அக்கினி நட்சத்திரம்.
அன்று வழக்கத்திற்கு மாறாக, பெண்கள் கல்லூரி டவுண் பஸ்ஸில், பாளை பஸ் ஸ்டாண்ட் வரை போய்விட்டோம்.பொதுவாக ஜங்ஷனுடன் திரும்பி விடுவோம். இரண்டு காரணங்கள், ஒன்று நாங்கள் எங்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் அது, எதிர்த்திசையில், மேற்கே இருந்தது.இன்னொன்று ஜங்ஷனில் ’செக்கிங் இன்ஸ்பெக்டர் சாமி’ ஏறி விடுவார்.அன்று வழக்கத்திற்கு மாறாக செக்கிங் ஐயர், டவுணிலேயே ஏறி விட்டார். அவரேயும், ”என்ன தோழர் நீங்க வரலையா, சும்ம ஏறிக்குங்க..” என்று வேறு சொல்லிவிட்டார்.அவர் சின்ன வயதுக்கரர்தான். சமீபமாக நன்றாகப் பழக ஆரம்பித்திருந்தார். பெரிய காரணம் ஒன்றுமில்லை, அவர் “டாவடிக்கிற”(கணக்குப் பண்ணுகிற) பெண், எங்கள் தெருவில் இருந்தது.அவளிடம் அது பற்றி விளையாட்டாகப் பேசியபோது, ”நல்ல ஆளைச் சொன்னீங்க, முதல்ல அந்த ஆளைத் தினமும் குளிக்கச் சொல்லுங்கண்ணேன், ஒரே ’விவா’”..என்றாள். கக்கத்திலிருந்து கிளம்பும் விஷ வாயுவின் சுருக்கம் ’விவா’. ‘விவா’, ’ஹார்லிக்ஸ்’ எல்லாம், உடலில் கப்படிக்கிற ஆண்களைப்பற்றி பெண்கள் அகராதியின் கலைச் சொற்கள்.இதற்குப்பிறகு நாங்கள் உஷாராகி விட்டோம். எங்களுக்குள்ளேயே “மாப்பிள்ளை, இன்னக்கி விவா வா ஹார்லிக்ஸா...” என்று கேட்டுக்கொள்ளுவோம்.அப்பொழுது பாடி ஸ்பிரே எல்லாம் கிடையாது. “ மாப்பிள்ளை, ஒரு கட்டி லைஃப்பாய் சோப்பும், அரைக்கட்டி சாண்டல் சோப்பும், எடுத்துட்டு குறுக்குத்துறைக்குப் போய், நல்லாத் தேய்ச்சுக் கரைச்சுக் குளிச்சுட்டு வா....” என்று கிணடலடித்துக் கொள்ளுவோம்.இதையே போய் ஒரு பெண்ணிடமும் சொல்லிவிட, விஷயம் சற்றுப் பெரிதாகி விட்டது. மேற்படி கலைச்சொல்லை என்னிடம் சொன்ன அன்னம்மா, ”போங்கண்ணேன், உங்க கிட்ட சொன்னேன் பாருங்க ”என்று கோபித்துக் கொண்டாள்.
அன்று பாளை பஸ்ஸ்டாண்ட் வரை சென்று விட்டோம். பஸ்ஸ்டாண்ட், காலை பத்துமணி நேரப் பரபரப்பெல்லாம் அடங்கி அமைதியாய் இருந்தது. பஸ்ஸ்டாண்டின் வெளிப்புறத்துக் கடைக்குப் போனோம்.எதிரே கட்டபொம்மன் சிலை. பக்கத்துப் பள்ளியின் ஒரு பெண் தன் தந்தையுடன் குனிந்த தலை நிமிராமல் சென்றது. அப்போதுதான், அங்கே நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த அவன், சத்தமாகச் சொன்னான்..” ஐயா கூட, கமுக்கமா, இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமாங்கிற மாதிரி போறதைப் பாரேன்...”” ஏல எவனாவது கொடுத்த லெட்டரோட ஹெச். எம் கிட்ட மாட்டிக்கிட்டாளா....”என்றான். அவன் சொன்னது அந்த தந்தைக்கும் கேட்டு அவர் திரும்பினார். “ ஏல என்ன, ஐயா முறைக்காரே ..” என்று சிகரெட் புகையை அவரை நோக்கி ஊதினான்.அவரும் தலை குனிந்தபடி சென்றார். அதுதான் ஆறுமுகமாய் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவனைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.பயங்கரமான கோபக்காரன் கம் பாசக்காரன் என்று.ஒரு முறை பார்த்தும் இருக்கிறேன்.
