வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
-------------------------

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.

ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.

 
     
     
     
   
தொடர்கள்
1
 
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 

 
 

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.

கிருஷ்ணன் வெங்கடாசலம்

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS மாயலோகத்தில் TS கிருஷ்ணன் வெங்கடாசலம் தொடர்கள் வாயில்


மகாகவி பாரதியார்


கிருஷ்ணன் வெங்கடாசலம்  

"பாட்டுக்கொரு புலவன் பாரதியடா ..." என கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களால் பாடப்பட்ட கவிஞர் பாரதியார். தமிழின் நவீன யுகத்தின் மகாகவி, முதல் தமிழ்க் கவிஞன்.

சுப்ரமணிய பாரதியின் பிறப்பு 1882 ஆம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் நிகழ்ந்தது. சிறுவனாக, பத்து வயதிலேயே பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றார்.

தகப்பனார் சின்னசாமி அய்யர் எட்டயபுரம் ஜமீனில் வேலை பார்த்து வந்தார். மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் பாரதியோ படிப்பில் நாட்டம் கொள்ளாமல் போனதுடன் பள்ளி இறுதி வகுப்பில் தோல்வியையே சந்தித்தார்.

திடீரென ஒருநாள் தந்தை மறைய, குடும்பம் பொருளாதாரத்தில் நலிவடைந்தது. பாரதி காசியிலிருந்த தனது அத்தை வீட்டிற்குச் சென்றார். அங்கு இந்தியும், சமஸ்கிருதமும் பயின்றார்.

இங்கிருக்கும் போதுதான் அவரது உருவ அமைப்பில் மாற்றம் ஏற்பட்டது. தலைப்பாகை போன்றவற்றுடன் புதுப்பொலிவு. அங்கு சில மாதங்கள் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் வேலை பார்த்திருக்கிறார். பின் 1901ல் எட்டயபுரம் திரும்பினார்.

ஒன்றிரண்டு வருடங்கள் ஜமீனில் வேலை. சுதந்திரப் பறவையான பாரதிக்கு இவ்வேலை பிடிக்கவில்லை. ராஜினாமா செய்துவிட்டு மதுரை சென்றுவிட்டார். அங்கு சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்க்க ஆரம்பித்தார். அப்பணி 3 மாத காலமே நீடித்தது. 'விவேகபானு' எனும் பத்திரிகையில் இவரது பாடல் ஒன்று முதன் முதல் பிரசுரம் கண்டது.

'சுதேசமித்திரன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராக 1904ஆம் ஆண்டு பணி ஏற்றுக் கொண்டார். அப்போது பாரதிக்கு வயது 22. தமிழை எளிய நடையில் இப்பத்திரிகையில் கையாண்ட பெருமை பாரதியையே சாரும். கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

1905ஆம் ஆண்டு காசியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றார். அங்கிருந்து திரும்பும் வழியில் கல்கத்தா சென்றார் பாரதி. சகோதரி நிவேதிதாவின் சந்திப்பு பாரதியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பெண் விடுதலை, சாதியற்ற சமுதாயம், நாட்டு விடுதலை போன்றவற்றை பாரதியின் மனதிலே பதிய வைத்தவர் நிவேதிதா. இவரைத் தனது மானசீகக் குருவாக எண்ணினார் பாரதி.

தனது வீரமிக்க உரைகளை எழுத பாரதிக்கு 'சுதேசமித்திரன்' போதுமானதாக இருக்கவில்லை. எனவே 1906ல் 'இந்தியா' எனும் வாரப்பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். லாலா லஜபதிராய், அரவிந்த் கோஷ், பாலகங்காதர திலகர் போன்ற தீவிரவாத உணர்வு கொண்ட காங்கிரஸ் தலைவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

புதிய புதிய பாடல்கள் இப்போது இவரிடமிருந்து பிறக்கலாயின. 'இந்தியா' பத்திரிகையில் இவரது எழுத்துக்கள் தீவிரமாக வெளிப்பட ஆரம்பித்தன. தீவிரவாதிகள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் அடக்குமுறையை ஏவியது. பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிலர் நாடு கடத்தப்பட்டனர். பாரதியாரைக் கைது செய்ய கைது வாரண்ட் கூட பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பாரதியார் பிரெஞ்சுப் பகுதியான புதுச்சேரிக்குத் தப்பிப்போனார்.

