சி. ஆர். சுப்பராமன் -5
சி.ஆர். சுப்பராமன் மீது அபரிமிதமான அன்பும் பற்றும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு இருந்தது. தான் தயாரித்த அனைத்து படங்களுக்கும் அவர் சுப்பராமனையே இசை அமைப்பாளராக்கினார்.
சுப்பராமனை யாரிடமாவது அறிமுகம் செய்வது என்றால் கலைவாணர் "இவர் யாரு தெரியுமா? நம்ம படத்துக்கு மியூசிக் டைரக்டர். பேரு சுப்பராமன். சாதாரணமா நெனைச்சுடாதீங்க. இசையிலே "சிங்கம் சுப்பராமன்" - இப்படித்தான் கலைவாணர் அவரை குறிப்பிடுவார்.
அந்த அளவுக்கு சுப்பராமன் தன் இசையால் கலைவாணரைக் கவர்ந்து விட்டிருந்தார். அதுபோலவே பாடகியரில் எம்.எல்.வி. - கலைவாணர் தயாரித்த படங்கள் வெற்றியோ தோல்வியோ அடைந்தாலும், பாடல்கள் மட்டும் தோல்வி அடைந்ததே கிடையாது. சுப்பராமனின் இசையில் பாடல்களை கேட்பவர் செவிகளை மட்டும் அல்லாமல் மனதையும் நிறைக்கும் வண்ணம் நிலைநிறுத்தியதில் எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் பங்கும் கணிசமானது.
கலைவாணரின் படங்களில் மட்டும் என்று இல்லாமல் எம்.எல். வி அவர்கள் திரை இசையிலும் வெற்றிக்கொடி நாட்ட சி.ஆர். சுப்பராமன் அவர்கள் தான் காரணகர்த்தாவாக இருந்தார் என்றால் அது மிகையே அல்ல.
"தென்னிந்திய திரைப்படங்களில் பின்னணி பாடும் முறை அறிமுகமான 1943 முதல் 1953 வரையிலான காலகட்டத்தில் சி.ஆர். சுப்பராமனின் இசை அமைப்பில் தமிழில் எம்.எல்.வசந்தகுமாரி அவர்களும், தெலுங்கில் ஆர். பாலசரஸ்வதி அவர்களும் பாடிய பாடல்கள் அனைத்துமே திரை இசையின் வளர்ச்சிக்கு சிறந்த சான்றுகளாக குறிப்பிடவேண்டியவைகளாக அமைந்தன" - என்று இசை ஆய்வாளர் வி.ஏ.கே. ரங்கராவ் அவர்கள் சிறப்பித்து சொல்லி இருக்கிறார்.
அந்த வகையில் சி.ஆர். சுப்பராமன் இசை அமைத்து எம்.எல்.வசந்தகுமாரி அவர்கள் பாடியிருக்கும் சாருகேசி ராகத்தில் அமைந்த நடனப் பாடல் ஒன்று.
"கானலோலன் மதனகோபாலன்" என்று துவங்கும் பாடல். இடம் பெற்ற படம் கலைவாணரின் "நல்ல தம்பி" . கே.பி. காமாட்சி சுந்தரம் எழுதிய இந்தப் பாடலை சாருகேசி ராகத்தில் சுப்பராமன் வடிவமைக்க அற்புதமாக பாடியிருக்கிறார் எம்.எல்.வி.
இந்தப் பாடலில் ராக இலக்கணத்தை மீறாமல் அதேசமயம் ஒரேயடியாக கர்நாடகமாகவே அடித்துவிடாமல் மெல்லிசை பிரயோகங்களோடு அருமையான ஒரு semi -classical என்பார்களே அந்த வகையில் பாடலை கொடுத்திருக்கிறார் சுப்பராமன்.
பாடலின் ஆரம்பத்தில் வரும் வேகமான வயலின் பிரயோகமும் அதன் ஊடாக இணைந்து வரும் புல்லாங்குழல் மற்றும் க்ளாரினெட் "பிட்"களும் இந்த நடனப்பாடலுக்கு நன்றாக இணை சேர்கின்றன. பல்லவி மற்றும் சரணத்துக்கு இணைப்பிசையாக சுப்பராமன் வழங்கி இருக்கும் வீணை இசை கேட்பவர் மனங்களை வருடுகிறது.
அவரை கலைவாணர் இதனால் தான் "சிங்கம்" சுப்பராமன் என்று அழைத்தாரோ என்றும் தோன்றுகிறது.
கலைவாணர் தயாரித்து இயக்கிய "மணமகள்" படத்தில் தான் காலத்தால் அழிக்கமுடியாத அமரத்துவம் நிறைந்த ஒரு பாடலை எம்.எல்.வசந்தகுமாரி-வீ.என். சுந்தரம் இருவரையும் பாட வைத்து உருவாக்கினார் சி.ஆர். சுப்பராமன்.
