கூறு
மாடியின் நடுக் கூடம், வழுவழுவென்று சிமெண்ட் பூசப்பட்டு பெரிதாக இருக்கும்.வெறும் தரையிலேயே படுத்துக் கொள்ளலாம் போலிருக்கும்.அதன் நீள அகலங்களை அளவெடுத்து நெய்த பவானி ஜமுக்காளம், அப்பா பெயருடன், இரண்டு மூன்று உண்டு.அது போக பந்தி ஜமுக்காளங்கள் வேறு உண்டு.அவற்றை உறவினர்களும் நண்பர்களும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு வாங்கிப் போவார்கள். அவை திரும்ப வருகிற போது அழுக்கும், காபிக் கறையும் வெற்றிலைச் சுண்ணாம்புக் கறையுமாக வரும். அம்மா, “அந்தத் தூசியையாவது தட்டிக் கொண்டுவந்து தரக் கூடாதா” என்பாள்.. காணாததற்கு அம்மா தாத்தா, கிராமத்தில் இறந்த போனபின் அங்கேயுள்ள பந்திப் பாய், ஜமுக்காளங்களும் இங்கே வந்து விட்டது.”போ, அதுக்கும் மண்டையிடி புடிச்சாச்சா” என்று அங்கலாய்ப்பாள். அவள் பேச்சு எப்போதும் எடுபடாது.நல்ல அழகான கறுப்பு சிகப்புக் கலரில் இடையிடையே கரு நீலக் கோடும் உள்ள ஒரு ஜமுக்காளத்தை நான் கொடுக்க விடமாட்டேன். அது ஒன்று தான் கடைசியில் மீந்தது.
|
ஹாலின் மேற்கூரை, நாழி ஓடு வேயப்பட்டது. ஆனாலும் வெக்கை தெரியாது.அந்தக்காலத்து ’வார் குவாலிட்டி’ ஜி.இ.ஸி. ஃபேன் காற்று, முழு ஹாலையும் நிறைத்து ஓடும்.செவ்வக வடிவ ஹாலின் நான்கு சுவர்களிலும், ஒழுங்காக பதிக்கப்பட்ட ரீப்பரின் மேல் புகைப்படங்களும், ரவி வர்மா, எஸ்.எம்.பண்டிட் இன்னும் பலர் வரைந்த காலண்டர்களும், சட்டமிடப்பட்டு அழகாக மாட்டப்பட்டிருக்கும்.மத்தியானம் பெரிய ஜமுக்காளததை விரித்து அப்பாவின் நண்பர்கள் அதில் படுத்துக் கதை பேசியபடி கொஞ்ச நேரம் கோழித்தூக்கம் போடுவார்கள்.மூன்றரை மணிக்கு ஒவ்வொருத்தருக்காய் விழிப்புத் தட்டும். ”இன்னக்கி என்ன கிழமை, சனியா, அப்போ ‘போத்தி ஓட்டலில்’ பாதாம் அல்வா போட்டிருப்பான், நாலு மணிக்குப் போனால் காலியாகி விடும் என்று கிளம்பி விடுவார்கள்.