'இந்தியா' பத்திரிகையை புதுச்சேரியில் ஆரம்பித்தார். மேலும் சில பத்திரிகைகள் கூட புதுச்சேரியில் ஆரம்பித்தார். ஆனால் இப்பத்திரிகைக்கு பிரிட்டிஷ் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. 1910ஆம் ஆண்டில் பத்திரிகை நின்றுவிட்டது. அதன்பிறகு மிகுந்த வறுமையில் வாழ்ந்தார் பாரதி.

புதுச்சேரியில் இருந்த காலம் ஏராளமான பாடல்களை இயற்றினார் பாரதி. பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு போன்ற பாடல்கள் இங்கிருக்கும்போது தான் இயற்றப்பட்டன.

வறுமையின் உச்சிக்கே சென்ற பாரதி, இனியும் பொறுத்துக் கொள்ள முடியாத என்கிற நிலைமை வந்த போது 1918-ல் சென்னை திரும்ப முடிவெடுத்து புறப்பட்டு வரும்போது கடலூர் அருகே கைது செய்யப்பட்டு 24 நாட்கள் சிறையில் இருந்தார். விடுதலையான பிறகு, தனது மனைவியின் ஊரான கடையம் சென்று அங்கு சுமார் 2 வருடங்கள் வசித்தார்.

அங்கும் இவரால் நீடித்து இருக்க முடியவில்லை. வருமானம் கிடையாது. வாழ்வு ஒரு பெரும் சவாலாக இருந்தது. ஆனால் பாரதியிடமிருந்த மிடுக்கும், கம்பீரமும் எள்ளளவும் குறையவே இல்லை.

மறுபடியும் 'சுதேசமித்திரனில்' துணை ஆசிரியர் வேலை கிடைத்தது. சென்னை வந்து சேர்ந்தார். திருவல்லிக்கேணி வாசம்.

திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில் யானையும், பாரதியாரும் நண்பர்கள்தான்; ஆனால் மதம் பிடித்த ஒருநாளில் அந்த யானை அருகே வந்த பாரதியை தூக்கி எறிந்தது. உடல் சுகவீனமுற்றார் பாரதி. உடல் நலம் தேறாமலேயே 1921ஆம் ஆண்டு காலமானார்.

வறுமையிலும் நெஞ்சுரம், பெண் விடுதலை, சமூகநீதி, பகுத்தறிவுச் சிந்தனை போன்ற உயர்ந்த லட்சிய வாதங்களை விடாப்பிடியாக, வைர நெஞ்சத்துடன் கடைப்பிடித்த ஆதர்ச புருஷன். இவரை ஆதர்சமாகக் கொண்டு பல்வேறு இலக்கிய வாதிகள் பின்னாட்களில் தோன்றினார்கள். பாரதி ஒரு மாபெரும் சகாப்தம். தமிழ் உள்ளளவும் இவரது பாடல்கள் பாடப்படும், விவாதிக்கப்படும்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
- பாரதி


பாரதியின் பாடல்கள் பரவலாக தமிழ்த் திரையுலகில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. பாரதி திரை உலகைத் தேடிச் சென்றவரல்ல. சொல்லப் போனால் தமிழில் சினிமா பேசுவதற்கு முன்பே இவ்வுலகை விட்டுச் சென்று விட்டவர் பாரதி. 1921ல் பாரதி காலமான பத்து ஆண்டுகளுக்குப் பிறகே தமிழின் முதல் பேசும் படம் (சினிமா) 'காளிதாஸ்' 1931ல் வெளிவந்தது.

