இதழ்: 4, நாள்: 15- பங்குனி -2013 (March)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 2 - டிராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி 3 - ராஜேஷ்
--------------------------------
ஒரு கதை கவிதையாகும் தருணம் 3 - யாளி
--------------------------------
குறும்பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் ஒரு நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் 51 வது குறும்பட வட்டம் - தமிழ், யுகேந்தர்
--------------------------------
நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
சின்னவனைச் சுழற்றியெடுக்கும் 'சுழிக் காற்று' - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
கிளர்ந்தெழும் மூன்றாம் சினிமா - விஸ்வாமித்திரன்
--------------------------------
பெல் அடிச்சாச்சு - திரைக்கதை - செந்தூரன் - படிமை மாணவர்
--------------------------------
சினிமா வடிவம் - அருண் மோகன்
 
   
   


ஒரு கதை கவிதையாகும் தருணம் - 3

கதை நேரம் - ஜெயந்தனின் "காயம்"

யாளி


இப்படித் திஎங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்.
கத்திகள் எங்கிருந்தும் முதுகில் பாயலாம்
யாரும் யாரையும் எதுவும் பேசலாம்...
கூளமாய் நரகலாய் நினைக்கலாம்
எல்லாம் அவர்களை அவர்கள் காட்டும் காரியம்
நீ போய்க்கொண்டிரு...


மேற்கண்ட ஜெயந்தனின் கவிதைக்கு எந்த கோனார் நோட்சும் தேவையில்லை. இப்படி உண்மையைப் பூசி மெழுகி பூ வைக்காமல் அப்படியே அம்மணமாய் அலையவிடும் எழுத்துக்கள் ஜெயந்தனுடையவை. அவை சமூகத்தின் போலி முகங்களை கிழித்தெரியும் கூர்வாட்கள். கால்நடை மருத்துவத்துறையில் பணியாற்றிய ஜெயந்தன் சிற்றிதழ்கள் மற்றும் வணிக இதழ்களில் சிறுகதைகள் எழுதியவர். மேலும் சில குறு நாவல்களும், நாடகங்களும் எழுதியிருக்கின்றார். இவர் சிறிது காலம் "கோடு" என்ற சிற்றிதழை நடத்தினார். "காட்டுப்பூக்கள்" என்னும் தலைப்பில் கவிதைகள் எழுதியுள்ளார். இவரின் முழுக்கதைகளின் தொகுப்பு "நிராயுத பாணியின் ஆயுதங்கள்" என்ற தலைப்பில் வம்சி பதிப்பக வெளியீடாக வெளி வந்துள்ளது.

அவரின் "அஞ்சலி" என்ற சிறுகதையில், இருக்கும் போது என்ன என்று கூட கேட்டுக் கொள்ளாத, சாறைப் பிழிந்துவிட்டு சக்கையாய்த் தூற எறிந்த பெற்ற பிள்ளைகள், அந்தப் பெரியவர் (72 வயதான காளியப்ப கவுண்டர்) இறந்ததும் வெளி உலகின் பேச்சுக்குப் பயந்து அழுது புரண்டு ஒப்பாரி வைப்பார்கள். இந்த போலி முகங்களைச் சாடும் இந்த ஜெயந்தனின் வார்த்தைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்.

"நாய்களே! நாய்களே! நீங்கள் நாயாய் இருங்கள், நரியாய் இருங்கள். பேயாய், பிசாசாய் இருங்கள். ஆனால் அதையாவது நிமிர்ந்து நின்று சொல்லுங்கள். ஏன் இப்படி இருப்பவர்களை மட்டுமில்லாமல் உங்களையும் ஏய்த்துக்கொள்கிறீர்கள்?" - ஜெயந்தனின் "அஞ்சலி" சிறுகதையிலிருந்து.

இவ்வாறாக, மனித மனங்களின் கசடுகளை அப்பட்டமாய்ச் சுட்டிக்காட்டுபவை அவரின் சிறு கதைகள். அவரின் ஆகச்சிறந்த கதைகளான "பகல் உறவுகள்", "அவள்" போன்றவையும் இவ்வகையிலேயே சேர்த்தி. இப்படி சமூகத்தின் வன்பக்கங்களைக் காட்டும் கதைகளூடே மனிதர்களின் மெல்லுணர்வுகள் போற்றும் ஒரு கதைதான் "பாஷை".

