வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
-------------------------

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.

ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.

 
     
     
     
   
தொடர்கள்
1
 
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 

 
 

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.

கிருஷ்ணன் வெங்கடாசலம்

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS மாயலோகத்தில் TS கிருஷ்ணன் வெங்கடாசலம் தொடர்கள் வாயில்


கவியோகி சுத்தானந்த பாரதியார்


கிருஷ்ணன் வெங்கடாசலம்  

1958ல் நாகர்கோவிலில் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. எழுத்தாளர்கள் பதாகையெல்லாம் பிடித்துக் கொண்டு, கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தார்கள். அவர்கள் மத்தியில் காவி உடையணிந்து, தலையில் காவித்துணி முண்டாசுடன் கூடிய, நரைத்த தாடியுடன் கூடிய தோற்றத்தில் ஒருவரும் நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும் இவருக்கு இங்கு என்ன வேலை என்று தான் தோன்றிற்று. அவர்யார் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

நல்ல வேளையாக எனதருகிலேயே ஒரு தமிழ் எழுத்தாளர் வசித்து வந்தார். அவரிடம் இவரைப் பற்றிக் கேட்டுவிட வேண்டியது தான் என்று தீர்மானித்தேன். எழுத்தாளரை உடனடியாக சந்திக்க இயலவில்லை. மறுநாள் காலையில் தான் பார்க்க முடிந்தது.

எனது சந்தேகத்தைக் கேட்டேன். அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்று மட்டுமே முதலில்கூறினார். பெயரைக் கூடத் தெரிவிக்கவில்லை. என்னிடம் விளையாட வேண்டும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ?!

'நீ பாட்டு கேட்கும் வழக்கம் எல்லாம் உண்டா?' எனக் கேட்டார்.

கேட்பேன் என்று கூறினேன்.

'யார், யார்? பாட்டெல்லாம் கேட்பாய்'?

'எல்லோர் பாட்டையும் கேட்பேன். சினிமாப்பாட்டு, கர்நாடக சங்கீதம் எல்லாம் எனக்குப் பிடிக்குமே'.

'டி.கே. பட்டம்மாள் கேட்டிருக்கிறாயா?'

'ஓ, கேட்டிருக்கிறேன்'.

'அவர் பாடிய பிரபலமான பாட்டு ஒன்று சொல்லு'.

'தீராத விளையாட்டுப் பிள்ளை'.

'இது பாரதியார் பாட்டு. இன்னொன்று சொல்லு'.

'தூண்டிற் புழுவினைப் போல்'.

'இதுவும் பாரதியார் பாட்டுத் தான்'.

சற்று நேரம் யோசிக்கலானேன். எழுத்தாளர் காத்துக் கொண்டிருந்தார்.

சட்டென வேறொரு பாட்டு நினைவிற்கு வந்தது.

"எப்படிப் பாடினரோ - அடியார்
அப்படிப்பாட நான்"
'வெரிகுட். இந்தப் பாட்டை இயற்றியது யாரென்று தெரியுமா?'

உதட்டைப் பிதுக்கினேன்.

'இந்தப் பாடலை இயற்றியவர் சுத்தானந்த பாரதியார். கவியோகி சுத்தானந்த பாரதியார் என்றால் மிகவும் பிரசித்தம். அவரைத்தான் நேற்று நீ ஊர்வலத்தில் பார்த்தாய்'.

தொடர்ந்து, 'நீதான் நிறைய சினிமாவெல்லாம் பார்ப்பாயே. 'ஏழை படும் பாடு' சினிமா பார்த்திருக்கிறாயா?'

'அருமையான படம், பார்த்திருக்கிறேனே'.

'அந்தக் கதை பிரஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோ எழுதிய 'லே மிசரபிள்' என்கிற நாவல். அதைத் தமிழாக்கம் செய்தவர் இந்த சுத்தானந்த பாரதியார் என்றவுடன் எனக்கு அந்த யோகியின் பால் பிரமிப்பும், மரியாதையும் கூடியது.

'அவர் நிறைய எழுதியிருக்கிறார். அவையெல்லாம் கணக்கில் அடங்காது. நீ, வரும் நாட்களில் அவரைப் பற்றி நிறைய படி. அப்போது உனக்கு அவரைப்பற்றி விவரமாகப் புரிய வரும்' என்று அந்த எழுத்தாளர் எனக்கு உபதேசம் செய்தார். அப்போது எனக்கு வயது 17.

பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரைப் படித்துத் தெரிந்து கொள்ள தலைப்பட்டேன். முழுத் தகவலும் ஒரே நேரத்தில் கிடைக்காததால் அவ்வப்போது சிறிய சிறிய செய்திகளாகவே அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

சுத்தானந்த பாரதி பிறந்த ஊர் சிவகங்கை. பிறந்த வருடம் 1897. இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியம்.

சிறு வயதிலேயே தனது தந்தை மூலமாகத் தமிழ் கற்றிருக்கிறார். சிறுவயதில் சிதம்பரம் நடராஜப் பெருமாளை வழிபடப்போன இடத்தில் இயற்றிய பாடல் தான்.

'எப்படிப் பாடினரோ - அடியார்
அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே' என்று தொடங்கும் பாடல். இப்பாடல் டி.கே. பட்டம்மாள் அவர்களால் பாடப்பட்டு இசைத்தட்டாக அக்காலத்தில் வெளிவந்து மிகவும் பிரபலமடைந்தது.

சுத்தானந்த பாரதிக்கு அனேக மொழிகள் தெரிந்திருக்கிறது. ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்சு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருக்கிறார். சுத்தானந்த பாரதி தமது ஆவேசப்பாடல்கள் மூலம் ஆன்மீகப் புரட்சியை முன் வைத்தார்.

