அகிலன்
'கல்கி' கிருஷ்ணமூர்த்தி அடுத்தபடியாக வெகுஜன வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றிருந்த எழுத்தாளர் அகிலன். இவரது இயற்பெயர் அகிலாண்டம். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையிலுள்ள பெருங்களுர் இவர் பிறந்த ஊர். 1922 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்தார்.
சொத்து சம்பந்தமான குடும்ப வழக்கு ஒன்றன் தொடர்பாக இவரது தந்தை கரூருக்கு இடம் பெயர வேண்டிய தாயிற்று. எனவே இவரது ஆரம்பக் கல்வி கரூரில் தொடங்கியது. ஆறாம் வகுப்பிலிருந்து தான் கல்வியை புதுக்கோட்டை மகாராஜா கிளைக்கல்லூரியிலும், உயர் நிலைக் கல்வியை மகாராஜா கல்லூரியிலும் தொடர்ந்தார். குடும்பம் அப்படியன்றும் அப்போது வசதியான குடும்பமாக இருக்கவில்லை.
மேல்நிலை பள்ளிப்பருவத்தில் திரு.வி.க.வின் நூல்கள் இவரைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. பழம் பெரும் இலக்கியங்களில் இவருக்கு இருந்த ஆர்வம் பின்னாட்களில் வரலாற்று நாவல் எழுதத் தூண்டுதலாக இருந்தது. அதேபோல் பாரதியிடமும் இவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
பள்ளியில் மாணவனாக இருக்கும்போதே கதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. கல்லூரி காலாண்டு பத்திரிகை ஒன்றில் 'அவன் ஏழை' என்கிற தலைப்பில் இவர் எழுதிய கதைதான் இவரது முதல் படைப்பு.
இந்நிலையில் இவரது தகப்பனாரின் மரணம், இவரை பள்ளி இறுதி வகுப்புக்கு மேல், கல்லூரியில் கல்வியைத் தொடர அனுமதிக்கவில்லை. தாயாரையும், தங்கையையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு வந்து சேர்ந்ததால் படிப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.
அவரது சொந்த ஊரான பெருங்களுர் கிராமத்திலேயே முதன்முதலில் ஒரு வேலை கிடைத்தது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் எடுக்கும் வேலை. இதே வேலையை பின்பு புதுக்கோட்டை பொன்னமராவதி, கீரனூர் போன்ற ஊர்களிலும் தற்காலிகமாகச் சில காலம் பார்க்கவேண்டியதாயிற்று.
இவர் எழுதி அச்சில் வெளிவந்த முதல் சிறு கதை 'சரஸியின்ஜாதகம்' 'கல்கி' பத்திரிகை வெளியிட்டது. இவருக்கு 1944 ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு இவருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. ரயில்வே சார்டர் வேலை. திருநெல்வேலியில் ஆர்.எம்.எஸ்.பிரிவில் பயிற்சி தொடங்கியது. பிறகு தென்காசிக்கு மாற்றலாகி வந்தார்.
இவர் எழுதிய முதல் நாவலான 'இன்பநினைவு' முதலில் 'மங்கிய நிலவு' என்ற பெயரில் 1944ல் வெளியிடப்பட்டது. இதுவே சில மாற்றங்களுடன் 1949ல் 'இன்ப நினைவு' என்கிற பெயரில் வெளி வந்தது. இவரது 'காசுமரம்' என்கிற சிறு கதையை 'கலைமகள்' பத்திரிகை வெளியிட்டது. தொடர்ந்து பல சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்தன.
