நெருநல் நினைவுகள்…..
”வாழ்தலுக்கும் சாதலுக்கும் என்ன வித்தியாசம்
வாழ்ந்து விட்டுச் சொல்லுகிறேன் அந்த வித்தியாசம்..”-
-ஜெயகாந்தன்
சமீபத்தில் ஒரு கனவு. எங்கள் பழைய்ய்ய திருநெல்வேலி வீடு…., புறவாசலில் உள்ள குச்சுகள் ஒன்றில் புதுமைப்பித்தன் குடியிருக்கிறார். அவருக்குத் தபால்க்காரர் தரும் ஒரு தபாலை எடுத்துக் கொண்டு ஒரு ஏழு எட்டு வயதுப் பையனாகப் புறவாசலுக்கு ஓடுவது போல்…..ஒரு கனவு. என் ஏழு எட்டு வயது உருவம், குரல், அரை டிராயர்…எல்லாம் அப்படியே நினைவு போலிருக்கிறது. புதுமைப்பித்தனின் முகம் பிடிபடவில்லை, மசங்கலாக இருக்கிறது.
|
வீட்டின் புறவாசலில் (புழக்கடை) இரண்டு மூன்று குச்சுகள் உண்டு. அவற்றில் ஒன்றில், நாகர்கோயில்ப் பக்கம் பாரசாலையிலிருந்து வந்த ஒரு பிராமணக் குடும்பம் குடியிருந்தது. அவர் ஜங்ஷன் ‘சந்திர விலாஸ்’ ஹோட்டலில் சரக்கு மாஸ்டராக இருந்தார். அதிகாலையில் போனால் இரவு பதினோரு மணிக்கு வருவார். வாடகை தருவதற்கெல்லாம், ஏகக் கஷ்டம். ஆனாலும் ஏனோ அப்பா அவர்களைக் காலி செய்யச் சொல்வதில்லை. அம்மாவுக்கு அந்த வீட்டு மாமிதான் ஊறுகாய் போட்டுத் தருவாள். அம்மா ஊறுகாய் போட்டால் நாலே நாளில் பூசனம் பூத்து விடும். மாமி நேந்திரம் பழத்தில், இனிப்புச் சிப்ஸ் மற்றும் சாதாரணச் சிப்ஸ் போடுவதிலும் கைப்பக்குவம் அப்படி மொறு மொறுவெனப் பேசும். அவ்வப்போது நாகர்கோயிலிலிருந்து, நேந்திரங்காய் வாங்கி வந்து, சிப்ஸ் போட்டுத் தருவாள் மாமி. அதுவும், இரண்டு மூன்று சீப்பு, நன்றாக விளைந்த காய்களைச் சீவி, வருவல் போட்டு ஒரு பிஸ்கட்டின் நிறையத் தருவாள். இல்லாவிட்டால் இங்கே பெரிய வீட்டிற்குக் காணுமா. மற்றப்படி வீட்டுப் பெண்களுக்கு, குச்சு வீட்டுக் காரர்களைக் குறிப்பாகப் பெண்களை அவ்வளவாய்ப் பிடிப்பதேயில்லை. தெருவில் பல வீடுகளின் பின்னாலும் இதே போல் குச்சு வீடுகளும் அதில் ‘குச்சு வீட்டு மனிதர்களும்’, இதே போன்ற ‘மரியாதையுடன்’ குடியிருப்பதுண்டு.