"யெல்லோ ரிப்பன்" என்ற ஹுங்கேரிய கவிதையின் தாக்கத்தில் "யாத்ரா"(மலையாளம்) போன்ற ஒரு திரைப்படத்தையே இயக்க முடிந்த பாலு மகேந்திராவிற்கு "பாஷை" போன்ற ஒரு அற்புதமா சிறுகதை கிடைத்தால்? அதற்கு பதில்தான் இந்தக் குறும்படம்.

நாராயணன்-குயிலி, அலெக்ஸ்-ஜென்னி - இரண்டு தம்பதிகள் ஒரே காம்பவுண்டில் பக்கத்து வீடுகளில் வசிக்கிறார்கள். குயிலியின் மோதிரம் ஒன்று காணாமல் போய்விடுகின்றது. அது நாராயணன் அவளுக்கு அளித்த முதல் பரிசு. அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போதுதான் அவள் வீட்டிற்கு விளையாட வந்த அலெக்ஸ்-ஜென்னி தம்பதியின் மகளான ஜூலி பற்றிய ஞாபகம் வருகிறது. விளையாட்டாக அவள் எடுத்திருக்கக் கூடும் என்று குயிலி நம்புகிறாள். அக்குழந்தையை அழைத்து விசாரிக்கிறாள். தன் கையில் லட்டை வைத்துக் கொண்டு ஜூலியிடம் "நீதான மோதிரத்தை எடுத்த?" என்பது போல சில கேள்விகள் கேட்கிறாள். ஜூலியும் லட்டை பெறும் பொருட்டு தான் தான் மோதிரத்தை எடுத்ததாகவும் மேலும் அதை தன் அம்மாவிடம் கொடுத்ததாகவும் கூறுகிறாள். இதை நம்பி தன் கணவன் நாராயணனை விட்டு பக்கத்து வீட்டில் கேட்டு வருமாறு குயிலி கோருகிறாள். குழந்தையின் பேச்சை நம்பி போவதற்கு அவன் தயங்குகிறான். இருந்தாலும் மனைவியின் ஆறுதலுக்காகச் செல்கிறார். அங்கு மிகுந்த தயக்கத்துடன் தான் வந்த விசயத்தை அலெக்சிடம் கூற, அலெக்சும் ஜூலியை அழைத்து விசாரிக்கிறார். ஜூலி அவனிடமும் அதையே சொல்லுகிறாள். அதைக் கண்டு ஜென்னி அதிர்கிறாள். சூழ்நிலை தர்ம சங்கடமாகி விடுகிறது. ஜென்னி தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்கிறாள். ஆனால் ஜூலி அத்தனை தெளிவாக சொல்வதால் மறு நாள் அலெக்ஸ் அந்த மோதிரத்திற்காகும் பணத்தை தந்துவிட வருகிறார். நாராயணன் பெற்றுக் கொள்ள மறுக்கிறார். அடுத்த சில நாட்களில் நாராயணன் வெளியூர் சென்று திரும்பும் போது பக்கத்து வீட்டில் டு லெட் போர்டு தொங்குகிறது. பக்கத்து வீட்டுக்காரர்கள் காலி செய்து போனதற்கு தாம் சுமத்திய குற்றமே என்று உணர்ந்து அழுகிறாள். குயிலி தன் மோதிரம் கிடைத்துவிட்டதாகவும், அது தங்கள் வீட்டில்தான் இருந்ததாகவும் கூறுகிறாள். இப்படியாக முடிகிறது கதை.