ஒரு மத்தியானம், ”ஏல எங்கடா, இந்த வேணா வெயிலில் சுத்தப் போறே கொஞ்சம் படுடா” என்று அப்பாவின் ஒரு நண்பர் சொன்னார். படுத்திருந்தேன். திடீரென்று ஒருவர் மாடிப்படியேறி வந்தார்.கறுப்பென்றால் அப்படி ஒரு கறுப்பு.”ஜெய்ய் ஹிந்த்” என்று சொல்லிக் கொண்டே ஹாலுக்குள் நுழைந்தார். வந்தவர், சுவரில் மாட்டியிருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படததைப் பார்த்து ஒரு தரம், சர்வ மரியாதையுடன் ’ஜெய்ஹிந்த்’ என்று சொல்லி சல்யூட் அடித்தார்.எல்லோரும் அந்தச் சடங்கு முடியட்டும் என்று காத்திருந்தது போல, ”யோவ் வாரும், வாரும் ’களக்காடு’,கிட்டமுட்ட ஆளையே காணுமே,இப்ப எந்த ஊரில், டேரா“ என்று உற்சாகமானார்கள். நீங்க ஒரு ஆள்தான் அண்ணாச்சி, “தாதா” படத்தை இன்னும் கழட்டாம வச்சுருக்கீங்க என்றார் அப்பவிடம்.”யோவ் நீரு மட்டும்தான் வந்தேரா, ’பன்னம்பாறை ராணியும்’.....” என்று எச்சில் ஒழுகாத குறையாகக் கேட்க ஆரம்பித்தவர்கள், என்னைப் பார்த்ததும், ஏய் கீழே போய் விளையாடு” என்று சொன்னார்க்ள். நான் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன், அவர் அமைதியாக,’போ’என்கிற மாதிரி தலையை ஆட்டினார்.கீழே போவதாகப் போக்குக் காட்டிவிட்டு,ஹாலுக்கு முந்திய தார்சாலில் நான் படிக்கிற சாய்வு மேஜைக்கு முன் அமர்ந்து கொண்டேன்.அதுவும் அம்மாத் தாத்தா செத்ததன் பின் கிராமத்திலிருந்து வந்தது. ’கணக்கப் பிள்ள மேஜை’ என்று பெயர்.
|
அது ராசி இல்லாதது என்று அப்பா அதை விற்று விடுவதாக இருந்தார். எப்படியோ மனசை மாற்றிக் கொண்டு விட்டார். என் அனுபோகத்துக்கு வந்தது.மை பாட்டில் வைக்க, பேனா, பென்சில் போட, புத்தகங்கள் வைக்க, தனித்தனி அறைகள் இருக்கும்.மேல்ப் பகுதி திறந்து மூடுகிற மாதிரி இருக்கும்.ஆனால் நல்ல கனம்.ஏதோ ஈட்டியோ என்னவோ ஒரு மரத்தில் செய்தது. அதைப் பார்த்த ஆசாரியொருவர் சொன்னார், ”இப்ப செய்யணும்ன்னா, ஐநூறு ரூபா ஆகும்”என்று, 1960 வாக்கில். பேச்சின் சில விஷயங்கள் கேட்டது. யாரோ, ”மெதுவாப் பேசுங்க. பிள்ளையாண்டன் அந்தாதான் உக்காந்து படிச்சுகிட்டு இருக்கான்” என்றார்கள்.”ராணி வந்திருக்காப்ல, ’காசிம் அவென்யூ’வில் பின்னாடி ரூம்ல இருக்கா”, அண்ணாச்சி இருக்காங்களான்னு சந்தேகம், அதான் கூட்டிக்கிட்டு வரலை, என்றார், புதிதாக வந்த ’களக்காடு’அண்ணாச்சி. ”சரி... புள்ளைங்க என்னமும் இருக்காவே” என்று யாரோ கேட்டார்கள்.”சேச்சே நம்ம தொழிலுக்கு அதெல்லாம்,லாயக்குப் படுமா” என்றார். ”ஆமா, இன்னும் ஆள் ஷோக்காத்தான் இருக்காளா, வேய்,” என்று ஒருவர். களக்காடு அண்ணாச்சியிடமிருந்து, சத்தமான சிரிப்பு ஒன்று வந்தது. ” வாங்களேன், சாயந்தரமா அண்ணாச்சி கூட.”என்றார்.அப்புறம் சத்தம் குறைந்து போனது, சிரிப்புச் சத்தம் மட்டும் அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருந்தது.சரிவே பாதாம் அல்வா காலியாயிருக்கும் இப்பவே, என்று கிளம்பினார் ஒருவர். ”அதுதான், இவ்வளவு நேரம் காதாலேயே தின்னுட்டீகளே” என்றார் மற்றொருவர்.”ஆமாய்யா ஆளு பாதாம் அல்வாதான் என்றார் ஒருவர். அவர்கள் பேச்சை வெம்பிப் போன, என்னால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