1945ல் 'கலைமகள்' பத்திரிகை, நாவல் போட்டி ஒன்றை அறிவித்தார்கள். நாராயண சாமி அய்யர் நினைவு நாவல் போட்டி என்று பெயர். முதல் போட்டியிலேயே இவரது 'பெண்' என்கிற நாவல் முதல் பரிசைப் பெற்றது. இந்நாவல் சில காலங்களுக்குப் பிறகு சரஸ்வதி ராம் நாத் மொழி பெயர்ப்பில் இந்தியில் வெளி வந்தது. இதே நாவல் கன்னடம், மலையாளம், வங்காளி போன்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
'கலைமகள்' ஆசிரியர் கி.வா. ஜகன்நாதனின் ஆதரவு இவரது எழுத்திற்குப் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. இவரது பெரும்பாலான படைப்புகள் 'கலைமகள்' பத்திரிகையில்தான் பிரசுரம் கண்டது.
தென்காசியில் சுமார் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தபின் அகிலன் திருநெல்வேலிக்கும் பிறகு திருச்சிக்கும் மாற்றலாகி வந்தார். திருச்சி வானொலியில் வேலை பார்த்து வந்த எழுத்தாளர் சுகி சுப்ரமணியம் மற்றும் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் போன்றோரின் நட்பும் தொடர்பும் அங்கு திருச்சி எழுத்தாளர் சங்கம் ஒன்றை ஆரம்பிக்க உறுதுணையாக இருந்தது. இவர்களோடு 'காதல்' என்கிற பத்திரிகையை நடத்தி வந்த அரு.ராமநாதன் அவர்களின் நட்பும் கிடைத்தது. அரு. ராமநாதனும் பிரபலமான பல சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார்.
திருச்சியில் சுமார் பதினான்கு ஆண்டுகள் ஆர்.எம்.எஸ்.ஸில் வேலை பார்த்த அகிலன் 1958ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தார்.
இவரது 'பாவை விளக்கு' என்னும் புதினம் அப்போது 'கல்கி'யில் தொடராக வெளிவந்து மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. திரைப்பட இயக்குனர் கே. சோமு இவரது நண்பர். இவர் மூலமாக இயக்குனர், நடிகர், தயாரிப்பாளரான ஏ.பி. நாகராஜனின் தொடர்பும், நட்பும் கிடைத்தது. ஏ.பி.நாகராஜனுக்கு 'பாவை விளக்கு' நாவல் பிடித்திருந்தது. எனவே இவரது யூனிட்டைச் சேர்ந்த கோபண்ணா, விஜயரங்கம் ஆகியோர் தயாரிக்க கே. சோமு இயக்கத்தில் 'பாவை விளக்கு' திரைப்படம் உருவாக ஆரம்பித்தது. தமிழ் வெகுஜன வாசகர்களிடையே இந்த நாவல் மாபெரும் வெற்றியடைந்திருந்ததால், தமிழ் திரைப்பட ரசிகர்களும் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்தார்கள். சிவாஜிகணேசன், சௌகார் ஜானகி, பண்டரிபாய், எம்.என். ராஜம், போன்ற தேர்ந்த நடிகர்கள் இருந்தும் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. சில பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, 'காவியமா இல்லை ஓவியமா?' என்கிற பாடலும், 'வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்எதிரே வந்தாள்' என்கிற பாடலும் மிகவும் பிரபலமாயிற்று.
இதே நேரத்தில் இவரது 'வாழ்வு எங்கே? என்கிற நாவலைப் படமாக்கும் உரிமையை ஸ்பைடர் பிலிம்ஸ் கம்பெனி பெற்று படப்பிடிப்பைத் தொடங்கினர். பல்வேறு காரணங்களில் திரைப்பட வேலைகள் இழுத்துக் கொண்டே போய் கடைசியில் 1963ல் 'குலமகள் ராதை' என்கிற பெயரில் வெளிவந்த இப்படமும், சிவாஜி, தேவிகா நடித்திருந்தும் சொல்லும்படியான வெற்றியைப் பெறவில்லை.
இதற்கிடையில் 1962ல் 'பட்டினத்தார்' என்றொரு படம் வெளி வந்தது. பிரபல பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்திரராஜன் பட்டினத்தாராக நடித்திருந்தார். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தின் திரைக்கதை வசனத்தை தஞ்சை ராமய்யாதாசுடன் இணைந்து அகிலன் கவனித்துக் கொண்டார்.
