”ஒரு சிக்கலில்லாத காதல்க் கதை..”
அன்று அல்ஜிப்ராவில் ஒருடெஸ்ட் இருந்தது. லைப்ரரிக்கு புதிதாக வந்திருந்த “மெக்லைன் & பிர்காஃப்’’ புத்தக்கதில்தான் அந்தத் தியரம் விரிவாகவும் எளிதாகவும் இருந்தது. அதை எடுத்து வந்திருந்தேன். லைப்ரரியில் நான்தான் அதிகம் புத்தகம் எடுப்பவன் என்ற (கேலிப்)பெயர் எனக்குண்டு). எனக்குத் தெரியாதென்று, நினைத்துக் கொண்டு என் வகுப்புத் தோழர்கள், எனக்கு அதற்காகவே ‘நன்னூல்’ என்று பட்டப்பேர் சூட்டியிருந்தார்கள். உண்மையில் அதைச் சூட்டியது ஒரு தோழிதான். அவள், வசுமதி, அப்படியொரு ஊமையாய் இருப்பவள். ஆனால் எல்லா ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அவள் பெயர் சூட்டி இருக்கிறாள் என்று கேள்வி. இன்னொருத்தி, உஷா, எப்போதும் கலகலவெனெச் சிரித்துக் கொண்டே இருப்பாள். அவள் ஒருநாள் வகுப்பில் நானும் சீமானும் சற்றுத் தாமதமாக நுழையும்போது, சிரித்துக் கொண்டே “ஏடி, உங்க நன்னூல் வந்தாச்சு” என்று பக்கத்திலிருந்த வசுமதியிடம் கொஞ்சம் சத்தமாகவே சொன்னாள். சீமான் அவளை முறைத்துப் பார்த்தான். அவள் பயந்து போய் தலையைக் குனிந்து கொண்டாள். வசுமதியின் முகம் வெடகத்தாலோ, பயத்தாலோ சிவந்து விட்டது. இருப்பதிலேயே அவள்தான் சிகப்பாகவும் அழகாகவும் இருப்பாள். சற்று குண்டான தேகம். சீமான் தன்னைக் கிண்டல் பண்ணுவதாக நினைத்துக் கொண்டு உஷா முன்னால் போய் நின்றான். நான், ”வாங்க ’பார்ட்னர்’, உங்களைச் சொல்லவில்லை...” என்று அவனைக் கையைப் பிடித்து இழுத்தேன். இதைக் கேட்டதும் இன்னும் பரிதாபமாக வசுமதி என்னைப் பர்த்தாள். சீமானும் நானும் ஒருவரையொருவர் பார்ட்னர் என்றுதான் சொல்லிக் கொள்ளுவோம்.
சீமானும் அழகாய் இருப்பான். ’செம்மீன்’ ஷீலாவைப் போல் ஜாடையிலிருப்பான், ஷீலாவைப் போல் அழகான மூக்கு, அதன் கீழ் கருகருவென்ற மீசை.....நான் ஷீலாவை நேரில் அருகில் பார்த்து அதிசயித்திருக்கிறேன்...சினிமா உலகிலேயே அவருக்கென்று....பெரிய பெரிய நடிகர்கள் மத்தியிலேயே பல ரகசிய ரசிகர்கள் உண்டு என்று அந்தக்காலத்தில் பல கிசுகிசுக்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் அவர் ஒரு அற்புதமான நடிகை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அன்று நான் அந்த டெஸ்ட்டுக்காக, மாடியிலிருந்து காலையில், படித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. திடீரென்று சீமான் படியேறி வந்தான், ”பார்ட்னர், என்ன இன்னும் கிளம்பலையா,” என்றபடியே. அப்போதுதான் நான் இன்னும் குளிக்கவேயில்லை என்று உணர்ந்தேன். ”இன்னக்கி என்னமோ அல்ஜிப்ரா டெஸ்ட்டாமே... நீங்க குளிச்சுட்டு வருகிற வரை நான் படித்துக் கொண்டு இருக்கிறேன்...., உங்க நோட்டைக் கொஞ்சம் தாருங்கள்.. என்று சொல்லிக் கொண்டே மேஜையடியில் உட்கார்ந்தான். ”இந்தாங்க, பார்ட்னர் இந்தப் புத்தகத்தில் எளிதான ட்ரீட்மெண்ட் இருக்கு இதைப் படியுங்க..” என்று சொல்லிவிட்டு, அவசர அவசரமாகக் குளிக்கக் கிளம்பினேன்.
