வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 

ஷோபா சக்தி

 


-------------------------------------------------

 

 
     
     
     
     
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கதை சொல்லி

 

 
கதை சொல்லி - ஷோபா சக்தி (Shoba Sakthi)

 

 

லிவி

 


ஒரு புலம் பெயர்ந்தவனின் வாழ்வு இலக்கற்றுத் தொடங்கும். இருத்தலின் மீதான கேள்விகள் அடுக்கப்ப‌ட தன் தேடுதலின் திசை நோக்கி செல்லத் தொடங்குவான். வாழ்வின் மீதான தீராத தாகம் அவனை நகர்த்திக் கொண்டே இருக்கும். அவனிடம் நமக்குச் சொல்ல எண்ணற்ற கதைகள் இருக்கும். நாம் பார்த்திராத வாழ்வை, கண்டிராத மனிதர்களை, அறிந்திராத மன நிலையை, துயரத்தை, நேசத்தை, போலிக் கலாச்சாரத்தை அவன் சொல்லிக் கொண்டே செல்வான். தன் பால்ய காலத்து நினைவுகள், அன்பான  உறவுகளை பிரிதலின் வலி, வேற்று தேசத்தில் ஒரு வேற்று கிரக‌ வாசியைப் போல் அவனிடம் கேட்கப்படும் மட்டமான கேள்விகள், தன் அக திணைக்குள் சற்றும்  அடங்காத புறவெளி,  அவன் கோராத இரக்கத்தை பிறர் அன்பின் பெயரால் காட்டுதல் இத்யாதிகளென அவன் மனம் சஞ்சலங்களால் நிர‌ம்பி இருக்கும். ஒரு கலைஞனின் மன நிலை அவற்றைத் தீவிரமாக எதிர்கொள்ளும். அவன் வாழ்வை முழுமையாக வாழத் தொடங்குவான். அவனிடம் இருந்தே மிகச் சிறந்த இலக்கியம் அவன் மொழிக்குச் சாத்தியமாகும். அப்படியொரு தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர் ஷோபா சக்தி.

தமிழ்ச் சூழலில் தன் அரசியல் நிலைப்பாடுகளால் மிகவும் வெறுக்கப்படும் மனிதராகவே இருக்கிறார் ஷோபாசக்தி.  ஷோபா சக்தியின  அரசியல் தவிர்த்து அவரின் படைப்பின் வெளி வேறு எந்த தமிழின் சம கால எழுத்தாளராலும்  இணை செய்ய இயலாத‌து. புலம் பெயர்ந்தவனின் இலக்கியம் தமிழில் எழுதப்படும் வேற்று மொழி இலக்கியம் போல் அல்லாமல் அங்கு சஞ்சரிக்கும் தமிழ் மனமாக‌வே வெளிப்படுகிறது. அ. முத்துலிங்கம் அங்கதம் என்றால் ஷோபாசக்தி  ரௌத்திரம். இந்தியத் தமிழ் மனம் ஷோபா சக்தி கதைகளில் வரும் வழக்காடல்களை விளங்கிக் கொள்ள இயலாமல் போகும் வாய்ப்புண்டு. " எம்.ஜி. ஆர் கொலை வழக்கு" சிறுகதையின் இறுதியல்  வரும் வரிகளில் " எம். ஜி. ஆரும் புண்டையும்" என்னும்  வரி தமிழகத்தில் பாவனையில் இல்லாதவை (திட்டும் நேரங்களைத் தவிர்த்து). ஆனால் ஈழத்தில் மிக சரளமாக ஒரு வார்த்தையோடு சேர்த்தப்படும் வார்த்தை அது.

தமிழில் இன்று எழுதப்படும் பெரும்பான்மையான புனைகதைகள் இல்லாத ஒரு உலகத்தை இல்லாத சொல்லாடல்களால் கட்டமைத்து மாய யதார்த்தவாதத்  தொணியோடு சொல்வதாக மட்டுமே இருக்கிறது. உதாரணமாக 'அந்த நகரத்தில் எல்லோருமே தலை இல்லாமல் இருந்தார்கள்', 'அவன் வாயை திறக்க தவளை வெளியேறியது' ,'த‌மிழ் பெயர் கொண்ட மாந்தர்கள் உலாவும்  சிறிதும் சம்பந்தம் இல்லாத இட வெளி', அல்லது 'காலத்திற்கும் பின்னே போய் வேட்டையாடப் புறப்பட்ட வெள்ளைக்காரனும்  காட்டில் வ‌சிக்கும் ஆதிவாசிகளுமாகவே' இருக்கிறது. ஆனால் ஷோபா சக்தியின் புனைவு  இயல்பாக நடந்து கொண்டிருக்கும் வாழ்வின் சம்பவங்களினூடே புனைவு கதைக்குள் வலுச் சேர்ப்பவை. அவரின் "குண்டு டயானா"சிறுகதை புனைவென்றாலும் அக்கதையை  வாசகனால் எளிதில் மறந்து கடந்துவிட இயலாது. ஷோபா சக்தியின் 'தமிழ்' சிறுகதை பண்பாடென்றும் கலாச்சாரமென்றும் மேடைப் பேச்சாளர்கள் சொல்லிக் கொண்டு இருக்கும் போலி வியாக்கியானங்களை உடைத்தெறியும். ஈழ‌த்தில் ஒரு விபச்சாரிக்கு கொடுக்கப் படும் தண்டனையில் தொடங்கி பல்வேறு நாடுகளில் இருக்கும் விபச்சாரிகளுடனான அனுபவங்களென்று சுயசரித தன்மையோடு நீண்டு தமிழ் எழுத்துக்களை விபச்சாரி வீட்டில் கண்டு பதற்றமாக அழிப்பதுடன் கதை முடியும்.

