படிமை பற்றி
தமிழ் ஸ்டுடியோவின் மற்றொரு புதிய முயற்சியாக புதிய கலைஞர்களை கண்டுப்பிடிக்கும் முயற்சியாக (மாற்று திரைப்படங்களை உருவாக்கும் முயற்சிக்கு முன்னோடியாக) பத்து ஆர்வலர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு திரைப்படம் சார்ந்த பயிற்சியளித்து ஒரு புதிய தலைமுறை கலைஞர்களை உருவாக்க தமிழ் ஸ்டுடியோ முனைந்துள்ளது. இதன் படி திரைப்படம் மட்டுமின்றி இலக்கியம் சார்ந்தும், ஒவ்வொரு பகுதி சார்ந்தும் அந்தந்தப் பகுதி சார்ந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை புரிந்துக் கொள்ளவும் இந்த பயிற்சி உதவும். இதற்கெல்லாம் பயிற்சிக் கொடுத்து எப்படி புரிய வைக்க முடியும் என்கிற வாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், தீவிர பயிற்சியின் மூலம் யாவும் சாத்தியப்படலாம் என்கிற உண்மையும் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது.
இந்தப் பயிற்சி மற்றத் திரைப்பட பயிற்சிகளை போல இருக்காது. முற்றிலும் மாறுபட்ட, ஒருவிதத் தேடலுடன் இருக்கும் என்பது திண்ணம். பயிற்சிக்கு ஏதும் கால அளவுக் கிடையாது. இவர் ஒரு நல்லக் கலைஞராக வெளிவருவார் என்று தமிழ் ஸ்டுடியோ கருதும் வரை அவர்களுக்கான பயிற்சி தொடரும். திரைப்படத்தை வெறித்தனமாக நேசிக்கும் எவரும் இந்தப் பயிற்சியில் கலந்துக் கொள்ளலாம்.
அதற்கான நிபந்தனைகள்:
1. திரைப்படத்தின் மீது தீராக் காதலும், எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ளும் ஆர்வமும்,
2. அதிகமாக இலக்கியங்களை தேடித் பிடித்து படிக்கும் வழக்கமும்,
3. தொய்வில்லாமல் ஊர் சுற்றும் பழக்கமும் மட்டுமே இதற்கான தகுதிகள்.
இந்தப் பயிற்சிக்காக கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால் எல்லா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் பயிற்சியில் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும். பயிற்சி எல்லா சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை நடக்கும்.
பயிற்சி பற்றி சில வரிகள்:
இதில் நடிப்பு, திரைக்கதை அமைப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை கோர்ப்பு, படத்தொகுப்பு, இயக்கம் என எல்லாத் துறை சார்ந்தும் பயிற்சி அளிக்கப்படும். ஆனால் இதற்கு முன்னர் ஆர்வலர்களை தயார் படுத்துவதற்காக இந்தியா முழுவதும் சுற்றிப் பார்க்கவும், மிக அதிகமாக ஆர்வலர்கள் விவாதத்தோடு படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்துவதே பிரதான நோக்கமாக இருக்கும். தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், அவர்களின் வட்டார மொழி நடை போன்றவற்றை ஆய்வு செய்வதும் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று. இதுப் போன்ற தொடர் பயிற்சிகளின் மூலம் ஒருவர் தன்னுடைய உருவாக்கத் (Creative) திறனை வளர்த்துக் கொள்ளலாம். மாதம் ஒரு முறை நிச்சயமாக ஒரு ஊருக்கு ஆர்வலர்கள் ஒன்று கூடியோ, தனித் தனியோ பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
இது தமிழ் ஸ்டுடியோவின் கனவுத் திட்டம். ஆர்வமும், துடிப்பும் மேற்சொன்ன தகுதிகளும் உள்ள எவரும் இதில் கலந்துக் கொள்ளலாம். |