தலையில் தேங்காய் விழாது...
திருச்சியில் எங்கள் வீட்டு சமையல் அறை பக்கம் இருக்கும் அறைக்கு பெயர் 'இருட்டு ரூம்'. லைட் போட்டாலும் அந்த அறை இருட்டாக தான் இருக்கும். ஒட்டடை படிந்த அந்த ரூமில் அரிசி, பருப்பு என்று எல்லா மளிகை சாமான்களும் இருக்கும். விட்டலாச்சாரியார் பார்த்திருந்தால் நிச்சயம் வாடகைக்கு கேட்டிருப்பார். நாங்கள் குறும்பு செய்தால் அப்பா அந்த ரூமில் போட்டுவிடுவேன் என்று பயம் காமிப்பார். சில சமயம் போடவும் செய்வார். அந்த அறைக்கு போனால் கிடைக்கும் ஒரே சந்தோஷம் அங்கே இருக்கும் வெல்லம், சக்கரை போன்றவற்றை சாப்பிடலாம். ஒரு முறை அந்த ரூமில் போட்ட போது அங்கே இருந்த ஒரு தேங்காய் முளைவிட்டிருந்ததை பார்க்க முடிந்தது. ஆச்சரியமாக இருந்தது. வீட்டு புழக்கடைத் தோட்டத்தில் அதை புதைத்து தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தேன். சில வருஷம் கழித்து என் உசரத்துக்கு வந்தது. இன்னும் சில வருஷத்தில் 90 அடி உயரத்துக்கு வளர்ந்து காய் எல்லாம் காய்க்கும் என்று நம்பிக்கொண்டு இருந்த போது, நாங்கள் இருந்த வாடகை வீடு விற்கப்பட்டு பிளாட் கட்ட பட்டது. நான் வைத்த தென்னை மரம் இந்த இடத்தில் இருந்தது என்று கூட கண்டுபிடிக்க கஷ்டப்பட்டேன்.
சில மாதம் முன்பு திருச்சி ஆண்டார் தெருவில் பெரியவர் ஒருவர் வெள்ளையாக ஒன்றை துண்டு போட்டு விற்றுக்கொண்டு இருந்தார். ஏதோ கிழங்கு என்று நினைத்து அந்த பெரியவரிடம் விசாரித்தேன். "தென்னங் குருத்து, இதை சாப்பிட்டா ரத்த சோகை நீங்கும்" என்றார். தென்னங் குருத்து என்பது தென்னை மரத்தின் ஜீவன் அதை வெட்டி விட்டால் தென்னை மரம் வளரவே வளராது. பல வருஷம் வெயில், மழை, புயல் என்ற தடைகளை மீறி வளர்ந்த தென்னை மரத்தை வெட்டும் போது தான் இந்த தென்னங் குருத்து கிடைக்கும்.
தென்னை மரம் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள். தேங்காயின் பிறப்பிடம் இந்தோனேஷியா என்றும் சொல்லுகிறார்கள். தேங்காய் எப்படி பல தேசங்களுக்கு பரவியது? கடல் வழியாக தான். மனிதன் போவதற்குள், தேங்காய் பல நாடுகளுக்கும், தீவுகளுக்கும் கடல் வழியே சென்றடைந்துவிட்டது. அடுத்த முறை கடற்கரை காலண்டர் படங்களை பார்த்தால் கரையோரம் நீச்சல் உடையுடன் இருக்கும் பெண்களுக்கு பின்னால் வரிசையாக இருக்கும் தேங்காய் மரங்களுக்கு காரணம் இது தான். தேங்காய் கடல் வழியாக அடித்துக்கொண்டு வரும் தேங்காய் கரையில் ஒதுங்கினாலும் தொடர்ந்து அடிக்கும் அலையினால் அதன் வேர் மண்ணில் உடனே பதியாது. தேங்காய் கடல் வழியாக வந்து வேர் உடனே மண்ணில் பதியாமல் இருந்தாலும், மண் இல்லாமல் ஒரு வருடம் வரை வளர்வதற்கு போதுமான சத்து இருக்கிறது!
|
தேங்காயில் மொத்தம் 32 குரோமோசோம் இருக்கிறது (16 ஜோடி) அதை இரண்டு வகையாக பிரிக்கலாம். உயரமாக வளரும் தேங்காய் மரம், குள்ளமாக வளரும் தேங்காய் மரம் என்று. இதில் பல வகைகள் இருக்கிறது. மற்ற மரங்களை போல ஒட்டு போட்டு புதிய வகையை கொண்டு வருவது மாதிரி தேங்காய் மரத்தில் கொண்டு வருவது கஷ்டம். அதுவும் உயர மரங்களில் ஏதாவது ஆராய்ச்சி செய்வதும் அவ்வளவு சுலபம் இல்லை. மரபியல்சார்ந்த ஆராய்ச்சியில் தற்போது தேங்காய் மரங்களையும் மாற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.
பாபநாசத்தில் இருக்கும் எங்கள் தாத்தா வீட்டு திண்ணை பளபளக்க காரணம் தென்னை ஓட்டை கரியாக்கி சிமிண்டுடன் சேர்த்தால் வந்த பளபளப்பு. அதே தாத்தா எனக்கு சுடு தேங்காய் என்ற ஒன்றை சொல்லித்தந்தார். அதை செய்து பார்க்க விரும்புகிறவர்களுக்கு செய்முறை இங்கே. http://desikan.com/blog/?p=400
தேங்காய் மரத்தில் மட்டைக்கு கீழே சாக்கு போன்ற ஒரு துணி ஒன்று உரிந்து இருப்பதற்கு பெயர் - பன்னாடை. உபத்திரம் இல்லாத கெட்ட வார்த்தை! கொஞ்சம் உபத்திரம் உள்ள கெட்ட வார்த்தை - "போடா தேங்கா மண்டையா". தேங்காய் மரத்துக்கு அடியில் நின்றால் தலையில் தேங்காய் விழாது என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. சச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்றுவிடும் என்பது போல தான் இது.
- - - - - - - 8 8 8 8 8 8 - - - - - - - 8 8 8 8 8 8 8 - - - - - - -
கணவன், மனைவி, கள்ள காதலி/காதலன் என்றால் நிச்சயம் அந்த கதையில் கொலை வந்துவிடும் அந்த கொலை எப்படி செய்யப்படுகிறது, அதை எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது என்பது எப்போது சுவாரஸியம். சில கதைகள் கண்டுபிடிக்கப்படாமல் முடிவடைகிறது. உதாரணம் - ஜேம்ஸ் ஹோல்டிங் (http://pabook.libraries.psu.edu/palitmap/bios/Holding__James_C_C.html) எழுதிய "Where is Thy Sting" என்ற கதை. சுருக்கி இங்கே தந்துள்ளேன்.
டோரிஸுக்கும் எதிர் போர்ஷனில் இருக்கும் ஒண்டிக்கட்டை எழுத்தாளன் வில்கின்ஸனுடன் கள்ள தொடர்பு இருப்பது தெரியவந்த போது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. டோரிஸ் என் மனைவி. அவளுக்கும் எனக்கும் திருமணம் ஆகி நாலரை வருஷம் ஆகிறது. நல்ல அழகு. அவள் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்பேன். என்னுடைய எரிச்சல் எல்லாம் அந்த ஓட்டை டைப்ரைட்டரை வைத்துக்கொண்டு இருக்கும் அந்த துப்பறியும் எழுத்தாளன் என்னைவிட சுமாராக தான் இருப்பான். இப்பவே வழுக்கை விழ ஆரம்பித்துவிட்டது, அவனிடம் எப்படி டோரிஸ் மயங்கினாள்? என் வேலை சேல்ஸ் மானேஜர், மாதத்தில் இரண்டு வாரம் வெளியூர்களுக்கு போக வேண்டும். நான் ஊரில் இல்லாத அந்த சமயங்களில் அந்த எதிர் போர்ஷன் எழுத்தாளனிடம் ..
எனக்கு துரோகம் செய்த டோரிஸ் மீது எனக்கு கோபமே வரவில்லை. காரணம் காதல். அவளை சொல்லிக் குற்றமில்லை, நல்ல அழகு, நான் மாதத்தில் பாதி நாள் வீட்டில் இருப்பதில்லை, அவள் தனிமையில் வாடுகிறாள். ஏமாந்த பெண் எங்கே கிடைப்பாள் என்று நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அலைகிற வில்கின்ஸ் மாதிரி ஆட்கள் அவளை வளைத்துப் போடுவது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. அவளை என்னால் மன்னிக்க முடிந்தது ஆனால் வில்கின்ஸன்? அவனுக்கு மன்னிப்பே கிடையாது. அவனுக்கு பாடம் கற்பிக்க தகுந்த நாளுக்கு காத்துக்கொண்டு இருந்தேன்.
"பதட்டப்படாதே" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். யாருக்கும் என் மீது சந்தேகமே வரக்கூடாது. கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போவதில் யாருக்கு என்ன லாபம்? அதனால் அவளுக்கும் வில்கின்ஸனுக்கும் இருக்கும் தொடர்பை பற்றி கண்டுகொள்ளவில்லை. எப்போதும் போல் சகஜமாக நடந்துக்கொண்டேன். அவளும் அப்படியே நடந்துக்கொண்டாள். நல்ல நடிகை.
ஒரு நாள் காலை நான் கால்ஃப் மைதானத்துக்குப் போய் விளையாடிவிட்டு திரும்பினேன். அப்போது வண்டியை நிறுத்திவிட்டு பார்த்த போது எனக்கு முன்னே வில்கின்ஸ் தன் காரை நிறுத்திவிட்டு வெளிப்படுவதை கண்டேன். பேப்பர் பையில் தான் வாங்கிய சாமான்களை மார்போடு அணைத்துக்கொண்டு பிடித்திருந்தான். வாசலை நோக்கி நடந்தான். அவனது இடதுப்பக்கம் மலர்கள் பூத்திருந்தது. திடீர் என்று நின்றுவிட்டான். எதையோ கண்டு மிரண்ட மாதிரி. அவன் மிரண்டதற்கு காரணம் ஒரு தேனி. அவன் கண்களில் பயம் தெரிந்தது. ஒரு தேனி அவன் தலை மீது வந்து ஆராய்ந்த போது, பயந்து போனான். பையை கீழே போட்டுவிட்டு வீட்டுக்கு ஓட்டமாய் ஓடிவிட்டான். அவனது அபார்ட்மெண்ட் கதவு மடார் என்று சத்தப்படும் சத்தம் கேட்டது.
காரில் உட்கார்ந்தபடியே நான் இவ்வளவையும் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன். இவ்வளவு கோழையிடம் என் மனைவி குழைகிறாளே எனக்கு மீண்டும் எரிச்சலாக இருந்தது. அப்போது எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. நான் ஒரு சேல்ஸ்மென் என்று சொன்னேனே தவிர எதற்கு என்று சொல்லவில்லை. ஒரு மருந்து கம்பெனியின் சேல்ஸ்மென். ஒரளவுக்கு விஷயம் தெரியும். தேனி பார்த்து பயப்படுகிறவர்கள் ரொம்ப கம்மி. அப்படி பயப்படுகிறவர்கள்..
அந்த மாதம் எனக்கு வெளியூர் பயணம் இருந்தது. வழக்கம் போல இரண்டு வாரம். டோரிஸுக்கு முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினேன். வழக்கத்தைவிட அதிக பிரியத்துடன்.
அடுத்த பத்து நாட்கள் நான் விற்பனை வேலையில் முழ்கியிருந்தேன். அடிக்கடி என் மனைவி அந்த எழுத்தாளன் நினைப்பு வந்து என்னை வாட்டியது. இருந்தாலும் பொறுமையாக இரு என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இது தான் கடைசி தடவை!
பத்தாவது நாள் நான் போக வேண்டிய பாதையை விட்டு ஒரு சின்ன ஊருக்கு சென்றேன். பட்டாம் பூச்சி பிடிப்பார்களே நீண்ட குச்சி, அதன் முனையில் ஒரு வலையும் இருக்குமே அதை வாங்கிக்கொண்டேன். ஒரு கிராம பாதையில் சென்று காரை நிறுத்திவிட்டு காரில் அடர்த்தியான மரங்கள் இருபுறமும் இருக்க அங்கே ஒரு இடத்தில் ஒரு கொடியில் பூக்கள் கொத்துக்கொத்தாக பூத்திருந்தது. தேனீக்கள் பறந்துக்கொண்டு இருந்தது. வலையை வீசியதில் ஆறு தேனீக்கள் மாட்டிக்கொண்டது. அது போதும்.
வரும் வழியில் ஒரு குப்பை தொட்டியில் கிடந்த சின்ன அட்டை பெட்டியை எடுத்துக்கொண்டேன். அதில் அந்த ஆறு தேனீக்களும், கொஞ்சம் தழைகளும், சின்னதாக அவை மூச்சு விட ஒரு ஓட்டையும் போட்டேன். பிரவுன் பேப்பர் கொண்டு அதை சுற்றி நூல் போட்டு கட்டிவிட்டு. பாக்கெட்டின் மீது வில்கின்ஸின் பெயரையும் முகவரியும் எழுதினேன். தபால் தலையை அதன் மீது தேவைக்கு அதிகமாக ஒட்டினேன். எல்லாம் பத்து நிமிஷத்தில் முடிந்துவிட்டது.
புறப்பட்டேன்.
வழியில் ஒரு தபால் ஆபீஸ் இருந்தது. வாசலில் தபால் பெட்டி இருந்தது. காரிலிரிந்து இறங்காமல் கை நீட்டி அதில் போட்டுவிட்டு உற்சாகமாக புறப்பட்டேன். அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் என் வேலைகளை முடித்துவிட்டு திரும்ப வீட்டுக்கு வந்த போது வீட்டு வாசலில் ஒரு போலீஸ் ஆம்புலன்ஸ் பின் கதவை திறந்துவைத்துக்கொண்டு காத்துக்கொண்டு இருந்தது. நான் லிப்ட் வருவதற்கு காத்துக்கொண்டு இருந்தேன். இரண்டு போலீஸ்காரர்கள் ஒரு ஸ்டிரச்சரை பிடித்தபடி வெளியே வந்தார்கள் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டிருந்தது. முகம் உட்பட.
கதை இத்துடன் முடியவில்லை. ஆனால் அதை படித்து பார்த்தால் தான் நன்றாக இருக்கும். கதையை நீங்களே தேடி படித்துக்கொள்ளுங்கள்.
- - - - - - - 8 8 8 8 8 8 - - - - - - - 8 8 8 8 8 8 8 - - - - - - -
போன வாரம் என் செல்போன் காணாமல் போய்விட்டது. எங்கள் வீட்டுப் பக்கம் உள்ள மளிகை கடையிலேயே செல்போன் விற்பனை செய்கிறார்கள், அதனால் புது செல்போன் வாங்குவது ஒன்றும் கஷ்டம் இல்லை. ஆனால் அதில் இருந்த என் நண்பர்கள், உறவினர்கள் எண்கள் எல்லாம் காணாமல் போனது தான் வருத்தமான விஷயம்.
யாராவது அழைத்தால் அவர்களிடம் பேசி முடித்துவிட்டு "நீங்கள் யார்?" என்று கேட்பது தர்மசங்கடமான விஷயம். சில நண்பர்களை தேட முற்பட்ட போது எனக்கு சில வருடங்களுக்கு முன் மால்கம் க்ளேட்வெல் (Malcolm Gladwell) எழுதிய டிப்பிங் பாயின்ட் என்ற புத்தகத்தில் 'சிக்ஸ் டிகிரீஸ் ஆஃப் செபரேஷன்" என்ற கோட்பாடு தான் நினைவுக்கு வந்தது. (மொழிபெயர்ப்பு புத்தகம் இந்த வருடம் விகடனில் பிரசுரம் ஆகியிருக்கு.)
மனிதர்கள் ஒருவருக்கொருவர் எப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்று சின்ன பரிசோதனை மூலம் ஆராய்ச்சி செய்தார் மனநிலை ஆராய்ச்சியாளர் டேன்லி மில்கிராம். உலகில் எங்கிருந்தாலும் இரண்டு நபர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்துவதற்கு சில இணைப்புக்கள் போதுமா அல்லது அதிக இணைப்புக்கள் வேண்டுமா என்ற கேள்விக்கு விடை கண்டுபிடித்தார். அதில் ஒருவருக்கொருவர் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள ஐந்து அல்லது ஆறு இணைப்புக்கள் போதும் என்று கண்டுபிடித்தார். அதாவது நீங்கள் ஓபாமா அல்லது ஓசாமா பின் லேடனை வெறும் ஐந்து அல்லது ஆறு இணைப்புக்களில் தொடர்பு கொண்டுவிடலாம்!.
டேன்லி செய்த ஆராய்ச்சி சுலபமானது - ஒரு ஊரில் உள்ள நூற்றி அறுபது பேரைத் தேர்வுசெய்து அவர்களிடம் ஒரு பார்சலை கொடுத்து வேறு ஒரு ஊரில் இருக்கும் ஒரு நபரின் பெயர் விலாசம் கொடுத்து அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சொன்னார். கூடவே ஒரு குறிப்பும் இருந்தது அதாவது அந்த நபர் இருக்கும் இடத்தில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று. அவர்களுக்கு அந்த பார்சல் பெறும் நபர் யார் என்று தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் அவர்கள் இரண்டு, மூன்று அல்லது நான்கு இணைப்புகளின் மூலம் அவர்கள் அந்த நபரை தெரிந்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
இந்த ஆராய்ச்சியில் பார்சல் சீரற்ற முறையில் சென்று முக்கால்வாசி பார்சல் கடைசியில் ஒரு சில நபர்களை சென்றடைந்தது என்று கண்டுபிடித்தார். அதில் ஒருவர் துணி வியாபாரி. சிக்ஸ் டிகிரீஸ் ஆஃப் செபரேஷன் என்பதற்கு ஆறு இணைப்பில் ஒருவரை தொடர்பு கொள்ள முடியும் என்பதல்ல அர்த்தம். ஆனால் சொற்ப எண்ணிக்கை நபர்களே இணைப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள். உங்களின் நண்பர்களை லிஸ்ட் போடுங்கள் அவர்களுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது பாருங்கள், புரிந்துவிடும்.
கூடுவோம்...
|