எல்லோரும் போன பின்னால் அப்பாவும்,களக்காடும், கீழே இறங்கினார்கள்.அவர் ஒரு லெதர் பேக்கை, கக்க்த்தில் இடுக்கியிருந்தார்.அதைப் பார்த்தாலே தெரிந்தது, அவர் அதை விடவே மாட்டார் என்று.பட்டாசலுக்கு வந்து உட்கார்ந்தார். அம்மா, வாங்க என்றாள், அவர் கவனிக்கவில்லை, அடுக்களைக்குள் போய் ஒரு தம்ளரில் காபி கொண்டு வந்தாள், ”அப்பதையே வாங்க என்றேன்” என்றபடியே காபியை நீட்டினாள். ”அதுக்கென்ன நம்ம வீடு இது, நீங்க கூப்பிடலேன்னாலும் எனக்கில்லாத உரிமையா” என்று சத்தமாக சிரித்தபடி சொன்னார். “இப்ப ஊர்ல யார் இருக்கா என்றார் அப்பா”, எங்க, களக்காட்டிலா, அங்க யாருமில்லை, வீட்டை வித்துட்டேன், ஒரே ஒரு ரூம் மட்டும் இருக்கு. போனா வந்தா தங்கிக் கொள்ள இருக்கட்டும்ன்னு ராணி சொன்னதால அது மட்டும் இருக்கு என்றார்.ரூபாயை முதலாளிகிட்ட கொடுத்திருக்கேன். கம்பெனில போட்டிருக்காரு.சம்பளம் போக மாசவட்டி மாதிரி தாராறு. நான் தானே கணக்கு வழக்கெல்லாம் பார்க்கிறேன். மாசாமாசம் நானே எடுத்துக்கொண்டால் கூட ஒன்றும் சொல்ல மாட்டார். ஆனால் அவ்வளவு ஓட்டமில்லை. ராணியை நடிக்க வேண்டாம்ன்னு அவரே சொல்லிட்டாரு”என்று நிறுத்தாமல் பேசினார்.
பேசிக்கொண்டிருக்கும் போதே, லெதர் பையைத் திறந்து ஒரு படத்தை எடுத்து அம்மாவிடம் கொடுத்தார். கீழ்ப் பகுதியில் சபரி மலைக் கோவில் முகப்பும் 18 படியும், அதன் மேல் அய்யப்பன் படமும் இருந்தது “நம்ம கம்பெனி விளம்பரத்துக்காக அடிச்சது., நீங்க இந்த நாடகம் பார்த்த ஞாவகம் இருக்கா மதினி, கணபதி விலாஸ் தியேட்டர்ல நடந்தது, இன்னும் நல்லாத்தான் போகுது.ஆனா பழைய மாதிரி இல்லை. கம்பெனியை விட்டு எல்லோரும் சினிமாவுக்குப் போயிட்டாங்களே” என்றார்.
|
”தஞ்சாவூர்ப் பக்கம் நவாப் முதலாளின்னு பேருக்கு, கொஞ்சம் கூட்டம் வருது.இந்தப் பக்கமெல்லாம் வரத்தே இல்லை.இந்த வருஷம் இங்கே ஆனித்திருழா பொருட்காட்சியில ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்குமான்னு பாக்கத்தான் வந்தேன். முதலாளி அனுப்பினாரு” ”அண்ணாச்சி, உங்களுக்கு முனிசிபாலிட்டி சேர்மன் பழக்கமாச்சே, கேட்டுச் சொல்லுங்களேன் என்றார். “இப்ப அவர் இல்லையே, அவர் ராஜினாமாப் பண்ணிட்டுப் போயிட்டாரு. இன்னொருத்தர்தான் சேர்மன், அவர்ட்ட கேட்கலாம். நாமளா கேட்க வேண்டாம்.பாப்புலர் டாக்கீஸ் முதலாளியிடம் சொல்லிக் கேட்கலாம்” என்றார், அப்பா.சாயந்தரம் அப்பாவுடன் கிளம்பினார் களக்காடு.நானும் வருகிறேன் என்றேன்.அப்பா பதில் சொல்லும் முன், அம்மா, ”சரி போய்ட்டு வாயேன்,” என்றாள்.பொதுவாக அப்பா தன் நண்பர்களுடன் கிளம்பிப் போகும் போது நானும் போவேன். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார். அந்த சுதந்திரம் கடைசி வரை இருந்தது.அது இல்லாவிட்டால் இந்தக் கதைகளே இருக்காது.ஆனால் அன்று விரும்பவில்லை போலிருந்தது.அம்மா விரும்பியிருந்திருக்கலாம்.