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" பாடல் சி.ஆர். சுப்பராமனின் கற்பனையில் புது வடிவம் பெற்றது. இன்று இசை மேடைகளில் பவனி வந்துகொண்டிருக்கும் இந்த ராகமாலிகைப் பாடலுக்கு இசை அமைக்க சி.ஆர். சுப்பராமன் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் அரை மணி நேரம் தான். ஆம். அரை மணி நேரத்துக்குள்ளாக முழுப் பாடலுக்கும் மிக அருமையாக மெட்டமைத்துவிட்டார் சி.ஆர். சுப்பராமன்.
"சின்னஞ்சிறு கிளியே" பாடலைக் கவனித்துப் பார்த்தோமானால் சுப்பராமனின் தனித் திறமை பளிச்சிடும். படத்தில் பாட்டு வாத்தியார் டி.எஸ். பாலையா வீணை மீட்ட அவரது மாணவியாக வரும் பத்மினி பாடுவதாக காட்சி அமைப்பு. (இன்னொரு மாணவியாக வரும் லலிதா நடனம் ஆடுவார்.)
இந்தப் பாடலுக்கு மரபு மீறாமல் நுணுக்கமாக இசை அமைத்திருக்கிறார் சி.ஆர். சுப்பராமன்.
பாடல் ஐந்து கண்ணிகளாக பகுக்கப் பட்டு காபி, மாண்ட், வசந்தா, திலங், சிவரஞ்சனி ஆகிய ஐந்து ராகங்களில் ஒரு இனிய ராகமாலிகையாக அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்தச் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" பாடலில் மிகக் குறைந்த வாத்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இருக்கிறார் இசை அமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன். ஒரு வீணை, ஒரு ஹார்மோனியம், ஒரு தபலா - அவ்வளவு தான்.
முதல் மூன்று கண்ணிகள் சுருதி லயத்தோடு எம்.எல்.வி. யின் டிஜிட்டல் குரலில் ஒலிக்க அடுத்த இரண்டு கண்ணிகள் வி.என். சுந்தரத்தின் எடுப்பான அதே சமயம் மனதை வருடும் குரலில் கேட்கும்போது அப்படியே மெய்மறக்க செய்துவிடுகிறது பாரதியாரின் கவிதை.
"பாரதி இந்த மனோநிலையில் தான் பாடி இருப்பானோ" - என்று எண்ணத்தோன்றும் அளவில் பாடல் அமைந்து விட்டிருக்கிறது.
வசந்தகுமாரி, சுந்தரம் ஆகிய இருவரின் குரல்களை பிரதானப்படுத்தி வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து ராக பாவம், பொருட்செறிவு ஆகியவை துல்லியமாக வெளிப்பட இசை யாகமே நிகழ்த்தி இருக்கிறார் சி. ஆர். சுப்பராமன்.
இந்தப் பாடலுக்கு இசை அமைக்கும் போது மனதில் "ஒரு திரைப்படப் பாடலுக்கு இசை அமைக்கும்" உணர்வு கடுகளவு கூட இல்லாமல் "மகாகவி" பாரதியாரின் பாடலுக்கு இசை அமைக்கிறோம் என்ற உணர்வோடு -கண்ணம்மாவை ஒரு குழந்தையாக பாவித்து கொஞ்சும் பாவனையை - தனது இசையில் பிரதிபலிக்கவேண்டும் என்கிற ஒரே உணர்வோடு - ஆத்மார்த்தமாக அந்த இருபத்தாறு வயதில் இளைஞன் சுப்பராமன் இசை அமைத்திருக்கவேண்டும் என்பது நிச்சயம்.
அதனால்தான் படம் வெளிவந்து ஐம்பத்தெட்டு வருடங்களை கடந்து விட்ட இந்தக் கால கட்டத்திலும் அந்தப் பாடல் கர்நாடக இசைக் கச்சேரி மேடைகளில் புதுப்பொலிவோடு உலா வந்து கொண்டிருக்கிறது.
இதை விட ஒரு இசை அமைப்பாளருக்கு சிறந்த அங்கீகாரம் வேறு என்ன வேண்டும்?
முன்பு ராஜமுக்தி படத்தில் தனது இசையில் பாடும் வாய்ப்பை தவறவிட்ட தனது சிஷ்யை பி. லீலாவை "மணமகள்" படத்தில் எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைந்து பாடவைத்து ஒரு அருமையான பாடலைக் கொடுத்தார் சி.ஆர். சுப்பராமன்.
உடுமலை நாராயண கவி எழுதிய அந்தப் பாடல் தான் "எல்லாம் இன்ப மயம்".