ஆனால் 1942ல் தயாளன், பிருதிவிராஜன் போன்ற ஆரம்ப காலப் படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. 1940ல் வெளிவந்த 'உத்தமபுத்திரன்' (மாடர்ன் தியேட்டர்ஸ்) படத்தில் இவரது "செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்னும் பாடலை பி.யூ. சின்னப்பா பாடியிருப்பதாக ஒரு குறிப்பிலிருந்து அறிய முடிகிறது.

பாரதியார் கவிதைகளின் உரிமை சில காலம் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் அவர்கள் வசம் இருந்தது. எனவே அப்போதெல்லாம் ஏவி.எம். படங்களில் மாத்திரமே பாரதியாரின் பாடல்கள் ஒலித்தன. பிறகு ஜீவா, கல்கி, டி.கே. சண்முகம் போன்றோரின் முயற்சியில் பாரதியாரின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதன்பிறகே பல்வேறு தயாரிப்பாளர்களும் பாரதியாரின் பாடல்களை பயன்படுத்தத் துவங்கினார்கள்.

உரிமம் ஏவி. எம். அவர்களிடமிருந்தபோது 'நாம் இருவர்' படத்தில் சில பாடல்கள் இடம்பெற்றன. 'வெற்றி எட்டு திக்குமெட்ட கொட்டு முரசே' பாடலை டி.கே. பட்டம்மாள் பாட, 'வெண்ணிலவு நீ எனக்கு', 'விடுதலை விடுதலை', 'சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகை தான்' போன்ற சிறந்த பாடல்களை டி.ஆர். மகாலிங்கம் பாடினார்.

அதனைத் தொடர்ந்து ஏவி.எம்.மின் 'வேதாள உலகம்' என்கிற படத்தில் இரண்டு பாடல்கள். இரண்டுமே குமாரி கமலாவின் நடனத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன.

"தூண்டிற் புழுவினைப் போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்.
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சம் துடிக்குதடீ"


மற்றொன்று "தீராத விளையாட்டுப் பிள்ளை". இந்த இரண்டு பாடல்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

மணமகள் (1951), தாயுள்ளம்(1952), நாம் (1953), விளையாட்டுப் பிள்ளை (1954), நல்ல தங்கை (1955), ஒன்றே குலம் (1956), குல தெய்வம் (1956), ரங்கோன் ராதா (1956), சக்ரவர்த்தித் திருமகள் (1957), புதுவாழ்வு (1957), ராஜராஜன் (1957), திருமணம் (1958), பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958), ஓடி விளையாடு பாப்பா (1959), நாலு வேலி நிலம் (1959), பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் (1959), படிக்காத மேதை (1960), என பல்வேறு திரைப்படங்களில் பாரதியின் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. பாரதியின் பாடல்களைத் தமிழ்த் திரையுலகம் சர்வ சுவாதீனத்துடன் உள்வாங்கிக் கொண்டது.

1952ல் வெளிவந்த 'பராசக்தி' படத்தில் "நெஞ்சு பொறுக்குதில்லையே", அதே வருடம் வெளிவந்த எம்ஜியார் கதாநாயகனாக நடித்த "அந்தமான் கைதி" படத்தில் இடம்பெற்ற "காணி நிலம் வேண்டும்; பராசக்தி காணி நிலம் வேண்டும்" (சி.எஸ். ஜெயராமன் - எம்.எல். வசந்தகுமாரி) ஆகிய பாடல்களும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

அக்கிரகாரத்தில் கழுதை, ஏழாவது மனிதன், கப்பலோட்டிய தமிழன், கொட்டு முரசு, காற்றுக்கென்ன வேலி ஆகிய படங்களின் அனைத்துப் பாடல்களும் பாரதி இயற்றிய பாடல்கள் தாம்.

பாரதியின் வாழ்க்கையை "பாரதி" என்கிற பெயரில் மீடியா டிரீம்ஸ் திரைப்படமாகத் தயாரித்து 2000ல் வெளியிட்டார்கள். இச்செயலுக்காக இப்படத் தயாரிப்பாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பாரதி நிரந்தரமானவன்.

தொடரும் ...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.