நெல்லை லாட்ஜ் ஸ்டாப்பில் இறங்கினோம். நெல்லை லாட்ஜை எனக்குத் தெரியும். ஏதோ வேறு ”காசிம் அவென்யூ” என்றாரே என்று தோன்றியது.நெல்லை லாட்ஜின் உள்ளாகப் போய் அதன் பின் பகுதியில் இருந்த வரிசையான வீடுகளில் ஒன்றிற்குப் போனோம். செடியும், அழகான க்ரீப்பர் கொடிகளும் நிறைந்து குளுமையாக இருந்தது, அந்த வரிசை வீடுகள். வேறெதற்கோ அங்கே வந்த நினைவு வந்தது. அப்பா முதல் பத்தியில் கிடந்த நாற்காலியிலுட்கார்ந்தார். நான் நின்று கொண்டிருந்தேன்.”அண்ணாச்சி, சும்ம உள்ளே வாங்க என்றார்”, களக்காடு.நாந்தான் அதிகப் பிரசங்கி மாதிரி முதலில் உள்ளே போனேன். இரண்டு கட்டில்கள் கிடந்தன ஒரு பெண், ஒரு கட்டிலில் இருந்தாள், அவசரமாக எழுந்தாள். வட்ட முகம் நீளமான முடி. நடிகை அம்பிகா, (அந்தக்கால அம்பிகா-மலையாள நடிகை-அவள்தானோ என்று பல தடவை நினைத்ததுண்டு-) போலிருந்தாள். அப்பாவைப் பார்த்ததும் அவளும், “வாங்க, வீட்ல எல்லாரும் சௌக்கியமா, உங்களை பாக்கத்தான் வந்தாரா, நானும் வந்திருப்பேனே” என்றாள். ”இவந்தானே கடைசி என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்.”” ”ஆமா, ஆமா இவருதான் கடைக்குட்டி ஒரு மாதிரியா அண்ணாச்சி நிப்பாட்டிட்டாரு என்று களக்காடு கேலியாகச் சிரித்தார்.எனக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.நான் வெளியே வந்து விட்டேன். இவதான் ராணி போல இருக்கு, என்று நினைத்துக் கொண்டேன்.அங்கே இருந்த ஒரு ’மயில் மாணிக்கம்’ கொடியில் விதைகளைப் பறித்துச் சேகரித்துக் கொண்டிருந்தேன். அப்பா, ”போகலாமா” என்ற படியே வந்தார்.
”மாயவரத்துக்கு வாங்க, நீயும் வாப்பா, தம்பி”என்று சொல்லியபடியே வெளியே வந்து வழியனுப்பினாள்.இரண்டு நாள் கழித்து களக்காடு வீட்டுக்கு வந்தார்.நான் அப்பாவிடம், அப்பா, களக்காடு வந்திருக்காரு” என்றேன் ச்சேய், நாயே ஒரு மரியாதை வேண்டாம், சுப்ரமணியன் மாமான்னு சொன்னா என்ன” என்று சத்தம் போட்டார். அவர் பின்னால் அந்த அம்மாள் ராணியும் வந்தாள்.அவள் நேரே அம்மாவைப் பார்க்க வீட்டினுள் போனாள்.அன்று பார்த்ததை விட அழகாய் இருந்தாள்.இப்படி அழகான விருந்தாளிகள் எப்போதாவதுதானே வருகிறார்கள் என்று நினைத்தேன். நேற்று அவரு ரூமுக்கு வந்தாரு, இன்னிக்கும் வாரேன்னிருக்காரு, கதை ஓ.கே ஆயிரும்ன்னு பார்த்தா இவ மாட்டேன் என்று சொல்லீட்டு இங்க வந்துட்டா, நான் பின்னாலேயே வாரேன்”,என்ற களக்காடு மாமா,என்னைப் பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டு உதட்டைப் பிதுக்கினார்.கொஞ்ச நேரத்தில் இரண்டு பேரும் கிளம்பினார்கள்.
