கலைப் ஆப் பை & எஸ்.ராஜம்
சக்கரை வள்ளி கிழங்கு பற்றி முன்பு எழுதியிருந்தேன். சில மாதங்கள் முன் திருச்சியில் வாங்கிய 'பிடி கருணைக் கிழங்கு' இரண்டை எடுத்து பால்கனி தொட்டியில் மண்ணில் புதைத்தேன். சக்கரை வள்ளி கிழங்கு மாதிரி கொடி வளரும் என்று நினைத்தேன் ஆனால் ரொம்ப வித்தியாசமாக ஒரு செடி வளர்ந்தது. அதை விவரிக்க முடியாது அதனால் அதன் படம் இங்கே. கருணைக் கிழங்கு நிறைய விதங்கள் இருக்கிறது. 'பிடி' என்று ஏன் பெயர் வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. பிடி கருணைக் கிழங்கு பற்றி இணையத்தில் தேடினால் கிடைப்பது அதை வைத்து எப்படி மசியல் செய்யலாம் என்பது தான்.
என் அம்மா செய்யும் ரெசிப்பி இங்கே:
பிடிகருணையை(4-5) குக்கரில் உப்புடன் வேக வைத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் புளி கரைசலை ரெடி செய்யுங்கள்.
கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து அதில் புளி கரைசலை விடவும். மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு, வேக வைத்த கிழங்கை உரித்து மசித்து அதில் சேர்த்து திரும்பவும் நன்றாக கொதிக்கவிடவும். கொஞ்சம் இஞ்சியும் சேர்த்துக்கொள்ளலாம். அவ்வளவு தான்!
புதிய கருணைக் கிழங்கு சாப்பிட்டால் நாக்கில் அல்லது தொண்டையில் அரிப்பு இருக்கும். அதனால் மசியலில் புளி அல்லது எலுமிச்சை சாறு சேர்ப்பார்கள்.
இதை பற்றிய ஒரு சுவையான சம்பவம் "கருணைத் தெய்வம் காஞ்சி மாமுனிவர்"(விகடன் பிரசுரம்) என்ற புத்தகத்தில் எஸ்.கணேச சர்மா எழுதியுள்ளார்.
ஒருவர் ஒரு மூட்டை கருணைக் கிழங்கை மடத்துக்குக் கொடுத்தார். அதை எடுத்து மசியல் செய்தாயிற்று. சாப்பிட வந்தவர்கள் சிறிது வாயில் போட்டதுமே இலையில் அப்படியே ஒரு பக்கம் ஒதுக்கி விட்டனர். நாக்கில் அரிப்பு தாங்க முடியவில்லையே.. எப்படி சாப்பிடுவார்கள் ? இது பெரியவாளுக்குத் தெரிய வந்தது.
சமைத்தவர் கையைப் பிசைந்து கொண்டு, "எனக்குத் தெரிந்த வரையில் கழு நீரில் அலம்பி, புளிவிட்டுக் கொதிக்க வெச்சுத் தான் பண்ணினேன். அதுக்கெல்லாம் மசியவில்லையே - அதான் மசியல் வீணாகி விட்டது!" என்றார்.
பெரியவா சொன்னார், 'கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்டை வெட்டிப் போடு. அரிக்காது!" என்றார். அதன்படியே மறுநாள் செய்யப்பட்ட கருணைக் கிழங்கு எல்லோரும் விரும்பிச் சாப்பிடும்படி அமைந்தது. பெரியவா வேத வேதாந்தம், பாஷ்யம் முதலியன தெரிந்து சொல்வது போலவே, எளிய சமையல் கலையும் தெரிந்து வைத்திருக்கும் சர்வக்ஞன் என்பதற்கு இது ஒரு சான்று.
=00= =00= =00= =00= =00= =00= =00=
நேற்று லைப் ஆப் பை(3D) படம் பார்த்தேன். படத்தின் கதையை போஸ்டர் பார்த்து ஓர் அளவு யூகிக்க முடிந்தது என்றாலும் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்ற ஆவல் இருந்தது.
ஒரு வரியில் சொல்லிவிடக் கூடிய கதை.
கப்பல் கவிழ, படகில் ஒரு பையன், புலி, வரிக்குதிரை, கழுதைப்புலி, குரங்கு(ஒரங்குட்டான்) உயிர் தப்புகிறார்கள். ஒன்றை ஒன்று அடித்துக் கொல்ல, இறுதியில் எஞ்சி இருப்பது புலியும் அந்த 'பை'யன் மட்டும் தான்.
கடல், மேகம், மீன்கள், படகு, புலி, பை இதை வைத்துக்கொண்டு கதையைச் சொல்ல வேண்டும். சொல்லியிருக்கிறார்கள். கதை சொல்லும் விதம் 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தை நினைவுப் படுத்தினாலும். முதல் பாதியில் அவர்கள் குடும்ப காட்சிகள் கவிதை.
வில்லியம் எஃப். ஜென்கின்ஸ் எழுதிய 'Side Bet' என்ற சிறுகதை போல இருந்தது இந்த கதை. ஒரு மனிதன், ஒரு எலியைப் பற்றியது இந்த சிறுகதை. இருவரும் ஒரு தீவில் அகப்பட்டுக்கொள்ள வாழ்வா சாவா என்று பிரச்சனை வரும் போது, இருவருக்கும் நடக்கும் போராட்டம் எப்படி ஒரு பந்தயமாகிறது என்று சொல்லியிருப்பார் ஜென்க்கின்ஸ்.
இந்த மாதிரி கதை எழுதுவது மிகக் கடினம். மனிதன் எலி, ஆகிய கதாப்பாத்திரம் இரண்டும் பேசிக்கொள்ள முடியாது என்பதே ஒரு பெரிய சவால். மனிதர்களும் அவர்களுடைய பிரச்சனையும் மையமாக வைத்து கதை எழுதுவது சுலபம். அதில் கற்பனை அதிகம் இருக்காது. ஆனால் ஒரு மனிதன், ஒரு எலி இருவரும் ஒரு தீவில் உயிர் வாழுவதற்கு நடக்கும் போட்டியை மையமாக வைத்து கதை எழுத அசாத்திய திறமை வேண்டும். இந்த சைடு பெட் கதையை நான் முதலில் தமிழில் படித்தேன். ஒரு மொழிபெயர்ப்பு என்பது போல இல்லாமல் சோப்பு பேப்பரில் எழுதியது போல வழுக்கிக் கொண்டு போனது. இதன் ஆங்கில மூலத்தைத் தேடிப் படித்த போது பல ஆச்சரியங்கள்.
இந்த கதை கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன் எழுதியது.
3D ஆச்சரியங்கள் மை டியர் குட்டிச்சாத்தானுக்கு பிறகு அவதார் படத்தில் மீண்டும் ஆர்வமாக பார்த்தேன். இன்று எல்லா டிவியும் 3D என்று வந்து திகட்டிவிட்டது. படம் ஆரம்பிக்கும் முன் சிவாஜி 3D டிரைலரும் காண்பித்தார்கள். ரஜினி சுண்டிவிட்ட 1 ரூபாய் நாணயம் என் தலைக்கு மேலே சென்றது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வீடு திரும்பும் போது "இது தான் என் முதல் 3D படம்" என்று என் மனைவி சொன்னது மேலும் ஆச்சரியமாக இருந்தது.
=00= =00= =00= =00= =00= =00= =00=
இரண்டு நாளுக்கு முன் நண்பர் லலிதா ராமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எஸ்.ராஜம் அவர்களை பற்றிய ஆவணப்படம் டிவிடியை அன்பளிப்பாக கொடுத்தார்.
ஸ்கூல் படிக்கும் வயசில் பாட்டி வீட்டில் நிறைய பழைய தீபாவளி மலர்கள் இருக்கும். அதில் நிறைய அஜந்தா டைப் ஓவியங்கள் பார்த்திருக்கிறேன். அந்த வயசில் அவை என்னை அவ்வளவாகக் கவர்ந்ததில்லை. பிறகு நான் ஓவியம் வரைய ஆரம்பித்த போது பலருடைய ஓவியங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் படம் இவர் வரைந்தது என்று சில வருஷங்களுக்கு முன் லலிதா ராம் மூலம் தான் தெரிந்தது. இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே என்று நினைத்துக்கொண்டேன். அந்த ஓவியத்துக்கு என்ன கலர், அதன் சுற்றி இருக்கும் படம் என்று அவர் சொன்ன போது அந்த ஓவியம் ஏன் இன்றும் நிலைத்து நிற்கிறது என்பதில் வியப்பில்லை.
பாசாங்கு இல்லாமல் உண்மையாக பலரும் பல விஷயங்கள் இந்த டிவிடியில் பேசியிருக்கிறார்கள். ராஜம் அவர்களும் இந்த டிவிடி மூலம் நிறைய விஷயங்கள் பேசியதை நாம் பார்க்க முடிந்தது நம்முடைய அதிர்ஷ்டமே. பல அபூர்வமான ராகங்கள் பாடியவர், தன்னுடைய ஓவியங்களின் பேக்கிரண்ட் பற்றி அவர் விளக்கியது, வாட்டர் கலர் ரசிகன் என்ற முறையில் என்னை மிகவும் கவர்ந்த விஷயங்கள்.
"இவ்வளவு பெரிய ஆட்கள் எல்லாம் உங்க ஃபிரண்டா ?" என்றாள் என் மனைவி. லலிதாவுக்கு பாராட்டுக்கள்.
எஸ்.ராஜம் ஆவணப்படத்தின் ட்ரைலர்:
http://www.youtube.com/watch?v=M0dczot3ZTw&list=
UUwxEa9lxuNaOPvrnM9cDKQA&index=1&feature=plcp
இந்த ஆவணப்படத்தை ஆன்லைனில் வாங்க:
http://www.kalakendra.com/shopping/rajam-p-3174.html
தொடரும்....
|