வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை
இதழ்: 2 :: சித்திரை (May), 2015
   
 
  உள்ளடக்கம்
 
நகுலனின் இரு கவிதைகள் - விக்ரமாதித்தன் நம்பி
--------------------------------
மனிதன் - ஈ.பீ.டொங்காலா - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
வந்தாரங்குடி - கண்மணி குணசேகரன் - தமிழ்மகன்
--------------------------------
கோடை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சிப் பட்டறை - 1 - தினேஷ்
--------------------------------
மூர் மார்க்கெட் எரிந்து முடிந்தது - விட்டல்ராவ்
--------------------------------
அஞ்சலி : திருமதி. கமலினி செல்வராஜன் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
மொழியும், இலக்கியமும் - விட்டல்ராவ்
--------------------------------
 
   
 
1

 
 
 
 
   
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
  -----------------------------  
     
     
     




நகுலனின் இரு கவிதைகள்

- விக்ரமாதித்தன் நம்பி  

ஆமாம்
இல்லை
என்று சொல்லவில்லை
ஒரு நண்பர்
(அவர் மிகவும் கெட்டிக்காரர்)
சொன்னமாதிரி
செயல் முடித்த
அடுத்த கணம்
இன்றுவரை எனக்கு
வேண்டாமாக இருந்தது
என்று
ஒருபொழுதும் தோன்றியதில்லை
இப்பொழுதெல்லாம்
சற்று அளவு
மீற வேண்டியிருக்கிறது.
என்றாலும்
தெரிந்தவர்கள்
மாதிரி இல்லாமல்
இருப்பதை
ஒரே மூச்சில்தான்
குடிக்கிறேன்
கசப்பாகத்தான்
இருக்கிறது;
பண்புடையாளன்
தொடர்பும் இப்படித்தான்
ஆரம்பத்தில் இருக்கும்
என்று
எங்கேயோ படித்த நினைவு
ஆனால் பின் விளைவு?
பாரதி பாடவில்லையா!
‘மங்கியதோர் நிலவினிலே’
இது முதல்நிலை
பிறகும்
நிழல்கள்மாதிரி
வந்து
நிழல்கள் மாதிரி
சஞ்சரித்துக்
கொண்டிருக்கிறோம்
இது அடுத்த கட்டம்

பின்?
நினைவு உலகின் நச்சரிப்பிலிருந்து
கனவுலகின் அவஸ்தையிலிருந்து
விடுபட்டுத்
தெரிந்ததைப் பற்றி
எவ்வளவு தெளிவாகப்
பேச்சுத் தொடர்கிறது;
உள்ளத்துள்
அமிழ்ந்து கிடந்த ரூபங்கள்
எவ்வளவு தெளிவாகத்
தங்களைக் காட்டிக்கொள்கின்றன.
பிறகு
உன்னை நீயே பரிகசித்துக்கொள்கிறாய்;
அதட்டுகிறார்;
உன்னையே எடைபோடுகிறாய்;
உன்
புலங்களும் பலவீனங்களும்
எவ்வளவு
தெளிவாகத் தென்படுகின்றன
பிறகு
உறக்கம் கலைந்ததும்
மீண்டும் கனவுநிலை
தொடர்கிறது
என்று வைத்துக்கொள்
அறையில்
காலிக் குப்பிகள்
அதிகரித்துக்
கொண்டு இருக்கின்றன.

(‘நகுலன் கட்டுரைகள்’ நூல் பக்கம் ; 277-278)