சீமான், பயங்கரமான கெட்டிக்காரன்..பி.எஸ்.சி யில், அவனது கல்லூரியில் அவன் யுனிவர்சிட்டி ரேங்க் வாங்குவானென்று, அவனது ஆசிரியர்கள் எல்லோருமே சொல்லுவார்களாம். ஆனால் பரீட்சை நேரத்தில் உடல் நலமில்லாமல்ப் போய் ’ஸ்டடி வீவ்’ முழுக்கப் படுக்கையில்தான் இருந்தானாம், படிக்கவேயில்லை. ஆனாலும் படிக்காமலேயே பரீட்சை எழுதி, ’ஏ ப்ளஸ் (கிட்டத்தட்ட 80 சதவிகிதம்) வாங்கியிருந்தான். ”படுத்துக் கொண்டே ஜெயித்த எம்.ஜி.ஆர் என்று நாங்கள் அவனைச் சொலுவோம். நானும் ‘ஏ ப்ளஸ்’ ஆனால் என் கதை வேறு., காதல் கத்திரிக்காய், என்று வாழ்க்கையைக் குழப்பி, வாழ்க்கையையே முடிக்கப் பார்த்து, அதிலும் தோற்று, அடுத்த வருடம்தான் பாஸ் பண்ணினேன். என்றாலும் என் ஒரே கனவான முதுகலையில் எப்படியோ சேர்ந்து விட்டேன். சீமானின் உறவுக்காரர்கள் வீடு என் வீட்டின் பக்கத்தில்தான் இருந்தது. அங்கே வரும்போதெல்லாம் என் வீட்டுக்கும் வருவான். அவனுக்கு அப்பா கிடையாது. அண்ணன்தான் எல்லாமும். டவுனில் ஒரு தேங்காய்க் கடை வைத்திருந்தான். தேங்காய் கமிஷன் மண்டி என்று சொல்ல வேண்டும். ஈரோடு, கேரளாவிலிருந்து தேங்காயெண்ணையும் லாரிலாரியாக வரும்.
எங்கள் தெருவில் இருக்கும் அவனது உறவினர்களும் அதே வியாபாரம் செய்தவர்கள்தான். ஆனால் இப்போது நொடித்துப் போய், ஒருவர் அதே கடையில் கணக்கெழுதிக் கொண்டிருக்கிறார். இன்னொருவன் சினிமா தியேட்டரில் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனது ’கூப்பிடும் பெயர்’ வேம்பு என்று நினைவு....ஸ்கூல் ரெகார்டில் வேறு ஏதோ பெயர். நாங்கள் அவனைத் தெருவில் “வெம்பு” என்போம். பிஞ்சிலேயே வெம்பிப் பழுத்தவன்....வசதியாய் இருக்கும் போது ஆடாத ஆட்டம் கிடையாது....வீட்டில் சினிமாப்படம் போடுகிறேனென்று, பேர் பண்ணிக் கொண்டு ஒரு சின்னப் பிள்ளையை விடாமல் ‘மஞ்சள் உரசுவான்’, பிற்காலத்தில் வீட்டு வேலைக்காரிகளை ஒருவரையும் விடமாட்டான். இப்போது சோடாபுட்டிக் கண்ணாடியும், மெலிந்த உடலுமாய் பெஞ்சு டிக்கெட் நுழைவு வாயிலில் டிக்கெட் கிழித்துக் கொண்டிருக்கிறான்.” ’வேய் வேம்புப் பிள்ளை. திரையை மூடுவே, வெளிச்சம் தெரியுதுவே...’என்று தினமும் ஒருவராவது அவனைக் கிண்டலடிக்காமல் இருக்க மாட்டார்கள். அதைக் கேட்டதும்தான் நினைவுக்கு வந்தவனாய், வேட்டியை விலக்கி சொறிந்து கொண்டிருப்பதை நிப்பாட்டுவான். ”ஹி, ஹி” என்று அசடு வழிவான். “வேய் தியேட்டர் வாசல்த் திரையச் சொன்னேன்வே.... ”என்று மறுபடி கிண்டலடிப்பார்கள்.