|
மடித்துக்கட்டிய வேட்டி, தொடை தெரிய ரொம்பவும் கட்டையாகவே இருந்தது. வெள்ளைச் சட்டை. ஏறு நெற்றி. கறுகறுவெனச் சுருண்ட முடி. தடித்த ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி.நல்ல சிகப்பு, என்பதை விட மஞ்சள் நிறம் எனலாம்.பனியன் போடாத மார்பு நன்றாய்த் தெரிகிற மாதிரி சட்டைப் பட்டனில் கீழ் இரண்டை மட்டுமே போட்டிருந்தான்.அவனைச் சுற்றி நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட என்னைப் போல ஒல்லியாய் ஒருவர். அவர் இருந்ததுதான் எனக்கு சற்று ஆசுவாசமாய் இருந்தது. நம்ம கூட சேத்தியா ஒரு ஆளு இருக்காரு என்கிற சமாதானம்.ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவிலை.என்னை அழைத்துச் சென்ற ராஜனிடம் ஆறுமுகம் கேட்டான்,” ஏல பொந்துக்கண்ணா இது யாரு, இந்த மூங்கில் கம்புக்குப் பின்னாலேயே ஒளிஞ்சுக்குவாரு போல இருக்கு...” என்று அந்த வெற்றிலை பாக்குக் கடை முன்னால் போட்டிருந்த வேனல்ப் பந்தலின் மூங்கில் காலைக் காண்பித்துச் சொன்னான்.அவன் நான் யார் என்று சொன்னான்.”ஓஹ் அவரு மகனா...எங்க ஐயாவுக்கு அவரு ஃப்ரெண்டுல்லா...”என்றான். ஒல்லியான ஆளிடம், ”சம்முவம் யார் தெரியுதா....”உத்தரவின்றி உள்ளே வா”படத்துக்கு முதல் நாளன்னிக்கி, நமக்குத் தராம இவருக்குத்தான் டிக்கெட்டைக் கொடுத்தான்.. அந்த மேனேஜர் ஞாவகமிருக்கா...” என்றான். ஸ்ரீதர் படத்திற்கு எப்போதுமே ஹைகிளாஸ் டிக்கெட்டிற்கு கூட்டம் இருக்கும்.நாங்கள் மூன்று டிக்கெட் சொல்லி வைத்திருந்தோம். அதை எங்களுக்குத் தரப் போகையில் ஆறுமுகம் வந்து மேனேஜரிடம் டிக்கெட் கேட்டார்..”டிக்கெட்டெல்லாம் ஆகிப்போச்செ என்றார்”அவர்.”இந்தா, பொறவு என்னத்தை கையில வச்சுருக்கேரு...” என்றான். ”இது இந்தத் தம்பி அப்பவே...முதலாளிகிட்ட சொன்னது..” என்றார்.”அவரை அடுத்த ஷோவுக்கு வரச்சொல்லும்வே ”என்று டிக்கெட்டைப் பிடுங்கினான்... நான், ”அண்னாச்சி.. முதலாளிகிட்ட சொல்லவா...” என்றேன். “முதலாளி புடுங்கிருவாரோ... நான் படம் பாக்கணும்....மேலெ போறேன் டிக்கெட்டை குடுத்து அனுப்பும்....” என்று பற்றவைக்க எடுத்த சிகரெட்டைக் கசக்கி அவர் மேல் எறியாத குறையாய் வீசிவிட்டு நகர்ந்தான்.
