ஜெயகாந்தனோடு நெருங்கிய நண்பராக இருந்த திரைப்பட நடிகர் ஒருவரின் மகள் எனக்கு கல்லூரித் தோழி; அவருடன் கல்லூரி நாட்களில் ஜெயகாந்தனை முதன்முதலாக சந்தித்திருக்கிறேன். அப்போது நான் ஆங்கில நாடகங்களை இயக்குபவனாக அறியப்பட்டதால் ஜெயகாந்தன் என்னிடத்தில் நாடகங்களைப் பற்றியே பேசினார் என்று நினைவு. பின்னர் 2002 ஆம் ஆண்டு தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம் நடத்திய நாட்டுப்புற கலைகள் திருவிழாவுக்கு தலைமை விருந்தினராக அவரை அழைக்க போனபோது அவரோடு உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது; அதைத் தொடர்ந்து அவரை பல முறை சந்தித்து ஓரிரு வருடங்கள் பழக வாய்ப்புகள் அமைந்தன. அந்த சமயங்களிலெல்லாம் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார் நான் கேட்டுக்கொண்டே இருந்துவிட்டு வந்துவிடுவேன். ஒரே ஒரு முறை எனக்கு பிடித்த தமிழ் எழுத்தாளர் யார் என்று கேட்டார், நான் நகுலன் என்று பதிலளித்தேன். அவரும் அதற்கு மேல் கேட்கவில்லை நானும் சொல்லவில்லை. ஆனால் ஜெயகாந்தனின் ஆளுமை அவருடைய எழுத்தைவிட பெரியது என்று என்னுடைய டைரிக் குறிப்புகளில் எழுதியிருக்கிறேன். அது ஏன் என்று ஜெயகாந்தன் மறைந்துவிட்டதாக செய்தி வந்த இந்நாளில் யோசித்துப்பார்க்கிறேன்.
|
மௌனி, புதுமைப்பித்தன், லா.ச.ரா., நகுலன் என அக உலகக் கலைஞர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட எனக்கு ஜெயகாந்தனின் சிறுகதைகள் வசீகரிக்கவில்லை; ஏனோ தானோவென்று படித்து வைத்தேன். பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் அவர்கள்தான் கல்லூரி நாட்களில் ஜெயகாந்தனை அணுக்கமாக வாசிக்கவேண்டியதன் அவசியத்தை எனக்கு எடுத்துச் சொன்னார். ‘ ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’, ‘பாரீசுக்குப் போ’ ஆகிய நாவல்களைப் பற்றியும் அதன் நாயகர்களான ஹென்றி, சாரங்கன் ஆகியோரின் சமூக ஒவ்வாமை, தனித்தன்மை பற்றியும் மணிக்கணக்கில் எஸ்.ஆல்பர்ட் பேசுவதை கவலையோடு உன்னிப்பாக கவனித்திருக்கிறேன். ‘சில நேரங்களில் சில மனிதர்களில்’ அதன் நாயகி தன் தாயிடம் ‘அக்னிப்பிரவேசம்’ சிறுகதையை வாசிக்கக்கொடுக்க, தாய் அக்னிப்பிரவேசம் சிறுகதையில் வரும் தாயைப்போல ஒரு குடம் தண்ணீரை ஊற்றி உன்னைத் தூய்மைப்படுத்தாமல் வீட்டைவிட்டு துரத்திவிட்டேனே என்று அழுவதாக வருவதன் Self reflexivity எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜெயகாந்தனின் உரைநடை தட்டையானது, கவித்துவங்கள் இல்லாதது, உவமான உவமேயங்கள் குறியீடுகள் இல்லாதது. ஆனாலும் எஸ்.ஆல்பர்ட் போன்ற தீவிர இலக்கிய வாசகர்களை ஜெயகாந்தனின் நாவல்கள் கவர்கின்றனவென்றால் அதற்கு அடிப்படை காரணம் அவருடைய கதாபாத்திரங்களும், காலச்சக்கரத்தின் சுழற்சியில் காதாபாத்திரங்கள் அடைகின்ற மாற்றங்களை வைத்து ஜெயகாந்தன் தருகின்ற உலகப்பார்வையுமே ஆகும். ‘சில நேரங்களில் சில மனிதர்களை’த் தொடர்ந்து ‘கங்கை எங்கே போகிறாள்?’ என்ற sequelஐ ஜெயகாந்தன் எழுதியபோது பல ஜெயகாந்தனின் தீவிர வாசகர்கள் கூட அதை அதிகமும் வரவேற்கவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் ‘கங்கை எங்கே போகிறாள்?’ தொடர்கதையாக எழுதப்பட்ட நாவலை நான் தேடிப்படித்தேன். காலத்தின் தொடர்ந்த ஓட்டத்தில் நல்லது கெட்டது, ஏற்றம் இறக்கம் எல்லாம் நடந்த பின்னும் தனி மனித சுதந்திரமும் அதற்கான வேட்கையும் அதற்கான மானுட யத்தனமும் எவ்வளவு முக்கியம் என்பதே ஜெயகாந்தனின் கலைப்பார்வை, உலகப் பார்வை என்று எனக்குப் புலப்பட்டது. ஒப்பிட்டு பார்த்தோமென்றால் அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் சிறிது போராடிவிட்டு வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து சரணாகதி அடைந்து விடுவார்கள். ஜெயகாந்தனோடு ஒப்பிடும்போது தி.ஜானகிராமன், பி.எஸ்.இராமையா, ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகிய தமிழ் நாவலாசிரியர்களுக்கு எந்த விதமான உலகப்பார்வையும் இருப்பதாகவே தெரிவதில்லை.
‘அக்னிப்பிரவேசம்’ சிறுகதையின் வெகுஜன வெற்றியைத் தொடர்ந்து வணிக நோக்கங்களுக்காகவே தொடர் நாவல்களை ஜெயகாந்தன் எழுதினார் என்று சொல்லக்கூடிய விமர்சகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த தொடர் நாவல்களில் அவர் என்ன கேள்விகளை எழுப்பினார், என்ன மாதிரியான முடிவுகளுக்கு வந்தார் என்று யாரும் ஆராய்வதில்லை. மாத நாவலாக வெளிவந்த அதிக கவனத்தை பெறாத ‘பாவம், இவள் ஒரு பாப்பாத்தி’ யில் கூட தொழிற்சங்க போராட்டம் நடக்கும் தொழிற்சாலை அருகே வடைசுட்டுக் கொடுக்கும் வயதான பாட்டியான பாப்பாத்தி தன் விடுதலையைத் தேடுவதை ஜெயகாந்தனால் விவரிக்கமுடிந்தது.
தன் எழுத்தில், கலையில் விடை தேடிய கேள்விகளை அவர் அச்சமின்றி, முன்முடிவுகளின்றி, தயக்கங்கள் இன்றி தேடியதால்தான் ஜெயகாந்தனால் துணிச்சலாக ஆணித்தரமாக பேச முடிந்தது, தன் கருத்து மாற்றங்களைக்கூட தீவிரமாக எடுத்துச் சொல்ல முடிந்தது. தனி மனித விடுதலைக்கான வழி சமூக சமத்துவத்தில் இருப்பதாக ஜெயகாந்தன் நம்பினார், அதை இந்திய நாகரீகம் அனைத்தையும் துறந்த ஓங்குகூர் சாமி போன்றவர்களின் துறவற பெருந்தன்மையின் வழி இந்திய நாகரீக வாழ்வியலாகக் காட்டுவதாக புரிந்துகொண்டார். தமிழ் சித்தர் மரபில் ஜெயகாந்தனுக்கு இருந்த ஈடுபாடு, திருக்குறளை நினைவில் இருத்தி சதா தன் பேச்சுக்களில் குறிப்பிட்ட விதங்கள், மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் இருந்த ஆழமான புலமை, மகாகவி பாரதியிடமிருந்து கற்றுக்கொண்ட ‘விட்டு விடுதலையாகி’ நிற்பதன் அவசியம், ஏற்ற தாழ்வுகளை காலம் எப்படி சமன் செய்கிறது என்று அறிகின்ற பார்வை ஆகியன அவருக்கு துணிச்சலையும் கம்பீரத்தையும் தந்தது. அந்த கம்பீரத்தை அவர் பல வழிகளிலும் வெளிப்படுத்தினார்.
