடல்கள் அனைவராலும் மறக்கப் பட்டுவிட்டன என்று கூட சொல்லலாம்.
"ராணி" படத்தின் ஹிந்தி பதிப்புக்கும் சி.ஆர். சுப்பராமனே இசை அமைத்தார். அனுப்குமார் - பி. பானுமதி இணைந்து நடித்த இந்தப் படத்துக்கும் தமிழ்ப் படத்தின் கதியே ஏற்பட்டது. என்றாலும் பானுமதி பாடிய "ஹோ. தேக் தேக் பலம்வா" என்ற பாடல் மட்டும் பிரபலமடைந்தது.
அடுத்த படம் "காதல்" - நடிகை பானுமதியின் சொந்தப்படம் இது.
சி.ஆர். சுப்பராமனின் வாழ்க்கை சரிதத்தில் அவருக்கு முழு ஆதரவு அளித்து முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்களில் நடிகை பானுமதி அவர்களுக்கு முதலிடம் உண்டு.
சுப்பராமனின் அபாரமான சங்கீத ஞானம், பாடல்களுக்கு மின்னல் வேகத்தில் அற்புதமாக மெட்டமைத்துவிடும் திறமை - இயல்பாகவே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நடிகை பானுமதியின் சொந்தப் படங்களுக்கு அவரையே இசை அமைப்பாளராக தேர்வு செய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.
நடிகை பானுமதியின்"பரணி பிக்சர்ஸ்" - "ரத்னமாலா"வுக்கு அடுத்தபடியாக தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் தயாரித்த படம் "காதல்" (தெலுங்கில் "ப்ரேமா"). பானுமதி கதை எழுதிய முதல் படம் இது. கதாநாயகனாக நடித்தவர் ஏ. நாகேஸ்வரராவ். கொண்டமூடி கோபராய சர்மா தெலுங்கு படத்தின் வசனங்களை எழுத தமிழ் படத்துக்கு உதயகுமார் வசனங்களை எழுதினார்.
கே.டி. சந்தானத்தின் பாடல்களுக்கு சி.ஆர். சுப்பராமன் இசை அமைத்தார் என்று சொன்னாலே போதும் - பாடல்களின் தரத்துக்கு குறைவே இருக்காது என்பது விளங்கிவிடும்.
"இன்பக் காவியும் ஆகும் வாழ்வே காதலினாலே" - ஒரு அருமையான டூயட்.
கண்டசாலாவுடன் பானுமதி இணைந்து பாடும் இந்தப் பாடலின் பல்லவிக்கு சுப்பராமன் அமைத்திருக்கும் முகப்பிசையும் சரி, தொடர்ந்து சரணங்களுக்கு கோர்த்துக் கொடுத்திருக்கும் இணைப்பிசையும் சரி - கேட்பவர் நெஞ்சை விட்டு என்றும் அகலாதவை.
அடுத்து - தமிழ்ப் பாடலில் ஆங்கில வார்த்தைகள் கலப்பது இப்போதுதான் நடக்கிறது என்று எண்ணவேண்டாம். இதுவும் சி.ஆர். சுப்பராமன் காலத்திலேயே (1952 ) ஆரம்பமாகிவிட்டது என்று நினைக்கிறேன். (ஒருவேளை இதையும் அவர்தான் ஆரம்பித்து வைத்தாரோ!)
காதல் படத்தில் இப்படி ஒரு பாடல் :
"ஜீவிதமெல்லாம் ஸ்வீட்டாக செய்யும் ப்ரேமா
டிங் டாங் பெல் ப்ரியராணி நைட்டிங்கேல்"
- எழுதியவர் கே.டி.சந்தானம்.
நகரத்து நாகரீக வாலிபன் உற்சாகமாகப் பாட, அவனை இன்னொரு பெண்ணுடன் சந்திக்கும் நாடோடிக் காதலி சோகம் ததும்பப் பாட...
ஆரம்பத்தில் உற்சாகமாக ஆண் குரலில் ஆரம்பிக்கும் பாடல் பெண் குரலில் சோகமாக ஒலிக்கும்போது -
"ஜீவிதமெல்லாம் ஏமாற்றம் தானா, பிரேமை இதுதானா, ஆண்கள் பேச்சு பொய்தானா" - என்று வரும்.
-கண்டசாலாவின் குரலில் உற்சாகமும் பானுமதியின் குரலில் சோகமும் ஒலிக்க ஒரே பாடலில் இரு வேறு விதமான சூழ்நிலைகளை சுப்பராமனின் மெட்டு அப்படியே படம் பிடித்துக் காட்டி விடும்.