பத்துப் பன்னிரெண்டு வருடம் கழிந்திருக்கும். ஒரு மத்தியானம், நான் மாடியில் படித்துக் கொண்டிருந்தேன். இப்போது வீட்டிலுள்ள பெரிய மேஜையில் அமர்ந்து.” என்னா தம்பி படிக்கியா என்றபடியே ஒருவர் வந்தார். முகத்திலும், உதட்டிலும் வெள்ளை விழுந்திருந்தது.ரொம்பவும் நைந்து போன தோல்ப் பை கக்கத்தில்.வெள்ளை கதர் வேஷ்டி சட்டை.அது யார் என்று நினைவுக்குக் கொண்டு வரும் முன்,”ஜேய் ஹிந்த்’என்று சத்தம் கேட்டது.ஹாலில் படுத்திருந்த அப்பா எழுந்திருந்து பார்த்தார். களக்காடு சுப்ரமணிய மாமா. ”என்ன அண்ணாச்சி, தாதா, படக் கண்ணடி உடைஞ்சிருக்கே, மாத்தக் கூடாது” என்றார்.என்னவெல்லாமோ உடைந்து விட்டது இங்கே என்று எனக்குத் தோன்றியது. கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர் படுக்க முயற்சித்தார். பழைய காலம் போல் தலையணைகள் எல்லாம் ஒன்றுமில்லாததைக் கண்ட அவர்,தன் கைப்பையையே தலைக்கு வைத்துக் கொண்டார்.
நாலைந்து நாட்களாக மாமா இங்கேயே தங்கியிருந்தார். காலையில் ஆற்றுக்குப் போய் குளித்து முடித்து மதியம் வாக்கில் வருவார், படுத்திருப்பார்.மாலையில் எங்கே போகிறார் என்று தெரியாது. ஒன்பதுமணி சுமாருக்கு வந்து படுத்து விடுவார். வீட்டில் சாப்பிட மாட்டார். வீட்டிலும், சாப்பிடச் சொல்லும் நிலையும் இல்லை.இரண்டு நாள் கழித்து, ஒரு மத்தியானம் என் மேஜையருகே வந்தார்.தம்பிக்கி படிப்புல ரொம்ப ஆசை போலிருக்கு, வேலை ஏதோ வந்ததைக் கூட வேண்டாம் என்று சொல்லீட்டேரேமே, என்றார்.இல்லை அது டெம்பரரி வேலைதான், அதே வேலை காயமானால், படிப்பை விட்ருவேன் என்றேன். அப்படியெல்லாம் உண்மையில் யோசனை இல்லை. தினமும் அந்நேரம் என்னுடன் பேசுவார். கம்பெனியெல்லாம் மூடியதை எப்போதோ கேள்விப் பட்டிருந்தேன்.ஒரு காலத்தில் அய்யப்பன் கோயில் போகும் கலாச்சாரத்தினை ஆரம்பித்து வளர்த்ததே களக்காடு மாமா வேலை பார்த்த நாடகக் கம்பெனிதானாம். எம்.என் நம்பியாருக்கு முதன் முதல் மாலை போட்டு விட்டதே, எங்க முதலாளிதான் என்று மாமா சொல்லுவார்.இப்ப என்ன தம்பி, மனோகர் நாடகம். நாங்க செய்யாத ஜோடனையா, மேடை ட்ரிக்ஸா...என்னமோ எல்லோருக்கும் ஒரு காலம்.இப்ப பாருங்க, ராணி ஒரு டைரக்டர் கூட சந்தோஷமா இருக்கா, நான்தான் அனுப்பி விட்டேன். போகவே மாடேன்னா, போயி அஞ்சாறு வருசமாச்சு. அவரும் முதலாளிட்ட இருந்தவருதான் என்று பெயரைச் சொன்னார். ஒரு பிரபல இயக்குநர். எனக்கு நம்பவே தோன்றவில்லை.