சய்லேன்ஸ் - 2
ஒரு நிகழ்வு
விழுப்புரத்தில் 21.3.2010 அன்று
'விடுதலைக்குயில்கள்' என்ற அமைப்பின்
விழுப்புரம் மாவட்டத் தொடக்க விழா நிகழ்ந்தது.
கவிஞர் கம்பீரன், எழுத்தாளர் அழகியபெரியவன்,
முனைவர் அரங்கமல்லிகா, கவிஞர் தமிழரசி,
கவிஞர் சக்திஜோதி, எழுத்தாளர் விழி பா இதயவேந்தன், கவிஞர் அன்பாதவன், தலித் மண்ணுரிமைப் போராளி மானமிகு சி. நிக்கோலஸ் இவர்களுடன் சிறப்புரையாற்ற கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கூட்டத்துக்கு கேட்கவா வேண்டும்! எள் விழுந்தாலும் இடமில்லை... கவிஞர் அரங்க மல்லிகாவின் 'நீர் கிழிக்கும் மீன்' கவிதை நூல் குறித்து கவிஞர் இரா. தமிழரசியும், கவிஞர் சக்திஜோதியின் 'கடலோடு இசைத்தல்' நூல் குறித்து அ.விசயலட்சுமியும், கவிஞர் கீதாஞ்சலி பிரியதர்ஷினியின் 'திருமதியாகிய நான்' நூல் பற்றி கவிஞர் சக்திஜோதியும், கவிஞர் தமிழச்சி யின் 'மஞ்சணத்தி - நூல் குறித்து முனைவர் அரங்க மல்லிகாவும் பேசினர் கவிஞர் தமிழச்சியின் நெகிழ்ச்சியான உரை அரங்கத்தை கட்டிப்போட்டதில் வியப்பேதுமில்லை. நிகழ்ச்சியை செம்மையாய் ஒருங்கிணைத்த இதயவேந்தனுக்கும் அன்பாதவனுக்கும் வாழ்த்து சொல்லி நீண்டன பலகரங்கள்.
படைப்பாளி
தமிழ் மணவாளன் தொடர்ந்து கவிதை உலகில் இயங்கும் இளைஞர் வாழ்வின் சின்னச்சின்னத் தருணங்களிலிருந்து தனது கவிதைக்கானக் கருவைக் கண்டடைகிறவர்! தமிழ் மணவாளனின் கவிதை உலகம் காட்சிப் படிமங்களால் ஆனது! கவிதையின் வழியாக கதை சொல்ல...நாடகமாக்க.. குறும்படமாக்க தெரிந்திருக்கிறது தமிழ் மணவாளனுக்கு..தமிழ் மணவாளனின், சமீபத்தில் வெளியீடான 'புறவழிச்சாலை' கவிதைத் தொகுப்பை வாசித்தீர்களென்றால் வசப்படுவீர்கள்!
சில கவிதைகளின் தொடர் வார்த்தைகள் தொங்கு கதைகளாக வாசகனுக்கு உறுத்தலைத் தந்தாலும் சர்ரியலிச வாசம் வீசும் நவீனக் கவிதைமொழியை வாசகனின் மனசுக்கு அருகில் இருக்கிறார் தமிழ் மணவாளன்!
ஒரு கவிதை
மீசையியல்
அழகாயிருக்குமென நினைத்து தானே வளர்த்தது,
எல்லாத் திசைகளிலிருந்தும் ஏகோபித்த எதிர்ப்பு
ம்! ரசனையில்லா உலகம்!
''ஒனக்கெதுக்கு இதெல்லாம்''
''ஏய்'' நீ வீரப்பனா.. நக்கீரனா..?''
''ஏன்சாரே அரைகுறை ஷேவிங்கிலெ அவசரமா வந்துட்டியா..''
- நக்கலுடன் விசாரித்த அலுவலகம்
வாடிக்கையாளரின் பெரீப்ப மீசையோடு
ஒப்பாய்வு செய்து கிண்டலடித்தது
'உரசினால் உறுத்துகிறது'
- நெருங்கவே விடவில்லை மனைவி
''போலிசும் கிரிமினல்சும், அரசியல்வாதிங்களுந்தான்
பெருசா மீசை வெப்பாங்க... நீ எதுக்கு...?''
உரிமையோடு கண்ணடித்தான் சிநேகிதன்
இத்துணை இருக்கிறதா என்னாசை மீசையில்
குழப்பத்தில் நின்றிருந்தேன் நிறுத்தத்தில்...
நீண்டநாள் கழித்து நலம் விசாரித்த
பழைய காதலி 'பளிச்' செனச் சொன்னாள்.
''ஓம் மொகத்துக்கு நல்லாயில்ல... எடுத்துடு''
எடுத்து விட்டேன்.
நல்லா கீதா... கட்டியங்காரன் கவிதை!
ஒரு நூல்
மறுவாசிப்பில் மக்கள் எழுத்தாளர் பிரபஞ்சனின்
'மானுடம் வெல்லும்' என்ற பிரம்மாண்டமான நாவலைப் வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது. பாக்கியம் என்று குறிப்பிட்டதில் சற்றும் மிகையில்லை. காரணம், வரலாற்று புதினமெனில் புரவிகளின் குளம்போசை கேட்க வேண்டும்! வாரணம் ஆயிரத்தின் பிளிறல்... வாள் .. கேடயத்தோடு மோதுமோசை சதியாலோசனைகள்.. சமர்கள்.. உலக அழகி ரேஞ்சுக்கு ஒரு இளவரசி.. முக்கியமா அந்த இளவரசி கச்சவிழ்க்கும் போது கட்டாரி வீசப்பட வேண்டும் என்ற தமிழ் வரலாற்று சாண்டில்ய வீதிகளைத் தூளாக்கி புதிய வரலாற்றை எளிய மக்களின் வாழ்வைப் பதிவு செய்கிறது மானுடம் வெல்லும்!
புதுச்சேரியை டூப்ளே ஆண்ட கால நிகழ்வுகள், காதல் கிழத்தி ஜோசபினின் பேராசை.. ஆனந்தரங்கம் பிள்ளைபின் அரசியல் விளையாட்டுகள், தாசிகளின் வாழ்வு... என பல்வேறுத் திசைகளில் பாய்ந்தோடும் இந்த நாவல் நதி வாசிக்க சுவையானது! சுகமானது! வானம் வசப்படும்! மானுடம் வெல்லும் புதினங்களைத் தொடர்ந்து மூன்றாம்பாகம் எழுதுவேன் என்று உறுதியளித்திருந்தார் பிரபஞ்சன்! சீக்கிரம் எழுதுங்க பிரபஞ்சன்!
காத்திருக்கிறோம்!
தொடரும்...
|