‘நண்பர் கேட்டார், ‘இப்பொழுது எல்லாம் நீங்கள் பிராந்தி அடிக்கடி அருந்துவதாகக் கேள்விப்பட்டேன். இதே அனுபவத்தை எந்தச் சமயத்திலும் யோகத்தின் மூலம் அடையலாம் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே’ . நான் ஒன்றும் சொல்லவில்லை. ஏனென்றால் எனக்கு அது தெரியும். அவர் போய்ச் சேர்ந்தார். அப்பொழுது ஒரு சுருதி சேர்ந்த சமயத்தில் என்றுதான் சொல்லவேண்டும். வழக்கம்போல் பிராந்திக் கசப்பை அனுபவித்ததின் பின் ஒரு கவிதை எழுதியது நினைவிற்கு வருகிறது. நோட்புக்கைப் புரட்டிப் பார்க்கையில் அந்தக் கவிதை கிடைத்தது. கவிதை வருமாறு.’ என்றுதான் ‘அனுபவம் புகுந்த ஞாபகம் / புகுந்த ஞாபகங்கள் என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் நகுலன். (அந்தக் கட்டுரையிலிருந்து தான் இந்தக் கட்டுரையே) பேச்சுவழக்குப் போலக் கவிதையின் ஆரம்பம்; முதல்பத்தியில், என்னது (விஷயம்) எனத் தெரிவிக்கப் படவில்லை, இரண்டாவது பத்தியில்தான் தெரியவரும்; பானம் உண்டுபண்ணும் விளைவுகள் குறித்து மூன்றாவதுபத்தி; இவற்றின் தொடர்ச்சி நான்காவது பத்தி; முடிப்பு வரிகள். ‘அறையில்/காலிக்குப்பிகள்/ அதிகரித்துக்/ கொண்டு இருக்கின்றன’.

எல்லாமே விவரிப்புகளாகத்தாம், சில இடங்களில் செய்தி சொல்ல லொப்ப, சில சமயங்களில் கவித்துவமாக.

நகுலன் கவி்தைகளில், அவர் படித்ததில் பாதித்ததும் வேண்டியவர்கள் / பிறர் சொன்னதில் மனசில் பதிந்ததும் இடம்பெறும்; அதேவேளை, அவை சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமாக இருக்கும்; வேறுதளத்தில் இயங்கும்; வேறுரூபம் கொள்ளும் பிராந்திக் கசப்பைச் சொல்ல, ‘பண்புடையாளன் தொடர்பு’, குறளின் செல்வாக்கு பின்விளைவின் தொடக்கநிலைக்கு, பாரதியின் வரி; மெளனியின் தரிசனமான, ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ சாயலில் அடுத்த கட்டம்; அத்தனையுமே உள்ளத்தில் நிகழும் அவசங்கள்தாம்; ஒரே கவிதையில் இத்தனை துல்லியமாக துலாம்பரமாக துலக்கமாகச் சொல்லிவிட்டபின் இன்னொரு கவிதையில் இவையெல்லாம் வர, இல்லையா.

‘காலச்சுவடு நவீனத் தமிழ் கிளாசிக் கவிதை வரிசை’யில், ‘நகுலன் / தேர்ந்தெடுத்த கவிதைகள்’ நூலும் ஒன்று; அதில், ‘நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல் என்றொரு பகுதி; நகுலன், பிரமிள் போன்ற மூத்தகவிஞர்களை இந்தத் தலைமுறையினர்க்கு அறிமுகம் செய்ய இதுபோல உரையாடல் வேண்டியதுதான்.
அந்த நீண்ட உரையாடலில் கவிஞர் யுவன் சந்திரசேகர் கேட்கும் இரு கேள்விகள்;

இவ்வளவு குடி அடிமானியாக இருக்க க்கூடிய நகுலன், குடித்தபின் உடலுக்குள்ளும் மனத்திற்குள்ளும் ஏற்படும் மாற்றங்களைக் கவிதைகளில் ஏங்கேயாவது பதிவு செய்திருக்கிறாரா? பிராந்திக் குப்பி என்னும் புறப்பொருள் தவிர வேறு ஏதாவது அகச்சலனம் பற்றிக் கவிதையில் பேசியிருக்கிறாரா?
கவிஞர் சுகுமாரன் சொல்லும் பதில்;

இல்லை. பேசியதே இல்லை.

இந்தக் கேள்வியும் பதிலும் என்னை மிகவும் தொந்தரவு செய்தன; யோசித்துப்பார்த்தேன்; ‘காவியா’ வெளியிட்டுள்ள ‘நகுலன் கவிதைகள்’ நூல் (முப்பத்து மூன்றாவது முறையாக இருக்குமா) எடுத்துப் பார்த்தேன்; கவிஞர் ஷங்கர்ராம சுப்ரமணியனோடு பேசினேன்; அதெப்படி எதுதாமல் இருக்கமுடியும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது; யுவனும் சுகுமாரனும் கவிதையில் ஆழங்கால் கண்டவர்கள்; அதிலும், யுவன் தனக்கென் ஒரு கறாரான கவிதைக் கோட்பாடுகளையும் அறிந்தவர்; இருவர் சொன்னதையும் சுலபமாக மறுத்துவிட முடியாது; நானோ பாவம், நகுலன் வாசகன் / ரசிகன்; இந்த Disturvance –ஐ சுமந்துகொண்டிருக்கும் முடியவில்லை.