என்னையும் கூப்பிட்டாரு, அது நல்லாவா இருக்கும்.. நான் போகலை...எனக்கு நிறைய பேர் பணம் பாக்கி தரணும்..அலையா அலையறேன்..என்றார். நான், ”அப்பா” ..என்று இழுத்தேன்..”ச்சேச்சே அவுக ஒன்னும் தரவேண்டாம்...”அவுக போடாத சாப்பாடா, இந்த இடம் இப்படியா இருக்கும். எத்தனை பேர் இங்க தங்கி படிச்சுருக்காங்க தெரியுமா, அதெல்லாம் ஒரு காலம்”
பேசிக் கொண்டே இருந்தார், சாயந்தரம் ஆகிவிட்டது. அம்மா கூப்பிட்டாள். அடை சுட்டுக் கொண்டிருந்தாள்.இந்தா அவரு, களக்காடு இருக்காரா, இதைக் கொண்டு போய்க் கொடு, சாப்பிட்டு ரெண்டு நாளாச்சாம்”,. மெட்ராஸ் போகறதுக்கு மணிஆர்டரை எதிர்பார்த்துக் காத்திருக்காரு” என்றாள்....நான் போய் அடையைக் கொடுத்தேன், ஒன்றுமே பேசாமல் சாப்பிட்டார். தட்டை அவரே கழுவிக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்துக் கும்பிட்டார்.” அம்மா பதறினாள், ”சும்மா இருங்க, ஒங்க வயசென்ன, என் வயசென்ன, இந்தப் பாவம் வேற எனக்கு வரணுமா” என்றாள். அவர் வெளியே போய் விட்டார்.
மறு நாள் கல்லூரிக்குப் போய் விட்டு வந்தேன்.என் மேஜையில் ஒரு மணிஆர்டர் ஃபாரத்தின் அடிப் பகுதி இருந்தது., என் அன்புள்ள அய்யாவுக்கு, பணம் அனுப்பியிருக்கிறேன்..இங்கே இவர் ஒரு பெரிய புராணப் படம் எடுக்கிறார்...அதற்கு உங்களை மேனேஜராகக் கூப்பிடுகிறார்..கட்டாயம் வரவும். எனக்கு உங்களைத் தேடுகிறது.கட்டாயம் மறு ரயிலில் வரவும்.-இப்படிக்கு ’ராணி’. அம்மாவிடம் கேட்டேன், ”அந்தக் களக்....இல்லை மாமா எங்கே, போய்ட்டாரா....”, ’’ஆமா அப்பாதான் வல்லாவல்லடியா ரயில் ஏத்தி விட்டுட்டு வந்திருக்காங்க,” என்றாள்.
ஒருவாரம் கழித்து அப்பா பெயருக்கு ஒரு கார்டு வந்தது, விலாசம் அவ்வளவு முழுமையாக இல்லாமல். அவுக இன்னமும் இங்க வரலை, கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க என்று இரண்டு வரியுடன். முகவரி எதுவும் இல்லை....நான் என் மேஜையில் மணிஆர்டர் கூப்பனைத் தேடினேன்... அதிலும் முகவரி இல்லை..பின்னாலேயே வந்த. அப்பா, ”நானும் இதை அன்றைக்கே பார்த்து விட்டேன், அவள் கூறு அவ்வளவுதான்”, என்றார். எனக்கென்னவோ இன்றும் தோன்றுகிறது, அவர்-களக்காடு மணி மாமா- அறிவாளி என்று.
|