அவர் வீட்டுக்கு, ராஜம் கிருஷ்ணனா, அநுத்தமாவா யாரென்று நினைவில்லை, ஒரு பிரபல பெண் எழுத்தாளர், அவர்களது உறவினர், வந்திருந்தார். அம்மா, அக்காவெல்லாம் மாமியின் வீட்டுக்குள் போய் அவரைப் பார்த்து வந்தார்கள். நான் வாசலில் நின்று எட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான் இடமிருந்தது. அதைப் பற்றிக் கொஞ்ச நாள் முன்பு நினைத்துக் கொண்டிருந்தேன். அதே போல் பாப்லோ நெருதாவுக்கு தபால் கொண்டு தரும் ’போஸ்ட்மேன்’ (எல் போஸ்டினோ) படம் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தேன்….புதுமைப்பித்தன் பற்றி எப்போது யோசித்தேன், நினைவில்லை. எல்லாமுமாகச் சேர்ந்து இந்தக் கனவு வந்திருக்க வேண்டும்.
|
நான் பத்தாயிரம் மைல்களை ’நடந்து’ கடந்தவனும் இல்லை, பத்தாயிரம் நூல்கள் படித்தவனும் இல்லை. (ஒரு பிரபல எழுத்தாள நண்பர் குறிப்பிட்டது போல (!) என் வாசிப்பு என்பது, அதிகமும் சினிமாப் போஸ்டர் மட்டும்தான்). அங்குமிங்கும் ஆடுகிற ஊஞ்சல் போலத்தான் என் பயண விசாலம். அதில்க் கூட சில துணிச்சல்க்காரக் குழந்தைகள் போல, தலை குப்புற ஊஞ்சலாடியதுமில்லை. ஆனாலும் நான் அசலான சில மனிதர்களையும், அவர்கள் அபிலாஷைகள் நிறைந்த வாழ்க்கையையும் அவர்களது வியர்வை வாசத்தின் நெருக்கத்திலிருந்தபடி அவர்களுடன் வாழ வாய்த்து, உணர்ந்திருக்கிறேன். சில பால்ய காலத் தெரு நண்பர்கள் என்னை ஏனோ புறக்கணித்தபோது - அது ஒரு செல்லப் புறக்கணிப்புத்தான்- நான் அப்படியொரு அசாதாரண இனஞ்சேரலுடன் அந்த இன்னொரு உலகினரின் அன்புக்குள் அடைக்கலம் கண்டேன். அவர்கள் யார் வீட்டின் அடுக்களை வரைக்கும் சாதாரணமாகப் போவேன். கேட்டும் கேட்காமலும் சாப்பிடுவேன். சுதந்திரமாகவும் அதிகப் பிரசிங்கித் தனமாகவும் அலைந்து திரிந்திருக்கிறேன். எல்லாமும் எல்லாரும் என் கனவிலும் நினைவிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். அவர்களுடனான என் இயைபு என் நினைவில் தேர்த்தடம் போல் பதிந்திருக்கிறது..
தேரோட்டத்திலும், திருவிழாவிலும் எல்லோரும், எல்லோரின் கவனமும், கொண்டாட்டம் நிறைந்த முன் பகுதியிலேயே இருப்பார்கள்/ இருக்கும். தேர், கை விட்டு நகர்கிற அதன் பின்புறத்தில், வீதியில் அது உண்டாக்கும் அழுத்தமான தடம், மனசுக்குள் ஏதோ ஒரு சோகம் உருள, நம்மை வாய் திறந்து சொல்லவைக்கும், பிரமிக்க வைக்கும், ”தேர்ன்னா தேர்தான்”. பார்த்துத் திரும்பிய பலமுறை மனசுக்குள் தோன்றியிருக்கிறது, “கால்வல் நெடுந்தேர்”, ’உருள்பெருந்தேர்’ என்ற சொற் சேர்க்கைகள். கொண்டாட்டமும் வெறுமையும், தேருக்கு இப்புறமும் அப்புறமுமாய் நிலை கொள்ள, வருடாவருடம் தேர் நகர்கிறது. வருடாவருடம் அது நிலையம் சேரவும் செய்கிறது. இரண்டு தேரோட்டங்களுக்கிடையில் என்னவெல்லாமோ நிகழ்கிறது. ஒரு தேரோட்டத்திற்கு இருக்கும் ஒருவன் அடுத்த