முனைவர் கி.நாச்சிமுத்து தொகுத்து, ‘காவியா’ வெளியிட்டிருக்கும் ‘நகுலன் கட்டுரைகள்’ நூல் எனக்குப் பிடித்தமான ஒன்று; திரும்பத்திரும்பப் புரட்டிப்பார்க்கிறதும்கூட; கடந்த ஐந்தாண்டுக்காலமாகவே கவிதைபற்றிய கட்டுரைகளாக எழுதிவருவதனால் சேகரித்துவைத்திருக்கும் பார்வைநூற்களை அடிக்கடி படித்து வருகிறேன்; அப்போது கண்ணில் பட்டது நகுலனின் இந்தக் கவிதை; கட்டுரையினூடாக இருப்பதால் அநேகம் பேர் அறிந்திருக்க வாய்ப்பிருக்காது; அந்தக் குறை இந்தக் கட்டுரை வாயிலாகத் தீர்வதாக.

நவீன கவிதையில் பிராந்தி போதை குறித்தெல்லாம் தயக்கமின்றிப் பதிவுசெய்திருப்பவர், நகுலன் ; நவீனவாழ்க்கையில் / நவீன உலகில் / நவீன மனிதர்கள் மத்தியில், ‘குடியின்றி அமையாது’ அன்ன எழுதியிருக்கிறார்; அந்தக் கவிதைகளின் முக்கியத்துவத்தை வாசகர்கள் உணர வேண்டும்; அவருடைய ‘சுருதி’ தொகுப்பிலுள்ள ‘எல்லாம் என்பது பற்றி ஒரு கவிதை’ குறித்து எழுதி, அது ‘நின்றசொல்’ நூலில் இடம் பெற்றிருக்கிறது; ‘உரையாடல்’, ‘சுருதி’ இரு கவிதைகளைப்பற்றியும் அடுத்து எழுதிவிடுவேன்.

எங்கிருந்தோ
என்றோ
ஒரு நாள்
இது
வந்துசேர்ந்தது
இப்பொழுது
என் வீட்டில் என் தனிமையைத்
தவிர்க்கவந்தது
போல்
வளையவருகிறது
இந்த மஞ்சள்_வெள்ளைப்
பூனை அதனால்
பிதுரர்களை
காகங்கள்
என்ற உருவில்
என்றால்
பார்க்க முடியவில்லை
ஆனால்
அன்பே வடிவமாய்
சகிப்புத் தன்மையே
ஒரு கவசமாக
ஒரு சடங்காய்
கிண்டல்தன்மை
மிளிரவும்
நடந்து வந்த
என் தாயாரின்
ஆவி இன்றும்
உயிருடன் உலவி
வருவதாக
ஒரு பிரமை அதனால்
இன்று க.நா.சு. வைப்
போன்றவர் நம்முடன்
இருந்து வருகிறார்கள்
என்பதில் ஒரு சந்தோஷம் அதனால்
பிராந்தி இருக்கிற
வரையில்
பேசுவதற்கு இலக்கியப்
பிரியர்கள் இருக்கிற
வரையில்
தோல்வியின் தீவிரம்
விடாப்பிடியாக
என்னை நிழல்போலத்
தொடர்ந்து கொண்டு
வரும் வரையில்
ஆனால் அதனால்
போல இல்லை அதுவே என்பதால்
வெற்றியைவிடத் தோல்வி முக்கியம் என்பதால்
ஒன்றும் முடிவுவரையில் தெரிவதில்லை.

