வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
-------------------------

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.

ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.

 
     
     
     
   
தொடர்கள்
1
 
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 

 
 

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.

கிருஷ்ணன் வெங்கடாசலம்

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS மாயலோகத்தில் TS கிருஷ்ணன் வெங்கடாசலம் தொடர்கள் வாயில்

தி. ஜானகிராமன்

கிருஷ்ணன் வெங்கடாசலம்  

நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் தி. ஜானகிராமனின் இடம் மிகவும் முக்கியமானது. அபூர்வமான சொற்கட்டுகளும், அலாதியான வடிவமும், தஞ்சைத்தமிழும் அதன் அழகுகளும் இவரின் நாவல்கள், சிறுகதைகளில் பின்னிப் பிணைந்து காணப்படும்.

தஞ்சைப் பிரதேசத்தைச் சேர்ந்த மொழியையும், வழக்குகளையும் உள்ளடக்கியதுதான் இவரது கதைகள் என்றாலும், அவைகள் பிரதேச எல்லைகளையும் தாண்டி தீவிர இலக்கியவாசகன், ஜனரஞ்சக வாசகர்கள் என அனைவரது மனதையும் கவ்வி இழுத்தது என்பது மிகையல்ல.

ஜானகிராமன் தனது இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார் எனத்தோன்றுகிறது. தனது பதினைந்தாவது வயதிலேயே கதைகள் எழுதியிருக்கிறார்.

தி ஜானகிராமன் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த தேவங்குடி என்னும் ஊரில் 1921ல் பிறந்தார். ஆரம்ப காலங்களில் சங்கீதப் பயிற்சியும் மேற்கொண்டிருக்கிறார். இவருடைய பல கதைகளில் சங்கீதம் பற்றிய பல அருமையான தகவல்கள் விரவிக்கிடப்பதைக்காண, சங்கீதத்தில் இவருக்கு இருந்த ஞானமும், அறிவும் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும். இலக்கியத்தில் எம்.ஏ.படித்திருக்கும் இவர் ஆரம்பத்தில் சிலகாலம் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து பின் அகில இந்திய வானொலி நிலையத்தில் சென்னையில் வேலை பார்த்தார். பிறகு புதுடெல்லி வானொலி நிலையத்திலும் பணியாற்றி சிறந்த சேவை புரிந்து 1978 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

ஆரம்ப காலங்களில் 'கலைமகள்' பத்திரிகையில் எழுதி ஒரு நட்சத்திர எழுத்தாளராக உருவெடுத்தார். 'மணிக்கொடி' இதழிலும் இவரது சிறு கதைகள் வெளி வந்திருக்கின்றன. இவரது முதல் சிறு கதைத்தொகுப்பு 'கொட்டு மேளம்' 1954ல் வெளி வந்து மிகவும் பிரபலமடைந்தது. இரண்டாவது சிறுகதைத் தொகுதி 'சிவப்புரிக்ஷா'. 1956ல் வெளிவந்த இச்சிறுகதைத் தொகுப்பும் ஜானகிராமனுக்கு மிகவும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது. பல எழுத்தாளர்கள் இவரது விசிறியாகத் திகழ்ந்தார்கள்.

இவரது மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றான 'மோகமுள்' 1958லிருந்து 'சுதேசமித்திரன்' வாரப்பத்திரிகையில தொடராக வெளிவந்தது. தமிழின் மிகச் சிறந்த பத்து நாவல்களைத் தேர்ந்தெடுத்தால் அத்தேர்வில் நிச்சயமாக 'மோகமுள்' நாவலுக்கு இடமுண்டு.

தொடர்ந்து இவரது சிறு கதைத் தொகுப்புகளாக அக்பர் சாஸ்திரி (1963), கமலம் (1963), சிவஞானம் (1964), யாதும் ஊரே (1967), பிடிகருணை (1974) சக்தி வைத்தியம் (1978), மனிதாபிமானம் (1980) ஆகிய சிறந்த சிறு கதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன.

இவரது 'சக்தி வைத்தியம்' தொகுப்புக்காக இவருக்கு 1979ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

ஜானகிராமன் எழுதிய நாவல்கள் மொத்தம் எண்ணிக்கையில் ஒன்பது. அவைகள் முறையே 'அமிர்தம்' (1944), மலர் மஞ்சம் (1961), மோகமுள் (1964), அன்பே ஆரமுதே (1965), அம்மா வந்தாள் (1967), உயிர்த்தேன் (1967), செம்பருத்தி (1968), மரப்பசு (1975), நளபாகம் (1983) ஆகியவை புத்தக வடிவில் உருப்பெற்றன.