தேரோட்டத்தில் இல்லாமல்ப் போகிறான். தேருக்கு எதிராகவே பாடையில்ப் போகிறான். போன தேரோட்டத்தின் போது, புறவாசல்க் குச்சு வீட்டில் இருந்த குடும்பம் இந்தத் தேரோட்டத்தின் போது இன்னொரு தெருவிற்கு, இன்னொரு தகரக் குச்சுக்குக் குடி பெயர்ந்து, அதே மத்தியான வேனல்ப் புழுக்கத்தில் புணர்ந்து பெற்ற புதிய, ‘பீத்தொலி’ உரிகிற சிவந்தமேனியுடனான கைச் சிசுவுடன் தேரோட்டம் பார்க்க நிற்கிறது. செயலாக இருந்த குடும்பம் செயிலிழந்து நிற்கிறது. தச்சநல்லூர் அண்ணா சிலையின் முன் “குடிக்க மாட்டோம்” என்று உறுதி மொழி எடுத்தவர்களுக்குத் தலைமை ஏற்றவன், ஒரு சிகரெட்டைக் கூடத் தொட்டறியாதவன், அப்படிக் குடிக்கிறான். மெல்ல மெல்ல அரசியல் மாற்றம் நிகழ்ந்து ஆட்சி மாறுகிறது.. எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாகவும் சிலவற்றிற்கு நேரடியான சாட்சியாகவும் இருக்க நேர்கிறது..
”தனிமை இனி நிரந்தரக் குத்தகை
துயரக்கனவுகள் எனக்கினி எத்தனை….”
என்ற தேவகோட்டை வா.மூர்த்தியின் கவிதை வரிகளைப் பகிர்ந்து கொண்டபோது “காத்திரு வசந்தம் வராமலே போகாது..” என்று சுப்ரமணிய ராஜு கடிதம் எழுதினது போல், எதற்காகவோ காத்திருந்தேன், கொஞ்சம் அறிவு ஜீவியாக மாறி. ஆனாலும் உள்ளாடை அணியாதவர்கள், கக்கூஸ்பத்தும் சீலைப்பேனும் தொந்தரவு செய்ய தனிச்சையாய் சொறிந்து கொள்ளுபவர்கள், இன்னும் தனிச்சையாய் சொறிந்த கையை முகந்து பார்ப்பவர்கள்…… இதற்கு நேர் எதிராய் வாசனையில் வாழ்பவர்கள் என்று தனிச்சையான பலருடனுமான என் அணுக்கத்தை நான் விட்டு விடத் தயாராயில்லை.. வீடு, தெரு, என்ற வாழ்க்கை, தேரோடும் வீதி, அவ்வீதியில் இணையும் தெருக்கள், நூற்றுக்கணக்கான அதன் மனிதர்கள் என்று விரிவடைந்தபோது கண்டவையும் அனுபவித்தவையும் இன்னும் இருக்கின்றன. அவற்றை இன்னொரு வகையில் இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை ஒரு நாவல் வடிவத்தில்.
இக்கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கும் போது பல பின்னூட்டங்கள், பெரும்பாலும் பாராட்டுரைகளுடன், ’கூடு’ இணையதளத்தில் வந்தன. அவற்றில் பலரும் தங்களுக்கு முந்திய தலைமுறையின் நிகழ்வுகளை ஆவணப்படுத்துங்கள் என்று கேட்டிருந்தார்கள்.. அதையும் (வலிந்து செய்யாமல்) செய்திருப்பதாய் நினைக்கிறேன். பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் அன்பாந்த நன்றி. உங்கள் அன்பு இல்லாதிருந்தால் இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நீண்டிருக்குமா என்பது சந்தேகமே.
இதில், காலமும் சூழலையும் தவிர்த்து, நிகழ்வுகளை, நினைவுகளைப் பெரும்பாலும் புனைவாகவே பதிவு செய்திருக்கிறேன்.. இதை எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய. தமிழ்ஸ்டுடியோ.காம் நண்பர்கள் அருண், குணா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
|