மேனேஜர், ”தம்பி நீங்க வேணும்ன்னா பெஞ்சு டிக்கெட்டுக் குப் போறீங்களா...”என்றார். சரி என்றேன். ஆனால் கூட வந்தவர்கள், ”அது எதுக்கு, அவரை பெஞ்சுக்குப் போகச் சொல்லட்டுமே” என்றார்கள்.மேனேஜர் அவர் குணம் உங்களுக்கு தெரியாது... முதலாளிக்கு ரொம்ப வேண்டியவரு...”என்றார். எங்கிருந்தோ முதலாளி இதைக் கவனித்திருக்க வேண்டும். இரண்டு குரூப்பையும் அனுப்ப ஏற்பாடு செய்து விட்டார். முழுப்படமும் அவனுக்கு அருகாமையில் அமர்ந்துதான் பார்த்தோம்.ஆனால் அப்படியொரு ரசாபாசம் நடந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. கோபமெல்லாம் போன இடமும் தெரியவில்லை.
அப்புறம் பாளைக் கல்லூரி நண்பர்களிடம் விசாரித்தோம். அப்போதுதான் ஆறுமுகம் பற்றித் தெரிய வந்தது.அன்று முகத்தையும் சரியாகக் கவனித்திருக்கவில்லை.ஆறுமுகம். ஒரு பெரிய தொழில் அதிபரின் ’சின்னவீட்டு’ப்பையன்.அம்மாவின் செல்லமும், ஒருவகைப் புறக்கணிப்பும், அவனை பெரிய முரடனாக ஆக்கியிருந்தது.அவன் அம்மா அவனைச் சிறுவயதில் ஒரு பெண்பிள்ளை போலவே அலங்காரம் செய்து வளர்ப்பாளாம். நிறைய கடுக்கண், தோடு என்று போட்டதினால் காதில் அவனுக்கு பெரிய துவாரங்கள் இருக்கும்.அதை வைத்தே அவனை நண்பர்கள் வட்டத்தில் கேலி செய்வார்களாம். ஆனால் ‘சவத்துக்கு’ எப்ப கோவம் வருதூன்னே தெரியாது, ஒருதரம் காது துவாரம் பற்றி, ’பாம்படக் காது ’ என்று கிண்டலடிக்கையில், “ஆமா, பாக்கிறியால, இன்னும் ஒம்பது ஓட்டை இருக்கு...” என்று வேஷ்டியை நடுச் சந்தியில் வைத்து அவிழ்க்க முயன்று , அவனை சமாதானப்படுத்த பெரும் கஷ்டப்பட்டதாகச் சொல்வார்கள்.அவன் பிஎஸ்சிதான் முதலில் சேர்ந்தான்.லேபில் ஒரு பிஸிக்கல் பாலன்ஸ் சரியாக எடை காட்டவில்லை என்று லேப் அட்டெண்டரிடம் சொல்லியிருக்கிறான்.பொதுவாக இந்த பௌதிகத்தராசு என்கிற பிஸிக்கல் பாலன்ஸ் அட்டெண்டருக்கும் டெமான்ஸ்ட்ரேட்டருக்கும்தான் சரியாக நிறுக்கும்.நாம் பரிசோதனை செய்யும் போது சரியாகவே வராது. ஆனால் அட்டென்டர்,அவர் பல தலைமுறைகளைக் கண்டவர், “ஏதோ ஆடத்தெரியாத தேவ.... யாளுக்கு தெருக் கோணல்ன்னாளாம் ” என்று சொல்லி விட்டார் போலிருக்கிறது.. அவ்வளவுதான் தராசை அதன் கண்ணாடிப் பெட்டியோடு தூக்கி ஒரே போடு. ” கிழட்டுக் கூ... மவனே இதையே உன் தலையிலயே போட்டு உடைச்சிருப்பேன்...உங்க ஆத்தா செஞ்ச புண்ணியம் தப்பிச்சே..”என்று இறைந்து விட்டு சோதனைச் சாலையை விட்டே வெளியே வந்து விட்டானாம்.
