வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
-------------------------

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.

ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.

 
     
     
     
   
தொடர்கள்
1
 
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 

 
 

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.

கிருஷ்ணன் வெங்கடாசலம்

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS மாயலோகத்தில் TS கிருஷ்ணன் வெங்கடாசலம் தொடர்கள் வாயில்


ஜே.ஆர். ரங்கராஜு & வை.மு. கோதைநாயகி அம்மாள்

கிருஷ்ணன் வெங்கடாசலம்  

2. ஜே.ஆர். ரங்கராஜு

வடுவூர் துரைசாமி ஐயங்கார் துப்பறியும் நாவல்கள் எழுதி புகழுடன் இருந்து வந்த அதே காலத்தில், அவரைப்போலவே துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் மிகவும் திறமை வாய்ந்த மற்றுமொரு எழுத்தாளர் ஜே.ஆர். ரங்கராஜு. ’ராஜாம்பாள்' என்கிற இவரது நாவல் இதே பெயரில் திரைப்படமாக 1935ல் வெளிவந்தது. மீண்டும் இக்கதை இரண்டாவது முறையாக 1951ல் தயாரிக்கப்பட்டு இதே 'ராஜாம்பாள்' என்கிற பெயரில் வெளிவந்தது. நாடகக்காவலர் என்று பின்னாளில் பெயர்பெற்ற ஆர்.எஸ்.மனோகரின் அறிமுகப்படம் இது. இதில் மனோகர் கதாநாயகனாகத்தான் அறிமுகமானார்.

கதாநாயகி சிலரால் கடத்திச் செல்லப்படுகிறார். கடத்தியவர்கள் அறியாதவாறு ஒரு துண்டுச்சீட்டில் 'மோசம் போனேன் கோபாலா' என்கிற வாக்கியம் ஒன்றை எழுதி அதைத் தரையிலே வீசிவிட்டுச் செல்வார். அதைக் கண்டெடுத்து அதை வைத்தே குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிடும் துப்பறியும் நிபுணர் கதாநாயகன் மனோகர். படம் மிகவும் நன்றாக ஓடியது. திரை உலகில் மனோகர் என்கிற நடிகர் உதயமானார்.

இதே 1951ல் இன்னுமொரு திரைப்படம் டி.ஆர்.மகாலிங்கம் தயாரிப்பில் வெளிவந்தது. படத்தின் பெயர் மோகன சுந்தரம். இதுவும் ஜே ஆர். ரங்கராஜுவின் ஒரு துப்பறியும் நாவல்தான். டி ஆர் மகாலிங்கம் பிரபலமான ஜோடிகள் 'பாட்டு வேணுமா, உனக்கொரு பாட்டு வேணுமா? என்று டி ஆர் மகாலிங்கம் பாடியிருந்த இப்பாடல் பிரபலமான பாடல். இப்படம் ஒரு வெற்றிப்படம்.

'சந்திரகாந்தா' என்கிற இவரது நாவல் மிகவும் பிரபலமான நாளில் இந்தப் பெயரால் 1936ல் வெளிவந்த படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம். போலிச் சாமியார்களை கிண்டல் செய்யும் பல பகுதிகள் இக்கதையில் உண்டு. அவைகள் படமாகவும் ஆக்கப்பட்டிருந்தன. காளி என் ரத்தினம் என்னும் நகைச்சுவை நடிகர் இப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றார். தேகாப்பியாசம் செய்ய அழகிகளை அழைப்பதான காட்சிகள் அக்காலத்தில் சற்று விரசமாக இருந்தது என்று பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் படம் வெற்றியடைந்ததாகத் தகவல்கள் இருக்கிறது.

