விந்தன்
விந்தனின் இயற்பெயர் கோவிந்தன். இவர் 1916ல் செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் என்கிற சிறிய ஊரில் பிறந்தார்.
வறுமையான குடும்பச் சூழ்நிலை. நடுநிலைப் பள்ளியைக் கூட தாண்டாத பருவத்தில், பிழைப்புக்காகத் தனது தந்தையுடன் சிறிய சிறிய வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சில காலம் சென்ற பின், இரவுப் பள்ளியிலும், தொடர்ந்து ஓவியக்கல்லூரியிலும், சேர்ந்து ஓவியமும் கற்கத் தலைப்பட்டார். ஆனால் வறுமை அவரைத் துரத்தியது. பாதியிலேயே விட்டுவிடும்படியாகவும் ஆகிவிட்டது.
ஒரு அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் தொழிலாளியாகச் சேர்ந்தார். தொழிலை இங்கு நன்றாகக் கற்றுக் கொண்டவருக்கு சில காலத்திற்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சகத்தில்அச்சுக்கோர்க்கும் வேலை கிடைத்தது. விகடனில் வேலை செய்து வந்த காலத்தில், அவர்களுக்குத் தெரியாமல் சில கதைகளை எழுதி, அவைகள் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் விகடன் வேலையை விட்டு விலகிச் சென்றவருக்கு, 'கல்கி' நிறுவனம் கை கொடுத்தது. 'கல்கி'யில் அச்சுக்கோப்பாளராகச் சேர்ந்தார்.
'கல்கி' கிருஷ்ண மூர்த்தியின் ஆதரவு இவருக்குக் கிடைத்தது. 'கல்கி'யின் அறிவுரையின் பேரில் கோவிந்தன் என்கிற தன் பெயரை 'விந்தன்' என மாற்றிக் கொண்டார். 'கல்கி'யின் ஆரம்பத்தில் சிறுவர்களுக்குக்கான பகுதியில் பல கதைகள் எழுதினார்.
விந்தனின் எழுத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி. விந்தனை 'கல்கி' பத்திரிகையின் துணை ஆசிரியர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். துணை ஆசிரியராக இருந்தபொழுது விந்தன் எழுதிய எழுத்துக்கள் மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றன.
1946ல் தமிழ்நாட்டில் அரசாங்கத்தாரால் தமிழ்வளர்ச்சிக் கழகம் என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்துக்கான விருதை, இந்தக் கழகம் இந்த ஆண்டிலிருந்து வழங்க ஆரம்பித்தது. இதே ஆண்டில் வெளிவந்த விந்தனின் முல்லைக்கொடியாள்' என்கிற சிறுகதைத் தொகுப்பு இந்தப் பரிசைப் பெற்றது.
அக்காலத்தல் 'பொன்னி' என்றொரு இலக்கியப் பத்திரிகை புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அதில் 'கண் திறக்குமா'? என்ற தொடர்கதையை எழுதினார்.
இதன்பிறகுதான், அப்போது வேலை பார்த்து வந்த 'கல்கி'யில் விந்தனின் புகழ்பெற்ற நாவல் 'பாலும் பாவையும்' தொடராக வெளிவர ஆரம்பித்து மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றது.
விந்தன் ஆக மொத்தம் ஆறு நாவல்கள் எழுதியிருக்கிறார்.
1. கண் திறக்குமா?
2. பாலும் பாவையும்
3. மனிதன் மாறவில்லை
4. காதலும் கல்யாணமும்
5. அன்பு அலறுகிறது
6. சுயம்வரம்
இவைகள் தவிர, சுமார் 90 சிறுகதைகள். சில கட்டுரைகள் எம் கே தியாகராஜபாகவதர் கதை, எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை 'சிறைச்சாலை சிந்தனைகள்' என்கிற தலைப்பிலும் எழுதியுள்ளார்.
இவரது எழுத்துலக வாழ்க்கை எப்பொழுதுமே நெருக்கடிகள் மிகுந்ததாகவே இருந்திருக்கிறது. பெரியகுடும்பம். முதல் மனைவி மூலம் இரண்டு குழந்தைகளும், இரண்டாவது மனைவியிடம் ஆறு குழந்தைகளும். வாழ்க்கையைப் போராட்டத்திலேயே கழித்திருக்கிறார். ஆனாலும் அந்த வறுமையை அவர் விரும்பி ஏற்றுக் கொண்டாற்போல்தான் தோன்றுகிறது.
வாழ்க்கை வளத்தை சற்றேனும் பெருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இவரது பார்வை திரைப்படம் பக்கமும் திரும்பியிருக்கிறது. டி ஆர். ராமண்ணாவின் ஆர் ஆர் பிக்சர்சாரின் 'வாழப்பிறந்தவன்' என்னும் திரைப்படம் 1953ல் வெளி வந்தது. இப்படத்திற்கு விந்தன் வசனம் எழுதினார். 'அன்பு' என்கிற படம் இதன் கதை வசனம் மற்றும் பாடல். இப்படத்தில் சிவாஜி-பத்மினி ஜோடி. இப்படமும் 1953 லேயே வெளிவந்தது.
1954ல் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் 'கூண்டுக்குளி'. இதில் எம்ஜியார். சிவாஜி இருவருமே நடித்திருக்கிறார்கள். எனவே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். இப்படத்திற்கான வசனத்தை விந்தன் எழுதியிருந்தார். அத்துடன் அருமையான சில பாடல்களும் இயற்றியிருந்தார். சரியா, தப்பா? என்கிற பாடல் மிகவும் பிரபலமாயிற்று
'கொஞ்சம் கிளியான பெண்ணை
கூண்டுக்கிளியாக்கிவிட்டு,
கெட்டி மேளம் கொட்டுவது
சரியா, தப்பா?
காதல் செய்த குற்றம்
எனது கண்கள் செய்த குற்றமென்றால்
கண்ணைப்படைத்த கடவுள் செய்கை
சரியா, தப்பா?
என பற்பல சரியா, தப்பா கேள்விகள் போட்டு எழுதப்பட்ட இப்பாடலை டி எம் சௌந்திரராஜன் வெகு அருமையாகப் பாடியிருந்தார்.
'குலேபகாவலி' என்றொரு பிரம்மாண்டமான படத்தைத் தயாரித்தார்கள். ஆர் ஆர் பிக்சர்சார். இப்படம் 1955ல் வெளி வந்தது. இப்படத்திற்குச் சில பாடல்களை எழுதியிருந்தார் விந்தன். அதில் குறிப்பாக ஒரு பாடல் மாபெரும் வெற்றியடைந்து மிகவும் பிரபலமாயிற்று. இப்பாடல் இன்று வரையிலும் பல்வேறு மேடைகளில் பாடப்பட்டும் வருகிறது.
'மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா...
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. மெல்லிசை மன்னர்கள் என்கிற பட்டம் பின்னாளில் இவர்களுக்குக் கிடைக்க ஆதாரமாக அமைந்த மிக அருமையான பாடல்.
இதற்கிடையில் 1954ல் சொந்தமான ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். 'மனிதன்' என்று பெயர். மிக அருமையான இதழ். இதை, வெளி வந்த காலத்திலேயே படிக்கும் வாய்ப்பு இக் கட்டுரையாளருக்குக் கிடைத்தது.
இந்த மனிதன் இதழில் வெளிவந்த தெருவிளக்கு என்னும் தொடர் அக்காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
'சினிமா' ஆசை விடவில்லை. தொடர்ந்து சில படங்களுக்கு வசனம், பாடல் போன்றவை எழுதினார். இதில் மணமாலை, பார்த்தீபன் கனவு, குழந்தைகள் கண்ட குடியரசு போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
ஒரு சமயம் பதிப்பகம் ஒன்றை சொந்தமாக ஆரம்பித்து நடத்தினார். 'புத்தகப்பூங்கா' என்று பெயர். சில நல்ல எழுத்தாளர்களின் கதைகளை நூல் வடிவில் வெளியிட்டார். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நூல் ஜெயகாந்தனின் சில கதைகள் அடங்கிய 'ஒரு பிடி சோறு' என்னும் நூல்.
சில காலம் 'தினமணி கதிரில்' வேலை பார்த்தார். அந்த வேளையில்தான் எம் கே தியாகராஜபாகவதர், எம் ஆர். ராதா போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
விந்தன் 1975 ஜுன் மாதம் காலமானார். எழுத்துலகில் ஒரு சாபக்கேடு உண்டு. தகுதியுடைய எழுத்தாளர்கள் பலர் போதிய கவனமோ, பாராட்டுதல்களோ இல்லாமல் புறக்கணிக்கப்படுவதும், தகுதி குறைந்தவர்கள், தகுதிக்கு மேலாகப் பாராட்டப்படுவதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இம்மாதிரி உரிய கவனமின்றி, தமிழ் இலக்கிய உலகம் புறக்கணித்து வரும் எழுத்தாளர்கள் சிலரில் விந்தனும் ஒருவர், 'அமுதசுரபி' இதற்கு விதிவிலக்கு!
தொடரும் ... |