ஒன்று நீ, அல்லது நான்!
எங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் தெருவில் இரண்டு பக்கமும் உள்ள மரங்களும் ஸ்விட்ச் போட்ட மாதிரி வருடத்துக்கு இரண்டு முறை ஒரே சமயத்தில் பூக்கும். மரமே பிங்க் 'ஜான்சன் பேபி சோப்' வண்ணத்தில் குளித்திருக்கும். ரோஸ் மில்க் நடுவில் ஒரு சொட்டு குங்குமப்பூவை கலந்த மாதிரி பூக்கள் மரம் முழுவதும் இருக்கும். எல்லா மரத்திலும் குறைந்தபட்சம் இரண்டு பறவைகளின் கூடாவது இருக்கும். எல்லா பூக்களிலும் தேனிக்கள் சுற்றிக்கொண்டு இருக்கும்.
இந்த காட்சியை பார்க்கும் அந்த சில நிமிடங்கள் மனதில் இருக்கும் கவலைகள் எல்லாம் கொஞ்சம் நேரம் மறந்து போய்விடும். மெல்லிய காற்றில் பூக்கள் மரத்திலிருந்து உதிர்ந்து கீழே விழுந்த மாத்திரத்தில் காகித பூக்கள் மாதிரி ஆகிவிடும்
இன்னொரு அதிசயம் எல்லா பூக்களும் உதிரும் போது விசிறி மாதிரி சுழண்டுகொண்டு விழும். ஐபிஎல் யுகத்தில் இதை எல்லாம் கவனிக்க மக்களுக்கு நேரம் இருக்குமா என்பது சந்தேகம். இயற்கை நமக்கு அளித்திருக்கும் இந்த மாதிரி இலவச சுகங்களை நிராகரித்துவிட்டோம்.
பூக்கள் சுழல்வதை பார்க்கும் போது சின்ன வயசில் ஐஸ்கிரீம் குச்சியில் செய்த விசிறியும், மூன்று பேப்பரைக் கொண்டு பின்னிய காத்தாடியும் ஞாபகத்துக்கு வந்தன். ஐஸ்கிரீம் குச்சி விசிறி செய்வது ரொம்ப சுலபம். (முன்னெல்லாம் ஐஸ்கிரீம் குச்சி மூங்கிலில் இருக்கும்.) மூங்கில் குச்சியை குறுக்குவாட்டில் பாதிவரை பிளந்துவிட்டு, பேப்பரை அதில் சொறுகி மாடியிலிருந்து கீழே போட்டால் சுற்றிக்கொண்டு போகும். காத்தாடி கொஞ்சம் கஷ்டம், மூன்று பேப்பரை ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாக வைத்து பின்ன வேண்டும். அதுவும் சுற்றிக்கொண்டு போகும். ஏன் சுற்றுகிறது என்று 10 ஆம் கிளாஸ் அறிவியல் பாடத்தில் தான் தெரிந்தது. மரத்தில் இருக்கும் ஆயிரக் கணக்கான பூக்களும் இது மாதிரி தான் விழப்போகிறது. அப்படி சுற்றிக்கொண்டு விழுவதை யாராவது கவனிக்கப் போகிறார்களா ?
|
இந்த மரத்துக்கு கீழே கணவன் மனைவி இரண்டு பேர் சேர்ந்து தள்ளுவண்டியில் பழக்கடை ஒன்றை வைத்திருக்கிறார்கள். தர்பூஸ், பப்பாளி, ஆப்பிள், சப்போட்டா, வாழைப்பழம் எல்லாம் வெட்டி போட்டு கொஞ்சம் உப்பு, தேன் கலந்து, ரூ.13/=க்கு விற்கிறார்கள். இந்த மரத்தடி தான் அவர்களின் கடை. எதிர்த்த மலையாளத்து கடையில் மூன்று ரூபாய்க்கு மசாலா டீ குடித்துக்கொண்டு வியாபரம் செய்கிறார்கள்.