அவ்வளவு பெரிய கடையிருந்தும் அண்ணன், சீமானுக்கு பணம் தரமாட்டான்...கல்லூரி ஃபீஸெல்லாம் தாமதமாகத்தான் கட்டுவான். ஃபீஸ் கட்ட நேரும்போதெல்லாம் கிளாஸுக்கே வராமல் கடையில் நிற்பான். ஒருவாரமாவது கடையில் வேலை பார்த்தால்தான் அண்ணன்காரன் பணம் தருவான். ஆனால் சீமானுக்கு அசாத்திய மூளை. கணக்குக்கென்றே பிறந்த மாதிரி....அவனுடைய நோட்டில் சில பக்கங்கள் விட்டு விட்டுத்தான் எழுதியிருப்பான். வெற்றுத் தாள்களெல்லாம் அவன் வராத நாட்களில் நடத்திய பகுதியாக இருக்கும். அவன் கிளாசுக்கு வராத ஒரு வாரம் வகுப்பில் நடந்ததை, மறுவாரம் வந்து யாரிடமாவது நோட்டை வாங்கிப் பார்ப்பான். அதுவும் வகுப்பு ஆரம்பிக்கும் முன் ஐந்து நிமிடம்தான் பார்ப்பான். அன்றைய வகுப்பில், நாங்களெல்லாம் மறை கழண்டவன் மாதிரி, ஒன்றும் புரியாமல் பேராசிரியர் நடத்துவதைப் பார்த்துக் கொண்டிருப்போம். அவன் அழகாக ஃபாலோ பண்ணுவான். சில வகுப்புகளுக்கு நாங்கள் பக்கத்துக் கல்லூரிக்குச் செல்ல வேண்டியிருக்கும். அதற்கு ’இண்டெர் காலேஜ் கிளாஸ்ஸஸ்’ என்று பெயர். அங்கே ஒரு பேராசிரியர் ஆந்திராக்காரர், ஏதோ ‘ராவ்’. தமிழ் சரியாக வராது...அவர் வேகமாக நடத்திக் கொண்டே போவார். இரண்டு மணிநேர வகுப்பில், ஒருமணி நேரம் நடத்துவார். அப்புறம் நோட்ஸ் டிக்டேட் பண்ணுவார். அதை மட்டும் எழுதுவோம். நடத்துவதைக் கண்டு கொள்ளவே மாட்டோம். முடியாது.
|
சீமான், ஒரு நாள் திடீரென்று அவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது, எழுந்தான். (”மெஷர் தியரி’ என்று நினைவு. அது எளிதில் புரியாது. எங்கள் பேராசிரியரிடம், அவர் நடத்துவது புரியவில்லை என்று சொன்னோம். அவர் நானே கடைசியில் மறுபடி சொல்லித்தருகிறேன் என்றிருந்தார். அதனால் அதை யாரும் கவனிப்பதே இல்லை.) உங்களுடைய இந்த ஸ்டெப் தவறு என்றான். அவர் இங்கே வா, வந்து என்ன தவறு என்று சொல்லு என்றார். அவன் இடத்தைவிட்டு அசையவில்லை, “நீங்கள் முதலில் எடுத்திருக்கும் அனுமானத்தின் மீதுதானே, ஒரு லாஜிக்கை கட்டிக் கொண்டு வருகிறீர்கள்.. அப்படியென்றால், இந்த ஸ்டெப், உங்கள் அனுமானம் தவறு என்று ஆக்குகிறது... நீங்கள் ஒரு அப்ஸ்ட்ராக்ட் தியரியை நடத்தி வருகிறீர்கள். இதற்கு காங்க்ரீட்டான உதாரணமாக, இயல் எண்களை...எடுத்துப் போட்டுப் பாருங்கள் 1 = 0, என்று வருகிறது என்றான். ஆந்திராக்காரர் ஆடிப் போய்விட்டார்...”நீங்கள் யாருமே பாடத்தைக் கவனிக்கவில்லை.... என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்....மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார். நாங்கள், எங்களுக்குப் புரியவில்லை என்றாலும்....சீமானுக்கு பெரிய “ஓ” போட்டோம். பெண்கள் அதிகமாகவே சத்தமிட்டார்கள்.
|
வகுப்பு முடிந்ததும் எல்லோரும் சீமானைச் சூழ்ந்து கொண்டோம். ராவ் என்னை அவர் அறைக்கு அழைத்தார். நான்தான்.. கிளாஸ் ரெப்ரெசெண்டேடிவ். அப்படியென்றால்...இந்த மாதிரி இண்டெர் காலேஜ் கிளாசுக்குப் போகும்போது அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரை எடுத்துப் போய் மறு நாள் கொண்டு வரவேண்டும்....அவ்வளவுதான். எப்படியோ ப்ரின்சிபாலிடம் சொல்லி வகுப்பறைக்கு ஒரு பழைய ஃபேனை வாங்கி மாட்டியதுதான் என் அதிக பட்ச சாதனை. இதெல்லாம் முதலாம் ஆண்டுதான். ராவ் சாரின் அறைக்குப் போனதும் அவர் கேட்டது, “அவனை நான் வகுப்பில் பார்த்த நினைவே இல்லியெ,.. அது யார்?“ நான் சொன்னேன். அவர் தலையை உதறிக் கொண்டு....”அவன் பிரமாதமான ஆள், அவனை எப்படியாவது படிக்கவையுங்கள்“ என்றார். அவன் குடும்பச் சூழல் அப்படி, என்றேன்.. ”எத்தனையோ கோணலான ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று...அவனை என் கிளாசுக்கு தவறாமல் அழைத்து வந்து விடு” என்றார். சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். என்றும் பேசாத வசுமதி, என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, ராவ்காரு என்ன சொன்னார் என்றாள். சொன்னேன். ”நீங்கள் ரெண்டு பேருமே.. கெட்டிக்காரர்கள்தான்” என்றாள். ஜிவ்வென்றிருந்தது. நிஜமாகவா என்றேன் அதற்குள் உஷா அருகில் வந்தாள் ’வசு’ நகர்ந்துவிட்டாள். மறுநாளிலிருந்து ’வசு’ வகுப்பில் என்னை சில முறுவல்களுடன் எதிர் கொண்டாள்.
