தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.
ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.
தொடர்கள்
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி
------------------------
என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.
2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.
'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
1931ல் தமிழ் சினிமா பேசத் தொடங்கியதற்கும் பிறகு எடுக்கப்பட்ட படங்களின் கதைகள் அனைத்துமே புராண இதிகாசங்களிலிருந்து உருவப்பட்டு சினிமாவாகத் தயாரிக்கப்பட்டவை. கதாகாலட்சேபம் மாதிரி பாடல்களுக்கிடையே கதையைத் திணித்துவிடுவார்கள். ஒரு படத்தில் ஐம்பது அறுபது பாடல்கள் என்பது சர்வ சாதாரணம். கச்சேரி கேட்கப்போகிறேன் என்பதற்குப் பதிலாக கச்சேரி பார்க்கப்போகிறேன் என்று சொல்லும் அளவில்தான் அக்காலப் படங்கள் இருந்திருக்கின்றன.
அம்மாதிரியான சூழலில் 1935ல் 'மேனகா' என்றொரு படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. அது சமகாலப் படம். சமூகப் படம். டி.கே.எஸ் சகோதரர்கள் முதலில் நாடகமாக நடித்துக்கொண்டிருந்ததைத் திரைப்படமாகத் தயாரித்தார்கள். இயக்குனர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த ராஜா சாண்டோ. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இப்படத்தின் மூலமாகத் திரை உலகில் பிரவேசித்தார்.
இந்தப் படத்தின் கதை வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல். வடுவூர் துரைசாமி ஐயங்கார் அப்போது மிகவும் பிரபலமாக விளங்கிய துப்பறியும் நாவல்கள் எழுதும் எழுத்தாளர். எனவே சினிமாவில் நுழைந்த ஆரம்பகால எழுத்தாளராக வடுவூரைச் சொல்லலாம்.
மேனகா (1935) திரைப்படத்தைத் தொடர்ந்து 1937ல் மைனர் ராஜாமணி, மற்றும் பாலாமணி அல்லது பக்தாத் திருடன் என்ற இவரது கதைகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. 1941ல் இவரது கதையொன்று திருவள்ளுவர் என்கிற பெயரில் படமாகத் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. சில கால இடைவெளிகக்குப் பின் 1946ல் 'வித்யாபதி' என்கிற இவரது நாவல் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.
இவரது துப்பறியும் கதைகளுக்கு மவுசு குறையாத காரணத்தால் 1950ல் இவரது பிரபலமான நாவல் 'திகம்பர சாமியார்' மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை ஈட்டியது.
'ஊசிப்பட்டாசே, வேடிக்கையாய் தீ வைத்தாலே வெடி டமார் டமார்' என்கிற இப்படப்பாடல் அப்போதெல்லாம் பட்டி தொட்டிகள் எங்கும் முழக்கமிட்டிருக்கின்றன. அதேபோல் இதே படத்தில் மிகவும் வெற்றி பெற்ற இன்னுமொரு பாடல் 'பாருடப்பா, பாருடப்பா, பாருடப்பா பார், கல்ல உடைடப்பா உடைடப்பா உடை டப்பா நீ' என்கிற பாடல், இந்தப் பாட்டின் மெட்டு ஒரு பிரபலமான இந்திப் பாடலின் அப்பட்டமான தழுவல் என்றாலும், இப்பாடல் தமிழ்நாட்டில் மிகவும் விரும்பிக் கேட்கப்பட்டது!
எம்.என். நம்பியார் இப்படத்தில் துப்பறியும் சிங்கமாக நடித்திருப்பார். குடுகுடுப்பைக்காரன், சாமியார் மற்றும் ஏராளமான வேஷங்களில் நடித்து பிரமிப்பூட்டுவார். நம்பியாருக்கு மிகவும் புகழை ஏற்படுத்திக் கொடுத்த ஆரம்ப காலப்படங்களில் இது மிகவும் முக்கியமான திரைப்படம்.
டி.ஆர். மகாலிங்கம் நடிப்பின் உச்சத்திலிருந்தபோதே படத்தயாரிப்பிலும் இறங்கினார். 'சின்னதுரை' என்றொரு படம் இவரது தயாரிப்பில் 1952ல் வெளிவந்தது. இதில் மகாலிங்கத்தின் ஜோடி எஸ் வரலட்சுமி. இதன் கதை வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய 'இருமன மோகினிகள்' என்கிற நாவல். இவரது மற்றொரு நாவலைத்தழுவி 1959ல் வெளி வந்த படம் சுமங்கலி. பாலாஜி கதாநாயகனாக நடித்த இப்படம் வெற்றி பெறவில்லை.
1935ல் தயாரிக்கப்பட்டு வெளிவந்த 'மேனகா' கதையை மறுபடியும் 1959ல் தயாரித்தார்கள். இப்படத்தில் கே.ஆர் ராமசாமி, லலிதா ஜோடி, இப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. வடுவூர் துரை சாமி ஐயங்கார் சில காலம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனுக்கள் எழுதிக் கொடுத்து பிழைத்து வந்தார் என்கிற செய்தியும் உண்டு. கடைசி வரை சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து அங்கேயே மறைந்தார் வடுவூரார்.
இவரது சில நாவல்கள் அக்காலத்தில் அலையன்ஸ் கம்பெனியார் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். இப்பொழுது அவைகள் கிடைக்குமா எனத் தெரியவில்லை. தேவைப்படுவோர் முயற்சித்துப்பார்க்கலாம், அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும்.
அல்லயன்ஸ் வெளியீடாக வந்த வடுவூராரின் புதினங்கள்:
1) சௌந்திர கோகிலம்
2) மேனகா
3) பூர்ண சந்திரோதயம்
4) மதன கல்யாணி
5) திவான் லொட படசிங் பகதூர்
6) இருமன மோகினிகள்
7) துரை கண்ணம்மாள்
8) வசந்த மல்லிகா
9) நங்கை மடவன்னம்
10) வித்யா சாகரம்
11) டாக்டர் சோணாசலம் அல்லது பிள்ளையார் குரங்காய் போனது
12) விலாசவதி
13) லட்சுமி காந்தம்
14) திகம்பர சாமியார்
15) சிங்கார சூர்யோதயம்
16) மிஸ்டர் பூச்சாண்டி எம்மே
17) மிஸஸ் லைலா மோகினி அல்லது மயன் காலம்
18) வித்யாபதி
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.