இந்த "பாஷை" சிறுகதையில் மோதிரத்திற்கு பதிலாக பணத்தைக் கொடுக்கும் இடத்தில் இப்படி ஒரு வாக்கியம் வரும் " பைபிள்ல ஒரு வாக்கியம் இருக்கு. காரணமின்றி காயப்பட்டவர்கள்னு. அது இப்ப நாங்கதான் ". இந்த வாக்கியம் தான் "பாஷை" என்ற சிறுகதை "காயமாக" மாறிய இடமாக இருக்க வேண்டும். மேலும் இதே இடத்தை வைத்துத்தான் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்களை கிறிஸ்தவர்களாக குறும்படத்தில் பாலுமகேந்திரா சித்தரித்திருக்க வேண்டும். அத்துனை அழுத்தமான வசனம் அது.

குழந்தைகளைப் பெரியவர்கள் போல் காட்டி அவர்களின் மேதைமை போற்றும் அன்றைய கருப்பு வெள்ளைப் படக் காலத்திலிருந்து, இன்றைய 'ரியாலிட்டி ஷோ' காலம் வரை, குழந்தைகளை அவர்களின் குழந்தைமை மாறாமல் காட்டிய இயக்குனர்கள் வெகு சிலர். அவர்களுள் முக்கியமானவர்கள் பாலு மகேந்திராவும், மணிரத்னமும். இந்தக் கதை பெரும்பான்மையருக்கு மோதிரத்தைச் சுற்றி நகர்வதாகவேத் தோன்றும். கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால், அது குழந்தைகளின் உலகை வட்டமடித்துக் கொண்டிருப்பது புரியும். இக்குறும்படத்தில் அக்குழந்தை " ஆமா.. ஆமா.. " என்று ஆமாப் போடும் அந்தக் காட்சி ஒரு குறும்படக் கவிதை.

அந்தக் குழந்தை வரும் முதல் காட்சி அப்படியொன்றும் சிறுகதையில் பெரிதாக விவரிக்கப் பட்டிருக்காது. அங்கு பாலு மகேந்திராவின் திரைக்கதை சாதாரணமாக நாம் புரட்டிக் கடந்து போகும் சிறுகதையின் ஒரு சாதாரணக் காட்சியை குறும்படத்தில் கவிதையாக மாற்றியிருக்கும்.

நன்றாக கூர்ந்து அவதானித்தால், குறும்படத்தின் அந்த முதல் காட்சியில்தான் இக்குறும்படத்தின் நம்பகத்தன்மை ஒளிந்திருக்கும். எப்போதும் பக்கத்து வீட்டு அங்கிளையேத் தேடி வரும், அதே வீட்டு ஆண்ட்டியை(மெளனிகா) விட, அங்கிளை(நரேன்) அதிகமாக நேசிக்கும் அக்குழந்தை, அவள் தரும் லட்டுக்காக ஆண்ட்டியே தனக்குப் பிடிக்கும் என்று பொய் சொல்லும். இதுதான் குழந்தைகளின் இயல்பும் கூட. தனக்குப் பிடித்த ஒன்றை அடைவதற்காக பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் பொய் சொல்லுவர். (இந்தப் பொய்யையும் அவர்கள் நம்மிடமிருந்தே கற்றுக் கொள்கின்றனர் என்பது வேறு விஷயம்) இதைச் சொல்லத்தான் அந்த முதல் காட்சி. பின்பு பார்வையாளன் வேறு ஒரு இடத்தில் இந்த நிகழ்வை, இதன்பின் உள்ள பொருளை உணர்ந்து தொடர்பு படுத்திக் கொள்வான்.

இப்படி தனக்குக் கிடைக்க வேண்டிய அந்தச் சிறு லட்டுக்காக பொய் சொன்னாலும் கூட அந்தக் குழந்தையின் வெகுளித்தன்மை அதற்கடுத்த காட்சியில் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கும். அங்கிள் தன் வீட்டிற்கு வந்து மீண்டும் மோதிரத்தை எடுத்தது யார் என்று கேட்கும் போது, தன் தாயைக் காப்பாற்றும் பொருட்டு உண்மையைச் சொல்லிவிட்டிருந்தால் அது குழந்தையல்ல. ஏனெனில் குழந்தைகளுக்கு தான் சொல்லும் பொய்யினால் கிடைக்கும் லட்டு மட்டுமே தெரியும் அதன் பின் விளைவுகள் தெரியாது. அதுதான் வெகுளித்தன்மையின் வெளிப்பாடு. அதுதான் குழந்தை.