"தர்மபுரி என் சொந்த ஊர், எனக்கு சின்ன வயசிலிருந்து கஷ்டம் தான் சார், பதினோரு வயசுல ஹோட்டலில் டேபிள் துடைக்க ஆரம்பித்தேன். பிறகு பழைய பேப்பர் கடை வைத்தேன் அதுல நஷ்டம், பிறகு இந்த பழக்கடை வைத்தேன் கோரமங்களாவில் 12 வருஷம் வியாபாரம் செய்தேன். பிறகு சொந்த ஊருக்கே போய் டீ கடை, போண்டா, பஜ்ஜி எல்லாம் போட்டேன் அது சரிப்பட்டு வரலை. திரும்பவும் இந்த பழக்கடையே வைக்க ஆரம்பித்தேன். இந்த ஏரியாவுல இது மூன்றாவது வருஷம். நாலு பசங்க, மூத்தவன் +12 கம்யூட்டர் சைன்ஸ் குரூப் முடித்துவிட்டு என்ஜனியரிங் கவுன்சலிங்கிற்கு காத்திருக்கிறான். மத்த பசங்க +12, 8, 6 ஆம் வகுப்பு படிக்கிறாங்க. எப்படியாவது பசங்களை படிக்க வைக்கணும். கையை பாருங்க சார், ரேகையே இருக்காது அவ்வளவு உழைப்பு" என்று சொல்லும் இவர் பெயர் சிற்றரசு !
இந்த பூக்களின் தாவர பெயர் Tabebuia impetiginosa.
-0-o-0- -0-o-0- -0-o-0- -0-o-0- -0-o-0-
மர்ரே லீன்ஸ்ட்டரின் ( Murray Leinster ) புனை பெயர் வில்லியம் எஃப். ஜென்கின்ஸ் (Will F. Jenkins) [ ஜூன் 16, 1896 - ஜூன் 8, 1975 ]. 8ஆம் வகுப்பு படிக்கும் போது, "Uneasy Homecoming" என்ற இவருடைய சிறுகதை எங்களுக்கு பாடமாக இருந்தது. இருபது சிறுகதை என்ற புத்தகத்தில் இதுவும் ஒரு கதையாக இருக்கும். அந்த புத்தகத்தில் பெரும்பாலான சிறுகதைகள் எனக்கு இன்றும் நினைவு இருப்பதற்கு காரணம், கதையை சொன்ன விதமும், அதை சொல்லிக் கொடுத்த விதமும்.
சில மாதங்களுக்கு முன்பு ரா.கி.ரங்கராஜன் அவர்கள் எனக்கு அன்பளிப்பாக கொடுத்த சிறுகதை மொழிபெயர்ப்பு புத்தகத்தில் "ஒன்று நீ, அல்லது நான்" என்ற சிறுகதையை படித்தேன். இதன் ஆங்கில மூலம் வில் எஃப். ஜென்கின்ஸ் எழுதிய 'சைடு-பெட்' (Side Bet) என்ற கதை.
சிறுகதைகள் வருவதே அரிதாக போய்விட்ட இந்த காலத்தில் இந்த மாதிரி கதைகளை நாம் பத்திரிக்கையில் எதிர்ப்பார்க்க முடியாது. சிறுகதை எழுதுவது ஒரு கலை. சில பக்கங்களில் முழு கதையும் சொல்ல வேண்டும், சொல்லும் விதம், வார்த்தை சிக்கனம் என்று அது கிட்டத்தட்ட ஒரு சவாலாகவே இருக்கும்.
ஒரு மனிதன், ஒரு எலியைப் பற்றியது இந்த சிறுகதை. இருவரும் ஒரு தீவில் அகப்பட்டுக்கொள்ள வாழ்வா சாவா என்று பிரச்சனை வரும் போது, இருவருக்கும் நடக்கும் போராட்டம் எப்படி ஒரு பந்தயமாகிறது என்று சொல்லியிருக்கார் ஜென்க்கின்ஸ்.
இந்த மாதிரி கதை எழுதுவது மிகக் கடினம். மனிதன் எலி, ஆகிய கதாப்பாத்திரம் இரண்டும் பேசிக்கொள்ள முடியாது என்பதே ஒரு பெரிய சவால். மனிதர்களும் அவர்களுடைய பிரச்சனையும் மையமாக வைத்து கதை எழுதுவது சுலபம். அதில் கற்பனை அதிகம் இருக்காது. ஆனால் ஒரு மனிதன், ஒரு எலி இருவரும் ஒரு தீவில் உயிர் வாழுவதற்கு நடக்கும் போட்டியை மையமாக வைத்து கதை எழுத அசாத்திய திறமை வேண்டும்.