வாய்மொழியாக நான் அறிந்த ஜெயகாந்தனின் கம்பீரக் கதைகளில் சில. ஒரு முறை மேடையில் ஜெயகாந்தன் அமர்ந்திருக்க சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராய் இருந்த ந.சஞ்சீவி மௌனி மௌனின்னு ஒரு எழுத்தாளர் இருக்கார் நான் தமிழ்த்துறை தலைவர் ஆனா எனக்கே அவர் என்ன எழுதறார்னு புரியல என்று பேசியபோது எழுந்து அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்கிய ஜெயகாந்தன் மௌனி உனக்காக எழுதல உட்கார்றா என்று கத்தினார். தான் ஒவ்வொரு கதை எழுதுவதற்கு முன்பும் மௌனியின் கதைகளைப் படித்துவிட்டே எழுதத் தொடங்குவதாகவும் குறிப்பிட்டார்.
சிவாஜி கணேசனின் ரசிகர்கள் கூடிய பெருங்கூட்டம் ஒன்றில் சிவாஜி மேடையில் இருக்கவே ஜெயகாந்தன் சிவாஜியின் மிகை நடிப்பினை கடுமையாக விமர்சித்தார். கூட்டம் கூவி ஜெயகாந்தனை அடிக்க வர, அவரை பத்திரமாக கூட்டிச் செல்ல முயன்றபோது சட்டைக்கைகளை சுருட்டி விட்டுக்கொண்டு ஒண்டிக்கு ஒண்டி வாங்கடா பாக்கலாம் என்று கத்தினார்.
எம்ஜியார் தலைமையிலான தமிழக அரசு கஞ்சாவை தடை செய்து சட்டம் இயற்றியபோது, பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கூட்டி தான் தினசரி கஞ்சா புகைப்பதாகவும் முடிந்தால் தமிழக அரசு அவரை கைது செய்துகொள்ளட்டும் என்றும் ஜெயகாந்தன் அறிவித்தார். எம்ஜியார் ஜெயகாந்தனை எப்படி கைது செய்வது என்று ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எம்ஜியார் அரசு ஜெயகாந்தனுக்கு முதல் ராஜராஜசோழன் பரிசினை அறிவித்தபோது இந்த திராவிடப் பயல்களுக்கு இப்போதுதான் கண் தெரிந்ததா என்று ஜெயகாந்தன் கத்தினார் என்று கேள்வி.
ரஷ்யாவுக்கு பயணம் செய்து திரும்பிய பின் தான் லெனினின் சமாதிக்கு சென்று வந்துவிட்டு பிணங்களை பாடம் செய்து கும்பிடுகிறார்கள் முட்டாள்கள் என்று ஜெயகாந்தன் எழுதினார்.
வாய்மொழியாக அறிந்த பல கதைகளையும் கேட்டபின்பு ஜெயகாந்தனை சந்திக்க சென்றபோது அதிசயிக்கும் விதத்தில் அவர் கைக்கடக்கமாக குள்ளமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆனால் இலக்கியத் தேடல் கொடுக்கின்ற கம்பீரத்திற்கு குறைச்சல் இருக்கவில்லை.
ஜெயகாந்தனை வாசிக்கவும் அவரை சந்திக்கவும் கிடைத்த பாக்கியங்கள் என் வாழ்வினை வளப்படுத்தியிருக்கின்றன. அன்னாருக்கு என் உளப்பூர்வமான அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றேன்.
|