காலத்தை வென்று தனது புகழை என்றும் நிலைத்திருக்கும் வண்ணம் சுப்பராமன் வடிவமைத்த பாடல்களில் "எல்லாம் இன்ப மயம்" பாடலுக்கு தனி இடம் உண்டு. சுப்பராமனின் வெற்றி மகுடத்தில் பதிக்கப் பட்ட வைரக்கல் என்று இதனைச் சொல்லலாம். பாடலைக் கேட்பவர்களுக்கே இது புரியும்.
உடுமலை நாராயண கவியின் வரிகள் சி.ஆர். சுப்பராமனின் கற்பனையில் இசை வடிவம் பெற்று எம்.எல். வி. - பி. லீலா இருவரின் இனிய குரலில் பாடலாக உருமாறி வந்த இந்தப் பாடலை இன்று கேட்டாலும் கேட்பவர் மனங்களில் இன்ப மயமான உணர்வு நிறைவதை கண்டிப்பாக உணர முடியும்.
பாடலில் சரணம் முடிந்ததும் வரும் ஸ்வரக்கோர்வைகள் சி.ஆர். சுப்பராமனின் அபாரமான கற்பனை வளத்துக்கும் இசை ஞானத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டு.
கதைப்படி மாணவியர் இருவர் (லலிதா-பத்மினி) இசை ஆசிரியரிடம் கற்றுக்கொண்ட பாடலை இசை வகுப்பில் பாடுவதாக காட்சி அமைந்திருக்கும். பாடலை முடித்ததும் இருவரும் மாறி மாறி ஸ்வரம் பாடுவார்கள். பாடலின் பிரதான ராகமான "சிம்மேந்திர மத்யமத்தில்" மூன்று ஆவர்த்தங்கள் ஸ்வரம் பாடி முடித்ததும் சட்டென்று எம்.எல்.வியின் டிஜிட்டல் குரலில் மோகன ராகத்தில் அடுக்கு ஸ்வரங்கள் தெறித்து விழ அதன் அடியொற்றி பி. லீலா தொடர, அதன் பின்பு முறையே ஹிந்தோளம், தர்பார் ஆகிய ராகங்களில் ஸ்வரக்கோர்வைகள் கேட்பவர் செவிகளில் புகுந்து மனசை நிறைத்து ஒரு முழுமையான கச்சேரி கேட்கும் உணர்வை ஏற்படுத்தும்.
http://www.youtube.com/watch?v=pn4gJSPJvjU&feature=player_embedded
"மணமகள்" - திரைப்படத்தையோ - பாடல் காட்சியையோ இதுவரை ஒருமுறை கூட பார்த்தே இராதவர்கள் முதல் முறையாக இந்தப் பாடலை கேட்க மட்டும் செய்தால் கண்டிப்பாக பாடல் காட்சியை ஒரு மேடைக் கச்சேரிப் பாடலாகத்தான் எண்ணிக்கொள்வார்கள். இது போன்று வேறு எந்தத் திரைப்பாடலிலும் அன்றும் இன்றும் என்றுமே வந்ததில்லை என்று ஆணித்தரமாகச் சொல்லலாம்.
"எல்லாம் இன்ப மயம் பாடலில் சி.ஆர். சுப்பராமன் அமைத்த அடுக்கு ஸ்வரங்களைப் போல் இதுவரை வேறு யாரும் அமைக்கவில்லை. அப்படியே அமைத்தாலும் யாரையாவது பாட வைக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான்" என்கிறார் இசை ஆய்வாளரும் இசை அமைப்பாளருமான ஆர். பார்த்தசாரதி (ஆதாரம் - "வாமனனின் திரை இசை அலைகள்).
இதே போல டி.ஏ. மதுரம் பாடிய "நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி" பாடலும் சுப்பராமனின் இசையில் ஒரு அருமையான பாடலாக அமைந்துவிட்டது.
"மணமகள்" பாடல்கள் மகத்தான வரவேற்பை பெற்றன. படமும் மாபெரும் வெற்றி பெற்றது. (அந்தப் படத்தில் முதல் முதலாக கதாநாயகியாக அறிமுகமான நாட்டியப்பேரொளி பத்மினி தனது வாழ்க்கை அனுபவங்களை "இதயம் பேசுகிறது" வார இதழில் பதிவு செய்தபோது அந்தக் கட்டுரைத் தொடருக்கு தலைப்பாக "எல்லாம் இன்ப மயம்" என்று அந்த பாடலின் முதல் வரிகளையே தலைப்பாக வைத்து எழுதி வந்தார். )
அடுத்து சி. ஆர். சுப்பராமனின் இசையில் குறிப்பிடப் படவேண்டிய படங்கள் இரண்டு.
அவற்றை அடுத்த இடுகையில் காண்போம்.
சிகரம் தொடுவோம்...
|