இதழ்: 18     ஆடி (15 - 30) (July 15 - 30), 2014
   
 
  உள்ளடக்கம்
 
தியடோர் பாஸ்கரனுடன் - யமுனா ராஜேந்திரன் உரையாடல் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ் ஆனந்தன் - 5 - தினேஷ் குமார்
--------------------------------
தமிழில் சினிமா சஞ்சிகைகள் - அறந்தை மணியன்
--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 4 - பி.கே.நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 4 - நிமாய் கோஷ் - சுனிபா பாசு
--------------------------------
கே.வி. சுப்பண்ணா உடன் ஒரு நேர்காணல் - சந்திப்பு: ஞாநி
--------------------------------
நூல் விமர்சனம் - முரண்படும் படிமங்கள் - கே.எஸ்.சங்கர்
--------------------------------
திரைப்படம் எடுப்பது: சில குறிப்புகள் - அகிரா குரோசவா
 
   
   

 

 

இந்திய சினிமா வரலாறு – 4

- பி.கே.நாயர் :: தமிழில் : அறந்தை மணியன் : தட்டச்சு உதவி: தினேஷ் குமார்


இந்திய சினிமா – ஓர் உற்று நோக்கல்
புராணப்படங்கள் ஏன்? – பி.கே.நாயர்


ஒரு நெடு நாளையக் கனவு

மேநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட “கிருஸ்துவின் வாழ்க்கை “ என்ற திரைப்படத்தைப் பார்த்த நாளிலிருந்தே, நமது புராணங்களில் காணப்படும் கிருஷ்ண பகவானின் கதை பால்கேயின் பிரியமான ஒன்றாக இருந்து வந்தது. அப்போது முதலே பகவான் கிருஷ்ணனின் கதையை, நவீன கலைவடிவமான திரைப்படத்தின் மூலம் தயாரித்தளிக்க வேண்டுமென்ற எண்ணம் அவரை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டது.

அந்தப் பிடிவாதத்தின் விளைவே அவரது “ஸ்ரீகிருஷ்ண ஜன்மா” (1918) மற்றும் அதன் தொடர்ச்சியான “காவிய மார்த்தனம் (1919)” என்ற இருபடங்களும் !

அந்த இரு படங்களைப் பற்றி மிகவும் விரிவாக ஆய்ந்து பார்ப்பதன் முலம் நாம் பால்கேயின் திரைப்பணி மற்றும் இந்தியத் திரைப்படங்களின் பரிணாம வளர்ச்சிக்கு அப்படங்களின் முக்கியத்துவம் எவ்வளவு தொடர்பு வாய்ந்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

”ஸ்ரீகிருஷ்ண ஜன்மா” படத்தின் பிறகாட்சிகள் கொண்ட பிரதி, ஆவணக்காப்பகம் தொடங்கப்படுவதற்கு முன்பே அழிந்து விட்டது. ஆகவே கிடைத்த அளவில்தான் அவ்விரண்டு பிரதிகளையும் கண்டு நாம் ஆய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. ஆயினும் கிடைத்த அளவிலும் கூட அவை மூலம் நாம் எவ்வளவோ தெரிந்து கொள்ள முடியும்.

“ஸ்ரீகிருஷ்ண ஜன்மா” (1918)

இப்படத்தின் தலைப்புக் காட்சியில், “கிழக்கத்திய முன்னோடி திரைக்கலைஞன் பால்கே” என்ற வரி காணப்படுகிறது.

பால்கேயின் ‘முன்னோடியாகத் திகழ வேண்டுமென்ற’ ஆர்வத்திற்கும், மற்றெவருக்கும் தமது அந்த “பெருமைப் படக்கூடிய ஸ்தானத்தை” அவர் விட்டுக்கொடுக்க விருப்பப்படாத மனப்பாங்குக்கும் , இந்த அறிவிப்பு ஓர் அந்தக்காட்சியாக விளங்குகிறது.

மற்றொரு அறிவிப்பு, படத்தை “இந்துஸ்தான் பிலிம் கம்பெனி வழங்கும் மாபெரும் தயாரிப்பு” என்று சொல்லுகிறது.