தொலைந்து போன அந்த மோதிரம் சிறுகதையில் ஒரு தங்க மோதிரம் என்ற அளவிலேயே சொல்லப் பட்டிருக்கும். அதையே குறும்படத்தில் கணவன் தனக்கு முதன் முதலாக வாங்கித் தந்த மோதிரமாகச் சொல்லி அதன் பொருட்டு காட்டப்படும் அக்கறையின் மீதான அழுத்தம் கூட்டப் பட்டிருக்கும்.

இதுபோல பார்வையாளனுக்கு அதிகம் தொந்தரவு கொடுக்காமல் தர்க்க ரீதியாக காட்சிகளை அமைப்பதில் பாலுமகேந்திரா கெட்டிக்காரர். நாராயணனாக வரும் நரேன் வெளியூர் சென்று திரும்பும் இடைவெளியில் தான் பக்கத்து வீட்டுக் காரர்கள் வீட்டைக் காலி செய்வதாக வரும். ஏனென்றால், அவருடைய கதாப்பாத்திரத் தன்மையின் படி (திரும்பக் கொடுக்கும் பணத்தைக்கூட பெற்றுக் கொள்ளாதவர்) அவர்கள் வீட்டினைக் காலி செய்யும் பொழுது அவர் அங்கேயே இருந்தால் அவர்களை சமாதானப்படுத்தி இருக்க வைத்துவிடுவார். அது கதையின் போக்கையே மாற்றிவிடும். எனவே இந்த இடத்தில் வீட்டைக் காலி செய்யும் நேரத்தில் அவர் வெளியூர் செல்ல வேண்டும். இதுவரையில் சிறுகதை அப்படியே இருக்கும். ஆனால் அதில் அவர் வெளியூர் செல்லும் நிகழ்வு வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருப்பதாக தோற்றமளிக்கும். இதை குறும்படத்தில் ஒரு இடத்தில் வரும் சின்ன வசனத்தின் மூலம், அக்காட்சிக்கு முன்னரே அவர் வெளியூர் செல்வார் என்பதை பார்வையாளனுக்கு இயக்குனர் உணர்த்தியிருப்பார். எனவே இங்கு ஊருக்குச் செல்லும் நிகழ்வு திட்டமிட்ட ஒன்றாகவும், அவர்கள் வீட்டைக் காலி செய்யும் நிகழ்வு தற்செயலாக அமைவது போலவும் தோன்றும்.

இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களில் சிறுகதை, ஒரு குறும்படமாக மெருகேற்றப் பட்டிருக்கும்.

மேலும் இந்தப் படத்தில், வெளிப்படையாக சொல்லிய விஷயங்களை விட, பார்வையாளனின் கற்பனைக்கு விட்டுவிட்ட பகுதிகள் ஏராளம். இந்தச் சிறுகதையில் மேலும் ஒரு அற்புதமான கிளைக்கதையும் இருக்கிறது. கடைசிவரை உண்மை தெரியாமலேயே காயப்பட்டுவிட்ட அந்தத் தம்பதிகளின் நிலை என்ன? இந்த நிகழ்வு அந்தத் தம்பதிகளுக்கிடையே ஏற்படுத்தியது வெறும் சிறு ஊடல் மட்டும் தானா? அதன் விளைவுகள் எங்கு கொண்டு சேர்க்கும்? இந்தக் கேள்விக் கெல்லாம் பதில் கிடைக்கும் இடத்தில் அந்தக் கிளைக்கதை தொடங்கிவிடுகிறது. ஒரு நல்ல கதை தனக்குள் பல கிளைக் கதைகளை உள்ளடக்குகின்றது. ஒரு அற்புதமான கதை முடியும் இடத்தில் தான் உண்மையில் ஆரம்பிக்கின்றது. அது சில சமயங்களில் வாசகனைத் தூங்கவிடாமல் செய்கின்றது.