'அம்மா வந்தாள்' நாவல் தமிழ் வாசகர்களிடையேயும், இலக்கிய விமர்சகர்களிடையேயும் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானாலும், உள்ளபடியே 'மோகமுள்' போலவே இதுவும் தமிழின் மிக உன்னதமான படைப்புக்களில் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்த நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி' ஆங்கில இதழில் தொடராக வெளிவந்திருக்கிறது. எம். கிருஷ்ணன் என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். இத்தொடர் பின்னாளில் 'அப்பூஸ் மதர்' என்கிற பெயரில் புத்தக வடிவிலும் வடிவிலும் வெளிவந்தது. 'உயிர்த்தேன் மற்றுமொரு மிகச்சிறந்த புதினம்.

இவரது சில சிறு கதைகளும், நாவல்களும் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாவல், சிறுகதைகள் தவிர சில நல்ல நாடகங்களும், பயண நூல்களும் இவற்றியிருக்கிறார். பி.எஸ்.ராமையாவின் நட்பில் இவர் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவிற்காகச் சில நாடகங்கள் எழுதிக் கொடுத்து அவைகளும் நாடகமாக நடிக்கப்பட்டு, மிகச் சிறந்த பெயரைப் பெற்றன. அந்த வகையில் முக்கிய நாடகங்களாக நாலு வேலி நிலம், டாக்டருக்கு மருந்து, வடிவேலு வாத்தியார் போன்ற நாடகங்களைக் குறிப்பிட முடியும்.

இவரது பயண நூல்கள் வரிகையில் உதய சூரியன் (1965), நடந்தாய் வாழி காவேரி (1971) கலைக்கடலும் கருங்கடலும் (1974) போன்றவை மிகவும் முக்கியமானவை. 1971ல் வெளிவந்த 'நடந்தாய் வாழி காவேரி' பயண நூலை 'சிட்டி' அவர்களுடன் சேர்ந்து கூட்டாக எழுதியுள்ளார். பயண நூல்களில் மிகவும் முக்கியமான இந்நூலை சமீபத்தில் புத்தம் புதிய பொலிவுடன் 'காலச்சுவடு' பதிப்பகம் வெளிக் கொண்டு வந்திருப்பது இப்போதைய வாசகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்நூல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு நூல் வடிவில் வெளி வந்துள்ளது.

இவைகளெல்லாம் போதாதென்று, சில அருமையான மொழி பெயர்ப்புகளும் செய்து, நல்ல பிற மொழி நூல்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார். அமெரிக்க நாவலான ஹெர்மன் மெல்வில் எழுதி மிகவும் பிரபலமான 'மோவிடிக்' என்ற நாவல், நோபல் பரிசு பெற்ற இத்தாலிய நாவலாசிரியர் டெலடாவின் 'அன்னை', ஜார்ஜ் காமரன் எழுதிய 'பூமி என்னும் கிரகம்' போன்றவை ஜானகிராமரின் மொழி பெயர்ப்புத்திறனுக்குச் சான்றாக விளங்குகிறது.

1978 ல் பணி ஓய்வு பெற்ற பின் சில காலம் இலக்கிய இதழ் 'கணையாழி'ன் ஆசிரியராகவும் இலக்கிய சேவை புரிந்திருக்கிறார்.

இவரது 'நாலுவேலி நிலம்' திரைப்படமாத் தயாரிக்கப்பட்டு வெளி வந்தது. படம் வசூலில் வெற்றி பெறவில்லை.

'மோகமுள்' திரைப்படமும் வசூலில் பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது. ஆனால் சினிமா விமர்சகர்களின் பாராட்டு தலை இப்படம் ஏராளமாகப் பெற்றது.

அறுபத்தியரு வயதை ஒரு பெரிய வயது எனச் சொல்ல முடியாது. ஆனால் இவ்வயதில் தான் 1982ல் ஜானகிராமன் காலமானார். இந்த இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு நிச்சயமாக ஒரு ஈடு செய்ய முடியாத இழப்புத்தான்.

தொடரும் ...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.