அப்புறம் ஒரு வாரம் காலேஜ் பக்கமே போகவில்லை. அவனது அப்பா நேரில் வந்து அட்டெண்டரிடம் மன்னிப்புக் கேட்டாராம். பிரின்சிபாலைச் சமாதானம் செய்து பி.ஏ வில் சேர்த்தாராம். அவனது அப்பா பெரிய தொழிலதிபர். அவருக்கு பல நிறுவனங்களில் பங்கு உண்டு. பஸ் கம்பெனி, தியேட்டர், ஸ்பினிங்மில், ரைஸ்மில்., என்று அவரும் அவரது இரண்டு மூன்று சகோதரர்களும் பங்கு பெறாத நிறுவனங்களே கிடையாது. ஆனால் அவ்வளவு அமைதியானவர்.என் அப்பாவுக்கு நல்ல சினேகிதர்.முதலில் டவுண் மார்க்கெட்டையொட்டிய ஒரு தெருவில்த்தான் ஆறுமுகத்தின் அம்மாவும் அவனும் இருந்தார்கள்.அது ஒரு நாட்டுக்கோட்டைச் செட்டியாரின் பெரிய வீடு. ஊரில் வங்கிகளே வந்திராத ஒரு காலத்தில் அங்கே பெரிய லேவாதேவி நடக்குமாம். அந்தி கவிகிற இரவில் சில்லரை நாணயங்களைக் கொட்டி எண்ணுகிற சத்தம் மார்க்கெட் வரை கேட்கும் என்பார்கள்.அந்த வீட்டிற்கு நான் என் அப்பாவுடன் போயிருக்கிறேன்.எங்கள் வயலில் வேலை பார்க்கும் சமுசாரியின் மகனுக்கு, புதிதாகத் தொடங்கியுள்ள மில்லில் ஒரு வேலைக்குச் சொல்வதற்காகப் போனார் அப்பா. அந்தத் தெருவின் மறு கோடி வழியாக ஜி. நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’குப்போய் விடலாம். ஆறுமுகத்தின் அம்மாதான் வரவேற்றார்கள்.அவர்களை நான் ஏற்கெனவே எங்கள் உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்து அடிக்கடிப் பார்ப்பேன். அது, உறவினரின் ’.சின்ன வீடு’..ஆறுமுகத்தின் அம்மா அப்படி லட்சுமிகரமாக இருப்பார்கள். இதெல்லாம் கூட்டிக் கழித்துப் பின்னர் புரிந்து கொண்ட விஷயம்.
ஆனால் ஆறுமுகத்தின் ஒல்லி நண்பர் சம்முவத்துக்கு என்னை நன்றாகத் தெரிந்திருக்கிறது. அவர் எஸ்.ஐ செலக்ஷனுக்கு தேர்வாகி இருந்தார்.அதனால்த்தான் என்னைப்போலவே அவர் ஒல்லி என்று நான் சமாதானமாகியது எவ்வளவு அபத்தம் என்று விளங்கியது.சம்முவம் ரொம்ப ஜாலியான பேர்வழி.அவர் கல்லூரிப் பெண்களையோ, ஸ்கூல் பிள்ளைகளையோ அவ்வளவு ரசிப்பதில்லை.”நமக்கு லைசன்ஸ் மாட்டிய அத்தைகள்தான் பிடிக்கும்” என்பார்.அதுக்கு அவர் சொல்லும் காரணம் ஒத்துக் கொள்ளும்படியாக இருக்கும். “பாருங்க பிரதர், இந்த ரசனை நம்ம ரத்தத்திலேயே சாவித்திரி, தேவிகா பத்மினின்னு குண்டு குண்டு அத்தைகளாகவே, ரீபட்டன் கிராக்கிகளாகவே பார்த்துப் பார்த்து ஊறிப்போயிருக்கு...” என்பார்.அவர் சொல்லுகிற அடல்ட்ஸ் ஒன்லி கதைகளுக்காகவே அவர் பிரசித்தம்.எனக்குத் தெரிந்த கதைகளில் அவர் சொன்னது இருபது கதைகளாகவாவது இருக்கும்.