பெண்களின் மனவோட்டங்களை ஆழமாக அவதானித்து அதைச் சின்னச் சின்ன விசயங்களில் அழகாகக் காட்டியிருப்பார் பாலுமகேந்திரா. பக்கத்து வீட்டு பெண்ணான வேணு அர்விந்தின் மனைவி மேல் மெளனிகா காட்டும் மென்மையான விரோதமும், தான் எதுவும் செய்யாமல் தன் மீது விழுந்த வீண்பழியால் (அர்விந்தின் மனைவியாக வரும்) அந்தப் பெண், தன் கணவனான வேணுஅர்விந்த் மேல் காட்டும் கோபமும், அழுகையும், மோதிரத்திற்காக பணம் கொடுக்க வந்த வேணு அர்விந்த், நரேனுடன் பேசும் காட்சியில் கதவின்பின் நின்று மெளனிகா கவனிப்பதும், பக்கத்து வீட்டில் மோதிரம் குறித்து விசாரிக்கப் போன கணவனின் வருகைக்காக வீட்டு வாசலிலேயே காத்திருக்கும் மெளனிகாவின் ஆர்வமும், என்று ஒவ்வொரு காட்சியிலும் நம் வீட்டுப் பெண்களை கண் முன் நிறுத்துகிறார் இயக்குனர்.

இதுவரை நான் பார்த்த பாலு மகேந்திராவின் ஆறு குறும்படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது இந்தப் படம். பின்னால் ஒலிக்கும் அந்த பட்சிகளின் ஒலிக்களுக்கு மேல் இந்தக் குறும்படத்தில் பின்னனி இசை ஒன்றும் செய்யவியலாது பல இடங்களில் மெளனம் காக்கிறது. அந்த மெளனமே இங்கு இசையாகி மிளிர்கின்றது. இத்தனை உணர்ச்சிக் குவியலான ஒரு குறும்படத்தை ஆரம்பித்த வினாடியிலிருந்து அத்தனை சுவாரஷ்யமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலுமகேந்திரா.

இக்குறும்படத்தில் என்னளவில் தேவையற்றது என்று தோன்றியது அந்தக் கடைசிக் காட்சியில் ஏன் குழந்தை பொய் சொன்னது என்பதை நரேன் விளக்கும் வசனம் தான். மெளனிகா குழந்தையிடம் விசாரிக்கும் காட்சியின் போதே பார்வையாளன் புரிந்து கொள்வான். எனவே அந்த முதல் காட்சியின் தேவையற்ற நரேஷன் போன்று அமைந்து விட்டது அந்தக் கடைசிக் காட்சி. அந்த மோதிரம் கிடைத்துவிட்டது என்று குற்ற உணர்வில் கலங்கியபடி, மெளனிகா கூறுவதோடு முடித்திருந்தால் இன்னும் அதியற்புதமாக இருந்திருக்கும். அவள் அதை மறந்து சாமிப் படத்தின் பின்னால் வைத்திருந்தாள் என்ற விளக்கம் கூட இங்கு தேவையற்றதாகவே தோன்றுகின்றது. பார்வையாளனின் யூகத்திற்கே விட்டிருக்கலாம்.

