வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
-------------------------

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.

ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.

 
     
     
     
   
தொடர்கள்
1
 
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 

 
 

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.

கிருஷ்ணன் வெங்கடாசலம்

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS மாயலோகத்தில் TS கிருஷ்ணன் வெங்கடாசலம் தொடர்கள் வாயில்


சங்கு சுப்ரமணியம்

கிருஷ்ணன் வெங்கடாசலம்  

"சுதந்திரச்சங்கு" என்றொரு பத்திரிகை அக்காலத்தில் பிரபலமாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்தியர் அடிமைப்பட்டுக்கிடந்த காலம். சுதந்திரப் போராட்டங்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. மக்களின் சுதந்திர வேட்கையை, அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் தூண்டிவிட்ட பெருமை பல பத்திரிகைகளையே சாரும். இவைகள் தாம் இங்கு சுதந்திரப்போராட்டத்தை முன் எடுத்துச் சென்றன.

அம்மாதிரியான பத்திரிகைகள் அக்கால ரூபாயின் மதிப்பிற்கேற்ப ஓரணா, இரண்டணா, என்று விலை வைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்த கால கட்டத்தில், காலணாவுக்கு ஒரு பத்திரிகை வெளிவந்து, லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாயிற்று. அப்பத்திரிகைதான் "சுதந்திரச்சங்கு". இதன் தலையங்கம் படிக்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். சுதந்திரச்சங்கின் ஆசிரியராக இருந்தவர் சுப்ரமணியம் என்பவர்.

கம்பர் பிறந்த தேரழுந்தூரில் 1905ல் பொருளாதாரத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சுப்ரமணியம்.

"சுதந்திரச்சங்கு" மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு, அப்பத்திரிகையின் பெயரிலிருந்த பின் பகுதியான 'சங்கு' ஆசிரியரான சுப்ரமணியத்துடன் இணைந்து பின்பு சங்கு சுப்ரமணியம் என்றே நிலைத்து விட்டது.

காலணா (கால் அணா) வின் மதிப்பு என்னவென்று இப்போது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நமது இந்திய ஒரு ரூபாய் என்பது இப்போது நூறு (100) பைசாக்களைக் கொண்டது. இந்த பைசா, நயா பைசா சமாசாரமெல்லாம் சமீபத்தில் ஏற்பட்டதுதான். அதற்கு முன்பு ரூபாய், அணா, பைசா என்பது தான் வழக்கத்திலிருந்தது. ஒரு ரூபாய்க்கு, பதினாறு அணா, ஒரு அணாவின் நாலில் ஒரு பங்கு கால் அணா. அந்தக் காலத்தில் ஓட்டைக்காலணா மிகவும் பிரபலம். ஆக ஒரு ரூபாயில் 64 கால் அணாக்கள் அடக்கம். இப்போதைய மதிப்பில் ஒன்றைரப் பைசாவுக்கு சற்று அதிகம். அவ்வளவுதான். லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்ய வைத்து அதிசயக்க வைத்த இப்பத்திரிகையை எதிர்பாராத விதமாக 1933ல் நிறுத்தும்படியாகவும் ஆகிவிட்டது மிகப்பெரிய துருதிருஷ்டம்.

"சங்கு" சுப்ரமணியம், சுதேசமித்திரன் பத்திரிகையிலும் சில காலம் பணியாற்றினார். அனுமான், மணிக்கொடி போன்ற இலக்கிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றியவர் சங்கு.

மகாகவி பாரதியுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்ட அனுபவமும் உண்டு. காந்தியன் கொள்கைகள், அதிலும் குறிப்பாகத் தீண்டாமை ஒழிப்பில் பேரார்வம் காட்டியவர்.

அக்காலத்தில் தீண்டத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களுக்கு உணவளித்தார் ஒரு பெண்மணி.

இதற்காக இப்பெண்மணி மிகப்பெரிய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதாயிற்று. இந்தப் பெண்மணியையே மணந்து கொண்டார் சங்கு சுப்ரமணியம்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சங்கு சுப்ரமணியம் உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களின் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.

இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஸ்ரீராமானுஜர் என்கிற திரைப்படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டு அப்படத்தில் ஸ்ரீராமானுஜராகவும் நடித்தார். அப்படத்திற்கு மணிக்கொடி ஆசிரியர் வ.ரா. வசனம் எழுத, பிரபல எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தி, இலக்கியவாதி இதழியலாளர் ந. ராமரத்தினம் போன்றோரும் நடித்திருந்தனர். பாடல்களை பாவேந்தர் பாரதிதாசன் இயற்றியிருந்தார். இப்படம் 1938ல் வெளிவந்தது.

ஜெமினி கதை இலாகாவில் இருந்தபோதுதுதான் அவர்கள் தயாரித்த 'சக்ரதாரி' என்னும் படத்திற்கு திரைக்கதை வசனம், பாடல்கள் பொறுப்பை 'சங்கு' சுப்ரமணியம் ஏற்று திறம்பட செய்து முடித்தார். 'சக்ரதாரி' படம் ஜெமினிக்கு பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

'லட்டு, லட்டு மிட்டாய் வேணுமா?

ரவா, லாடு பூரியும் வேணுமா?

மிகவும் பிரபலமடைந்த இந்தப் பாட்டு ஜெமினியின் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் இடம் பெற்ற பாட்டு பி. பானுமதி மற்றும் குழுவினரால் பாடப்பட்ட இந்தப் பாடலை இயற்றியவர் சங்கு சுப்ரமணியம்.

பல்வேறு மொழி பேசும் சிப்பாய்கள் மத்தியில் பாடப்பட்ட இந்தப் பாடலில் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் அந்தந்தப் பகுதி சிப்பாய்கள் பாடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து ஜெமினியின் கதை இலாகாவில் பணியாற்றி 'சந்திரலேகா, ராஜி என் கண்மணி போன்ற படங்களில் பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இவரது மனம் ஆன்மீகத்தை நாடியது. ஜெயதேவரின் 'கீத கோவிந்தம்' நூலை தமிழில் மொழி பெயர்த்தார். இது வெகு காலமாக அச்சில்வராமலிருந்து, பல வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ண பிரேமியின் 'பாகவத தருமம்' ஏட்டில் பிரசுரம் கண்டிருக்கிறது.

ஆன்மீகத்தில் ஈடுபட்ட சங்கு சுப்ரமணியத்திற்கு பஜனை சம்பிரதாயத்தில் ஆர்வம் கூடி, பஜனைகள் செய்ய ஆரம்பித்தார். தனக்கென்று ஒரு தனிப்பாணியையும் உருவாக்கிக் கொண்டார். இவரது பஜனைகளில் ஆழ்வாரின் பாசுரங்கள், பாரதியாரின் பாடல்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.

இவர் தனது 64வது வயதில் 1969 ஆம் வருடம் இயற்கை எய்தி, வழிபட்டு வந்த கண்ணனின் திருவடியைச் சேர்ந்தார்.

தொடரும் ...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.