(‘நகுலன் கட்டுரைகள்’ நூல் பக்கம் ; 284-285)

நேர்கவிதை; விளங்கும்தான்; நகுலனின் சொல்முறை உத்திசார்ந்து ஓரிரு செய்திகள் சொல்லவேண்டும்; கவிதையின் முடிவு, ‘ஒன்றும் முடிவு வரையில் தெரிவதில்லை’; அநிச்சயம் யதார்த்த த்திலும் அப்படித்தானே- வாழ்வுகதி ; இதற்கு முன்பான நான் கடிகளில்தாம் நகுலனின் தனித்த சொல்முறை உத்தி; ‘எங்கிருந்தோ’ எனத் தொடங்கும் கவிதை ‘மஞ்சள்_வெள்ளைப் பூனை’ யை விவரிப்பதோடு, ‘அதனால்’ எனத் தொடர்ந்து, ‘பிதுரர்களை / காகங்கள் / என்ற உருவில் / என்னால் பார்க்க முடியவில்லை’ என்று சொல்லி, ‘ஆனால் என்று மேற்கொண்டு பேசி, ‘அதனால்’, ‘அதனால்’ என்றே வளர்கிறது; இறுதிப்பத்தியில், ‘ஆனால் / அதனால்’ என்ற இரு சொற்களும் ஒரே வரியில் இதுவரையில் சொன்னவற்றையொல்லாம் கோத்ததுமாதிரி; அடுத்தாற்போல, ‘போல இல்லை / அதுவே என்பதால்’; ‘வெற்றியைவிடத் தோல்வி முக்கியம் என்பதால்’; இந்த வார்த்தை, நகுலனின் தரிசனம்; கவிதரிசனம் என்பதுதான் இன்றியமையாதது; வெற்றியில் திளைக்கலாம், தோல்விதான் வாழ்வனுபவமாகும்; கவிஞனுக்குக் கவிதை தரும்.

இவ்விரு கவிதைகளிலுமே கட்டமைப்பில் க.நா.சு.வின் பாதிப்பு உண்டு; ‘என் கவிதைகளில் ’வைகுண்டம்’, ‘ஆ’ என்று முடியும் கவிதை’ இவற்றில் புதுக்கவிதை அம்சம் என்று நான் ஏற்றுக்கொள்பவை அடங்கியிருப்பதாக நான் கருதுகிறேன்’ என்று க.ந.சு. குறிப்பிட்டுருப்பார்; அந்த இரண்டு கவிதைகளுமே சின்னச் சின்னச் சீர்களிலேயே (ஓரிரு சொற்களாகவே) கட்டமைக்கப்பட்டவை; முதன்முதலாக, க.நா.சு.தான் இப்படிக் கட்டமைப்பில் எழுதுகிறார்; நகுலன் அதை அடியொற்றியே எழுதுகிறார்; அதனால், க.நா.சு. சாயல் என்று சொல்லிவிட முடியுமா; நகுலன், க.நா.சுவைக் குருவாக வரித்துக் கொண்டவர்; அவருக்கு இல்லாத உரிமையா.

இரண்டாவது கவிதைக்குப் பிறகு உள்ளது, குடிக்க ஆயத்தமாவதில் ஆரம்பித்து, குடித்துவிட்டு இலக்கியம், கலைப்படம், மஞ்சள்-வெள்ளைப் பூனை ஆங்கில நாவல் (நகுலன் எழுதி வந்தது) என்று சென்று முடிகிறது, இந்தக் கட்டுரை; அதில், ‘தோல்வியின் தீவிரம் வெற்றிகளுக்கு இல்லை’ என்பதும் சம்பாஷணையில் வருகிறது.

இக்கட்டுரையை எழுதியதில் ஒரு நிறைவு; இரண்டு விஷயங்களுக்காக; முதலாவது, கவிஞர் யுவன் சந்திரசேகர் எழுப்பியிருந்த அந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில்களைக் கண்டடைந்ததில்; இரண்டாவதாக, கட்டுரையின் நடுவே இருந்த நகுலனின் இரு கவிதைகளைக் கண்டு கொண்டதில்; இதனாலேயே எழுதத்தலைப்பட்டதும்; என்றைக்கு வெளியாகி வாசகர் பார்வைக்கு வருமோ வந்தால் சந்தோஷம்; வராவிட்டாலும் பாதகமில்லை; புஸ்தகமாக வர்த்தானே போகிறது; நல்லது.

துணைநின்ற நூல்கள்:

1. க.நா.சு. கவிதைகள், சந்தியா பதிப்பகம்
2. நகுலன் கவிதைகள், காவ்யா பதிப்பகம்
3. நகுலன் கட்டுரைகள், காவ்யா பதிப்பகம்
4. நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைக்கள், காலச்சுவடு பதிப்பகம

 

மேலே செல்க...(go to top)
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </