நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
'கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது,
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்!
மிகவும் புகழ் பெற்ற இப்பாடலை விடுதலைப் போரில் ஈடுபட்டவர்கள் மிகவும் உற்சாகமாகப் பாடுவார்களாம். இந்த வீரமிக்க பாடலை இயற்றி தேசியக் கவிஞர் என்ற பட்டத்தைப் பெற்றவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள்.
கோவை மாவட்டம் மோகனூர் என்கிற கிராமத்தில் 1888 ஆண்டு பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே ஓவியம், கவிதை போன்ற கலை வடிவங்களில் நாட்டமுடையவராக இருந்தார். ஆரம்பத்தில் கவிதையைவிட ஓவியம் வரைவதிலேயே அதிக விருப்பமுடையவராக இருந்து அதில் சற்று சம்பாதிக்கவும் செய்திருக்கிறார். கவிபாடும் திறனும் இருந்ததால் டி.கே.எஸ். சகோதரர்கள் சிறுவர்களாக இருந்தபொழுது, அவர்கள் நடித்து வந்த நாடகங்களுக்குப் பாடல்கள் இயற்றியதாக வரலாற்றுக் குறிப்பு ஒன்று சொல்லுகிறது.
காந்தியின் மீதும், காந்தீயத்தின் மீதும் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தார் கவிஞர். காங்கிரஸ் கட்சியின் சில பொறுப்புக்களில் கூட சேலத்திலிருந்து செயல்பட்டிருக்கிறார். ஆனால் வாழ்க்கை அப்போது வளமானதாக இருக்கவில்லை.
சின்ன அண்ணாமலை என்பவர் தமிழ்ப்பண்ணை என்றொரு நூல் வெளியீட்டு நிறுவனம் வைத்திருந்தார். அவர் ஒரு தீவிர காங்கிரஸ்காரர். இந்த வெளியீட்டு நிறுவனத்தின் வாயிலாக கவிஞரின் சில பாடல்களும், புதினங்களும் புத்தக உருவில் வெளி வந்தன.
பாரதியார், வா.வே.சு ஐயர் போன்ற சான்றோர்களின் நட்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது. இவரது பாடல் ஒன்றைக் கேட்ட பாரதியார் 'பலே பாண்டியா' என்று புகழ்ந்திருப்பது சரிந்திரத்தில் ஏற்கனவே பதிவான ஒன்று.
குமாரசாமி ராஜ மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபொழுது அரசவைக் கவிஞராக இவரை அரசு 1949ல் நியமித்தது. 1956 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டு மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார். சாகித்திய அகாடமியின் நிர்வாகக் குழுவிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார். 1971 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
1942ல் இவர் எழுதிய புதினம் 'மலைக்கள்ளன்' புத்தக உருவில் வெளி வந்தது. இதுவே திரைப்படமாக 1954ல் பட்சி ராஜா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை அடைந்தது. வசூலில் சாதனை புரிந்தது. இப்படம் எம்ஜிஆருக்கு ஏராளமான புகழைச் சேர்த்து திரையுலகில் புகழின் உச்சிக்கு எடுத்து சென்றது. தமிழ் தவிர இப்படம் இந்தி(ஆசாத்), மலையாளம் (தங்கரவீரன்) தெலுங்கு (அக்கிராமுடு), கன்னடம் (பெட்ட கள்ளா), சிங்களம் (சூர சேனா) போன்ற மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு எல்லா மொழிகளிலும் அமோக வெற்றியைப் பெற்றது.
''தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்''
என்கிற இவரது பாடல் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டு பாராட்டுதல்களைப் பெற்றது.
1960ல் வெளிவந்த கடவுளின் குழந்தை என்கிற படத்திலும் இவரது பாடல் இடம் பெற்றிருக்கிறது.
இவனது கவிதைத் தொகுப்புகள், புதினங்கள், காப்பியங்கள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள், எண்ணிக்கையில் ஏராளம். கலையின் பல்வேறு தளங்களில் இயங்கிய கவிஞர் பெரும் புகழுடன் வாழ்ந்து 1972ல் மறைந்தார்.
தொடரும் ...
|