பின், படத்தலைப்பு “ஸ்ரீ கிருஷ்ண ஜன்மா” என்று ஆங்கிலத்தில் காட்டப்படுகிறது. கூடவே சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் நான்கும் வரைபடங்களாக வருகின்றன. பட்டையான தலைப்பு முதலில் வெறுமையாக இருக்கிறது. மெள்ள மெள்ள (Stop motion Photography) மூலம் அந்த வெற்றிடம் மலர்களால் நிரப்பப்படுகிறது.

திரையின் மையப்பகுதியில் சுழலும் சக்கரம் காட்டப்படுகிறது. பின் அது ஒரு வளையம் போன்ற உருவத்தைப் பெறுகிறது. அந்த வளையத்தின் மையப்பகுதியில் சிரித்த வண்ணம் குழந்தை கிருஷ்ணனின் முகம் மெள்ள மெள்ளத் தோன்றுகிறது. அக்காலகட்டத்தில் இது ஓர் அற்புத மாயம்! அந்த மாயத்தோற்றத்தை ஒரு ‘முன்னுரை’ போல வழங்குவதன் மூலம், அவரது பார்வையாளர்களுக்கு, தான் எவ்வாறு ஒரு மாயையை, ஒரு அற்புதத் தோற்றத்தை அவர்களது கண்முன்னாலேயே ஏற்படுத்திக் காட்ட முடியும் என்பதைப் பால்கே அழகாக விளக்குகிறார்.

தலைப்பு எழுத்துக்கள் தோன்றி முடிந்ததும், படம் விரிகிறது. ஒரு நதி வலமிருந்து இடமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காமிராவுக்கும் அந்த நதிக்கும் இடையில், காமிராவுக்கு முதுகுகளைக் காட்டியவாறு பல பக்தகோடிகள், தங்கள் கைகளை உயர்த்தி இறைவனிடம், வருத்தத்துடன் வேண்டி நிற்கிறார்கள்.

அப்போது மீண்டும் ஒரு தலைப்பு – அட்டை காட்டப்படுகிறது. அதில்..... “உண்மையாகவும், முழு மனத்துடனும் வேண்டுவோர்க்கு எல்லாவித மனித – முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையிலும், எல்லாம் வல்ல இறைவன், என்றும் வெகு தொலைவில் இருப்பதில்லை....” – என்ற சொற்றடர் காணப்படுகிறது ! பாதிக்கப்பட்ட தோற்றத்துடன் காணப்படும் பக்தகோடிகளின் தலைகள், திரையின் அடிப்பாகத்தில் வரிசையாகக் காணப்படுவது அவர்களைப் பார்வையாளர்களின் பிரதிபலிப்பாகவே தோன்றச் செய்கிறது.

திரையின் மேல் மட்டத்தில், வானத்தில் திரண்டிருக்கும் கார்மேகங்களையும், நடுப்பகுதி, ஓடும் நதியையும், அடிப் (கீழ்ப்) பகுதியில் கைகளை உயர்த்தி நிற்கும் பக்தகோடிகளின் தலைகளையும் சற்று நேரம் காணமுடிகிறது. அப்போது மற்றொரு அற்புத மாயத்தையும் பால்கே தோற்றுவிக்கிறார். திரையின் நடுப்பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் நதியினுள்ளேயிருந்து ஆதிசேஷனின் மீது பள்ளிகொண்டிருக்கும் விஷ்ணுவின் தோற்றம் வெளிப்படுகிறது. விஷ்ணு பாம்புப் படுக்கையில் சாய்ந்தவாறிருக்க, அவரது காலடியில் லட்சுமி தேவி அமர்ந்திருக்கிறாள். அவரது ‘நாபிக்கமலத்தில்’ பிரம்மா அமர்ந்திருக்கிறார். ஒரு சூர்யகாந்தி மலர் மற்றொரு காலடியில் காணப்படுகிறது. விஷ்ணு தமது வலது கையில் சுதர்சன சக்கரத்தை ஏந்தியிருக்கிறார்.

பிரம்மாவுடன் ஏதோ பேசி ஆலோசனை கலக்கும் விஷ்ணு, கூடியிருக்கும் பக்தர்களின் குறைகளைக் களையும் நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளிக்கிறார்.