திரைப்படத்தை நிரந்தரமானதல்ல என்பதை அறிந்து வைத்திருந்த அகிலன் மறுபடியும் நிரந்தரமான ஒரு வேலைக்குப் போவது என முடிவெடுத்தார். திரு கி.வா. ஜகன்னாதனின் நட்பு இவருக்குப் பேருதவியாக இருந்தது. கி.வா.ஜ.வின் சிபாரிசில் சென்னை வானொலி நிலையத்தில் சொற்பொழிவுத் துறையில் அமைப்பாளராகச் சேர்ந்து பின் முதன்மை அமைப்பாளராகவும் உயர்வு பெற்று ஓய்வு பெறுவது வரையிலும் பணியாற்றினார்.
1966ல் வானொலியில் வேலை கிடைப்பது வரை திரைப்படத்துறையிலிருந்து சற்று விலகி, 'கல்கி', இதழுக்கு ஒரு சரித்திர நாவல் எழுத முற்பட்டு 'வேங்கையின் மைந்தன்' என்கிற சரித்திர நாவலைத் தொடராக எழுதினார். இந்நாவல் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்நாவலுக்காக அகிலனுக்கு 'சாகித்திய அகாடமி' விருதும் வழங்கப்பட்டது.
அகிலனின் மற்றுமொரு நாவல் 'சித்திரப்பாவை' இது ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்தது. இந்நூலுக்காக 'ஞானபீட பரிசு' இவருக்கு வழங்கப்பட்டது. தமிழ் எழுத்தாளர்களில் முதன் முதலாக 'ஞான பீட பரிசு பெற்ற எழுத்தாளர் அகிலன். இவரது 'கயல்விழி' என்கிற நாவல் தமிழ்நாடு அரசின் பரிசினைப் பெற்றது. இப்புதினத்தை எம்.ஜி.ஆர் நடித்து இயக்க, 1978ல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என்கிற பெயரில் திரைப்படமாக வெளி வந்து மாபெரும் தோல்வியை சந்தித்தது. எம்.ஜி.ஆர் நடித்த படங்களிலேயே அதிகத் தோல்வி கண்ட படமாக இப்படம் பரவலாகப் பேசப்பட்டது.
எழுத்தாளராக வாசகர்களைக் கவர்ந்த அளவு இவரது கதைகள் படமாக்கப்பட்டபோது அப்படைப்புக்கள் வெற்றி பெறாமல் போயிற்று. தமிழ் நாட்டிலேயே எழுத்துத்துறையில் மிக அதிக எண்ணிக்கையில் விருதுகளை (7 விருதுகள்) தட்டிச் சென்றவர் அகிலன். 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி வெகுஜன வாசகர்களைக் கவர்ந்ததைப் போலவே, 'கல்கி'யின் தொடர்ச்சியாக வெகுஜன வாசகர்களைக் கவர்ந்தவர் அகிலன். 'ஞான பீட' பரிசு கிடைத்தபோது பாராட்டுதல்களும், எதிர்ப்புகளும் குறைவின்றி பதிவு செய்யப்பட்டன. தீவிர இலக்கியவாசர்களும் தீவிர எழுத்தாளர்களும் அகிலனை கடைசி வரை ஒப்புக் கொள்ளவே இல்லை.
அகிலன் நாவல்களும், சிறுகதைகளும் ஏராளமாக எழுதியிருக்கிறார். இவரது 200 கதைகள் அடங்கிய தொகுப்பை தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறார்கள். ஆயிரத்து நானூறு பக்கங்களுக்கு மேல் உள்ள இப்புத்தகத்தின் விலை ரூ.1000/-தான். அதிசயமாக இவரது நாவல்கள் பலவும் இப்போது நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன.
இவர் தனது 66வது வயதில் 1988 ஆம் வருடம் காலமானார்.
தொடரும் ... |