'வீரத் தமிழர்களுக்கு ஆவேசக் கடிதங்கள்' என்ற நூல் அறுபது அல்லது எழுபது ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. சாதி உணர்வுகளை எதிர்த்துச் சாடிய பெருமையும் உண்டு.

ஆரம்ப காலங்களில் 'சமரச போதினி' எனும் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்தார். தொடர்ந்து காங்கிரஸ் பேரியகத்தில் ஈடுபட்டு தேச விடுதலைக்காகப் பாடுபட்டார். அப்போதுதான் 'ஸ்வராஜ்யா' என்கிற பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்க வேண்டியதாயிற்று.

தேசபக்தர், வீரச் செம்மல் வ.வே.சு. ஐயர், பாலபாரதி' என்றொரு பத்திரிகை நடத்தினார். அதில் அவருடன் இணைந்து பணியாற்றினார் சுத்தானந்த பாரதி.

அந்தக் காலத்தில் மெத்தப்படித்தவர்கள், அறிவு ஜீவிகள் படிக்கும் பத்திரிகையாக வை. கோவிந்தன் நடத்திய 'சக்தி' பத்திரிகையைச் சொல்வார்கள். ஆரம்பகால 'சக்தி'யில் சில காலம் கவியோகி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

'இல்லையென்பான் யாரடா - என் அப்பனைப்போய்
தில்லையிலே பாரடா'

மிகவும் பிரபலமான இசைத்தட்டு. மக்களால் மிகவும் விரும்பிக் கேட்கப்பட்டது. இம்மாதிரி ஏராளமான தனித் தமிழ்ப்பாடல்களை இயற்றி இசையுலகில் தமிழ்த் தொண்டாற்றிய பெருமைக்குரியவர்.

இதேபோல் மிகவும் பிரபலமான இன்னுமொரு தமிழ்ப்பாட்டு :

'அருள் புரிவாய் கருணைக் கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே - அருள்'

சுத்தானந்த பாரதியார், அரவிந்தர், ரமண மகரிஷி, மகாகவி சுப்ரமணிய பாரதியார் போன்றோருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.

கவியோகி ஏராளமான நூல்கள் இயற்றியிருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன. என்றாலும் யோகசித்தி, கீதாயோகம், பாரத சக்தி மகா காவியம போன்றவை மிகவும் முக்கியமானவை.

பாரத சக்தி மகா காவியத்திற்காக, கவியோகிக்கு ராஜராஜ சோழன் விருது கிடைத்திருக்கிறது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பெயர் பெற்றவர் பாரதி.

இவர் திரைத்துறையையும் விட்டு வைக்கவில்லை. 1948-இல் வெளிவந்த "ஸ்ரீ ஆண்டாள்" என்கிற படத்தில் இவரது பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

1949-ல் பி.யூ. சின்னப்பா நடித்த 'கிருஷ்ண பக்தி' என்றொரு படம் வெளிவந்தது. இப்படத்தில் கதை 'ஜிபிணி விளிழிரி' என்கிற பிரஞ்சு நாவலின் தழுவல். இக்கதையை தமிழில் மொழியாக்கம் செய்தவர் சுத்தானந்த பாரதி.

1950-ல் வெளிவந்த 'ஏழை படும் பாடு' திரைப்படம் மிகவும் பாராட்டுதல்களைப் பெற்ற படம். பிரஞ்சு நாவலாசிரியரான விக்டர் ஹியூகோவின் 'லே மிசரபிள்' என்கிற நாவலைத் தமிழாக்கம் செய்து 'ஏழை படும் பாடு' என்கிற நாவலை எழுதியவர் பாரதி. இப்படத்தில் வி. நாகையா மிகவும் அருமையாக நடித்திருந்தார். 'ஜாவர் சீதாராமனுக்கு 'ஜாவர்' பட்டம் ஏற்படக் காரணமாக அமைந்த படம் இது.

மேலும், போஜன், மரகதம், பொன் வயல், சுதர்சனம் போன்ற படங்களில் இவரது பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

சீர்காழி கோவிந்தராஜனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய படம் 'பொன்வயல்'. இந்தப் படத்தில் 'சிரிப்புத்தான் வருகுதையா' என்கிற பாடல் மூலம் சீர்காழி அறிமுகமானார். இந்தப் பாடலை இயற்றியவர் யோகியார்.

'சுதர்சன்' என்கிற படத்தில் பி.யூ. சின்னப்பா இவர் எழுதிய அருமையான பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.

'உன்னடியில் அன்பு வைத்தேன்,
கண்ண பரமாத்மா'
என்கிற அப்பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல்.

அதேபோல், 'மரகதம்' என்கிற சிவாஜி, பத்மினி நடித்த படம் 'கருங்குயில் குன்றத்துக் கொலை' என்கிற துப்பறியும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். கோயம்புத்தூர் பட்சிராஜா பிலிம்ஸ் தயாரித்து வெற்றியடைந்த படம். இந்தப் படத்தில் ஒரு அருமையான பாட்டிற்கு வெகு நேர்த்தியாக நடனமாடியிருந்தார் பத்மினி.

'மாலை மயங்குகின்ற நேரம் - பச்சை
மலை வளரும் அருவியோரம்'
என்கிற இந்த அற்புதமான பாடலை இயற்றியவர் கவியோகி சுத்தானந்த பாரதியார்.

அடையாறில், 'யோக சமாஜம்' என்கிற அமைப்பை வெகுகாலம் நடத்தி வந்தார். கவியோகி 1990-ல் இறைவனடி சேர்ந்தார்.

தொடரும் ...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.