பேருந்தில் மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்ற‌ நெரிச‌ல்க‌ளுக்கு ந‌டுவில் சிம்மாச‌ன‌மாக‌ ஒரு இருக்கை கிடைக்க‌ வாழ்வின் இனிமையையும் ப‌ர‌ம்பொருளின் க‌ருணையையும் விய‌ந்து கொண்டு ஷோபா ச‌க்தியின் க‌தை சொல்லிக்காக‌ சென்று கொண்டிருந்தேன்.ஷோபா ச‌க்தியின் சில‌ அர‌சிய‌ல் கருத்துக்க‌ளோடு ஒவ்வாமை இருப்பினும் அவ‌ரின் த‌னித்துவ‌மான‌ ப‌டைப்புல‌க‌ம் அவ‌ரை நோக்கி ஈர்க்க‌ச் செய்த‌து. இன்று தன் த‌லையைச் சுற்றி ஒளி வ‌ட்ட‌மும் முக‌த்தில் தேஜ‌ஸையும் உரையாடுகையில் மேத‌மையை காட்சிப் படுத்தும் எழுத்தாளர்கள் ம‌த்தியில் மிக‌ இய‌ல்பான‌ ம‌னித‌ராக தெரிந்தார் ஷோபா ச‌க்தி. ஷோபா சக்தி மிக‌ ந‌ன்கு அறிமுக‌மான‌வரைப் போல் ப‌ழ‌கினார். அறிமுக‌ங்க‌ளோடு த‌ரையில் அம‌ர்ந்து சாவகாசமாக க‌தைக்க‌த் தொட‌ங்கினோம். யுத்த‌ம், ஈழ‌ அர‌சிய‌ல், இல‌க்கிய‌மென‌ க‌தைத்துக் கொண்டே இருந்தோம். த‌லித் அர‌சிய‌லிலும் மிக‌ அதிக‌ ஈடுபாடுடைய‌வ‌ர் ஷோபாச‌க்தி. ஈழ‌ அர‌சிய‌லையும் யுத்த‌த்தையும் த‌ன் ஞாப‌க‌ங்க‌ள் தொட‌ங்கி எல்லாவ‌ற்றையும் சொல்லிக் கொண்டுவ‌ந்தார். "ம்" சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்த‌து ஷோபா ச‌க்தியின் "ம்" நாவ‌லை  எனக்குள் ஞாப‌க‌ப்படுத்திய‌து.

ஷோபா சக்தி க‌தைக்கையில் அடிக்கடி புகைப் பிடிக்கும் ப‌ழ‌க்க‌ம் உடையவர். க‌ண்க‌ளை மேற் சொருவி ப‌ட‌ப‌ட‌ப்பாக‌ இருப்ப‌து போல‌ யோசிப்பார். துவ‌க்கு பிடித்த‌ கையென்று பேனா பிடித்த‌தென்ற‌ ச‌ந்தேக‌ம் நெடு நாட்க‌ளாக‌ இருந்த‌து.‌ ஈழ‌த்தில் இருக்கும் வ‌ரை அவ‌ர் எதையும் எழுதிய‌தில்லை. சிறுவயதில் நாடகம் நடித்தது இயக்கத்திற்காக நாடகம் போட்டது மட்டுமே அவருடைய ஈழ காலத்தின் கலை இலக்கியச் செயல்பாடுகள். ஃப்ரான்சிற்கு த‌ப்பிச் சென்ற‌ பிற‌கு ச‌ர்வ‌தேச‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியில் சேர்ந்திருக்கிறார். அத‌ன் பின் தொடர்‌ந்த‌ வாசிப்பே அவ‌ரை இல‌க்கிய‌வாதி ஆக்கியிருக்கிற‌து. ர‌ஷ்ய‌ இல‌க்கிய‌ங்க‌ள் மீது அவ‌ருக்கு ஈடுபாடு அதிகம்.ஷோபா ச‌க்தி த‌ன் பேச்சுக்கிடையில் " நான் கம்போடியா க்யூபா போன்ற எல்லா நாட்டிற்கும் சென்றிருக்கிறேன். அதிகம் எல்லா நாட்டின் சிறையிலும் இருந்திருக்கிறேன்" என்றார். ஒரு எழுத்தாள‌னுக்கு இதை விட‌ வேறு என்ன‌ கொடுப்பினை வேண்டும்.

