வைனுக்கு பெண்!!
எங்கள் வீட்டுக்கு பின்புறம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுடன் குளம் ஒன்று இருக்கிறது. குளத்துப் பக்கம் ஒரு முறை போன போது குறுக்கே ஒரு பாம்பு ஓடியது. அதற்குப் பிறகு அந்தப் பக்கம் கால் வத்து வைத்துப் படுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் பெங்களூர் அரசுக்கு என்ன தோன்றியதோ அந்தக் குளத்தைச் சுத்தம் செய்து, அதைச் சுற்றி நடைபாதை அமைத்து வேலி எல்லாம் போட்டு அமர்களப்படுத்திவிட்டார்கள். குளத்தில் வாத்துக் கூட்டம், வேடந்தாங்கல் மாதிரி பறவைக் கூட்டமுடன் மக்கள் கூட்டமும் சேர்ந்தது. பக்கத்தில் இருக்கும் கம்பு தோட்டத்தில் காலை எழறை மணிக்கு கிட்டத்தட்ட 100 கிளிகளை ஒன்றாகப் பார்க்கலாம். ஒரு முறை கருடன் ஒன்று ஒரு கிளியை 'லபக்' என்று தூக்கிகொண்டு போனது.
இந்த இடத்தில் தான் தினமும் நடை பயிற்சி செய்கிறேன். இன்னும் கொஞ்ச நாளில் ஏதாவது ஒரு கட்டிட கம்பெனி இந்த நிலைத்தை வாங்கி அதில் பிளாட் கட்டி விற்றுவிடுவார்கள் என்று நினைக்கிறேன். போன வாரம் என் பையனை அழைத்துக்கொண்டு அங்கே போனேன். இந்த இயற்கைச் சூழலை பார்த்துவிட்டு அவன் "அப்பா பிருந்தாவன்" என்றான். (தினமும் டிவியில் ஸ்ரீகிருஷ்ணா கார்டூன் பார்க்கிறான்).
இந்தக் குளத்தைச் சுற்றி இருக்கும் வேலிகளில் பல விதமான செடி கொடிகள் இருக்கின்றன. அவைகளைப் பார்ப்பதே தினமும் நல்ல பொழுதுபோக்கு. கொடிகளை உற்று கவனித்தால் அதில் தான் எத்தனை விதமான பூக்கள். ஊதா, சிகப்பு வெள்ளை, மஞ்சள் ஏன் காப்பிப் பொடி வண்ணத்தில் கூட பூக்களைப் பார்க்கலாம். சென்ற மாதம் திருச்சிக்குச் சென்ற போது நாங்கள் இருந்த வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மின்சாரக் கம்பியில் முழுவதும் சின்ன பிங்க் நிற பூக்களுடன் கொடி படர்ந்து இருந்ததைப் பார்த்தேன். ஸ்கூல் படிக்கும் போது பார்த்த அதே கொடி. இந்தக் கொடிகளை அழிப்பது என்பது இயலாத காரியம். குளத்தைச் சுற்றி நடைபாதையில் தற்போது குட்-டே பிஸ்கெட் பாக்கெட்டும், காண்டம் பாக்கெட்டும் கிடைக்கிறது. கொடிகளை போல குப்பை போடுவதை ஒழிக்க முடியாது.
- 0 - 0 - 0 -
இன்றைக்கும் யாராவது சுஜாதா எழுதியதை எங்காவது பார்த்தால் அதைத் தவராமல் எனக்கு ஸ்கேன் செய்தோ தபாலிலோ அனுப்புகிறார்கள். அவர்களுக்கு நன்றி. சில வருஷம் முன்பு கோவையிலிருந்து திரு சுப்பையா ஒரு பழைய சிறுகதையை அனுப்பியிருந்தார். அதற்கு முன்பு பெயர் நினைவு இல்லை, ஒருவர் எனக்கு விஞ்ஞான சிறுகதை ஒன்றை அனுப்பியிருந்தார். அதே போல சென்னையிலிருந்து என் நண்பர் ஒருவர் சில சிறுகதைகளை அனுப்பியிருந்தார். சில மாதம் முன்பு என் நெருங்கிய நண்பர் சதீஷ் மல்லோஸ்வரத்திலிருந்து ஏதோ நூலகத்தில் ஒரு பழைய சுஜாதா புத்தகத்திலிருந்து சில சிறுகதைகளை அனுப்பியிருந்தார் இவை எல்லாம் எந்தப் புத்தகத்திலும் வரவில்லை என்று அடித்து சொல்லலாம். இன்று தமிழ் பத்திரிக்கையில் சிறுகதை என்பது அரிதாகிவிட்டது. விகடனில் மட்டும் வருகிறது. அதே போல சிறுகதை தொகுப்பு என்பது எப்போதாவது தான் வருகிறது. இன்று பெரும்பாலான புத்தகங்கள் கட்டுரைத் தொகுப்பாகத்தான் வருகிறது. கூகிள் வந்ததால்தான் சிறுகதை கம்மியாகிவிட்டதோ என்று சில சமயம் எனக்குத் தோன்றும்.