அவள் ஒரு பெஞ்சின் முனையிலும், நான் எதிர் பெஞ்சின் அருகாமை முனையிலும் அமர்வதுதான் வழக்கம். வகுப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. எனக்குப் பிடித்தமான ’டோப்பாலஜி’ கிளாஸ். திடீரென்று வசுமதியைப் பார்த்தேன். அவளது மெல்லிய கழுத்துச் செயின், அறுந்தோ, கொக்கி கழண்டோ கொஞ்சங்கொஞ்சமாக ஜாக்கெட்டிற்குள் இறங்கிக் கொண்டிருந்தது. நல்ல செண்பகமஞ்சள் கலரில் சேலையும் ஜாக்கெட்டும். அவளுக்கு எடுப்பாக இருந்தது. எப்படிச் சொல்வது புரியவில்லை. கீழே விழுந்தாலும் சொல்லலாம். இது, மார்பைத் தழுவி ஜாக்கெட்டிற்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது. முழுதுமாக ஜாக்கெட்டிற்குள் விழுந்து விட்டது. சரி வகுப்பின் இடையில் சொல்ல வேண்டாம், என்று நினைக்கும் போதே அவளும் கவனித்து விட்டாள். பதட்டத்துடன் எழுந்து ப்ரொஃபஸரிடம் அனுமதி கேட்டுவிட்டு வெளியேறினாள். நானும் பின்னாலேயே போனேன். அவள் என்னைக் கவனிக்கவில்லை.. லேசாக ஹலோ என்றேன்.. கேட்கவில்லை, அவள் வெராந்தாவில் தேடியபடியே போய்க் கொண்டிருந்தாள். ”மிஸ் வசு..” என்றேன் திரும்பினாள், ”சாரி பயப்படாதீங்க, செயின் ஜாக்கெட்டிற்குள்தான் கிடக்கு, அது வெளியே எங்கேயாவது விழுந்திரக் கூடாதேன்னுதான் பின்னாலேயே வாரேன்” என்றேன். மாணவிகளுக்கென்று ஒரு சிறிய தனி அறை உண்டு. அதில்த்தான் இருப்பார்கள் அதன் கதவு எப்போதும் உள்ப்புறம் பூட்டியே இருக்கும். அதனுள் போனாள் நான் வகுப்புக்கு திரும்பிவிட்டேன். சீமான், ”எங்க வே பின்னாலேயே போனீரே” என்றான். பதில் சொல்லும் முன் வசுமதி சிரிப்பும் செயினுமாக வகுப்புக்குள் வந்தாள். என்னை நன்றியுடன் பார்த்தாள். கண்ணில் ஒரு சிரிப்பிருந்தது.
இன்னொருநாள்.......அப்பொழுதெல்லாம் ஃபவுண்டன் பேனாக்கள்தான் உபயோகிப்பது. ஒரு நாள் என் பேனா மை தீர்ந்து, நான் குறிப்பெடுக்காமல் சும்மா இருந்தேன். வழக்கமாக இப்படி நேர்ந்தால், யாருமே வகுப்பு ஆசிரியரிடம்தான் பேனா வாங்கிக் கொள்வோம். அன்று அவரிடமும் இல்லை. திடீரென்று வசுமதி தன் கைப்பையிலிருந்து ஒரு பேனாவை எடுத்து என்னிடம் நீட்டினாள். கிளாஸில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அவள் எப்போதும் கறுப்பு மையே உபயோகிப்பாள். அதுவும் எழுதவில்லை. அவளிடம் மறுபடி கொடுத்தேன். அவள் நெக்கை, முழுதுமாகத் திறக்காமல் லேசாகக் கழற்றி மறுபடி மூடி, மையை ஒரு சொட்டு, கீழே கொட்டி விட்டு மறுபடி தந்தாள். இப்பொழுது நன்றாக எழுதிற்று. அவளின் கையில் கருப்பு மை. கன்னத்தில் வேறு கறுப்புத் தீற்றலாக மை பட்டிருந்தது. எப்போது முகத்தைத் துடைத்தாளோ... திடீரென்று மாணவிகள் பக்கம் ஒரு கிசுகிசுப்பு உலவ ஆரம்பித்தது. தொடர்ந்து இங்கே மாணவர்கள் பக்கம் கிசுகிசுப்பு ஆரம்பித்தது. முதலில் எனக்குப் புரியவில்லை..பேனாவை என் வாயில் வைத்துக் கடித்துக் கொண்டிருந்திருக்கிறேன். அது என் பழக்கம்..அதைப் பார்த்துப் பெண்களும், அப்புறம் மாணவர்களும் கிசுகிசுத்திருக்கிறார்கள். சீமான் எனக்குப் பின்னால் இருந்தான்...லேசாகச் சொன்னான், ”பார்ட்னர் பேனாவைக் கடிக்காதீங்க” என்று.
தலையைக் குனிந்து கொண்டேன். வசுமதி சாதாரணமாக இருந்தாள்.
வகுப்பு முடிந்து போகும்போது, பேனாவை வாங்கிக் கொண்டு, வசுமதி தனது நோட்டைத் தந்து, ஏதும் எழுத வேண்டியதிருந்தால் எழுதி விட்டு நாளை தாருங்கள் என்றாள் நான் வாங்கி வைத்துக் கொண்டேன். ”ஏன் எங்களிடமெல்லாம் நோட்ஸ் இல்லையாமா.. இல்லைன்னா நாங்க என்ன தப்பும் தவறுமாக எழுதியிருக்கோமா..” என்று எல்லோரும் பிடித்துக் கொண்டார்கள்...”..இந்தா பாரு உன் பார்ட்னர் எழுதுவதே இல்லை...”.என்று சீமானை வேறு வம்புக்கிழுத்தார்கள். நான், போங்கப்பா என்று தப்பித்து ஓடி வந்தேன். மாணவிகள் அறைக்குள்ளிருந்து... உஷா தலைமையில் கிண்டலும் சிரிப்புமாக சத்தம் வெளிவந்தது. நாளைக்கு லீவு போட்டு விட வேண்டியதுதான் என்றவாறு சைக்கிள் ஸ்டாண்டை நோக்கி நடந்தேன்.
அன்று வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், சரியான மழையொன்று அடித்து ஓய்ந்தது. மழை சுத்தமாக வெறித்து, வானம் புது வெளிச்சத்தோடு இருந்தது.. மனமும் ஒரு மிதப்பில் இருந்தது. எங்கேயாவது சினிமா போகலாம் போலிருந்தது.இப்படி மழை பெய்து ஓய்ந்ததும், சினிமா தியேட்டரின் முன்புறம் ஒரு வெளிச்சமும் அழகுமாய், அதிக விஸ்தாரமுமாய் இருக்கும்.அதுவும் ரத்னா தியேட்டர் ரொம்ப அழகாயிருக்கும். இப்படியொரு மழைநாளில்த்தான்...அங்கே “இருகோடுகள்’’ பார்க்கப் போனேன். அவளும் வந்திருந்தாள்.அவள் நினைவு வந்ததும் சிரிப்பாய் இருந்தது.அன்றைய அவளுக்கான உருகுதல்களும் இன்றைய வசுமதியின் நெருக்கமும்.. இது நெருக்கம்தானா....நம்மையும் ஒரு பெண் நெருங்குவாளா...ஒன்றும் புரியவில்லை..எப்படியும் சாயந்தரம்..ஒரு ரதவீதி சுற்றலுக்குப் போய் வருவோம்... அதற்காகக் கிளம்பினேன். ’வசந்த மாளிகை’ பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது. நான் பார்க்கவில்லை. சரி போவோமே என்று தியேட்டரைப் பார்க்க நடையை எட்டிப் போட்டேன் சற்று நேரமாகி இருந்தது....தெரிந்த தியேட்டர்தான்.. டிக்கெட் இருந்தால் எப்படியும் போய்விடலாம். ஹவுஸ்ஃபுல்லாகி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது.
|
ஹௌஸ்ஃபுல். தியேட்டர் வாசலில், அரசு அதிகாரியும் இலக்கிய நண்பருமான ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் அப்போதுதான் எங்கள் ஊருக்கு மாறுதலாகி வந்திருந்தார்.என்னைப் பார்த்ததும் ” என்ன உங்க ஊர்ல டிக்கெட் கிடைக்கமாட்டேன்கிறதே... நீங்கள்ளாம் சிவாஜி படம் பார்க்க வந்தா எப்படி கிடைக்கும்” என்று சொல்லிச் சிரித்தார்.அன்று முதல்த் தேதி என்று நினைவு.செகன்ட் ஷோ போறீங்களா என்று கேட்டேன். ஆமாம் ஏற்கெனவே டிக்கெட் சொல்லியாச்சு....என்றார்.. நீங்க வருவதாயிருந்தா.. சொல்லுங்க இன்னொரு டிக்கெட் சொல்லச் சொல்லறேன் என்றார்.சரி என்றேன்.அருகில் நின்ற உதவியாளரிடம் இன்னொரு டிக்கெட்டிற்குச் சொன்னார்.அவர் வேண்டாம் சார் நான் பார்த்தாச்சு, என் டிக்கெட்டில் அவர் போகட்டும் என்றார்.அவருக்கு தன் அதிகாரியுடன் படம் பார்க்கப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது. அவரும் என்னுடன் நன்றாகப் பழகுவார்.”யோவ் ஆளை விடுய்யா..”என்று பார்வையிலேயே சொல்வது மாதிரி இருந்தது...
நண்பர், ”வாங்க கலா ரொம்பா நாளாச்சு, இன்னக்கி ஒரு பூஸ் போடலாம் போல இருக்கு. உங்க செல்வாக்கில நல்ல இடமாக கூட்டிக் கொண்டு போங்க” என்றார். அப்படியே ஜங்சனுக்கு நடந்தோம். வழக்கமான ஒரு ஓட்டலுக்குப் போனோம். அங்கே பொதுவாக யாருக்கும் சரக்கு சாப்பிட அனுமதியே கிடையாது. முதலாளியின் பையன், என்னுடன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஒன்றாகச் சுற்றியவன்.அவர்களது கடை முதலில் டவுணில்தான் இருந்தது.ஹைஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாருக்கும் அங்கிருந்துதான் சாப்பாடு வரும். 1965லேயே டப்பாவாலா மாதிரி.அவன்தான் பட்டறையில் இருந்தான். அவனிடம் நண்பரை அறிமுகப் படுத்தினேன். காளிமுத்து, நா.காமராசனின் நண்பர் என்று. அவன் உடனே பட்டறையில் இருந்து எழுந்து விட்டான்.நண்பருக்குச் சற்றுக் கூச்சமாக இருந்திருக்க வேண்டும். நான் அவரது தோள் மட்ட நண்பன் என்று சொல்ல முடியாது.நான் அவசரப்பட்டு விட்டேனோ என்று தோன்றியது.என் குணாதிசயமும் அதுதான், ”அவசரக் குடுக்கை.. ” சின்னப்பையன்னா சரியாத்தானே இருக்கு என்று நினைத்து விடுவாரோ...”என்று தோன்றியது .நாங்கள்ளாம் ’ஹிண்டி அஜிடேஷன்ல ஃப்ரென்டானவங்க’ என்று இருவரிடமும் அசடு வழிந்தேன்.
உண்மையிலேயே நல்ல பூஸ். இரண்டு பேரும் வசந்த மாளிகை பார்த்துவிட்டு வந்து, அவரது அறையிலேயே படுத்துக் கொண்டேன்.”இந்தப் படத்தை இப்படித்தான் பார்க்கணும்...”என்று பேசிக்கொண்டே தூங்கிப் போனோம்.உண்மையிலேயே மறுநாள் வகுப்புக்கு போகவில்லை.கொஞ்ச நாளில் லூர்து நாதன், போலீஸ் விரட்டும்போது ஆற்றில் விழுந்து இறந்துபோனதால் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தால் கல்லூரிகளை மூடி விட்டார்கள். திடீரென்று நினைத்தாற்போல் ஒரு ராத்திரி, பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் (அதில் என்ன எழுதினேன் என்று சொன்னால் உங்களால் ஒரு வாரத்திற்கு சிரிப்பை அடக்க முடியாது.) ஒரு கடிதம் எழுதி, வசுமதியின் விலாசம் தெரியாததால் கல்லூரி விலாசத்திற்கே எழுதி, ‘TO BE REDIRECTED’ என்று கவரில் எழுதி போஸ்ட் பண்ணினேன். ஒரு பதிலும் இல்லை.
முதுகலை வகுப்புகளுக்கு மட்டும் கல்லூரி திறந்து, இரண்டாம் நாள், இரண்டாம் பீரியட் நடந்து கொண்டிருக்கும் போது பியூன் வந்து ஒரு கடிதத்தை சாரிடம் நீட்டினான்.அவர் அதை வசுமதியிடம் கொடுத்தார். அதே கடிதம். அடப்பாவிகளா, ஒரு மாசமாய் பத்திரமாய் வைத்திருந்து இங்கேயா கொடுக்க வேண்டும்....அவளும் முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சைகையால் ஏதாவது சொல்லி விடுவோமா என்றிருந்தது.வேர்த்து விறுவிறுத்துப் போயிருந்தேன்.வீட்டிற்கு ஓடிவிடுவோமா என்றிருந்தது.யாரிடமும் பேசவேயில்லை.எப்படியோ சாப்பிட்டு முடித்து மதியம் வகுப்புகள் தொடங்கும் போது...மாணவிகள் மத்தியில் ஒரு அசாதாரண அமைதி தென்பட்டது.எல்லோரும் கடிதத்தைப் பங்கு போட்டுவிட்டார்களா..... என்று தோன்றியது. எப்படியோ நாட்கள் கழிந்தது. வசுமதியிடம் சிரிப்புமில்லை எதிர்ப்புமில்லை.” உடும்பு வேண்டாம் கையை விட்டால்ப் போதும் என்றிருந்தது. அப்புறம் ஒரேஒருதரம் பேனா கேட்க வேண்டியிருந்தது... சீமானுக்காக...கொடுத்தாள்.அடுத்த மாதத்தில்..கல்லூரியே முடிந்தது.
கடைசி நாளை “பசுமை நிறைந்த நினைவுகளுடன் கொண்டாடினோம்...”குட்டி குட்டியாய்ப் போட்டிகள், குரூப் போட்டோ என்று எல்லாவற்றையும் நான்தான் ஏற்பாடு செய்தேன். மாணவிகள் சேலைகளால், வகுப்பை ஒரு கனவுக்காட்சி போல் மாற்றியிருந்தார்கள். அவ்வளவையும் வகுப்பறையின் கதவுகளை அடைத்துக் கொண்டு ’ரகசியமாய்’ செய்திருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ’நேயர் விருப்பம்’ பாடல் போட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தோம். கொஞ்சம் ஜொள்ளு விடுகிற ஒரு சாருக்கு “எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ... என்று பாடல் போட்டோம். உஷாவுக்கு” குலுங்க குலுங்கச் சிரிக்கும் சிரிப்பில் இவளொரு பாப்பா.. என்ற பாடல். வசுமதிக்கு “ மௌனமே பார்வையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்..” பாட்டு. எங்களுக்கு அவர்கள் பாடல்கள் போட்டார்கள்....என் முறை வரும் போது..அடுத்து ஆஸ்தான வித்துவானுக்கு என்றார்கள். இது என்னடா இந்தப் பெயரையெல்லாம் சொல்லுகிறார்களே... என்று பயந்து கொண்டே இருந்தேன்...அவர்களைப் பண்ணிய கேலிக்கெல்லாம் என்ன பழி வாங்கப் போகிறார்களோ என்று.ஆனால் “கலைமகள் கைப் பொருளே..உன்னை கவனிக்க ஆளில்லையோ.. “ என்று பாட்டுப்போட்டதும், “ அப்பாடா என்றிருந்தது....மற்றவர்களெல்லாம் ”பார்ட்னர் தப்பிச்சுட்டீங்க” என்ற சீமானின் கேலியுடன் இணைந்து கொண்டார்கள்.
எல்லோரும் சினிமாவுக்குப் போவதாக முடிவெடுத்தோம்.. வசுமதி நான் சினிமா பார்ப்பதே இல்லை என்று வர மறுத்தாள். நான் போய் அழைத்தேன். கொஞ்சம் பயமாய்த்தான் இருந்தது. என்னிடமும் மறுத்து விட்டாள். ஒரு உதவி செய்ய முடியுமா என்று கேட்டாள். என்ன என்றேன். சுமார் ஐந்து, ஆறு நோட் புத்தகங்களைக் கொடுத்து, இதை உங்க பார்ட்னரிடம் கொடுத்துவிடுங்கள்...வேறு யாருக்கும் தெரியவேண்டாம், அவரே உங்களிடம் வந்து வாங்கிக் கொள்ளுவார் என்றாள். சரி என்று வாங்கிக் கொண்டேன்.சினிமா போகும் அவசரம்.... ”ஆல் த பெஸ்ட்” என்றாள். மறுநாளிலிருந்து ஸ்டடி லீவ். மறுநாள் காலையில் சீமான் வந்தான். நான் அதுவரை அவைகளைப் பார்க்கவேயில்லை.ஆறு நோட்டுகளில் கருப்புமையால் முக்கியமான அவ்வளவு வினாக்களையும் விடைகளையும் எழுதி வைத்திருந்தாள்.. அவள் எழுதிப் பார்த்து படித்தவையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அவளுக்கு தேவைப்படாதா என்று நினைத்தேன். நான் கிட்டத்தட்ட அதே போல் குயர் குயராக பேப்பரில் எழுதிப் பார்த்து, ஸ்டடி லீவில் படிப்பதற்காகத் தயார் செய்து வைத்திருந்தேன். அவன்,அவற்றை திருப்பிப் பார்த்துவிட்டு, ”இரண்டு தடவை என்னன்னு எழுதினாளோ.. பாவிமட்டை...” என்றான்.நீ கேட்டியா என்றேன் இல்லை என்றான்.அவனுக்கு முதல்வருட பேப்பர்களே பாக்கி இருந்தன.”அவ ஆசைக்கு குடுத்துருக்கா...நான் எங்க, படிச்சு பாட்டைத் தொலைக்க .. ”என்றான். ஆமா என்னிடம் ஏன் கொடுத்து விட்டாள் என்றேன்.. நீங்கதானே என் பார்ட்னர் என்றபடியே, ஒரு நமுட்டுச் சிரிப்புடன் கீழிறங்கிப் போனான். நானென்ன காதல் தூதா என்று தோன்றியது. சேச்சே அப்படியிருக்காது என்றும் தோன்றியது. சுஜாதா ஒரு சின்னத் தொடர்கதை, ”ஒரு சிக்கலில்லாத காதல்க்கதை’’-என்ற தலைப்பில் எழுதியிருப்பார்....ஒருவன், ஒரு சுமாரான பெண்ணை காதலிப்பது போல் நடித்து, அவளது தோழியான அழகான பெண்ணை ப்ராக்கெட் போடுவதாக வரும்.இதுவும் அப்படியா என்று நினைத்தேன்....சரி என்ன எழவும் இருந்துட்டுப் போகட்டும் மரியாதியாப் படி என்றது மனசாட்சி.அளவுக்கு அதிகத் தயாரிப்பு,தேவையற்ற அலைபாயல்கள்,என்ன காரணமோ.. யாரும் எதிர்பார்க்காமல் நான் ஃபெயிலாகி விட்டேன். சீமானும். அப்புறம் யாரைப் பார்க்கவும் இஷ்டமேயில்லை.எப்படியோ வாழ்க்கை ஓடி விட்டது.ஏதோ வேலை.. என்னவோ வாழ்க்கை என்று அது தன் பாட்டுக்கு ஓடி விட்டது.
சென்னையில் ஒரு திருமணம். போயிருந்தேன். திரும்பி வருவதற்கு ரயில் டிக்கட் கிடைக்கவில்லை. கியூவில் நின்று கொண்டிருந்தேன்.கூட்டம் குறைகிற மாதிரியே இல்லை. சரி பஸ்ஸில் போகலாம் என்று முடிவெடுத்து திரும்பினேன். பார்ட்னர் என்று குரல் கேட்டது. சீமான். பார்த்து, இருபத்தி ஐந்து வருடமிருக்கும். குரூப் ஒன்று தேர்வு எழுதிப் பாஸ் பண்ணியிருந்தான் என்று யாரோ சொன்ன நினைவு.எப்படியிருக்கீங்க என்று மரியாதையாய்க் கேட்கும்படி இருந்தது அவனது தோற்றம்.எல்லாவற்றையும் பரிமாறிக் கொண்டோம். அப்பப்ப விகடனில் உங்க பேரைப் பார்ப்போம் என்றான். சரி வீட்டுக்கு வாருங்கள்....பக்கத்தில்தான் வீடு, நான் டிக்கெட் எடுத்து ஈக்யூ ரிலீஸ் செய்து தருகிறேன்...என்றான்.ஒருவரைக் கூப்பிட்டு எப்பா, திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்ஸில் என்று ஆரம்பித்தான்....இல்லையில்ல கொல்லம் மெயிலில்.... என்றேன். சாரி, சார் சொல்லறதுக்கு ஒரு டிக்கெட் போட்டு வாங்கிட்டு வீட்டுக்கு வந்துருங்க.... மணி என்னாச்சு பன்னிரெண்டா அப்போ அப்படியே ஈ க்யூ பண்ணிட்டு வந்துருங்க என்று கிளம்பினான். எனக்கு அதெல்லாம் புரியவே இல்லை.வெளியே ஒரு ஜீப் நின்றது. வாரும், ஏறிக்கிடும்,என்றான் எனக்குத் தயக்கமாய் இருந்தது.
"வேய், சும்மா வாரும் வேய், வசுமதி உம்மைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப் படுவா...”.என்றான். ‘ஜிலீர்’ என்றிருந்தது.டிரைவர் இந்த பாஷையை ரொம்ப அந்நியமாகப் பார்த்த மாதிரி இருந்தது. ஆனால் எங்கள் நெருக்கத்தை உணர்ந்தது போல் இருந்தது.ஏறிக் கொண்டேன்..”உம்ம லெட்டரை பத்திரமா வச்சுருக்கா வசு...” என்றான்.. அடடா இது என்னடா சிக்கல்...எப்படி அவளைப் பார்க்கப் போகிறோம்... என்று தோன்றியது... டிரைவர் சொன்னார், ” சாப்பாட்டுக்கு எங்கே நிறுத்தணும் சார் அம்மா மாங்காடு போயிருக்காங்க வர ராத்திரி ஆயிடும்” என்று....அப்பாட சிக்கல் இல்லை என்று தோன்றியது....”ஒரு சிக்கலில்லாத காதல்க் கதை..” என்றும் தோன்றியது. |