தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.
ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.
தொடர்கள்
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி
------------------------
என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.
2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.
'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
கல்கி என்கிற இலக்கியவாதியை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது என்கிற அளவில் மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர். வெகுஜன வாசகர்களை இவரைப்போல் தன்வசம் இழுத்தவர்கள் மிகவும் குறைவு.
1899ல் புத்தமங்கலம் எனும் ஊரில் பிறந்தார். இது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. படித்துக்கொண்டிருக்கும்போதே பாதியில் படிப்பை உதறிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1922 ஆம் ஆண்டில் முதல் சிறைவாசம். விடுதலை ஆகி வெளிவந்த பின் திரு வி. கல்யாண சுந்தரனார் ஆசிரியராக இருந்த 'நவசக்தி' பத்திரிகையில் வேலைக்கு அமர்ந்தார். சிறிது காலம் சென்றபின், நவசக்தியை விட்டு விலகி, திருச்செங்கோட்டில் ராஜா நடத்தி வந்த பத்திரிகை ஒன்றின் உதவி ஆசிரியராக சேர்ந்து, திருச்செங்கோடு ஆசிரமத்திலேயே வாழ்ந்து வந்தார். 1930ல் மறுபடியும் சுதந்திரப்போராட்டம், சிறைவாசம், 1932ல் விடுதலையாகி வந்த பின், எஸ் எஸ் வாசனின் ஆனந்தவிகடனில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது முதல் நாவல் 'கள்வனின் காதலி' 1937லிருந்து ஆனந்தவிகடனில் தொடராக வெளிவர ஆரம்பித்தது. 1939ல் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றியை அடைந்த 'தியாகபூமி' படத்தின் கதை கல்வி அவர்கள் எழுதியது. கே சுப்ரமணியத்தின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பாபநாசம் சிவன் நடித்திருப்பது ஒருஅரிய செய்தி. இப்படம் இன்றளவும் ஒரு திரைக்காவியமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனந்தவிகடனிலிருந்து விலகிய கிருஷ்ணமூர்த்தி, சதாசிவம் அவர்களுடன் கூட்டாகச் சேர்ந்து 'கல்கி' பத்திரிகையை 1941ல் நிறுவினார். இதன் பிறகு இவர் கல்கி என்றே அறியப்பட்டார். 'கல்கி' பத்திரிகையில் தொடர்ந்து இவரது நாவல்கள் பிரசுரம் கண்டன. கல்கி மிகவும் பாப்புலரான எழுத்தாளராக உருவெடுத்தார். தொடராக கல்கியில் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அலை ஓசை, பொன்னியின் செல்வன் போன்று வெளிவந்த நாவல்கள் வாசகர்களிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்றன. கல்கி தமிழவாசகர்களிடையே ஒரு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தலைசிறந்த வெகுஜன எழுத்தாளராக மதிக்கப்பட்டார்.
இடையில் 'மீரா' திரைப்படம் 1945ல் வெளிவந்து மிகவும் புகழ் பெற்றது. கதை, வசனம் கல்கி. அதோடு இப்படத்தில் சில பாடல்களும் எழுதினார். குறிப்பாக 'காற்றினிலே வரும் கீதம்' இம்மியளவும் சுவை குன்றாமல் எம் எஸ். அவர்களால் பாடப்பெற்று, இன்றளவும் சாகாவரம் பெற்ற பாடலாகத் திகழ்ந்து வருகிறது. இதே படத்தில் இவரது மற்றொரு பாட்டான 'மறைந்த கூண்டிலிருந்து விடுதலை அடைந்த பறவை விரைந்தோடுதே' என்கிற பாடல் தான் என்னளவில் மிகச்சிறந்த பாடலாக எண்ணத் தோன்றுகிறது. 'காற்றினிலே வரும் கீதம்' மிகச்சிறிய சந்தங்களில் எவரும் எளிமையில் பாடிவிடும் விதமாக அமைக்கப்பட்ட மெட்டில் உருவானது. விசேஷமான உணர்ச்சிகளெல்லாம் அதில் கிடையாது. ஆனால் மேவார் ராணாவின் அரண்மனையில் கூண்டுக்கிளியாக அடைபட்டுக் கிடந்த மீரா, அக்கூண்டிலிருந்து விடுபட்டு, தான் விரும்பும் கண்ணனை நோக்கி துவாரகை புறப்படும்போது பாடப்படும் உணர்ச்சி வெள்ளமான இப்பாடல் 'காற்றினிலே' பாடலைப் போல் பிரபலமடையாமல் போனது துரதிருஷ்டவசமானது. 'மீரா' படத்தின் சி டி.க்கள் கிடைக்கிறது. வாசகர்கள் இசை ஆர்வலர்கள் நிச்சயமாகக் கேட்க வேண்டிய பாடல்.