உடனே விஷ்ணுவின் தோற்றம் மறைய, அதே இடத்தில் (திரையின் மையப்பகுதியில்) ‘காலியன் ‘ என்ற பாம்பின் தலையில் காலூன்றி நின்று குழலூதிக்கொண்டிருக்கும் குழந்தை கிருஷ்ணனின் தோற்றம் எழுகிறது.

காமிரா 180 டிகிரி சுழன்று திரும்பி பக்த கோடிகளின் முன்புறத்தோற்றத்தை, கிருஷ்ணனின் ‘பார்வை’யில் காட்டுகிறது.

பக்தர்களின் தோற்றத்திலிருந்து, அவர்கள் அனைவரும் ஆண்களென்பதும், அவர்களில் பலர் கருத்த மற்றும் வெளுத்த தாடிகளுடனும், தலைமுடிகளுடனும் , சிலர் மழுக்க சவரம் செய்யப்பட்ட முகங்களுடனும், வேறுசிலர் இடுப்புக்கு மேல் போர்த்திய ஆடைகளுடனும், வேறு சிலர் வெற்றுடம்புடனும் காணப்படுவது நம்மால் அறிய முடிகிறது.

குழந்தை – கிருஷ்ணன் ‘காலியன்’ என்ற பாம்பின் தலைமீது ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு குழலை ஊதியவாறே நடக்கிறார். பிறகு பாம்பினுடைய அகலமான தலையின் முன் பகுதிக்கு வந்து ஒரு காலைத்தொங்கவிட்டு அதன் மீது மற்றொரு காலை மடித்தவாறு அமர்ந்து குழலை படுக்கை – வசமாக வைத்துப்பிடித்தவாறு ஊதுகிறார்.

முதலில் காமிராவை நேராகப்பார்த்து ஊதுகிறார். பிறகு தனது பார்வையை இடது ஓரத்திற்குத் திருப்புகிறார்; பிறகு மீண்டும் நேராகப் பார்க்கிறார். குழலூதுவதை நிறுத்துகிறார். அதை வாயிலிருந்து எடுத்துக் கீழே கொண்டுவருகிறார்.

காமிரா, கிருஷ்ணனுக்குப் பின்னால் போகிறது. கிருஷ்ணனின் பார்வையில் பக்த கோடிகள், (கிருஷ்ணன் காலியனை அடக்கி அதன் மீது நின்றும் அமர்ந்தும் குழலூதிய) சாதனையைப் பாராட்டும் முறையில் தங்கள் கைகளை அசைக்கிறார்கள்.

இவ்வாறு காமிரா முன்னும் பின்னுமாக நகர்ந்து கிருஷ்ணனையும், பக்த கோடிகளையும் மாறி மாறிக்காட்டுகிறது. அவ்வப்போது கிருஷ்ணனை நெருங்கி அவர் தமது குழலை உதட்டருகே கொண்டு செல்வதையும், பின்சுழன்று திரும்பி மக்கள் கிருஷ்ணனைப் பாராட்டும் வகையில் கைகளை அசைப்பதையும் காட்டுகிறது.

மெள்ள மெள்ள குழந்தை – கிருஷ்ணனின் உருவம் மறைய அவ்விடத்தே மீண்டும் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவின் தோற்றம் ! விஷ்ணு புன்னகை பூத்த முகத்துடன் பக்த கோடிகளை நோக்கி தனது கையை ஆசீர்வாதம் செய்யும் வகையில் அசைக்கிறார். பிறகு லட்சுமியைத் திரும்பிப் பார்த்த வண்ணம் தம் வலது கையில் சுதர்சன சக்கரத்தைச் சுழற்றுகிறார்.

விஷ்ணுவின் உருவம் அந்தரத்தில் வலமிருந்து இடமாக நகர்ந்து மெள்ள நகர்கிறது !

தெய்வீகக் கிருஷ்ணன்:
அடுத்த காட்சி............ யசோதையின் இல்லம்........ தொட்டிலில் குழந்தை – கிருஷ்ணன் படுத்திருக்க, யசோதை தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக்கிறாள். யசோதை குத்துக் காலிட்டு அமர்ந்திருக்க அவளது கையும் காலும் தெரிகின்றன.

யசோதை மூலமாகக் காமிரா மற்றொரு அற்புதத் தோற்றத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

யசோதை தனது மகன் கிருஷ்ணனை, வளர்ந்து வாலிபனான, ‘கோபாலனாக’ கற்பனை செய்கிறாள்.