இந்த சைடு பெட் கதையை நான் முதலில் தமிழில் படித்தேன். ஒரு மொழிபெயர்ப்பு என்பது போல இல்லாமல் சோப்பு பேப்பரில் எழுதியது போல வழுக்கிகொண்டு போனது. இதன் ஆங்கில மூலத்தை தேடி படித்த போது பல ஆச்சரியங்கள்.
இந்த கதை கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன் எழுதியது.
மூலக்கதையில் கதையில் முதல் பாரா முடிவிலேயே எலி வந்துவிடுகிறது ஆனால் மொழிபெயர்ப்பில் மூன்றாம் பக்கத்தில் தான் எலி எண்டரி கொடுக்கிறது. இரண்டு கதையையும் படித்து பார்த்தால் எப்படி கதை எழுத வேண்டும் என்று நிறைய பாடங்கள் கற்றுக்கொள்ளலாம். சிறுகதை எழுத துடிக்கும் என் போன்ற ஆசாமிகளுக்கு இந்த கதையை படிக்க சிபாரிசு செய்வேன். .
"கண்களைத் தகித்து விடுகிற மாதிரி வெய்யிலின் வெளிச்சம் கட்டாரியாகக் குத்தியது" போன்ற வார்த்தை பிரயோகங்கள் நான் இதற்கு முன் படித்ததில்லை. கதை சூழலுக்கு சில சமயம் இந்த மாதிரி வார்த்தை பிரயோகங்கள் தேவையாக இருக்கிறது. 'சைடு பெட்' என்ற சொல்லுக்கு தமிழில் சரியான வார்த்தை கிடையாது. பந்தயம், சவால் என்று கிட்ட வந்தாலும், பெட் என்ற வார்த்தையே தமிழில் அப்படியே உபயோகிக்கிறோம். நல்ல வேளை ரா.கி.ரங்கராஜன் அப்படி உபயோகிக்கவில்லை.
மனிதனையும், எலியையும் வைத்து இந்த திரில்லிங் கதை ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காகின் ( Alfred Hitchcock Presents: 12 Stories for Late at Night ) தொகுப்பிலும் இருக்கிறது.
இந்த கதையை வசனமே இல்லாமல் குறும் படமாக எடுக்கலாம். யாராவது எடுத்தால் இந்த படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பை என்னிடம் தரலாம்!
-0-o-0- -0-o-0- -0-o-0- -0-o-0- -0-o-0-
|
பேருந்து நாள் ( பஸ் டே ) பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். எனக்கு இந்த மாதிரி ஒன்று இருப்பது 'பார்த்தேன் ரசித்தேன்' படம் பார்த்த பின் தான் தெரிந்தது. சென்னையில் இந்த பேருந்து தினத்தைக் கொண்டாடும் மாணவர்கள் பஸ் மீது ஏறியும், ரகளை செய்தும் கொண்டாடுவது வழக்கம். பெங்களூருவில் ஒவ்வொரு மாதமும் நான்காம் தேதி பேருந்து தினம் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லா பஸ் பின்னாடியும் இதற்கான அறிவிப்பை ஒட்டியுள்ளார்கள். பேருந்து மேலே ஏறி கொண்டாடும் தினமாக இல்லாமல், அன்று எல்லோரும் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும், அவ்வளவு தான். வாகன நெரிசல், சுற்றுப்புற சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை செய்துள்ளார்கள். இந்த திட்டத்தை இந்த வருடம் பெப்ரவரி ஆரம்பித்திருக்கிறார்கள். ஓரளவு நல்ல வரவேற்ப்பு இருப்பதாக செய்திகள் வருகிறது. இந்த திட்டத்தால், இங்கே இருக்கும் ஐ.டி கம்பெனிகாரர்களுக்கு வயற்றில் புளியை கரைத்திருக்கிறது. ஐ.டியில் வேலை செய்பவர்கள், ஒன்றாக பஸ்ஸில் பயணம் செய்தால் மற்ற கம்பெனிகளுக்குத் தாவிவிடுவார்களோ என்று பயந்துபோய் இருக்கிறார்கள். இப்படி எல்லோரும் ஒன்றாக ஒரே பேருந்தில் போவதற்குப் பதிலாக, ஒவ்வொறு கம்பெனிக்கும் தனித்தனியாக பஸ் விடலாமா என்று பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள் இந்த புத்திசாலிகள்.
படங்கள்: தேசிகன்
கூடுவோம்...
|