வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

“அந்தத் தூசியையாவது தட்டிக் கொண்டுவந்து தரக் கூடாதா” என்பாள்.. காணாததற்கு அம்மா தாத்தா, கிராமத்தில் இறந்த போனபின் அங்கேயுள்ள பந்திப் பாய், ஜமுக்காளங்களும் இங்கே வந்து விட்டது.”போ, அதுக்கும் மண்டையிடி புடிச்சாச்சா” என்று அங்கலாய்ப்பாள்.

 

இரண்டு கட்டில்கள் கிடந்தன ஒரு பெண், ஒரு கட்டிலில் இருந்தாள், அவசரமாக எழுந்தாள். வட்ட முகம் நீளமான முடி. நடிகை அம்பிகா, (அந்தக்கால அம்பிகா-மலையாள நடிகை-அவள்தானோ என்று பல தடவை நினைத்ததுண்டு-) போலிருந்தாள். அப்பாவைப் பார்த்ததும் அவளும், “வாங்க, வீட்ல எல்லாரும் சௌக்கியமா, உங்களை பாக்கத்தான் வந்தாரா, நானும் வந்திருப்பேனே” என்றாள்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


தீர்த்த யாத்திரை..

கலாப்ரியா  

அது என்ன ராசியோ தெரியவில்லை. முதலில் என்னுடன் பழகுபவர்கள்.. கலகலப்பும் கிண்டலுமாகப் பழகுவார்கள். ஏதோ ஒரு நெருக்கம் பிறக்க ஆரம்பிக்கும் போது அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். நானும் என் அழுமூஞ்சித் தனத்தை காட்டிக் கொண்டு விடுவேன் போலிருக்கிறது. அதனால் அவர்களுடன் ஒரு அசாதாரமான இனஞ்சேரல் வாய்த்து விடும். ரொம்ப ஓவராக எப்போதும் சோகத்தைக் காண்பிக்கிறவர்களைப் பொதுவாக அந்தப் பருவத்தில் யாருக்கும் அவ்வளவாய்ப் பிடிக்காது என்பதும் ஒரு உண்மைதானே. யாராவது “புலம்ப’’ ஆரம்பித்தால் நான் கொஞ்சம் காது கொடுப்பேன், மற்றவர்கள் நைசாகக் கழண்டு விடுவார்கள். ஏனெனில் பாலிய பருவம் என்பது ஒருவகை தித்திப்பான பருவம். கண்ணதாசன் சொல்லுகிற மாதிரி,

”வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே...”

என்கிற பருவம். ஆனால், அப்போது நான் ஒரு ரெண்டுங்கெட்டான் வாழ்க்கையில் இருந்தேன். வேலையும் பார்த்துவந்தேன், அது தற்காலிகமான வேலை என்ற சிலுவையைச் சுமந்தபடியும், கோட்டை விட்ட தேர்வுகளுக்கு படித்த படியும், அல்லது படிக்கிறேன் என்று பேர் பண்னிக் கொண்டு... பொழுதை வீணடித்துக் கொண்டும் இருந்தேன். சத்திய வாசகன் அப்போது எம்.எஸ்.சி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தான். கொண்டிருந்தார் என்று சொல்லவேண்டும். தினசரி மதியம் கேண்டீனில் சாப்பிடுகிற நேரத்திற்கு சந்திப்போம். ஒரு ஆராய்ச்சி மாணவரும் எங்களுடன் இருப்பார். நான், டவுணில் ஆராய்ச்சி மாணவருடன் அவரது அறையில்தான் தங்கியிருந்தேன். அப்புறம் அவருக்கு ஹாஸ்டலில் இடம் கிடைத்த போது நானும் அவருடன் ஒட்டிக் கொண்டே ஹாஸ்டலுக்கு வந்தேன். அப்புறம் ஹாஸ்டல் சாப்பாடு. சத்தியவாசகனுக்கும் என்னைப்போல சாரதா படங்கள் என்றால் உயிர், துலாபாரம், தீர்த்த யாத்திரை, ஸ்த்ரீ, கிராஸ்பெல்ட், என்று மலையாளப் படங்களைப் பற்றி அடிக்கடி பகிர்ந்து கொள்வோம்.

கேண்டீனில் மதியச் சாப்பாடு 90 பைசா. சாப்பாடு ஒரே மாதிரி இருக்கும். சாப்பிடும் போது, கேண்டீன் பரபரப்பும், வெக்கையும், அலுமினிய டோக்கன்களை வாங்குகிற கொடுக்கிற நழுவவிடுகிற சத்தமும், பரிமாறுகிற சேட்டனின் இறுக்கமான முகமும், நாம் எப்போ இடத்தைக் காலி பண்ணுவோம், தான் அமரலாம் என்று பின்னால் காத்திருக்கிற அதே ஆட்களும் (அநேகமாக எனக்குப் பின்னால் எப்போதும் எங்கள் கல்லூரி ஆசிரியர், எம் .ஃபில் படிப்பவர் வந்து நின்று கொள்வார், அவருக்குப் பின்னால் குறைந்தது மூன்று பேராவது தயாராய் நிற்பார்கள், அவர் சாப்பிடுவது வேடிக்கையாய் இருக்கும். ஒரு கட்டி சோற்றையும், இலையில் விரித்துப் பரத்தி விடுவார். நடுவில் குழி. சேட்டன், சாம்பார் வாளியைக் கவிழ்க்காத குறையாய் ஊற்றுவார்.தினமும் வைக்கிற உருளைக் கிழங்கு பொடிமாஸ்,இரண்டு மூன்று கரண்டி முதலிலேயே “வையுங்க, வையுங்க” என்று கேட்டு வாங்கிக்கொள்ளுவார். அவ்வளவுதான் உருட்டி நாலு வாயில் விழுங்கி விட்டு, எழுந்து விடுவார். ரசத்தைக் கொண்டா, மோரைக் கொண்டா... என்றெல்லாம் கேட்கவே மாடார். சேட்டன் அவரைப் பார்த்தால் மட்டுமே கொஞ்சம் சிரித்த முகமாய் இருப்பார்.) எல்லாமே நாள் தவறாமல் ஒரே மாதிரி நடக்கும். எனக்கு காலம் நகராமல் அப்படியே தினமும், அந்த உச்சிப் பொழுதிலேயே உறைந்து நிற்பது போல இருக்கும். சத்தியவாசகன் என்னருகே அநேகமாக இருப்பார். அவர் தினமும் பத்துப்பைசாவை மிச்சம் வாங்குவதில் சற்றே கண்டிப்புடன் இருப்பார், அல்லது அதற்கான டோக்கனை வாங்கிக் கொள்ளுவார். நாங்கள் அதற்கு ஒரு வடை வாங்கிக் கொள்ளுவோம். இல்லையென்றால் வாங்கவே மாட்டோம். கேண்டீன் மணி கணக்கு வைத்துக் கொள்ளுவான்.

அவனொரு அற்புதமான மனுஷன். மதியம் மூன்றரை வாக்கில்போனால் புதுப்பாலில் காஃபி போட்டுத் தருவான், அந்தப் பத்துப்பைசாவில். அருமையான காஃபியாய் இருக்கும். நன்றாக இருக்கிறதென்று சொல்லிவிட்டால், இந்தாங்க இன்னொரு அரை கிளாஸ் என்று தருவான். வேண்டாம் என்றாலும் விட மாட்டான். ”சார் காபிக்கு கணக்கு கேட்க முடியாது சார், இது என்ன வடையா.. எண்ணி வைத்துக் கொள்ள. லாஸ்ட் ட்ரிப் ஸ்டாஃப் பஸ் போகிறவரை காஃபி இருக்கணும் அவ்வளவுதான்,” என்பான். ஒரு மத்தியானம் சாப்பிடவந்த போது கொஞ்ச நேரம் எங்களைக் காத்திருக்கச் சொன்னான். கேண்டீன் ஊழியர்கள் சாப்பிட சமையலறையில் ஒரு மேஜை உண்டு அதற்கு அழைத்துப் போய், அருமையான கோழிக் குழம்பை விட்டுச் சாப்பாடு போட்டான். ”இது ஏது மணி” என்றார் சத்தியவாசகன். “காலையிலே, தெருவில மேஞ்சுக்கிட்டு இருந்த, வீட்டுக்கோழி, ”நாடார் காலேஜ்’ பஸ்ஸுக்குள்ள பாஞ்சுட்டு, அவ்வளவுதான், டிரைவர் நம்ம ஆளு என்ன செய்ய, இந்தா, கொண்ணாப்பாவம் திண்ணாப் போச்சு....” என்றான் சிரித்துக்கொண்டே. என் முகத்தில் ஏதோ மாறுதலைப் பார்த்து...”உடனே கொறை உயிரைப் போக்கி, சுத்தம் பண்ணி சமைச்சாச்சு சார், ” என்றான். கோழி ருசியாயாகவே இருந்தது. அதைவிட காலம் சற்று நகர்ந்த மாதிரி இருந்தது, திருப்தியாய் இருந்தது. சத்திய வாசகன் அனுபவித்துச் சாப்பிட்டார், என் இலையில் இருந்த கொஞ்சம் மீதச் சோற்றை, உங்களுக்கு வேண்டாம்ல்லா....” என்று எடுத்துக் கொண்டு அதையும் கோழிக்குழம்பு விட்டுச் சாப்பிட்டார்

மாலையில்தான் மணி சொன்னான். ”பாவம், உங்க ஃப்ரெண்டு ’பத்துப் பைசாவிற்கு’ நல்ல பசி... காலையில் நாஸ்டா கிடையாதுல்லா, மதியம் இங்க வந்துதான சாப்பிடுகிறார்...”என்றான். பாவம் கொஞ்சம் கஷ்டப்பட்ட குடும்பம்...இவர் படிச்சு முடிக்கத்தான் காத்திருக்கு...எப்படி சார்,. உடனே வேலை கிடைச்சுருமா... நீங்க.. ரிஜிஸ்ட்ரார்ட்ட சொன்னா நடக்கும்.. ”என்றான். நான், ”அடப்பாவி என் கதையே அந்தரத்தில் இருக்கு.. இதுல இது வேறயா..” என்று நினைத்துக் கொண்டேன். அப்புறம்தான் புரிந்தது, காலையில், பஸ்ஸ்டாப்பில் எவ்வளவு கட்டாயப்படுத்தி நீட்டினாலும்...சிகரெட்டைத் தொடமாட்டார். ஆனால் மத்தியானம் கேட்டால் ஒன்றை எடுத்துப் புகைப்பார். மணியிடம், ”என்னப்பா, இவ்வளவு தெரிஞ்சும், அவருக்கு பத்துப் பைசான்னு பேர் வச்சுருக்கீங்க, அவர் பேர் சத்தியன்” என்றேன். ”சார் உங்ககிட்ட மட்டும்தான் சொல்லறேன், கேண்டீனில் நிறைய பேருக்கு இதே பெயரை வச்சுருக்காங்க...... அவருக்கும்....சாரி சார்” என்றான்.

தேர்வெல்லாம் அநேகமாக முடிந்து விட்டது. சத்தியனிடம் நெருங்கி இருந்தேன். அவனுடைய கதைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்தது. மாமா ஒருவரின் உதவியில் குடும்பம் நடக்கிறது. அவர் திருநெல்வேலியில் இருக்கிறார். அப்பா, திருப்பரங்குன்ற மலையில் சாமியாராக இருக்கிறார். எங்கேயோ போய்விட்டார் என்று தேடிச் சலித்தபின் யாரோ சொன்னார்களாம். அதையும் யாரும் போய்ப் பார்க்கவில்லை. அவரைத் தேடிப்போகக் கூடாது என்று மாமா தடுத்துவிட்டாராம். சிலர் அதெல்லாம் இல்லை அவர் வடக்கே எங்கோ போய் வேலை பார்க்கிறார் என்றார்கள்.நான் அவனிடம் அதைப் பற்றிக் கேட்கவுமில்லை அவனும் எளிதில் சொல்லுகிற ஆளில்லை.ஆனால் தன் கஷ்டங்களைக் கொஞ்சம் சிரிப்புடன் பகிர்ந்து கொள்ளுவான். சத்தியனைத் திடீரென்று கேண்டீனில் பார்த்தேன். “காஷன் டெபாசிட் பணமெல்லாம் தர்ரேன்னாங்க, அதுக்காக வந்தேன்.. இன்னக்கி டவுணுக்கு வாங்க, சினிப்ரியாவில்” ஏணிப்படிகள்” போட்டிருக்கான்,” என்றார். நானே நினைத்துக் கொண்டிருந்தேன். தகழியின் நாவல். சாரதா, மது நடித்தது.. போகலாமே என்று. ஆனால் சினிப்ரியா போய்த் திரும்புவதற்குள், இங்கே வருகிற செக்காணூரணி கடைசி பஸ்ஸைப் பிடிக்க முடியாதே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சத்தியவாசகனுடன் அமர்ந்து சாரதா நடித்த மலையாளப்படம் பார்ப்பது நல்ல அனுபவம். அவருக்கு ஓரளவு மலையாளம் தெரியும். அதனால் அவரே கூப்பிடும்போது சரி என்று சொல்லிவிட்டு தியேட்டருக்கு வந்து விடுகிறேன் என்றேன்.

அவருடன் ”சுயம்வரம்”, “வீண்டும் பிரபாதம்” எல்லாம் எங்கெங்கோ பஸ்ஸே அதிகம் செல்லாத தியேட்டர்களுக்கு எல்லாம் போய்ப் பார்த்த நினைவுடன் போனேன்.சரியாக தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருந்தார். தியேட்டர் புதியது. அதிலும் மதுரையில் இரண்டு தியேட்டரை உள்ளடக்கிய முதல் காம்ப்ளெக்ஸ்.அதனால் கூட்டம் அதிகமிருந்தது.அவர் ஏற்கெனவே டிக்கெட் எடுத்திருந்தார்.படம் போய்க் கொண்டே இருந்தது... ...சாரதா...கேரக்டர் படத்தில் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.....சத்தியன் அவ்வளவு உற்சாகமாய் இல்லை... எனக்கு நேரம் பற்றிய பயம் வேறு.பஸ் கிடைக்குமா....என்று சந்தேகம். ஒரே ஒரு வார்த்தை, கடைசிவரை இருப்போம் என்று மட்டும் சொன்னார்.

நினைத்தது போலவே பஸ் போய் விட்டிருந்தது.பசி வேறு.. எங்கே போய் தங்குவது தெரியவில்லை. பழைய மேன்ஷனில் போய் தங்கலாம் என்றால்...அங்கே யார் இருப்பார்கள் என்று தெரியாது.நாகமலை புதுக்கோட்டை வரை பஸ் கிடைக்கும். அங்கிருந்து நடக்கமுடியாது. ரொம்பத் தொலைவு.துணையும் இல்லை. ஒரு முறை அப்படியும் போனோம். அப்பொழுது துணைக்கு ஆள் இருந்தது.சத்யன் சற்று தயக்கமாக எங்க வீட்டில தங்கிக்கங்க. தார்சாலில் படுத்துக் கொள்ளலாம்.....என்றார். முருகன் இட்லிக்கடையில் சாப்பிட்டுவிட்டு, அப்படியே அவர் வீட்டுக்குப் போனோம் தினமணி டாக்கீஸ் பக்கம் இருந்தது வீடு.. கால் அசந்து விட்டது.....பத்து வீடுகள் ஒன்றையொன்று ஒட்டி வரிசையாய் இருந்தன.அநேகமாக எல்லாவீட்டிலும் விளக்குகள் அணைந்திருந்தன. கிட்டத்தட்ட வரிசையின் நடுவில் இருந்த வீட்டின் முன் நின்று கதவைத் தட்டினான். ஏற்கெனவே தெருவில் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தது.கையில் ஒரு சிமினி விளக்குடன் அவனது அம்மா கதவைத் திறந்தாள்.அவன் மட்டும் உள்ளே போனான்.நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். வீடுகளின் முன்புற நடைபாதை அதிகம் போனால் நான்கு அடி இருக்கும்.அதிலும் அவனது வீட்டின் முன்னால் பாத் ரூம் போல ஒன்றிரண்டு இருந்தது.கண்கள் இருட்டுக்குப் பழகிய பின்னரே இதெல்லாம் பிடிபட்டது. அதற்குள் கொசு காலை கடிக்கத் தொடங்கியிருந்தது. ரீகலில் ஏதாவது இங்கிலீஷ் படம் பார்த்துவிட்டு பஸ்ஸ்டாண்டில் காத்திருந்திருந்திருக்கலாமோ என்று தோன்றியது.வீட்டு முன்னாலுள்ள தார்சாலில் ஒருவர் வேண்டுமானால் தாராளமாகப் படுக்கலாம்.இரண்டு பேர் படுக்கக் கஷ்டம்.

உரலுக்குள் தலையை விட்டாச்சு இன்னம உலக்கைக்கு பயந்தா முடியுமா....என்று தேற்றிக் கொண்டு படியில் உட்கார்ந்து கொசு விரட்ட ஆரம்பித்தேன். இரண்டு துணிகளுடன் சத்யன் வந்தான்.”நீங்க இங்க படுங்க நான், அடுத்த வீட்டுத் தார்சாலில் படுக்கிறேன், யாரவது நடுராத்திரி எழுப்பினாலும் நான் பதில் சொல்லிக் கொள்வேன்...” என்றான். ”சரி இது பாத்ரூமா, போகலாமா” என்று கேட்டேன். ”இங்க லேடீஸ் மட்டும்தான் இதை உபயோகிக்கலாம். நாம வெளியதான் போகணும், வாங்க போய்ட்டு வந்திரலாம்” என்று சற்று தள்ளிக் கூட்டிப் போனான். அநேகமாக் தினமணி டாக்கீஸ் பின் புறமாய் இருக்கும். அலிபாபாவும் 40 திருடர்களும்.....ஓடிக் கொண்டிருந்தது... “உல்லாச உலகம் உனக்கே சொந்தம்....செய்யடா செய்யடா... நீ ஜல்சா... செய்யடா ..”.என்று கண்டசாலா பாடுவது தெளிவாகக் கேட்டது. நின்றபடியே ....கழித்துவிட்டுக் கிளம்பினோம். நிறையப் பேர் வரிசையாக செம்பு, சிறிய வாளி, சகிதமாக உட்கார்ந்திருந்தனர்......எனக்கும் வயிற்றைக் கலக்கியது... “ஆண்டவனே காலையில் ஹாஸ்டல் போகிற வரை காப்பாத்தி விடப்பா.....” என்று வேண்டிக் கொண்டேன். சின்னப் பிள்ளையில் இது போல் சூழல், நெருக்கிக் கொண்டு வந்தது என்றால், வீடு வரைக்கும் காப்பாத்துப்பா என்று சந்திப் பிள்ளையாருக்கு சூடன் பொருத்தி வைப்பதாக வேண்டிக் கொள்வேன். பாவம் அவரைத்தான் எதற்கெல்லாம் தொந்தரவு பண்ணியிருக்கிறோம் என்று நினைத்துச் சிரிப்பு வந்தது.

லுங்கி வேணுமா என்று கேட்டதற்கு வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவன் அம்மா தந்தாள்.அவனது தங்கை போல ஒரு பெண், பாவாடை தாவணியில் வீட்டினுள் நின்று கொண்டிருந்தது, மங்கலாகத் தெரிந்தது.படுத்துக் கொண்டேன். ”கரண்டை கட் பண்ணிவிட்டார் வீட்டுக்காரர்,விளக்கை வேண்டுமானால் இங்கன வக்யட்டுமா...” என்று அவன் அம்மா கேட்டாள். திருநெல்வேலி பாஷை சுத்தமாக இருந்தது. வேண்டாம் என்றேன். சொல்லக் காத்திருந்தது போல விளக்கை ஊதி அணைத்துவிட்டுக் கதவைச் சாத்திக் கொண்டார்..தரையில் படுத்துக் கொண்டு துணியைக் காலை மறைத்துப் போர்த்திக் கொண்டேன். ஏதோ பழைய சேலை.. அநேகமாக மூட்டை கட்டி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. துணிமூட்டையைப் பிரித்து எடுத்த வாசனை வந்தது..ஊரிலும் என்ன, ஒரேயொரு பந்திச் சமுக்காளம்தான் இருக்கிறது. அதைக் கிழிசல் தெரியாமல் மடித்து விரித்தால் அழகான மெத்தை போலிருக்கும். எப்படியோ தூங்கிப் போனேன். இன்னும் விடியவில்லை இருட்டாய் இருந்தது. கதவைத் திறந்து கொண்டு அவன் தங்கை, துணைக்கு அவன் அம்மாவுடன் வெளியே வந்து, வீட்டுக்கு எதிரே இருந்த பாத் ரூம் போனாள்.அவள் போய் வந்ததும், அம்மா போனது போல் தெரிந்தது. நான் எழுந்து, அடுத்த தார்சாலில் தூங்கிக் கொண்டிருந்த சத்யவாசகனை எழுப்பினேன். நான் கிளம்புகிறேன் என்றேன். காஃபி சாப்பிட்டுவிட்டு கிளம்புங்க என்றான்.” அய்யோ வேண்டாம்..’ என்று அவசரமாக மறுத்தேன்..என்ன பாத்ரூம் போகிற அவசரத்தில் எழுப்பி விட்டார்களா, என்று கேட்டான்... இல்லையில்லை என்று மறுத்தேன். இங்கே எல்லோருக்கும் முன்னால் நாங்கள் போய்விட வேண்டும்....காலி செய்யவைப்பதற்கு.. என்னவெல்லாமோ செய்கிறான் வீட்டுக்காரன் என்றான் சத்யன். சரி என்று ரோடு வரை வந்து செண்ட்ரல் பஸ்ஸ்டாண்டிற்குச் செல்லும் பஸ்ஸில் ஏற்றி விட்டான்.நல்லவேளை, பழைய வேண்டுதல்களுக்கே, சந்திப் பிள்ளையார் காப்பாற்றி விட்டார்.பத்திரமாக ஹாஸ்டல் வந்து, நேராக பாத்ரூமைத் தஞ்சமடைந்தேன். அப்புறம் கொஞ்ச நாட்கள் அவனைப் பார்க்கவேயில்லை

அன்று சம்பளம் போட்டிருந்தாகள், அநேகமாக கடைசிச் சம்பளம்.அடுத்த மாதத்தோடு வேலை முடிந்துவிடும். ஊருக்குப் போவதற்காக பாசஞ்சர் ரயிலுக்கு போக முடிவெடுத்திருந்தேன். அது பத்து மணிக்குப் புறப்பட்டு,”சங்கான் சங்கான் “ என்று திருநெல்வேலி போய்ச் சேர காலை ஐந்து மணி ஆகி விடும். ஒன்பது மணிக்கே போனால் கொஞ்சம் லக்கேஜ் வைக்கிற இடத்தில் இடம் பிடிக்கலாம். படுத்துக் கொண்டே போய் விடலாம். யாராவது போர்ட்டரிடம் எட்டணாவோ ஒரு ரூபாயோ கொடுத்தால் சீட் போட்டுக் கொடுப்பார்கள். டிக்கெடே ஐந்து ரூபாய்தான்.எட்டணாவெல்லாம் பெரிய தொகை. ஒரு ரூபாய் கொடுத்தால், மரியாதை பலமாயிருக்கும்.காலேஜ் கஃபேயில் சாப்பிட்டுவிட்டு, ஸ்டேஷனுக்கு நடந்தேன். பிளாட்பாரத்தில், சத்தியன் கொஞ்சம் மூட்டை முடிச்சுகள், இரண்டே இரண்டு பெட்டி, அம்மா, தங்கை சகிதம் நின்று கொண்டிருந்தான். பாசஞ்சர் வண்டி ரெடியாய் நின்றது ஆனால் பூட்டி வைத்திருந்தார்கள். சத்யன் கடைசிப் பெட்டிக்குப் பக்கமாக ஸ்டேஷனின் அழுது வடியும் விளக்கு வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தான்.ஒரு போர்ட்டர், ”சார் எதாவது குடுங்க சார் எல்லாத்தையும் ஏத்தி வச்சு இடம் புடிச்சுத்தாரேன் ”என்று கேட்டுக் கொண்டிருந்தார். சத்தியன் மறுத்துக் கொண்டிருந்தான்.நான் அருகில் போனதும், ”வாங்க, எப்படி இருக்கிங்க......உங்க ஊருக்குத்தான் கிளம்பினோம்....”என்றான்.”நானும் ஊருக்குத்தான் போகிறேன்.... நல்லதாப் போச்சு... ” என்றவன், போர்ட்டரிடம் இரண்டு ரூபாயைக் கொடுத்தேன் அவன், ரயிலின் அடுத்த பக்கமாகப் போய் கதவைத் திறந்து கொண்டு வந்தான்.சாமான்களை அவசரமாக ஏற்றி லக்கேஜ் கேரியரில் விரித்திருந்த தன் துண்டை எடுத்து எனக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தான்.வண்டியில் இன்னும் விளக்குக்களே போடவில்லை. போர்ர்ட்டரின் தீப்பெட்டி வெளிச்சம்தான். அம்மாவையும் தங்கையயும் உட்கார வைத்து விட்டுக் கீழே இறங்கி நின்றோம்.

“வீடெல்லாம் காலி செய்து விட்டோம், மாமா வீட்டில், இருக்கிற சாமான்களைப் போட்டுவிட்டு, நான் வேலை தேடி கிளம்பறேன். அம்மாவும் தங்கையும் அங்கே இருப்பதாக ஏற்பாடு. அவளது பி.காம். பாதியிலேயே நிற்கிறது. அதுதான் அவளுக்கு ரொம்ப வருத்தம்.மாமா வீட்டில் என்ன மரியாதை கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை.”என்றான். “அவர் வரச் சொல்லித்தானே போகிறீர்கள்”, என்றேன்.”இல்லை” என்றான். எனக்குப் பகீர் என்றது. ”தீர்த்த யாத்திரை”... படம் பார்த்திருப்பீங்களே அந்த மாதிரித்தான்.ஏதோ கிளம்பிப் போகிறோம் என்றான்.இன்னொரு முறை பகீர் என்றிருந்தது. ரயில் புறப்பட்டது. அதுவரை பிளாட்பாரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் ரயிலுக்குள் ஏறினோம் ரயிலில் இடம் நிறைந்திருந்தது. ஒரு சீட்டில் ஓரத்தில் அவனது தங்கை, அடுத்து அவன் அம்மா...அப்புறம் இன்னொரு பெண், அவளது கணவன்.,ழந்தைகள் என்று நிறைந்திருந்தது. அதற்கு எதிரே, மேலே எனக்கு “ரிசர்வ்” செய்யப்பட்ட லக்கேஜ் கேரியரில் சத்யன் வீட்டு சாமான்கள் போகவும் நிறைய சாமான்கள் நிறைந்திருந்தது....அதன் கீழுள்ள சீட்டும் நிறைந்து விட்டது. எல்லாம் மற்ற பயணிகளுடையது போலிருக்கிறது. எங்கள் இருவருக்கும் இடமில்லை.மேலே யார் சாமான்களை வைத்தது என்று சண்டை போடும் மனநிலையுமில்லை. என்னுடைய ஒரு சிறு லெதர் பேக், அந்த லக்கேஜுகளுக்கிடையே காணாமல்ப் போயிருந்தது.சத்யனது அம்மா அவனை அழைத்து ஓரமாக உட்காரச் சொன்னாள்.அவன் தயங்கினான்...நான் பரவாயில்லை நீங்கள உட்காருங்கள்..”.என்றேன்.

பொதுவாக நிறைய சாமான்களுடன் ரயிலில் வருபவர்கள் சாமர்த்தியமாகவே இருப்பார்கள் போலிருக்கிறது.. ஒருவர், ”தம்பி நீங்க மேலே இடம் போட்டிருந்தீங்களா.....”என்று சொல்லியவாறே எழுந்து, நாலைந்து உருப்படிகளை எடுத்து காலுக்கடியில் திணித்து விட்டு, ”நீங்கள் அங்கே படுத்துக் கொள்ளுங்கள்..” என்றார். சொல்லிவிட்டு அமைதியாக அவர் இடத்தில் உட்கார்ந்து கொண்டார். அதில் உட்கார வேண்டுமானால் செய்யலாம். படுக்க முடியாது. நான் அதில் அமர்ந்தேன். காலைத் தொங்கப்போடவும் முடியாது....எப்படியோ சாய்ந்து உட்கார்ந்தேன். எதிரே சத்யன், அடுத்து அவன் தங்கை. அவள் அவனது தோளில் சாய்ந்து... கண்ணை மூடிக் கொண்டாள். சத்யன் கண்ணீர் ஓரங்கட்டிய முகத்துடன் சன்னலில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்தால் அவன் தங்கையையும் பார்க்க வேண்டும். அவனது அம்மா ஒரு சிறிய தகரப் பெட்டியை மடியில் வைத்தபடி விழித்துக் கொண்டே இருந்தாள்.அதில் என்ன இருக்கும் என்று தோன்றியது. ’தீர்த்த யாத்திரா’ மலையாளப் படத்தில் இப்படித்தான், சாரதாவும் அவளம்மா, தங்கை, (படாபட் ஜெயலக்ஷ்மி) தம்பி என்று ஒரு சிறிய ‘பகவதி அம்மன்’ சிலையொன்றை, பிடிவாதமாக வழிபட்டு, இதே போல் ஒரு தகரப்பெட்டியில் வைத்து எடுத்துக் கொண்டு ஊர் ஊராகப் பிழைக்கப் போவார்கள்.

http://www.jointscene.com/php/video_detail_movie.php?id=332543.2

http://www.jointscene.com/php/video_detail_movie.php?id=332542.2

மனதை ரொம்பவும் உலுக்குகிற படம். மலையாளப்படங்கள் பூராவுமே அப்படித்தான் இருக்கும். அதற்காகவேதான், நம்மையே வருத்திக் கொள்ளுகிற ஒரு சோக சுகத்துக்காகவே, அவைகளை விரும்பிப் பார்க்கிறோமோ என்று கூடத் தோன்றும்.

அதே போல் இவர்களும் ஏதாவது கடவுள் சிலைகளைச் சுமந்து திரிகிறார்களோ...என்று தோன்றியது.. அப்படியானால் அந்தப் படம் போல இவர்கள் வாழ்க்கை ஆகிவிடக்கூடாதே என்ற பயம் வந்தது.சத்ய்னைப் பார்த்தேன் அவன் முகம் அதே போல் இறுக்கமாகவும் , கண்ணீர் உறைந்து போனது போலவும் ரயிலின் மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது.எந்தப் பிடிமானமும் இல்லாமல் எப்படி... கிளம்புகிறார்கள் என்றே தோன்றிக் கொண்டிருந்தது. தூக்கமும் வரவில்லை. தூங்க வசதியுமில்லை....கீழே இறங்கி.. வாசலருகே போய் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். வாசலுக்கருகேயும் கூட்டமாய் இருந்தது.நான் வந்ததாலோ என்னவோ, அவனது அம்மாவும் தங்கையும் பாத் ரூம் போக வந்தார்கள். நான் சிகரெட்டை அணைக்காமல் வெளியே சுண்டி எறிந்தேன்... அது கங்குச் சிதறலுடன் இருட்டில் பறந்து விழுந்தது....எந்த ஊரோ..

காலையில் ஜங்ஷனில் இறங்கியதும்....வீடு எங்கே இருக்கிறது.. ஏதாவது வண்டி அமர்த்திக் கொண்டு சாமான்களைக் கொண்டு போகலாமா என்று கேட்டேன். அவன், வேண்டாம் என்று.. தலையை அசைத்து விட்டான். “பக்கம்தான், ரயில்ப்பாதை வழியாகவே கூட சென்று விடலாம்..”.என்றான் ”நீங்கள் போய் வாருங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் “ என்று அவன் அம்மாவும் சொன்னாள்.அவனைத் தனியே அழைத்து பத்து ரூபாய் மட்டும் கொடுத்தேன்...மொத்தச் சம்பளத்தையும் அந்த மாதமாவது, என் வீட்டில் கொடுக்க நினைத்திருந்தேன்.... அதை.வாங்கிக் கொண்டான். எப்போதும் போல் கை கொடுத்து, ”சரி பார்ப்போம்”என்றான். அவர்களிடம் சொல்லிக் கொள்ளத் தோன்றவில்லை, கிளம்பினேன்.

நானே அப்புறம் ஊரோடு வந்துவிட்டேன்.என் வேலையும் காலி..மறுபடி வேலை தேடும் படலம்..விட்ட பாடங்களைப் படித்து தேர்வுக்கு தயாராவது....என்று கழிந்தது..சுப்ரமணிய ராஜு சொல்லுவான், “கவலைப்படாதே, உனக்கு எப்படியும் வேலை கிடைக்காமல் இருக்காது “ என்று .பாலகுமாரனும் அவ்வப்போது தைரியமூட்டுவான். ராஜு, சென்னையில் அவனது டி.டி.கே கம்பெனியில் எனக்காக முயற்சிகள் மேற்கொண்டிருந்தான்.அவன் சொன்ன மாதிரி எப்படியோ ஒரு தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. அதே சமயம் சத்யனுக்கும் ஒரு தனியார் வங்கியில் வேலை கிடைத்து விட்டதாகச் சொன்னார்கள்.நல்லவேளை, மலையாளப்படங்கள் மாதிரி முழுக்க முழுக்க சோகமாய் அமையவில்லை வாழ்க்கை என நினைத்துக் கொண்டேன்.

'ஆதர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா’ என்று டெல்லியில் அகில இந்திய எழுத்தாளர்களுக்கான அமைப்பு ஒன்றிருக்கிறது. பிரபல எழுத்தாளர் சிட்டி, மு.கு.ஜகன்னாத ராஜா ஆகியோரின் நியமனத்தால் (ஏற்கெனவே அதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் இரண்டு பேர் நாமினேட் செய்ய வேண்டும், குறைந்தது நான்கு புத்தகங்கள் வெளியிட்டிருக்க வேண்டும்.) நானுமதில் உறுப்பினன் ஆனேன். அவர்கள் ஆண்டு தோறும். விழா ஒன்று நடத்துவார்கள்.ஒரு முறை டெல்லியிலும், மறு ஆண்டு இன்னொரு மாநிலத் தலைநகரிலும். நடக்கும். போக வர, இரண்டாம் வகுப்புப் படி தந்துவிடுவார்கள். முதல் முறை டெல்லிக்குப் போனேன். நான் தனியாகப் போனேன். சா.கந்தசாமி, ’கசடதபற’கிருஷ்ணமூர்த்தி, நா.பா, திருப்பூர் கிருஷ்ணன், என்று பல நண்பர்கள் வந்தார்கள். குடும்பத்தில் யாரும் வரவில்லை.டெல்லி ஆக்ராவெல்லாம் தனியாகச் சுற்றினேன்.அப்போதே நினைத்துக் கொண்டேன் அடுத்த முறை இப்படி யாத்திரை கிளம்பினால், மனைவி குழந்தைகளை அழைத்து வரவேண்டும் என்று.

அடுத்த முறை, அஹமதாபாத்தில் நடைபெற்றது. குடும்பத்தோடு சென்றிருந்தேன். 1984 என்று நினைவு.அப்பொழுதெல்லாம் கிரெடிட் கார்ட், வசதியெல்லாம் கிடையாது. அதிக பட்சம், டிராவலர்ஸ் செக் (டி.சி) வைத்துக் கொள்ளலாம். அதுவும் ஸ்டேட் பாங்க் டி.சி. என்றால்தான் மாற்றுவது எளிது. நான் கொஞ்ச ரூபாய்க்கு டி,சி வாங்கி வைத்துக் கொண்டேன்.அஹமதாபாத் முடித்து பாம்பே போய், பெங்களூர் வழியாக ஊர் திரும்ப திட்டம்.முன்று நாள் மீட்டிங் நடக்கும் அஹமதாபாத்தைச் சுற்றிப்பார்க்க, குஜராத் அரசாங்கமே ஏற்பாடு செய்திருந்தது. அப்போது அமர்சிங் என்றொரு முதலமைச்சர்.

அவர் எல்லோருக்கும் விருந்தெல்லாம் கொடுத்தார்.பம்பாய்க்கு கிளம்பும் முன், கொஞ்சம் செக்கை காசாக்கிக் கொள்ளலாம் என்று யோசித்தேன். அஹமதாபாத் “லால் தர்வாஜா” அருகில், சித்தி சைய்யத் மசூதி அருகில் ஒரு ஸ்டேட் பாங்கை பார்த்த நினைவு சித்தி சைய்யத் மசூதியின் கல் ஜன்னல்கள் சித்திர அமைப்பில் இருக்கும் . மிகவும் பிரபலம். அஹ்மதாபாத்தின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று. அதைப் பார்த்து வந்த போது பாங்கையும் பார்த்த நினைவு.அதற்காகப் போனோம்.வழியில், அருகிலேயே, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் வங்கி இருந்தது. அதிலும் மாற்றலாம். அதனால் அங்கே போனேன். நேராக மேனேஜர் அறைக்குப் போய் நானும் ஒரு வங்கி அலுவலர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, விஷயத்தைச் சொன்னேன்.கிட்டத்தட்ட ஒரு வாரமாக தமிழ்நாட்டிலிருந்து தள்ளி இருந்ததாலும், பல மாநில எழுத்தாளர்களுடனும் பேசிக்கொண்டிருந்ததாலும் அரைகுறை ஆங்கிலம் பழகி இருந்தது. மேனேஜரிடமும் அப்படியே பேசினேன். அவர், தயங்கினார். பக்கத்தில்தான் ஸ்டேட் பாங், அங்கேயே மாற்றிக் கொள்ளுங்களேன் என்றார்.நான் உங்களுக்கு கமிஷன் கிடைக்குமே என்றேன்.

அவர் அன்றைய தபால்களைப் பிரித்துக் கொண்டிருந்தார். ஒன்றுமே சொல்லவில்லை.திடீரென்று, பியூனை அழைத்தார்.”இந்தாப்பா.... சத்தியவாசகனுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்திருக்கு” என்று சொன்னார்.பியூன் அதை வாங்கிக் கொண்டு வேகமாகச் சென்றார். பத்து வருடத்துக்கு அப்புறம் கேள்விப் படுகிற பெயர்.சற்றே வித்தியாசமான பெயர். ”யார் சார், மதுரை சத்தியவாசகனா, “ என்றேன். ”ஆமா தெரியுமா”, என்றார். ”வடக்குச் சித்திரை வீதி கிளையில் இருந்தாரே அவரா” என்றேன். ”ஆமா அவரேதான் உங்களுக்கு தெரியுமா” என்றார். நல்லாத் தெரியும்....என் கிளாஸ் மேட் என்றேன்.இவ்வளவு நேரம் நீங்க கஷ்டப்பட்டு ஆங்கிலம் பேசியிருக்க வேண்டாமே என்று தமிழில் சிரித்து விட்டு, மறுபடி பியூனை அழைத்து, “சத்தியவாசகனைக் கூப்பிடப்பா” என்றார், அருமையான ஃபுல் சூட்டில் சத்தியன் வந்தான்.ஆள் அதேமாதிரி ஒல்லியாக இருந்தான்.ஆனால் முகம் தெளிவாக இருந்தது.பார்த்ததும் புரியவில்லை அவனுக்கு. “உங்க கிளாஸ்மேட்டாம், ஏதோ எழுத்தாளர் மாநாட்டுக்கு வந்திருக்காராம்” என்றார், மானேஜர்.புரிந்து விட்டது. அப்படியே கட்டிக் கொண்டான்.” சார் உண்மையிலேயே நல்ல போயட் சார்” என்றான் எனக்கு கூச்சமாக இருந்தது.

மனைவி நண்பர்களிடம் அறிமுகப் படுத்தினேன். “ எல்லாரும் எப்படி இருக்காங்க... ”என்றேன். தங்கை சி.ஏ முடித்துவிட்டு ஆடிட்டராக இருக்கிறாள்.அம்மாவுடன் மதுரையில்தான் இருக்கிறாள்.இரண்டு பேரும் ரொம்ப நல்லா இருக்காங்க ”என்றான்.செக் பூரவையும் உடனே மாற்றி பணமாகத் தந்தான். நிறையப் பேச, வங்கியில் நிறைந்திருந்த அந்த திங்கள்க் கிழமைக் கூட்டமும் அவனது வேலையும் அனுமதிக்கவில்லை. எங்களுக்கும் வேலைகள் இருந்தன. சோம்நாத் போவதா, இல்லை பம்பாய் போவதா என்று தீர்மானிக்க வேண்டும். சத்தியன் சோம்நாத், துவாரகா போய்வாருங்கள் பம்பாயை எப்போதும் பார்த்துக் கொள்ளலாம் என்றான். சோம்நாத் போய் வருவது குஜராத் அரசின் இலவச ஏற்பாடு.எனக்கு யோசனையாக இருந்தது.ஆனால் பம்பாயிலிருந்து பெங்களுருக்கு டிக்கெட் ஏற்பாடெல்லாம் சுப்ரமணிய ராஜு செய்திருந்தான். அப்போதுதான் எஸ்.டி.டி. தொலைபேசி நாட்டில் அறிமுகமாகி இருந்தது. எஸ்,டி.டியில் பேசியே எல்லா பயணத் திட்டங்களையும் சுப்ரமணிய ராஜு செய்திருந்தான்.சென்னையில் அவனைச் சந்திந்த பின்தான் எல்லாமே திட்டமாயிற்று. ”என்னடா ஒரு யோசனையுமில்லாம யாத்திரை கிளம்பிட்டே, அதுவும் சின்னக் குழந்தையோட... ”என்று உரிமையோடு கடிந்து கொண்டான்.

சத்தியனிடம் இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு, முகவரியெல்லாம் கொடுத்து விட்டு, வாங்கிக் கொண்டு விடை பெற்றோம்.”முகவரியெல்லாம் முக்கியமா... நம்மை எது இப்போது சந்திக்க வைத்ததோ அது பார்த்துக் கொள்ளும்... நம்மை....” என்றான். உண்மைதான், ஆனால் அதற்கப்புறம் இன்றுவரை அவனைப் பார்க்கவேயில்லை.....இனிமேல் எந்த யாத்திரையில் எதிர் வருவானோ.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.