ஷோபா சக்தியின் எழுத்து முறை தமிழில் இதுவரை அறிந்திராதது. அத‌ன் ஆச்ச‌ரிய‌ம் அவ‌ர் பிற‌ மொழி இல‌க்கிய‌ங்க‌ளை அதிக‌ம் வாசிப்ப‌வ‌ரென‌ ந‌ம்பிக் கொண்டிருந்தேன்." என‌க்கு ஃப்ரெஞ்சில் செய்தித்தாள் ப‌டிக்கும் அள‌வுக்கு ம‌ட்டுமே தெரியும். என் வாசிப்பு முழுவ‌தும் த‌மிழில் தான் இருக்கிற‌து" என்றார். ஈழ‌ எழுத்தாள‌ர்க‌ளில் ஷோபாசக்திக்கு பிடித்த‌வ‌ர்க‌ள் எஸ்.பொ, டேனிய‌ல். த‌மிழில் த‌ன‌க்கு ஃபிக்ச‌ன் வ‌கையில் மிக‌வும் பிடித்த‌ எழுத்தாள‌ர் கு.அழ‌கிரிசாமி என்றார். பின் ந‌வீன‌த்துவ‌ம் போன்ற‌வ‌ற்றை த‌மிழில் சில‌ எழுத்தாள‌ர்க‌ள் புற‌க்க‌ணிக்கிறார்க‌ளே என‌க் கேட்ட‌த‌ற்கு "அது வேறென்றுமில்லை சோம்பேறித்த‌ன‌ம் தான் அத‌ற்குக் காரண‌ம் உள்ளே இற‌ங்கி பார்த்தால் தானே தெரியும்" என்றார்.

த‌மிழ‌க‌த் தொட‌ர்பு அதிக‌மாக‌ இருப்ப‌தாலோ என்ன‌மோ அவ‌ர் பேச்சில் ஈழ‌ வ‌ழ‌க்கு குறைந்து இந்திய‌த் த‌மிழில் பேச‌ க‌ற்றுக் கொண்டிருக்கிறார். ஷோபா ச‌க்தியை க‌தை சொல்ல‌க் கேட்ட‌தும் ஒரு பெரிய‌ க‌தை போதுமா என்றார். பிடிவாத‌மாக‌ மூன்று க‌தை வேண்டும் என்று சொன்ன‌வுட‌ன் அத‌ற்குச் ச‌ம்ம‌தித்தார். ஒரு சிங்க‌ள‌த் திரைப்ப‌ட‌த்தின் க‌தை, டேனிய‌லின் ம‌ற்றும் சுக‌ன் க‌தைக‌ளைக் கூறினார்.ஒவ்வொரு கதைக்கும் ஒரு சிகரெட் உள்ளே சென்றது. நீகோடினால் மூளையின் ந‌ரம்புகள் தீண்டப்பட புகையோடு கதையும் சேர்ந்து வந்தது. தான் எழுதிய‌ க‌தைக‌ள் எதையும் சொல்ல‌வில்லை.இய‌க்க‌க் க‌தை ஒன்று சொல்ல‌க் கேட்டும் பிற எழுத்தாளருடைய‌ கதைக‌ள் எதுவும் அவரின் ஞாபக‌த்திற்கு வ‌ராத‌தால் ஆசை நிராசையான‌தில் சிறு வ‌ருத்த‌ம் என‌க்குள். ஷோபா ச‌க்தியின் க‌தை சொல்ல‌ல் முறை பிற‌ எழுத்தாள‌ர்க‌ளில் இருந்து வேறுப‌ட்டு இருந்த‌து. ஒவ்வொரு க‌தையும் அத‌ன் அழ‌கிய‌லுட‌ன் பிரச்சாரத் தொனியின்றி அர‌சிய‌லையும் பேசும். க‌தைக‌ளை அழ‌கான‌ நேர்த்தியோடு சொன்னார் ஷோப‌ ச‌க்தி.

ஷோபா சக்தியின் க‌தைக‌ளைக் கேட்க‌ கீழே உள்ள‌ ப்ளே ஐக்கானை த‌ட்டுங்க‌ள்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)

-------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஷோபா சக்தி கதைகள் - Death on a Full Moon Day - Prasanna Vithanage

 

நிமிடம்: 16 --  நொடி: 36

 



ஷோபா சக்தி கதைகள் - முருங்கை இலைக் கஞ்சி - டேனியல்
நிமிடம்: 09 --  நொடி: 52

 
ஷோபா சக்தி கதைகள் - சுகன் கதை
நிமிடம்: 09 --  நொடி: 18
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------
 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)


  </