அவன் குழலூத, பின்னால் ஒரு பசு............ தொட்டில் மறைய அந்த இடத்தில் ஒரு மரப்பலகை. அதன் மீது மகராஷ்டிரப் பெண்கள் பாணியில் சேலையணிந்த (!) யசோதா அமர்ந்து தன் முன்னால் இருக்கும் ஒரு கிருஷ்ணன் சிலையைப் பார்க்கிறாள். கால்களைப் பின்னிக் கொண்டு கிருஷ்ணன் குழலூதிக் கொண்டே ஒரு பசுவின் மீது சாய்ந்திருப்பதான தோற்றமுள்ள சிலை அது!

பின்னாளில், கிருஷ்ணனின் பல உருவங்கள், துஷ்டன் கம்சனைச் சூழ்ந்து நின்று அவனுயிரைக் குடிக்க முயலுவதான காட்சியின் முன்னோட்டமாக இந்தக் காட்சி தோன்றுகிறது.!

சைத்தானுக்கு ஒரு முன்னெச்சிரிக்கை

உடன் வரும் அடுத்த காட்சியில் கொடுங்கோல் அரசன் கம்சனின் அரண்மனை... திரையின் வலப்பக்கத்திலிருந்து மையத்திற்கு வருகிறான். எதிர்த்திசையிலிருந்து எழும் ஓசைகளைச் செவி மடுக்க அவன் முயல்வது போலத் தெரிகிறது. திரையின் இடது மூலைக்குப் போகிறான். தனது விரிந்து கிடக்கும் தலைமுடியை தனது இரு கைகளாலும் பின் பக்கமாகத் தள்ளி விட்டுக் கொண்டே அமருகிறான்.

தனது தலை கழுத்திலிருந்து துண்டிக்கப்படுவது போலவும் மேல்நோக்கி (திரையையும் தாண்டி) மறைந்து விடுவது போலவும் அவனது கற்பனையில் எதனாலோ தோன்றுகிறது. துண்டிக்கப்பட்ட தலைக்கும் கம்சனின் கழுத்துக்கும் இடையே கரும் புகைப்படலம் சூழுகிறது. மேலே போன தலை மீண்டும் கீழிறங்கி கம்சனின் கழுத்துடன் வந்து ஒட்டிக்கொள்கிறது. ‘பின் நோக்கிய அசைவுகள் மூலம் கரும்புகை மறைந்து விடுகிறது. (முதலில் இப்படம் வெளியானபோது, அந்தக் கரும்புகையைக் குறிப்பிட, சிவப்பு வண்ணம் பிலிமில் பூசப்பட்டது என்று தெரிய வந்துள்ளது) கம்சன் தனது இருக்கையிலிருந்து ஓரளவு எழுந்து நின்று, கழுத்து நீண்டதன் அளவை இருகைகளாலும் அளப்பதுபோலவும், கழுத்து சிதையாமல் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்வது போலவும் அசைக்கிறான். பிறகு முழுவதுமாக எழுந்து நின்று இருகைகளையும் உயரே தூக்கி உதவிக்கு ஆட்களைக் கூவி அழைக்கிறான்.

கம்சனின் இரு மனைவிகளும், திரையின் இருபக்கங்களிலிருந்தும் கம்சனை நோக்கி வருகிறார்கள். தான் கண்ட கனவை கம்சன் அவர்களிடம் கை ஜாடைகள் மூலம் விவரிக்கிறான். அவனுடைய விசித்திரமான நடவடிக்கையின் காரணத்தை அறிய முடியாமல் அவர்கள் இருவரும் மேல் நோக்கிப் பார்க்கிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு தலைப்பு – அட்டை காட்டப்படுகிறது. அதில்......... “கொடுமைக்காரன் கம்சனின் பார்வையில் ஸ்ரீ கிருஷ்ணன்”....... என்ற சொற்றடர் காணப்படுகிறது.

சலனம் ஏப்ரல் – மே 1992

- தொடரும் -

சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். அதன்படி, சலனம் இதழில் தொடராக வெளிவந்த, பி.கே. நாயர் அவர்களின் கட்டுரைகளை பேசாமொழி இதழில் மறுபிரசுரம் செய்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </