வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
-------------------------

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.

ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.

 
     
     
     
   
தொடர்கள்
1
 
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 

 
 

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.

கிருஷ்ணன் வெங்கடாசலம்

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS மாயலோகத்தில் TS கிருஷ்ணன் வெங்கடாசலம் தொடர்கள் வாயில்

அரு.ராமநாதன்

கிருஷ்ணன் வெங்கடாசலம்  

'காதல்' புனிதமானது, பவித்திரமானது என்றெல்லாம் திரைப்படங்களில் வசனம் பேசுவார்கள் அறிவோம். எடுக்கப்படும் படங்களில் 99 விழுக்காடும் காதலை மையமாக வைத்தே திரைக்கதை அமைக்கப்படும். இது ஒரு நியதிபோல் காலம் காலமாக நடந்து வருகிறது. 'காதல்' இல்லாமல் உலகில் வேறு எதுவுமே கிடையாது என்றும் நிலை நிறுத்தியாகிவிட்டது. எனவே 'காதல்' வாழ்க.

'காதல்' என்கிற வார்த்தையை ஒரு கெட்ட வார்த்தையைப்போல் கருதிய காலமும் ஒன்று உண்டு. காதல் வயப்படுவார்கள், ஆனால் காதல் என்கிற வார்த்தையை பிரயோகித்தால் அவனை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். இக்கால கட்டத்தில் மிகவும் துணிச்சலுடன் 'காதல்' என்கிற பெயரில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமானால், ஆரம்பித்தவருக்கு எந்த அளவு துணிவு இருந்திருக்கவேண்டும்? அப்படித் துணிந்தவர்தான் அரு.ராமநாதன்.

சிவகங்கை மாவட்டத்தில் கண்டனூர் எனும் ஒரு ஊர் இருக்கிறது. இந்த ஊரில் 1924 ஆம் ஆண்டு பிறந்தவர் அரு. ராமநாதன். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை திருச்சியிலும் கல்லூரிப் படிப்பை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் மேற்கொண்டார். கல்லூரிப் பட்டப்படிப்புக்கு முன் அக்காலத்தில் இன்டர்மீடியட் என ஒரு வகுப்பு உண்டு. இளங்கலை எனக் கூறலாம். இதில் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும். அதன் பிறகு தான் பட்டப்படிப்பு. ஆனால் இவர் முதல் ஆண்டு இன்டர்மீடியட்டுடன் படிப்பை முடித்துக் கொண்டார்.

இப்போது தொழில் ஏதாவது செய்யவேண்டும் என நினைத்து திருச்சியில் ஒரு பிரிண்டிங் நிறுவனத்தில் பங்குதாரராகப் சேர்ந்தார். அதன் பிறகு தான் 'காதல்' என்கிற பத்திரிகையை திருச்சியில் 1947ல் ஆரம்பித்தார்.

ராமநாதனுக்குச் சிறு வயதிலேயே எழுதும் ஆர்வம் இருந்ததுடன், சிறப்பாக எழுதும் ஆற்றலும் தொடர்ந்து கை கூடி வந்திருக்கிறது. சரித்திரம் சார்ந்த கதைகளே இவருக்கு மிகவும் உற்சாகம் தருவதாக அமைந்திருந்தது.

1944ல் டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்திய நாடகம் எழுதும் போட்டி ஒன்றில் இவர் கலந்து கொண்டு 'இராஜ ராஜ சோழன்' என்ற நாடகத்தை எழுதி அனுப்பினார். இந்த நாடகம் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1945ல் பரிசு பெற்ற இந்த நாடகம் 1955ல் தான் முதன் முதலாகத் திருநெல்வேலியில் அரங்கேறியது. இந்த 'இராஜ ராஜ சோழன்' நாடகம் டி.கே.எஸ். சகோதரர்களுக்கு மிகவும் பெயரை வாங்கிக் கொடுத்த நாடகமாக அமைந்தது.

ராமநாதன் அவ்வவ்போது சிறுகதைகளும் எழுதி வந்தார். 'கோழிப்பந்தயம்' என்கிற ஒரு சிறுகதை 1947ல் 'கல்கி' நடத்திய சிறு கதைப் போட்டி ஒன்றில் தேர்வு செய்யப்பட்டு பிரசுரமாகியிருக்கிறது.

திருச்சியிலிருந்த தனது பிரசுரத்தை 1949ல் சென்னைக்கு மாற்றிக் கொண்ட அரு.ராமநாதன் 'காதல்' பத்திரிகை தவிர 'கலைமணி' என்கிற பெயரில் சினிமாப் பத்திரிகை ஒன்றையும் சில காலம் நடத்தியிருக்கிறார். அதேபோல் 'மர்மக்கதை' என்கிற பெயரில் ஒரு பத்திரிகையையும் ஆரம்பித்தார். இவரது புகழ் பெய் 'பிரேமா பிரசுரம்' 1952ல் துவங்கப்பட்டு இன்றளவும் நடைபெற்று வருகிறது. இப்பொழுது ராமநாதனின் புதல்வர் இந்தப் பிரசுரத்தை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் தொடர்ந்து நடத்தி வருகிறார். 'கலைமணி' மர்மக்கதை போன்ற பத்திரிகைகள் குறைந்த காலங்களே நடைபெற்று பிறகு நின்று போய்விட்டன.

'கலை மணி' சில உயர்ந்த நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டாலும், அதில் திரைப்படம் சார்ந்த விஷயங்களே முதன்மையாகத் துருத்திக் கொண்டு நின்றதால், ஆரம்பித்த நோக்கம் நிறைவேறாத காரணத்தினால் அப்பத்திரிகையை அதிக நாள் நடத்த இயலவில்லை.

இவரது 'மர்மக்கதை' பத்திரிகை 1954ல் துவக்கப்பட்டது. அப்போது பிரபல மர்மக்கதை எழுத்தாளராக இருந்த சிரஞ்சீவி என்பவரை ஆசிரியராகக் கொண்டு துவக்கப்பட்ட இப்பத்திரிக்கையில் பத்திரிக்கையின் பெயருக்கேற்ப மர்மக் கதைகளும் துப்பறியும் கதைகளே பிரசுரமாயின. இந்தப் பத்திரிகையும் சில காலத்தில் நின்று போய் விட்டது.

எழுத்தாளராக அரு. ராமநாதனின் முதல் படைப்பு 'இராஜராஜசோழன்' என்கிற நாடகம். இது 1944ல் எழுதப்பட்டு விட்டது என்றாலும் நூல் வடிவில் அப்போது வெளிவரவில்லை.

நாடகமாக டி.கே.எஸ். சகோதரர்களால் நடிக்கப்பட்டு பிரபலமடைந்த வேளையில் 1955ல் தான் முதல் முதல் நூல் வடிவில் பிரசுரம் கண்டிருக்கிறது. அடுத்து இவர் எழுதியது 'வீரபாண்டியன் மனைவி' என்கிற சரித்திர நாவல். இது 1953லிருந்து தொடர்ந்து ஆறு வருடங்கள் 'காதல்' பத்திரிகையில் தொடர்புதினமாக வெளிவந்தது. சுமார் 1700 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அரு. ராமநாதனுக்கு மிகவும் பெயரை ஏற்படுத்திய புதினம். மேலும், 'வெற்றிவேல் வீரத்தேவன்' என்கிற சரித்திர நாவலும் 'வானவில்' என்கிற நாடகமும் இவரால் எழுதப்பட்டிருக்கிறது.

சமூக நாவல்களிலும் இவர் சில முயற்சிகள் செய்திருக்கிறார். அவற்றில் குறிப்பிடும்படியான நாவல்களாக 'நாயனம் சௌந்தரவடிவு' குண்டுமல்லிகை போன்றவற்றைக் கூற முடியும்.

இவைகள் தவிர சில புத்தகங்களுக்கு தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். காந்தி, பாரதி, ஒளவையார், புத்தர் போன்றவர்களின் பொன்மொழிகளைத் தொகுத்திருக்கிறார்.

அரு. ராமநாதனின் 'இராஜ ராஜசோழன்' திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இப்படம் தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் 70 எம்எம் திரைப்படம் என்றும் பெயரைப் பெற்றது. 'ஆனந்த்' தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி அவர்கள் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்து 1973ல் வெளியிட்டார்.

சிவாஜிகணேசன், முத்துராமன், சிவகுமார், டி.ஆர். மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன், எம்.என். நம்பியார், லட்சுமி, எஸ்.வரலட்சுமி, விஜயகுமாரி போன்ற மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இருந்தும் இப்படம், நூறு நாட்கள் சில மையங்களில் ஓடியதே ஒழிய, எதிர்பார்த்த அளவு மாபெரும் வெற்றியைப் பெறவில்லை.
1958ல் வெளிவந்த ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி நடித்த 'பூலோகரம்பை' படத்திற்கு வசனம் எழுதிய ராமநாதன், 1959ல் 'அமுதவல்லி' என்கிற படத்தின் கதை வசனத்தையும் எழுதினார். இதே 1959ல் இவர் திரைக்கதை வசனம் எழுதி, சிவாஜி, பத்மினி நடித்த 'தங்கப்பதுமை' என்கிற படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் இதே ஆண்டு இவர் கதை வசனம் எழுதிய மற்றொரு திரைப்படமான 'கல்யாணிக்கு கல்யாணம்' என்கிற திரைப்படம் வெற்றி பெறவில்லை.

அரு. ராமநாதன் தன் இயற்பெயர் தவிர, 'ரதிப்பிரியா', 'கு.ந.ராமையா' போன்ற புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார். இவரை மிகப்பெரிய எழுத்தாளர் என்று சொல்வதைவிட, சிறந்த இதழ் ஆசிரியர், பதிப்பாளர் என்கிற வகையிலேதான் தயவு தாட்சணியம் இல்லாத இலக்கியத்துறையில் வைத்துப் பார்க்க முடியும். இவரது பிரேமா பிரசுரத்திலிருந்து 300க்கும் மேலான புத்தகங்கள் வெளிவந்துள்ளன என்பது இதற்குச் சான்று. இவரது இலக்கியப் பணி பற்றிய துல்லியமாக குறிப்புகள் தேவைப்படுவோர் சி.மோகன் எழுதிய 'நடைவழிக் குறிப்புகள்' என்னும் நூலின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தொடரும் ...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.