இதே படம், மறுபடியும் 1960ல் 'சவுக்கடி சந்திரகாந்தா' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. டி.எஸ். பாலையா, டி.கே. ராமச்சந்திரன், காக்கா ராதாகிருஷ்ணன், சௌகார் ஜானகி, தாம்பரம் லலிதா போன்றோர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால் படம் வெற்றி பெறவில்லை. இதன் பிறகு ஜே ஆர் ரங்கராஜுவின் கதைகள் எதுவும் படமாக்கப்படவில்லை. இவர் சினிமாவாகத் தயாரிக்கப்பட்ட சந்திரகாந்தா, மோகன சுந்தரம் நாவல்கள் தவிர ஆனந்த கிருஷ்ணன், ராஜேந்திரன் போன்ற நாவல்களும் எழுதியிருக்கிறார்.

3. வை.மு. கோதைநாயகி அம்மாள்

சென்னை திருவல்லிக்கேணியில் 1901 ஆம் ஆண்டு பிறந்தவர் வை.மு. கோதைநாயகி அம்மாள். இவரது குடும்பம் ஒரு ஆசாரமான வைஷ்ணவ குடும்பமாகும். தனது ஆறாவது வயதிலேயே திருமணமான இவர் பள்ளி சென்று முறையாகக் கல்வி பயின்றதே கிடையாது. சுய முயற்சியில் பின்னாட்களில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றார். ஆரம்பத்தல் வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே ஆர் ரங்கராஜு போன்று துப்பறியும் நாவல்களே எழுதி வந்த இவர், நாளடைவில் குடும்பப் பாங்கான நாவல்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார். இவரது முதல் முயற்சி ஒரு நாடகம். 'இந்திர மோகனா' என்று பெயர். தமிழ் எழுதுவதற்கு முறையான தேர்ச்சி அப்போது பெற்றிருக்காத அந்நேரம், வாய்மொழியாக இவர் கூற அவரது தோழி ஒருவர் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

வை.மு. கோதைநாயகி அம்மாளின் முதல் நாவல் 'வைதேகி'. இந்நூலை பிரபல துப்பறியும் நூலாசிரியர் வடுவூர் துரைசாமி ஐயங்கார் உதவியுடன் வெளியிட்டிருக்கிறார். இவர் ஒரு காந்தீய வாதியாகவும் திகழ்ந்தார். நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற அனுபவமும் இவருக்கு உண்டு. கள்ளுக்கடை மறியல், அந்நிய துணி பகிஷ்கரிப்புப் போராட்டங்களில் கலந்து கொண்ட ஒரு சிறந்த விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்திருக்கிறார். இவரது சிறந்த நாடக நூல்களாக அருணோதயம், வத்சகுமார், தயாநிதி போன்றவை அக்காலத்தில் மிகுந்த பாராட்டுதல்களை பெற்றிருக்கிறது.

இவருக்கு சங்கீதத்திலும் நல்ல ஈடுபாடு இருந்திருக்கிறது. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த பிரபல கர்நாடக இசை மேதை டி கே பட்டம்மாள் இவருக்கு நெருங்கிய தோழி. மேலும் இவர் தெலுங்கு, சம்ஸ்கிருதம் மொழிகளில் சில சாகித்தியங்களையும் இயற்றியுள்ளார்.

1925ல் 'ஜெகன் மோகினி' என்கிற பத்திரிகையை வாங்கி, அதைத் தொடர்ந்து 35 வருடங்கள் ஆசிரியராகவும் இருந்து நடத்தி வந்த செய்தி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. வை.மு. கோதைநாயகி அம்மாள் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்த காரணத்தினால், காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் நெருங்கிய அறிமுகமுடையவர்களாக இருந்தார்கள். காமராஜர், ராஜாஜி, சத்யமூர்த்தி போன்றோரின் நட்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது.

இவரது 'ராஜமோகன்', 'அனாதைப்பெண்' நாவல்கள் முறையே 1937 மற்றும் 1938ல் திரைப்படமாகத் தயாரக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. ராஜமோகன் திரைப்படத்திற்கு இவரே வசனமும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1966ல் எம் ஆர். ராதா, பத்மினி நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'சித்தி' என்கிற திரைப்படத்தின் கதை இவரது 'தயாநிதி' என்கிற நாவல். இவர் 1960ல் தனது 59 வயதில் சென்னையில் காலமானார்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.