சய்லேன்ஸ் - 7
நேசித்து வாசித்த நூல்களின் தூறல்
1. இரவுக் காகங்களின் பகல் கவிதைகள் அம்சப்ரியா
கவிஞர் அம்சப்ரியா ஆசிரியப் பணியில் இருப்பதை தனக்கான அனுகூலமாகவே கை கொள்கிறார் தனது கவிதைக்கான கச்சாப் பொருளை தாம் பழகும்
சிறார்களின் உலகத்திலிருந்தே எடுத்துக் கொள்கிறார்
சிறார்களின் மனவெளி மிகவும் நுண்ணியது,
நுட்பமானது, உணர்வுப் பூர்வமானது. அவர்களது
உலகில் பெரியவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்
நுழைவதற்கு தகுந்த திறமை, பயிற்சி முக்கியமாய்
பொறுமை வேண்டும்.
சிறார்களின் அக உலகில் கனவுகளை வளர்ப்பதிலும்,
பிரம்படியால் அடிப்பதிலும் `ஆசிரியர்`களின் பங்கு
மிக அதிகம். சேலம் மாவட்டத்து தொடக்கப் பள்ளி
ஒன்றில் தண்ணீர் பானையைத் தீண்டிய தலித் சிறுமியை
பார்வையைப் பறித்ததும் அதிகம் படித்த ஆசிரியர்
ஒருவர்தான்.
அம்சப்ரியா காட்டுமொரு ஆசிரியப் படிமமிதோ
`இரண்டு மலைகளுக்கிடையில்
ஒரு அரியனை வரைந்தபோது
சூடாய் இருப்பதை உணர்ந்து
பதைத்து
அருகிலேயே ஆறொன்றையும்
இருபக்கமும் தென்னைகளையும்
வரைந்து முடித்த போது
வீட்டிலிருக்கிற கூண்டுக்கிளியை
மரத்தில் விடுவதே பொருத்தமென
நிமிர்கையில்
ஓவியப் போட்டிக்கான
நேரம் முடிந்ததென
பறித்துக் கொண்டாள்
ஆசிரியை’’.
2. அனுபவ சித்தனின் குறிப்புகள் / கவிதைகள் / ராஜா சந்திரசேகர்
`அனுபவ சித்தனின் குறிப்புகள் .. நூலை ஹைக்கூ என்பதா.. குறுங்கவிதை அல்லது சிந்தனைப் பதிவுகளென்பதா..? கொஞ்சம் சர்ரியலிசம், கொஞ்சம் தாவோ.. கொஞ்சம் ஜென்..
கொஞ்சம் கருத்துக்கள் கூடவே கொஞ்சம் கவிதைகளும் ராஜா சந்திரசேகரின் வெற்றி, ரத்தினச் சுருக்கம்
ஆயிரம் வார்த்தைகளை விடவும் அமைதியான மவுனம்
சொல்லாத சேதிகளையெல்லாம் சொல்லிவிடும்.
``மொழிகள் எதற்கு / கண்துளி / சொல்லும் அன்பு’’
வேறுபட்ட முரண்களை இணைத்து ஓர் காட்சியைக் காட்டி
வாசகனைக் கவிதைக்குள் அழைப்பது ஓர் வெற்றி பெற்ற
உத்தி! கவிஞருக்கு இச்சுவை மிகச் சிறப்பாக கை வந்திருக்கிறது
(உம்) `இருளின் கரி எடுத்து என்ன /எழுதுகிறாய் /ஒளியின் கருணையை.
அதே நேரம், ஒரு தத்துவத்தையோ கோட்பாட்டையோ கவிதையாக்கும
போது அந்த தத்துவத்தை வாசகனுக்குள் கடத்துவதற்கு பதிலாக
அதன் சாரத்தை வார்த்தை அடுக்குகளாய் அவன் மீது இறக்கி
வைப்பது கவிதைக் கலையாகாது. அதைப் போலவே, அழகான
வரிகளை கவிதையென நம்புவதும்கூட...
சாலையில் செல்கிற அழகுப் பெண்களெல்லாம் தன்னைத்தான்
காதலிக்கிறார்கள் என்று நம்பும் அபத்தமும் கூட...