வீட்டு முற்றத்தில் ஒரு ஈசிச் சேர் போட்டு அமர்ந்து கொண்டு, அடுத்த வீட்டு நிகழ்வுகளை பார்ப்பது போன்றிருக்கிறது இக்குறும்படம். நடிப்பிலும், காட்சிப் படுத்துதலிலும் அத்தனை தத்துருபம். முதல் காட்சியில் குழந்தையுடன் குயிலி(மெளனிகா) உரையாடும் அந்நிகழ்வு ஒரு கவிதை என்றேனல்லவா. எந்தவித எதிர்பார்ப்புமற்ற பரிசுத்தமான அன்புப் பரிமாற்றம் அக்காட்சி. ஆனால் அடுத்த காட்சியில் அக்குழந்தை மோதிரத்தை எடுத்ததா என்பதை அறிந்து கொள்வதற்காக அதே குயிலி உரையாடும் அந்த நிகழ்வு போலித்தனமான அன்பின் உச்சம். இந்த இரு காட்சிகளிலும் தன்னை அற்புதமாய் வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பார் குயிலியாக வரும் மெளினிகா. மெளனிகாவின் கணவராக வரும் நரேனின் (சுந்தரபாண்டியனில் அப்பாவாக வருபவர்) நடிப்பில்தான் எத்தனை யதார்த்தம். பக்கத்து வீட்டில் மோதிரம் கேட்கப் போகும் போது அவர் காட்டும் தயக்கமே அவர் பதமறிய உதவும் பருக்கை. வேணு அர்விந்தும், அவர் மனைவியாக வரும் பெண்ணும் நரேனுக்கோ, மெளனிகாவிற்கோ சளைத்தவர்கள் அல்லர். தன் பெண்தான் மோதிரத்தை எடுத்தாள் என்பதை நரேன் கூறவும் வேணு அர்விந்த் காட்டும் முகபாவம் அதியற்புதம். காயம் பட்ட உணர்வை வெகு இயல்பாக வெளிக் காட்டியிருப்பார் அவரும் அவரின் மனைவியாக வரும் பெண்ணும். அந்தக் குழந்தையைப் பற்றி என்ன சொல்ல? அது நடிக்கவேயில்லை. அது பேசும் போது பாலுமகேந்திரா எங்கோ ஒளிந்து கொண்டு படம் பிடித்து இருப்பாராய் இருக்கும் !

இப்படி ஐந்தே ஐந்து கதாப்பாத்திரங்கள், இரண்டே வீடுகள், ஒரே ஒரு சிறுகதை மற்றும் அவருக்கேயான ஒர் சின்ன டீம் இதனை வைத்துக் கொண்டு இன்று திரையிட்டால் கூட உலக குறும்பட நிகழ்வுகளில் விருதுகளைக் குவிக்கும்படியான ஒரு குறும்படத்தை பாலுமகேந்திராவைத் தவிர யாரால் இயக்கிவிட முடியும்?

பொதுவாக ஒரு பேச்சு இப்போது அடிக்கடி நான் கேள்விப் படுவதுண்டு. குறும்படம் இயக்கியவர்கள் திரைப்படம் இயக்குவது சிரமம் என்று. ஆனால் இந்தப் பேச்சுக்களை முறியடித்து சிலர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். என்னைப் பொறுத்தவரையில் இத்தனை அழுத்தமான கதை கிடைத்தபின் அதைச் சுருக்கி இருபது நிமிடத்தில் அடக்குவது என்பதே ஆகக் கடினமான வேலை. அந்த இருபது நிமிடத்திற்குள் சொல்ல வந்த அத்தனையையும் சொல்ல வேண்டும். அதுவும் ஏற்கனவே மக்கள் மனதில் வெற்றி பெற்ற கதையை எடுத்துக் கொள்ளும் போது பொறுப்பு இன்னும் அதிகமாகின்றது. தன் மீது வைக்கப்பட்ட அத்தனை பொறுப்புக்களையும் அனாசயமாய் கடந்து வந்து வெற்றி கொண்டிருக்கிறார் பாலு மகேந்திரா.

இது பாலுமகேந்திரா என்னும் ஆலவிருட்சம் உதிர்த்த ஒற்றை இலை மட்டுமே. அவரைப் பற்றிப் படர்ந்த கொடிகளும், அவரின் நிழலில் முளைத்தச் செடிகளுமே இன்றைய தமிழ் சினிமாவிற்கு ஆக்சிஜன் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் பாலு மகேந்திரா ஒரு தனிமரக் காடு!

* * *

கட்டுரைக்கு உதவியவை:

1. "Save the Cat" by Blake Synder
2. bavachelladurai.blogspot.in
3. http://satamilselvan.blogspot.in
4. http://www.sirukathaigal.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0
%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/

5. பாலுமகேந்திரா கதை நேரம் கதைகள், திரைக்கதைகள் - வம்சி பதிப்பகம்.
6. wikipedia

இக்குறும்படத்தைப் பார்க்க: http://www.youtube.com/watch?v=JWKFktfLisc

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </