அம்மன் அங்கேயே
மார்க்கெட் மேலிருக்கும், நூலக ஆணைக்குழு நூலகத்தை விட கீழைத் தேர் தெருவிலிருக்கும் சைவ சிந்த்தாந்தக் கழக நூலகத்தில் நிறைய புத்தககங்கள் உண்டு.புத்தகங்கள் கிழியாமல், கிறுக்கல்கள் இல்லாமல் நன்றாகவும் இருக்கும்.வார, மாத இதழ்களில் வந்த தொடர்கதைகளை அழகாக பைண்ட் செய்து வைத்திருப்பார்கள். அதைப் படிப்பது ஒரு சுவாரஸ்யம். சாண்டில்யனின் மன்னன் மகள் தொடரை அங்குதான் படித்தேன்.இடையிடையே சில விளம்பரங்கள், சினிமா விமர்சனங்கள் இருக்கும்.ஒகாஸா என்று ஒரு விளம்பரம். “நீஞ்சற வயசில ஓஞ்சு கிடப்பாங்களா...?” என்று. அதை வரி விடாமல் படிப்போம்.அது என்னவென்று தெரியாமலேயே அந்த டப்பவை வைத்திருந்து, அண்ணன் ஒருபவன் பிடுங்கி வைத்துக் கொண்டான். இப்போது தெரிகிறது அது அந்தக் கால வயகரா. ஜப்பான் மருந்து.
|
மாடியில் கழக அலுவலகமும், கீழ்ப் பகுதியில், `சிவஞான முனிவர் நூல் நிலையமு’ம், காசில்லாப் படிப்பகமும் இயங்கிவந்தது. காசில்லாப் படிப்பகத்தில் நாளிதழ்கள் மட்டும் இருக்கும்.அங்கேதான் அண்ணாவின் காஞ்சி, HOME LAND,நம் நாடு, முரசொலி, கருமுத்து தியாகராசரின் `தமிழ் நாடு’, போன்ற பத்திரிக்கைகள் வரும்.அதற்குப் புதியகட்டிடம் கட்டி அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன், அவரோ அன்பழகனோ திறந்து வைத்த நினைவு. பொதுவாக அங்கே சிறுவர்களுக்கு புத்தகம் தர யோசிப்பார்கள். |
நூலகத்திற்கு எதிராக உள்ள ஆ(ற்று)த்தண்ணீர் பைப்பிலிருந்து ஒரு பானை குடிநீர் பிடித்துக் கொடுத்தால் புத்தகம் தருவார்கள்.ஒரு நாள் அதற்கு முன்வந்த நான் பானைத் தண்ணீரைத் தூக்க முடியாமல் தூக்கி வந்ததைப் பார்த்த நூலகர் சிரித்துக் கொண்டே இனிமேல் நீ வேண்டிய புத்தகங்களைப் படிக்கலாம் என்றார். நான் `யவனராணி’ என்றதும், ``உடனேசாண்டில்யனா, இந்தா இதைப் படி” என்று டூமாஸின் ‘கறுப்பு டியூலிப்’ மொழி பெயர்ப்பைக் கொடுத்தார்.அது கழக வெளியீடு. அதே போல் தொடர்ந்து தந்தார். சாண்டில்யனை சாக்லேட்டாக நினைத்துக் கொண்டே அதையெல்லாம் மருந்து சாப்பிடுகிற மாதிரி படித்து முடித்தேன்.பல்லை உடைக்கிற மொழிபெயர்ப்பு.கடைசியில் ஒரு நாள் சாண்டில்யனின் மன்னன் மகள் குமுதத்தில் வந்த தொடரை பைண்ட்செய்தது, தந்தார். அதற்கு ஸாகர் ஓவியம் என்று நினைவு. லதா ஓவியம் போலவே இருக்கும்.
ரொம்ப எளிமையான கோலத்தில் எப்போதும் ஒருவர் தரையில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பார். தலை, நாடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு முடிகள் ஏதோ கீமோதெராபி தந்து முடி கொட்டிப் போன மாதிரி இருப்பார்.அரைமணி நேரத்துக்கொரு தரம் ரகசியமாய் வாயில் எதையோ போட்டுக் கொள்வார். வாயின் ஓரங்களிலும் பற்களிலும் ரோஸ் நிறக் காவியாய் இருக்கும்.வயிற்று வலிக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டே லக்ஷ்மிசங்கர் பல்பொடியைத் தான் அப்படிச் சாப்பிடுகிறார் என்று அப்புறம் சொன்னார்.கோபால் பல்பொடி எல்லாம் உதவாது. இதுதான் பெஸ்ட்.பத்து அரிசி எடை போட்டா வயிறு வலி நின்னுறும் என்பார்.
துப்பறியும் நாவல்களை விரும்பிப் படிப்பார். நூலகம் திறந்ததும் எங்களைப் போலவே வந்து விடுவார்.நாங்கள் விடுமுறைக் காலங்களில், அவரோ தினமும். அவர் படித்து முடித்து திருப்பித் தந்த ஒரு புத்தகதை நான் கேட்டேன்.சந்திர மோகன் எழுதிய துப்பறியும் நாவல்.அவர் படியுங்க தம்பி, இப்ப ஓடிட்டு இருக்கே Dr.NO. ஜேம்ஸ் பாண்ட் படம், அது மாதிரி எழுதின நாவல். பிரமாதமாய் இருக்கும், என்றார். நூலகர் தர யோசித்தார்.தாராளமாய்க் கொடுங்கள் ஒரு கெடுதலும் வந்திராது என்று அவரிடம் ஆங்கிலத்தில் சொன்னார்.அதை முடித்ததும், சந்திர மோகன் எழுதிய சிந்தனையாளர் வரிசை நூல்களைச் சொன்னார். டார்வின், இங்கர்சால், ஃப்ராய்டு,என்று படிக்க சுவாரஸ்மாய் இருந்தது. என்ன தம்பி, பொன்னியின் செல்வன், யவனராணின்னு போறீங்க.அவர்களுக்கெல்லாம் அப்பன் எழுதின நாவலெல்லாம் இங்க இருக்கு.ராகுல சாங்கிருத்தியாயன் படிச்சிருக்கீங்களா, இன்னும் கொஞ்சம் பெரிய பையனா ஆனப்புறம் படிங்க, நல்லாப் புரியும்.என்பார்.உண்மையில் அந்தப் பெயரே அப்போது வாயில் நுழையவில்லை.
அதை ஐந்தாறு வருடம் கழித்துப் படித்தேன். என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது அது. அதை மார்க்கெட் நூலகத்தில் படித்தேன். தி.மு.க ஆட்சிக்கு வந்த சமயம், ஆல் இந்தியா ரேடியோ என்பதை ஆகாஷ்வாணி என்று மாற்றி மத்திய அரசு அறிவித்ததை ஒட்டி ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது.கல்லூரிகளெல்லாம் விடுமுறை விட்டிருந்தார்கள். கல்லூரியில் சி.எஸ். என்று புதிதாக ஒரு தமிழாசிரியர் சேர்ந்திருந்தார்.முன்பே பணி புரிந்தவர்தான். இடைக் காலத்தில் தி.மு.க ஆதரவாளர் என்பதால் பணியிலிருந்து நீக்கி இருந்தார்கள். தி.மு.க தலைமை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். மீண்டும் கல்லூரிக்கு வந்து விட்டார்.அவர்தான் ராகுல சாங்கிருத்தியாயன் பற்றி தெளிவாகச் சொன்னார்.
அந்த விடுமுறையின் முதல் நாளில் ”வால்காவிலிருந்து கங்கை வரை”நூலைப் படித்தேன்.ஆச்சரியமும் வியப்பும் அதிர்ச்சியுமாய் இருந்தது.முதல் இருபது பக்கங்கள் சுவாரஸ்யமில்லாமல் கழிந்தது. முதல் கதையான `நிஷா’படித்து முடிந்ததும் ஒரு அதிர்ச்சி தொற்றியது. ஆகா இது ரொம்ப முக்கியமான விஷயம்ல்லா போலிருக்கு என்று தோன்றியது. பிரபா கதை படித்து முடித்தபோது ஜென்ம சாபல்யம் அடைந்தது மாதிரி இருந்தது. அந்த நிமிடத்திலிருந்து என் வாழ்க்கையே திசை மாறியது. இப்போது கூட அந்த நிமிடங்களை நினைக்கையில் மனதுக்குள் ஏதோ ஊற்றெடுக்கிறது.இதுவரை நீங்கள் யாரேனும் அந்த நூலைப் படிக்காதவர்கள் இருந்தால் உங்கள் இத்தனை வருட வாழ்க்கையும் வீண் என்பேன்.
அதை வாசித்து முடித்து சிறிது நாளிருக்கும்.ஒருமாலை ரதவீதியைச் சுற்றி வந்து கொண்டிருந்தோம்.வாகையடி முக்கு சண்முகா ஒலிபெருக்கி நிலையத்திலிருந்து, ‘நீ எங்கே என் நினைவுகள் அங்கே.....” என்று பாட்டுப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.புதிய படங்களின் பாடல்களை அவ்வப்போது ஒலிபெருக்கி வைத்திருப்பவர்கள் இப்படிப் போடுவது வழக்கம்.இது டி.எம்.எஸ். படிக்கிற பாட்டு.நாங்கள்கொஞ்ச நேரம் நின்று கேட்டு விட்டு மறு படி. நகர் வலத்தை ஆரம்பிப்போம்.புதுப்படப் பாட்டு கேட்பதற்கு அப்போது ஜங்ஷன் பாப்புலர் மியுசிக்கல்,சாலைக் குமாரர் கோயிலருகே ஒரு கடை இவற்றிற்கெல்லாம் போவோம். படம் வெளி வந்து ஓடிக் கொண்டிருந்தால் சரியாக, பிடித்தமான பாட்டு வருகிற நேரத்திற்கு தியேட்டருக்குப் போய் விடுவோம். வெளியே நின்று ஒன்றிரண்டு பாட்டைக் கேட்டுவிட்டு வருவோம்.`நினைத்தேன் வந்தாய்....’ பாட்டைக் கேட்பதற்கு லட்சுமி தியேட்டர் முன்னால் எட்டு மணி வாக்கில் பத்துப் பதினைந்து பேர் கூடுவோம்.அதில் மஞ்சன வடிவழகன் என்று ஒருத்தர் வருவார். என்னை விட இரண்டு வயது பெரியவன். ஒரு மடத்தில் வேலைக்கு முயன்று கொண்டிருந்தான்.அவன் அப்பா அங்கே வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓரளவு பாட்டை ரசிப்பவன், பெண் விவகாரங்களிலும் ‘ரசனை’ உள்ளவன். சண்முகா ஒலிபெருக்கி முன்னால் கூட்டம் கூட விடமாட்டார், சண்முகம் அண்ணாச்சி. நானும் பச்சையும், அதற்கு அடுத்த வீட்டு நடையருகே நின்று கேட்டுக் கொண்டிருந்தோம்.
அது எப்போதுமே சாற்றியே இருக்கிற வீடு. கனமான அழி போட்டு நெருக்கமாக டைமண்ட் வலை அடித்திருக்கும். ஐந்தாம் வகுப்பு படிக்கையில் பள்ளிக்கூடம் போகும் போது, அந்த வீட்டருகே போய் வலை வழியே உற்றுப் பார்ப்போம். அந்த வீட்டில் அழியை ஒட்டி தார்சால், அதற்கடுத்து ஒரு நிலை.அதில் மூன்று வரிசையாக கோலிக்காய்கள் நிலையைச் சுற்றி பதித்திருக்கும். அதை வேடிக்கை பார்ப்பது ஒரு பொழுது போக்கு.ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டு விட்டு பள்ளிக் கூடம் போகும் போது அந்த வீட்டின் நடையிலிருந்து கோலிக்காய் பார்த்துக் கொண்டிருந்தோம்.ஒரு பெண் உள் வாசலிலிருந்து வெளித் தார்சாலுக்கு வேகமாக வந்து, வெளிக்கதவை லேசாகத் திறந்து, ”ஏ தம்பி இந்த செய்யது ஸ்டோரில் ஒரு பாக்கெட் அமிர்த விலாஸ் கடலை மிட்டாய் வாங்கித் தாரியா” என்று ஒரு புது ஒரு ரூபாய் தாளை நீட்டினாள்.ரோஸ் கலரில் சட்டையும் சேலையும் உடுத்திருந்தாள்.அதற்கும் அவள் உடல் நிறத்திற்கும் வித்தியாசமே இல்லை.அப்படியொரு கலர்.ஆள் சற்று கனத்த சரீரமாய் இருந்தாள். கண்ணுக்கு கீழ் கொஞ்சம் கண்மை லேசாக இழுவிய மாதிரி இருந்தது.நல்ல தலைமுடி, கலைந்து கிடந்தது.
நானும் ஜனாவும் கடலை மிட்டாய் வாங்கி வந்து தந்தோம். ஒரு பாக்கெட். பிரித்து தருவாள் என்று நினைத்திருந்தோம்.தரவில்லை ரொம்ப ஆசையாய் திருப்பித் திருப்பிப் பார்த்து அமிர்தவிலாஸ் தானே என்று கேட்டு பார்த்தும் கொண்டாள். அதற்குள் அவளைப் போலவே இருந்த அவள் அம்மா வெளியே வந்தாள்.அவ்வளவு நிறமில்லை.”போ தூங்காம என்ன செய்தெ இங்கே” என்றாள். மிட்டாயை மறைத்துக் கொண்டு உள்ளே போனாள்.மீதி முக்கால் ரூபாயை வாங்கவேயில்லை. நீங்க யாருடா என்றாள் கிழவி.பதில் சொல்வதற்குள் திரும்பவும் அவள் வந்து இந்தா குச்சி போட வச்சுக்கோ என்று ஒரு அழகான சதுர டப்பாவை தந்தாள்.கிழவி சத்தம் போட்டாள்., ”ஏ கோட்டி மூதேவி இதையெல்லாமா கொடுப்பாங்க” என்று.அவள் உள்ளே போய் விட்டாள்.ஜனாவும் நானும் இரண்டு நாள் கழித்து தெய்வப்பிறவி போனோம். அழகப்பனும் வந்தான். அவந்தான் கிளாஸ் லீடர். மீதி நாலணாவை ஜனாவும் டப்பாவை நானும் வைத்துக் கொண்டோம். அதில்‘OKASA’ என்று எழுதியிருந்தது.
அதற்கப்புறம் தெரிந்தது, அந்த வீட்டுக்குத்தான் எங்கள் தெருவின் பெரிய பண்ணையார் தினமும் மாலையில் போய் விட்டு இரவு பதினோரு மணிக்கு வீடு திரும்புகிறார் என்று. அவர் பெரும்பாலும் நடந்து, சமயத்தில் குதிரை வண்டியில் திரும்புவார். நடப்பது தெரியாமல் அவ்வளவு பதவிசாக நடப்பார். தூரத்தில் அவர் வரும் போதே நாங்கள் சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தால் சடாரென்று அமைதியாகி விடுவோம்.அப்புறம் ஒன்றிரண்டு முறை அந்தப் பெண்ணையும் கிழவியையும் பார்த்திருக்கிறோம். ஒரு தேரோட்டத்தின் போது ஒரு முறை பார்த்தோம். கொஞ்சம் விடலைப் பையன்கள் தேர்வடத்தைப் பிய்த்து அந்த வீட்டைப் பார்த்து எறியவும், தாய்க்கிழவி ஏசிக் கொண்டே அந்தப் பெண்ணை உள்ளே இழுத்துப் போனாள்.
மஞ்சன வடிவழகனை, பச்சை என்று கூப்பிடுவோம். பச்சையும் நானும் இன்று அந்த வீட்டின் அருகே நின்று, மன்னீப்பு படப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அந்த வீட்டுக்குள்ளிருந்து லைப்ரரி ஆசாமியை அந்த வீட்டு வேலைக்காரன் இழுக்காத குறையாய் இழுத்து வந்தான்.இன்னும் மோசமான அழுக்கு உடையுடன் இருந்தார்.எனக்கு விளங்க வில்லை. அவர் நடையில் உட்கார்ந்தார்.வேலைக்காரனை போடா என்றார். கொஞ்சம் அவரது சத்தம் கூடியதும் வேலைக்காரன் உள்ளே போய் விட்டான். எனக்கு அவரிடம் ராகுல்ஜி படிச்சுட்டேன் என்று சொல்ல ஆசை. உண்மையில் அதை என்னிடமிருந்து வாங்கி பச்சை படித்துக் கொண்டிருந்தான். இன்னும் ‘பிரபா’ படிக்கவில்லை. அதுவரையுள்ள கதைகள் படிச்சுட்டேன் என்று சொல்லியிருந்தான்.
இவர்தான் எனக்கு முதலில் ராகுல்ஜி பற்றிச் சொன்னார் என்று சொன்னேன்.அவரை நெருங்க முயற்சித்த போது, பச்சை சொன்னான், ”இங்க வாரும்” என்று தள்ளி அழைத்துப் போய் ”அவர் பொண்டாட்டிதான் அது. பேருக்கு இவரு புருஷன், உங்க தெரு பண்ணையாருதான் வச்சுருக்காரு. அவ அம்மா அந்தக் காலத்து கோயில்த் தாசி, இவரை லைப்ரரிலெ பாத்திருப்பேரு, பிரமாதமா படிச்சுருக்காரு.” அவர் இதையெல்லாம் கேட்ட மாதிரி இருந்தது. என்னவோ தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் எதிர்ப் புறம் நகர்ந்தோம். தூரத்தில் பண்ணையார் வருவது தெரிந்தது.வீட்டுக்குள்ளிருந்து ஒரு வாளித் தண்ணீரை வேலைக்காரன் அவர் மேல் கவிழ்த்தான்.எழுந்து எங்கள் அருகே வந்தார். நடக்கக் கூட சீத்துவமில்லை. ”தம்பி ராஜஸ்தான் அந்தப்புரங்கள் படிச்சிருகீங்களா” என்று கேட்டார்.பதில் சொல்லும் முன், பச்சை”யோவ், வாரும்” என்று என்னை இழுத்துக் கொண்டு சற்று தள்ளிப் போனான்.பண்ணையார் வீட்டுக்குள் போனார், அவரது மஸ்லின் வேஷ்டியில் தண்ணீர் பட்டு விடாமல் சற்று உயர்த்திப் பிடித்த படி. கதவை அடைத்து விட்டு வேலைக்காரன் வெளியே வந்தான்.அவன் கையில் ஒரு பல்ப்பொடி பாக்கெட்டும் ஏதோ ரூபாய்த் தாள்களும் இருந்தது. அசட்டுச் சிரிப்புடன் வாங்கிக் கொண்டார்.ஒன்றும் தோன்றவில்லை. பச்சை, ”வாரும்,அப்படீ இன்னொரு ரவுண்டு சுத்துவோம்” என்றான்.நான், ”இல்லை வீட்டுக்குப் போகிறேன்” என்று மேற்கே திரும்பினேன். அவன் வடக்கே போனான். வேலைக்காரன் கிழக்கே போனான். அவர் தெற்கே. வாகையடி அம்மன் அங்கேயே இருந்தாள்.
|