3) ஆற்றோர கிராமம் /குறுநாவல்/ சிவக்குமார் முத்தையா
ஆற்றோரகிராமம் நூலில் நான்கு குறுநாவல்கள்
1. ஓர் குதிரும் ரெண்டும் கோட்டோவியங்களும்
2. கதிர் காய்ச்சல்
3. ஆற்றோர கிராமம்
4. மூன்று விஜயாக்கள்
கதைகளின் மாந்தர்கள் கீழத்தஞ்சை வட்டாரம் சார்ந்தவர்கள். சொல் வளமும் மண் வளமும் மிக்க நடை வாசகனைக் கட்டிப்போடும்!
தெளிவான கதை சொல்லலும், கிராமிய மொழியும், நவீனம் என்ற பெயரால் வாசகனை வறுத்தெடுக்கும் தண்டனை தராத சுவாரஸ்ய நடை (+) எனில் எரிச்சலூட்டும் பிழைகள் (-)
வரவேற்கிறோம்!
வரவேற்கிறோம்!
தைர்யம் மின்னும் தலையங்கம் தந்த
இதழாசிரியரை..
ஆளுங்கட்சி கவிதாயினி நூல் வெளியீட்டில்
ஆட்சியாளர்க்கு ப்ளக் ஸ் பேனர் வைக்கும்
பதிப்பாசிரியரை
வரவேற்கிறோம்!
ஆசிரியர் குழுவில் கிளிப்பிள்ளைகளை
இணைத்து இலக்கியம் படைக்கும்
பத்தரிகாதிபரை..
நூலக ஆணைக்காக ஆள்பவர் பாதம்
நக்கும் படைப்பாளிகளை
வரவேற்கிறோம்
`தேர்தல் பாதை திருடர் பாதை’யென
முழங்கிய வசந்தத்தின் இடிமுழக்கத்தை
பெட்டிக்காய் அணிமாறி
பேருரைகள் நிகழ்த்துகின்ற கொள்கைப் புலியை..
வரவேற்கிறோம்
திறந்த மொழிகளில் பெண்ணியம் பேசி
புதியக் கவிகள் சொல்பவரை..
கவிதை ஈரம் காயு முன்பே
பதவி பிஸ்கட்டுகளுக்காய்
வாலாட்டும் வீராங்கனைகளை..
வரவேற்கிறோம்
தேர்தலுக்கு தேர்தல் தடம்மாறி இடம்மாறி
இருக்கைகளைக் காப்பாற்றும் இலட்சியவாதிகளை..
வாரிசுகளுக்காய் பேரம் பேசி
வாகாய் மொழி ஏய்க்கும் வீரச் சிங்கங்களை..
வரவேற்கிறோம்
`மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என
நுண்ணிய எழுத்தில் புட்டியின் மீது அச்சிட்டவரை..
டாஸ்மாக் பார்களில் இருந்து
பெண் படைப்பாளிகளுக்கு
ஆபாச குறுஞ்செய்தி அனுப்பும் நவீனக் கவிஞர்களை..
வரவேற்கிறோம்
இலஞ்சம் வாங்காமல்
அமைப்பை மீறும் கிளிச்சவாயர்களை
பெறவேண்டியதைப் பெற்று
தரவேண்டியதைத் தருகிற
பொறுப்பான சேவைச் செல்வங்களை..
வரவேற்கிறோம்
நேற்றைக்கு யுத்தமிட்டு
இன்றைக்கு மன்னிப்பு கேட்கும்
உயிர் குடிக்கும் பிசாசுகளை..
எது நடப்பினும் மவுனப் புன்னகையால்
காலந்தள்ளும் அதிகாரத் தலைகளை..
வரவேற்கிறோம்.
கூட்டணி தர்மத்துக்காய்
மவுனங் காக்கும் மகோன்னதர்களை..
பதவி நாற்காலிகளுக்காக
நம்புமினத்தை அடகு வைக்கும்
தீரத் தளபதிகளை..
வரவேற்கிறோம்
சாகித்ய அகாடமி விருது கிடைக்காதப் பொருமலில்
தெருநாயாய் ஊளையிடும் பேனா மன்னர்களை
நவீன இலக்கியவாதிகள் முகமூடியோடு
கோடம்பாக்கத்தில் முதுகு சொறிகிற
வாய் வீச்சர்களை
வரவேற்கிறோம்
இக் கவிதை போன்ற அபத்தங்களை
பிரசுரிக்கும் சிற்றிதழ்களை
நூலாக்கும் பதிப்பகங்களை
விருதளிக்கும் அமைப்புகளை
இக் கவிதை முடிந்தவுடன்
கை தட்டி பாராட்டும்
உங்களை..
தொடரும்... |