1953ல் 'மின்மினி' என்றொரு படம். இப்படம் தோல்வியைத் தழுவிய படம். கல்கி இதில் சில பாடல்கள் எழுதியிருக்கிறார். சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமில்லை.
'மீராவுக்குப் பிறகு திரைப்படமாகத் தயாரிக்கப்பட்ட இவரது நாவல் 'பொய்மான் கரடு' இந்த நாவல் 'பொன்வயல்' என்கிற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. தயாரித்தவர் பிரபல நகைச்சுவை நடிகர் டி ஆர் ராமச்சந்திரன். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒரு புதிய மிகப்பெரிய பின்னணிப்பாடகர் அறிமுகமானார். சீர்காழி கோவிந்தராஜன் இப்படத்தில் பாடிய 'சிரிப்புத்தான் வருகுதய்யா' என்கிற பாடல்தான் சீர்காழியின் முதல் திரைப்படப்பாடல். பாடலை எழுதியவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். சீர்காழி கோவிந்தராஜனுக்குத் திரையுலகில் ஒரு வழியைத் திறந்து விட்ட இப்படம் 1954ல் வெளிவந்தது.
இவரது 'கள்வனின் காதலி' நாவலை டி கே எஸ் சகோதரர்கள் நாடகமாக நடத்தி வந்தார்கள். இக்கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு 1955ல் வெளிவந்தது. சிவாஜிகணேசன் பானுமதி ஜோடி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வியையே சந்திக்க வேண்டியதாயிற்று. கல்கியின் பார்த்திபன் கனவு தொடராக வெளிவந்தபோது மிகவும் பாராட்டுதல்களைப் பெற்றது.
கதையில் சில விசயங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. அந்த ரகசியத்தைத் திரைப்படத் தயாரிப்பின்போது காப்பாற்ற இயலவில்லை. கதையில் சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்டவை. திரையில் இல்லாமல் போனது இப்படத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது. ஆனால் சில நல்ல பாடல்கள், குமாரி கமலாவின் நாட்டியம், ஓவியர் மணியம் அவர்களின் கலை போன்ற அம்சங்கள் இப்படத்தை ஓரளவு காப்பாற்றின. கல்கி எழுதி கடைசியாகத் தயாரிக்கப்பட்ட படமும் இப்படம்தான்.
எழுத்துத்துறையில் பன்முகத்தன்மை கொண்ட கல்கி பல்வேறு புனைப்பெயர்களில் எழுதி வந்தார். கர்நாடகம், தமிழ்த்தேனீ, அகஸ்தியன், லாங்கூலன், ராது, தமிழ்மகன், விவசாயி, போன்றவை இவரது புனைப்பெயர்கள். நாட்டியம், சங்கீதம், சினிமா போன்ற பல்வேறு துறைகள் பற்றிய இவரது விமர்சனங்கள் அக்காலத்தில் மிகவும் பரபரப்பாகப்பேசப்பட்டன. 'அலை ஓசை' என்கிற நாவலுக்காக, சாகித்திய அகாடமி விருது இவரது மறைவுக்குப் பிறகு 1956 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
திரைப்படத்தில் இவரது பங்கு:
1939 தியாக பூமி கதை
1945 மீரா வசனம் பாடல்கள்
1953 மின்மினி பாடல்கள்
1954 பொன்வயல் (பொய்மாண் கரடு) கதை
1955 கள்வனின் காதலி கதை
1960 பார்த்திபன் கனவு கதை
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.