இப்படி ஒரே பாடலில் மகிழ்ச்சி, சோகம் ஆகிய இரு வேறுபட்ட சூழல்களை பிரதிபலிக்கும் பாடல்கள் ஆரம்பித்ததும் இந்தப் படத்திலிருந்து தானோ என்றும் தோன்றுகிறது.
இருமொழிகளிலும் வெற்றி பெற்ற "காதலை"த் தொடர்ந்து பானுமதி தனது அடுத்த படத்தை தானே தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முதல் முறையாக டைரக்ட் செய்வது என்று முடிவெடுத்தார்.
கதை, தயாரிப்பு, பாடல்கள், நடிப்பு (அதுவும் இரட்டை வேடத்தில்) என்பதோடு நில்லாமல் இயக்குவது என்று பானுமதி முடிவெடுத்தபோது இசை அமைப்பாளர் யார் என்பதில் மட்டும் அவருக்கு மாற்றுக் கருத்தே இல்லை.
சி. ஆர். சுப்பராமனுக்கே அந்த வாய்ப்பை மறுபடியும் கொடுத்தார். படம் : சண்டிராணி.
ஒரு மொழியில் என்று அல்ல. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தானே டைரக்ட் செய்து ஒரே நாளில் படத்தை வெளியிடவேண்டும் என்று தீர்மானித்து படத்தை ஆரம்பித்தார் பானுமதி. மூன்று மொழிப் படங்களுக்கும் இசை அமைப்பாளர் சி.ஆர். சுப்பராமனேதான்.
அந்த சமயத்தில் இன்னொரு காலத்தை வென்று நிற்கும் காவியப்படம் ஒன்றும் சுப்பராமனின் பெயரை காலங்களை கடந்தும் நிலைத்திருக்கச் செய்வதற்காக காத்துக்கொண்டிருந்தது.
அந்தப் படம் தான் "தேவதாஸ்". தேவதாஸ் படத்துக்கு இசை அமைப்பாளராக மட்டும் சுப்பராமன் இருக்கவில்லை. அதன் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் அவர் பங்கு வகித்தார்.
சண்டிராணி, தேவதாஸ் - இரு படங்களுக்காகவும் முழுமூச்சாக இயங்க ஆரம்பித்தார் சி.ஆர். சுப்பராமன்.
அப்போதுதான் அவரது உதவியாளராக இருந்து வந்த எம்.எஸ். விஸ்வநாதனுக்கு தனியாக "ஜெனோவா" படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
"ஏற்கெனவே இந்தப் படங்கள் எல்லாம் ஆரம்பித்தாகி விட்டது. இந்த நேரத்துலே நீ தனியா மியூசிக் போடப்போறேன்னு போயிட்டா நான் என்ன செய்வது?" என்றெல்லாம் அவரிடம் கேட்கவில்லை சுப்பராமன்.
தனது உதவியாளருக்கு கிடைத்த வாய்ப்பை தனக்கு கிடைத்ததைப் போலக் கருதி மிகவும் சந்தோஷமடைந்தார் அவர். மனம் நிறைந்த உற்சாகத்துடன் விஸ்வநாதனை ஊக்கப் படுத்தினார் அவர்.
ஆனால் தான் தனித்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தாலும் சுப்பராமனை விட்டு விலக எம்.எஸ்.விக்கு மனம் வரவில்லை. அவருக்கு என்று இல்லை. சுப்பராமனுடன் பணியாற்றிய யாருக்குமே அவரை விட்டு பிரிந்து போக மனம் வராதுதான்.
ஆகவே பகல் முழுதும் சுப்பராமனுடன் பணியாற்றுவது. மாலைக்கு பிறகு "ஜெனோவா" படத்துக்கு டியூன்ஸ் கம்போஸ் செய்வது என்று இயங்க ஆரம்பித்தார் எம்.எஸ். விஸ்வநாதன்.
"விசு. நீ மியூசிக் போட்ட பாட்டுக்களை எல்லாம் நான் தான் முதல்லே கேட்பேன். அதனாலே நல்லா செய்" - தனது குழந்தையை முன்னுக்கு கொண்டு வருவதில் ஒரு தகப்பன் காட்டும் உற்சாகத்துடன் விஸ்வநாதனிடம் சொன்னார் சுப்பைராமன்.
ஆனால்...
"விஸ்வநாதன் இசை அமைக்கும் பாட்டுக்களை நீ கேட்பது இருக்கட்டும். முதலில் நீ ஒப்புக்கொண்ட படங்களையே உன்னால் முடிக்க முடிகிறதா என்று பார்" - என்று சவால் விடுவதுபோல கண்ணுக்கு தெரியாத விதி தனது கணக்கையே முடிக்க காத்துக் கொண்டிருப்பதை பாவம் சுப்பராமன் உணரவில்லை.
சிகரம் தொடுவோம்...
|