ரூவால் டால் [Roald dahl [செப்டம்பர் 13 1916 – நவம்பர் 23 1990 ] எழுதிய சுவை ( Taste ) என்ற சிறுகதையைப் பலர் படித்திருப்பீர்கள். மைக் வீட்டில் ஆறு பேர் டின்னர் சாப்பிடும் போது கதை ஆரம்பிக்கிறது. கதை ஆசிரியர், அவரின் மனைவி, மைக், மைக்கின் மனைவி, அவர்களுடைய 18 வயது பெண், ரிசர்ட் பராட். பராட் ஒரு உணவுச் சுவை வல்லுநர் (Gourmet). அதுவும் திராட்சை ரச மதுவைச் (Wine) சுவைத்து அது எந்த பகுதியுடையது என்று கண்டுபிடிப்பதில் வல்லவர். விருந்து என்று வந்துவிட்டால் இவர் எந்தப் பகுதி வைன் என்று கண்டுபிடிப்பதும் அதற்கு பந்தயம் வைப்பதும் வாடிக்கை. அன்று நடந்த அந்த விருந்தில் அவர் அவருக்கு கொடுக்கப்படும் மதுவை கண்டுகொள்ளாமல் மைக்கின் பதினெட்டு வயது பெண்ணிடம் நெருக்கமாக பேசுக்கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும் இவருக்கு வயது 50 இருக்கும். விருந்தில் இரண்டாவது பாட்டில் வைன் கொண்டு வந்து கொடுக்கும் போது மைக் இந்த வைன் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியாது என்று சவால் விட ரிசர்ட் பந்தயத்துக்கு தயாராகிறார். பேச்சு சூடு பிடிக்க ரிசர்ட் ஒரு கட்டத்தில் மைக்கின் பெண்ணை பந்தயமாக கேட்கிறார். பதிலுக்கு தன்னுடைய இரண்டு வீடுகளை கொடுக்கிறேன் என்கிறார். இதற்கு மைகின் மனைவி, மகள் சம்மதிக்க மறுக்கிறார்கள். இருந்தாலும் மைக் இந்த வைன் ஏதோ ஊர் பேர் தெரியாத சின்ன கிராமத்தில் வாங்கியது அதனால் ரிச்சர்ட் கண்டு பிடிக்க முடியாது என்று தைரியமாக பந்தையத்துக்கு சம்மதிக்கிறார். ரிச்சர்ட் மெதுவாக எந்த பகுதி வைனாக இருக்கும் என்று யூகிக்கிறார். மாவட்டம், ஜில்லா என்று சரியாக சொல்லிக்கொண்டு வர இந்த வருடத்தின் வைனாக இருக்கும் என்று யூகிக்க. எல்லோரும் வைன் பாட்டிலில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்க ஆவலாக இருக்க வீட்டு வேலை செய்யும் பெண்மணி ரிச்சர்ட் மூக்குக் கண்ணாடியை கொண்டு வந்து கொடுத்ததுவிட்டு அசால்டாக ஏதோ சொல்ல கதை முடிகிறது. ஒரு நிகழ்வை எப்படி சிறுகதையாக எழுத வேண்டும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதை.
|
- 0 - 0 - 0 - 0 -
சில மாதங்களுக்கு முன் காது ஓரமாக மயிர் வளர்வதைப் பார்த்தேன். கூகிளில் தேடிய போது நாற்பது வயதுக்கு மேல் பத்து நாள் ஆனால் வளர்ந்தது கண்ணில் தெரியும் என்று போட்டு இருக்கிறார்கள். உப தகவல்: நாற்பது வயதுக்கு பிறகு தேவையான இடத்தில் வளராமல் காது, மூக்கு என்று தேவையில்லாத இடங்களிலும் வளருமாம். இந்தக் காது சமாச்சாரம் பரம்பரை மற்றும் Y -க்ரோமோசோம் வேலை. Y-க்ரோமோசோம் ஆம்பளைங்க சமாச்சாரமாம். அதனால் பெண்களுக்கு இந்தக் கொடுப்பினை இல்லை. சில பேய் படங்களை தவிர்த்து. இதற்கும் சாதனைகள் இருக்கு. தமிழ்நாட்டை சேர்ந்தவர் 11.5 செ.மி காதில் வளர்த்து கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார். அவருக்கு வயது 70. காதும் காதும் வச்ச மாதிரி சொல்கிறேன். இந்த பகுதியை படித்த பிறகு, இனி யாராவது "எனக்கு வயசு நாற்பது ஆச்சு சார்" என்றால் உடனே அவர் காதை பார்க்காதீங்க. அவர் அந்த பக்கம் திரும்பும் போது பார்த்துக்கொள்ளுங்கள்.
- 0 - 0 - 0 -
கூடுவோம்... |