தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.
ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.
தொடர்கள்
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி
------------------------
என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.
2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.
'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
பாபநாசம் சிவன் சினிமாவுக்கு எழுதிக்கொண்டிருந்த கவிஞர் என்கிற வகையில் அறியப்படக்கூடாது. அவரைத் தமிழ்த் தியாகய்யர் எனக் கூறுவார்கள். சினிமாவுக்காக அல்லாமல் ஏராளமான தமிழ்ப்பாடல்களை எழுதி, அவைகள் சினிமாவில் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே இவரையும் ஒரு இலக்கியவாதி வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம். தெலுங்கில் எழுதிய தியாகய்யர் போல் தமிழில் ஏராளமான பக்திப்பாடல்களை இயற்றி இன்றளவும் அவைகள் கச்சேரி மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான மெட்டுக்களையும் அமைத்துவிடும் திறன் இவருக்கு உண்டு. அவைகள் யாவும் கர்நாடக சங்கீத மெட்டில் அமைந்திருந்ததால் சினிமா இசையமைப்பாளர்களுக்கு எவ்வித சிரமும் இருந்ததில்லை. 'தாராபுரம் தாம்பரம் உன் தலையில் கனகாம்பரம்' என்பது போன்ற கவித்துவம் நிறைந்த பாடல்களெல்லாம் இவருக்கு எழுத வராது.
தஞ்சை மாவட்டம் போலகம் எனும் ஊரில் 1890-ல் பிறந்த இவரது இயற்பெயர் ராமய்யா. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். இவரது இளமைக் காலம் திருவனந்தபுரத்தில் கழிந்திருக்கிறது. ஏழை பிரமாணர்கள் சாப்பிடுவதற்கு வசதியாக அக்காலத்தில் திருவிதாங்கூர் மகாராஜாவின் ஏற்பாட்டில் பல ஊர்களில் இலவச அன்னதானம் நடைபெறும். இந்த ஏற்பாட்டினை தினமும் ஏழை பிராமணர்கள் இலவசமாகச் சாப்பிட முடியும். அப்படி அன்னதானம் அளிக்கப்படும் இடங்களுக்கு ஊட்டுப்புரை என்கிற பெயர் உண்டு. இங்கு தான் ராமய்யாவுக்கு சாப்பாடு. எனவே திருவனந்தபுரம் சென்றதில் சாப்பாடு கவலையில்லாமல் கழிந்தது.
திருவனந்தபுரத்தில் கரமனை என்கிற பகுதியில் வசித்து வந்தார். அங்கிருந்த பஜனை கோஷ்டி ஒன்றில் பாடி வந்தார். பாலக்காடு அருகே நூருணி என்கிற ஒரு ஊர். இந்த ஊரைச் சேர்ந்த பாகவதர் ஒருவரின் நட்பு இங்கே கிடைத்தது. அது இவரது இசை ஞானத்தை வளர்க்க உதவியாக இருந்தது.
இந்நேரம் தாயாரும் காலமாகி விடுகிறார். எனவே, தனது தமையன் பணிபுரிந்து வந்த தஞ்சை மாவட்டம் பாபநாசம் வந்து சேரவேண்டியதாயிற்று. இங்கிருக்கும் போதுதான் திருமணமாயிற்று.
1939 ஆம் ஆண்டு சென்னையில் குடியேறினார். வீணை எஸ் பாலச்சந்தரின் தகப்பனார் சுந்தரம் அய்யரின் நட்பு கிடைத்தது. சுந்தரம் அய்யரின் மூத்தமகன் எஸ் ராஜம் (ஓவியர்) எஸ் பாலச்சந்தர், மகள் எஸ் ஜெயலட்சுமி மற்றும் சுந்தரம் அய்யர் ஆகியோர் நடித்த 'சீதா கல்யாணம்' என்கிற திரைப்படத்திற்கு தன் முதல் பாடல் இயற்றினார் பாபநாசம் சிவன். ஆண்டு 1934.
மைலாப்பூரில் வாசம். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் பஜனை கோஷ்டியில் பிரதான பாடகர். மாட வீதியைச் சுற்றி வரும் இந்த பஜனை கோஷ்டி, கற்பகாம்பாள் பேரில் பல பாடல்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.
பாபநாசம் சிவன் தனது குருவாக பிரபல சங்கீத வித்வான் கோனேரிராஜபுரம் வைத்யநாதய்யரையே கருதி வந்திருப்பதாக ஒரு பேட்டியில் அவரது மகள் திருமதி ருக்மணி ரமணி அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சிவனின் சகோதரன் ராஜகோபாலய்யரின் புதல்வி மறைந்த எம்ஜியாரின் துணைவியார் வி.என். ஜானகி என்கிற பதிவுகள் உள்ளன.
1934ல் சினிமாவுக்குப் பாடல் எழுத ஆரம்பித்த பாபநாசம் சிவன் 1950 வரையிலும் தீவிரமாக இயங்கியிருக்கிறார். எம் கே தியாராஜ பாகவதர், பி யூ சின்னப்பா, ஹொன்னப்ப பாகவதர், டி ஆர் மகாலிங்கம் போன்றோரின் பல படங்களுக்கு பாடல்கள் இயற்றி அவைகள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. 1936ல் வெளிவந்த எம் கே தியாகராஜபாகவதர் நடித்த 'சத்திய சீலன்' படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
இவரது கீர்த்தனைகள் பலவும் புத்தக உருவில் வெளிவந்திருக்கிறது. சிந்து பைரவி ராகத்தில் இவர் இயற்றி, ஆலத்தூர் சகோதர்களால் பாடப்பட்டு, இசைத்தட்டாக வெளிவந்த பாடப் 'சந்திரசேகரா ஈசா', இப்பாடல் இன்றும் கூட பல மேடைகளில் கர்நாடக இசை வித்வான்களால் பாடப்படுகிறது. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை.
மிகவும் சிறப்பான சில திரைப்படப்பாடல்களை இப்போது நினைவு கூரலாம்.
இவற்றைப்போல் இன்னும் எண்ணற்ற பாடல்கள் - இப்பாடல்களெல்லாம் அக்காலத்தில் தமிழகத்தில் ஒலிக்காத இடமே கிடையாது. ஏறத்தாழ 100 படங்களுக்கு மேல் பாடல்கள் இயற்றியிருக்கிறார்.
இவைகள் தவிர தமிழின் முக்கியமான சில படங்களில் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. 1939ல் சேவசதனம். 1943ல் குபேரகுசேலா. இதில் குசேலராக மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியம் 'தியாகபூமி'. இப்படத்தில் நடித்த பாபநாசம் சிவன் அவர்களைத் திரையுலகம் மறக்க இயலாது.
1961 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது அளித்து கௌரவித்தது. காமகோடி பீடம் இவருக்கு 'சிவபுண்ணியகானமணி' என்கிற பட்டத்தை வழங்கியது. தமிழ் சினிமா உள்ள காலம் முழுவதம் பாபநாசம் சிவனின் பெருமை திரையுலகில் நிரந்தரமாக இருந்து வரும்.
பாபநாசம் சிவனின் பாடல்கள் இடம் பெற்ற சில முக்கியமான படங்கள்
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.