நான் எப்போதாவது ஆறுமுகத்தைப் பார்ப்பேன். லேசாகச் சிரிப்பதுடன் சரி. நம்ம வாய் சும்ம இருக்காது. ஏற்கெனவே “நாளைக்கு வருகிற சண்டையை இன்னக்கே இழுத்துருவான்ப்பா... ” என்று ரொம்ப நல்ல பேர் எனக்கு.ரொம்ப நாள் கழித்து அவரை ஒரு பிரபலமான தனியார் கார் நிறுவனத்தில் சந்தித்தேன். அங்கே அவர் வேலை பார்த்தார். நான் அங்கே வேலைக்கு முயன்று கொண்டிருந்தேன்.அங்கே ஒரு யூனியன் தலைவர் கொஞ்சம் பழக்கம். அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.அங்கே யூனியனுக்கெல்லாம் வேலையில்லை. எல்லாம் சரியாக நடக்கும். ஆனாலும் பெயருக்கு ஒரு யூனியன் உண்டு.அப்போது ஆறுமுகம் அவர் அருகில்த்தான் இருந்தார்.”ப்ரதர் வாங்க..” என்று பேசிக்கொண்டிருந்தவர், திடீரென கொஞ்சம் இருங்க வந்திருதேன் என்று போய்விட்டார். அவர், அவரைக் காண்பித்து யூனியன் தோழர் கேட்டார், ”தம்பி எப்படி, வேலையெல்லாம் நல்லாப் பாக்காராம் ஆனால் பாதி நாள் வரமாட்டேங்காரு....” என்றார். அவரைப் பற்றிய மற்ற விஷயங்களைச் சொன்னேன். அவர் கொஞ்சம் அன்புக்கு ஏங்குகிற மாதிரியுள்ளவர் என்று. இப்படியான வார்த்தைகளிலெல்லாம் சொல்லவில்லை. ஒரு விதமாகச் சொன்னேன். தோழர், ”சரி உங்க கதைக்கும் அவர் அப்பாவையே சொல்லச் சொல்லுங்களேன்” என்றார்.அவர் அப்பாவிடம் சொல்ல என் அப்பா இல்லை, சமீபத்தில்தான் இறந்து போயிருந்தார்.அவர் இறந்து போன அனுதாபததை வைத்து இன்னொரு இடத்தில் முயற்சி நடந்தது.எத்தனை பேரிடம்தான் போய் அப்பா பெயரைச் சொல்லிக் கேட்பது. அவர் சாகும் போதும் அவருக்கு உகந்த விதமாக நான் நடந்து கொள்ளவில்லை, என்ற உறுத்தல் வேறு இருந்தது. நிரந்தரமாவதற்கு 50-50 வாய்ப்புள்ள ஒரு தற்காலிக வேலையை விட்டு விட்டு நான் மேற்படிப்பு படிக்கப் போகாமலிருந்தால் அவர் இன்னும் கொஞ்ச காலமென்ன, நீண்ட காலமே உயிரோடு இருந்திருப்பார்.
எப்படியோ ஒரு வேலை கிடைத்து, கல்யாணமும் பண்ணிக் கொண்டு ஊருடனான 29 வருட உறவை விட்டு குற்றாலம் பக்கம் வந்து சேர்ந்தேன். ஒரு சனிக்கிழமை மத்தியானம் லீவு. குற்றாலம் போகலாமே என்று தென்காசியில், பஸ்ஸுக்கு நின்று கொண்டிருந்தேன்.கூட்டம் நிறைய இருந்தது.நல்ல சீசன் வேறு. ஆறுமுகம் எதிரே வந்தார்.கொஞ்சம் அழுக்கான உடைகள், களையில்லாத முகம்.. சட்டைப்பை கிழிந்திருந்தது.அது தெரியாதபடி ஒரு கையால் பொத்திக் கொண்டிருந்தார். ”எங்க போறீங்க ப்ரதர், குற்றாலமா, எனக்கும் டிக்கெட் எடுங்க, யாரோ பணததைப் பாக்கெட் அடிச்சுட்டாங்க,” என்றார். எப்போ என்றேன் இப்பத்தான் என்றார்.போலிஸில் சொல்லுவோமா என்றேன். ”அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்... உங்களால டிக்கெட் எடுக்க முடியுமா இல்லையா ,”என்றார்.அதற்கென்ன வாங்க போவோம் என்று பஸ்ஸுக்கு காத்திருந்தோம். நீங்க சிகரெட் பிடிப்பீங்கள்ளா, ரெண்டு சிகரெட் வாங்குங்க என்றார்.காபி சாப்பிடறீங்களா என்றேன். “ம்ஹூம், என்று தலையை ஆட்டியபடியே.. ”கேக்கறதை மட்டும் வாங்கித் தாங்க, குற்றாலம் வந்ததும் நம்ம பங்களா போய், காசு வாங்கி செட்டில் பண்ணிருதேன்...” என்றார்.ஆள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறார் போல, வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வானேன் என்று பேசாமல் இருந்தேன். ஆனாலும் ஆள் சற்று முதிர்ச்சியாய் இருப்பது போலுமிருந்தது. பார்த்து எட்டு ஒன்பது வருடமிருக்கும்.
|
அடிபிடியுடன் பஸ்ஸில் ஏறினோம். அவர் ரொம்ப ஜாக்கிரதையாய் என்னை ஒட்டியபடியே நின்றார்.இறங்கியதும் போக முயற்சித்த என்னை கையைப் பிடித்து இழுக்காத குறையாய், வாங்க பங்களாவுக்குப் போவோம் என்று அழைத்துக் கொண்டு போனார். அங்கே போனதும் வாட்ச் மேன் மாதிரியும் மேனேஜர் மாதிரியும் இருந்த ஒருவரிடம், ”எங்க ஐயா இருக்காராவே” என்றார். “முதலாளி நேற்றுப் போனவுக இன்னும் . வரலை ”என்றார். ”அப்படியே போகச் சொல்லீரும்... ”சரி யார் பெர்மிட்டாவது இருக்கா ”என்றார். அவர், ”ஹி ஹி சித்தப்பா வாங்கி வச்சது, சரக்கு இருக்கு” என்றார்.”பொறவு என்ன அதைக் கொண்டாரும், போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாரும்....” என்றார். ”ப்ரதர் உக்காருங்க, நீங்க குளிக்கத்தானே போகணும்....”என்றார். நான் என் உறவினர் வீடு குற்றாலத்தில் இருப்பதைச் சொல்லவில்லை. “ஆமா, ஒரு குளியல் போட்ட்டுட்டுப் போகவேண்டியதுதான்” என்றேன் அதற்குள் அவர் எதையெல்லாமோ வாங்கி வந்திருந்தார். இங்கே இருக்கிறதை எடும் என்றார். அவர் தயங்கியபடியே, ”இல்லை சித்தப்பா வருவாங்க என்றார்.” ஒரு கெட்ட வார்த்தையை சத்தமாக உதிர்த்து விட்டு “ வே...அவன் யாரு எங்க அண்ணனா... அதான்வே ஒரிஜினல் வந்தா, சின்ன முதலாளி, மயிருன்னு கையைக் கட்டிக்கிட்டு நிப்பேரு...” எடுக்கேரா என்ன...” என்று மேஜையொன்றில் குத்தினார்.ஒரு அழகான ’ப்ளாக்நைட்’ விஸ்கி வந்தது. மடமடவென்று இரண்டு கிளாஸில் சரித்து என்னிடம் ஒன்றை நீட்டினார்... அவர் மடக்கென்று விழுங்கினார். நமக்கு எப்பவுமே கல்ப்புதான்....என்றார். நீங்க மெதுவா சாப்பிடுங்க என்றார்.எனக்கு இது என்னடா சிந்துபாத் தோளில் ஏறின கிழவன் கதையால்ல இருக்கு என்று தோன்றியது.ஆனால் விஸ்கி அழைத்தது. நான் ஒன்றை முடிப்பதற்குள் அவர் மூன்று தம்ளரை சரித்திருந்தார்.ஒரு துண்டை எடுத்து முக்காடு போலப் போட்டுக் கொண்டு...அங்கிருந்த பெரிய கண்ணாடி முன்னால் நின்றார். பொம்பளை மாதிரி இருக்கேனா...என்று கேட்டு விட்டு கொஞ்சம் பெண்ணைப் போல் பாவனை பண்ணினார்.
திடீரென, ”இப்படித்தான் எஙக அம்மா என்னைக் கெடுத்தா ப்ரதர்....” பிச்சைக்காரனாக்கூடப் பொறக்கலாம் வைப்பாட்டி மகனாப் பொறக்ககூடாது ..” என்று என் தோளில் அடித்துப் பிடித்துக் கொண்டார். “உங்க ஐயா, சாரி அப்பாவுக்கு எங்க ஐயா நல்ல ஃப்ரெண்டு தெரியுமா..” என்றார். ”உங்க ஐயா எப்படி... நான் தப்பாப் பேசினா மன்னிச்சுருங்க..” என்று குழற ஆரம்பித்தார்.தோளில் பிடி இறுகியது.அவருக்குள் எறியும் தீயின் வலிமை புரிந்தது.அதற்குள் வாசலில் கார் ஒன்று, நின்று போகும் சத்தம் கேட்டது. ”வாங்க ப்ரதர், ஒரிஜினல்ஸெல்லாம் வரும் நேரமாச்சு....” என்று சொல்லிவிட்டு எதிரே வந்த மேனேஜரிடம் “வேய் ஒரு ஆயிரம் ரூவா எடும். இங்க பாத்தேரா.. சட்டையெல்லாம் கிழிஞ்ச்ட்டு..” என்றார். அவர் ஒரு தாளை நீட்டி, ”இந்த வவுச்சரில் ஒரு கையெழுத்துப் போடுங்க...முதலாளி கேப்பாக..” என்றார்.
”வவுச்சரா என்னவே இங்க என்ன பேங்கா, ஆஃபீஸா என்னவே நடக்கு.. ” சரி ரூவாயக் குடும் என்று தந்ததை வாங்கி கையில் சுருட்டிக் கொண்டே..கையெழுத்துப் போட்டார்.”.ப்ரதர் ஒரு சட்டை எடுக்கணூம் தேயளி இந்த ஊர்ல துண்டுதான் கிடைக்கும் சட்டை கிடைக்குமா தெரியலையே....”என்று தள்ளாடினார்.எனக்கு இன்னொரு தம்ளர் சாப்பிட ஆசையாய் இருந்தது.அதைப் புரிந்து கொண்ட மேனேஜர்..ஒரு தம்ளரில் கொஞ்சம் ஊற்றி தந்தார். நைசாக, ”சார் இதில ஒரு சாட்சிக் கையெழுத்துப் போடுங்களேன்” என்று அதே தாளை நீட்டினார். அதிலே எதுவுமே எழுதியிருக்கவில்லை. நான் மறுத்தேன். அதற்குள் அறுமுகம்.”என்னவே என் ஃப்ரென்டுகிட்ட என்ன மயிரு கையெழுத்து கேக்கேரு...” என்று தாளைப் பிடுங்கி கிழித்து எறிந்து விட்டு, என் தோளில் சாய்ந்தபடியே கிளம்பினார். எனக்கும் தப்பித்தோம்டா என்றிருந்தது.
நன்றாய் இருட்டி விட்டது எட்டு மணி இருக்கும்.வழியில் ஒரு கடையில் ஒரு சட்டை எடுத்து விட்டு, மெயின் ஃபால்ஸை நோக்கிப் போனோம். அருவி பிரம்மாண்டமாய் மலை முழுமைக்கும் விழுந்து கொண்டிருந்தது. மின் வெளிச்சத்தில் அகலாமான வெள்ளைத் திரையாய் விரிந்து கொட்டிக் கொண்டிருந்தது.
”பாருங்க ப்ரதர்... இதுக்கு ஒரிஜினல் மகனும் வப்பாட்டி மகனும் ஒண்ணுதான்..” என்று சொல்லியபடியே என் மேல், சட்டை வேஷ்டியை எறிந்து விட்டு துண்டை உடுத்துக் கொண்டு, அருவிக்குள் கலந்தான்.அவனுக்குள் எரியும் தீயை அது அணைக்குமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அல்லது எனக்குள்ளிருந்த திரவம் கேட்டதோ என்னவோ.
|