”கதையின் முடிவை யாருக்கும் சொல்லாதீர்கள்...”
’முத்துமண்டபம்’ முதலில் எஸ்.எஸ்.ஆர் நாடகமன்றத்தாரால் நாடகமாக நடிக்கப்பட்டது. பின்னர், அவரே தயாரிக்க, திரைப்படமாக வந்தது. 1962 தீபாவளிக்கு வந்தது. தீபாவளி அன்று காலையில் விக்கிரமாதித்யன் படத்திற்குப் போனோம். டிக்கெட்டெல்லாம் முடிந்து விட்டது. இருந்தாலும் கனமான புதுத்துண்டை விரித்துப் பிடித்து, டிக்கெட் கவுண்டர் அருகே தியேட்டர்க் காரர்கள் நின்று கொண்டார்கள்,அதில் 31 பைசாவைக் காண்பித்துக் கரெக்டாகப் போடவேண்டும் அல்லது எட்டணா போடவேண்டும். போட்டதும்,“ஓடுங்கலே” என்று உள்ளே பத்தி விட்டு விடுவார்கள். அப்படி தீபாவளி பொங்கல் சமயங்களில் நடக்கும். அதற்காவே டிக்கெட் முடிந்த பின்னும் தரை டிக்கெட் கியூவை விட்டு வெளியேறாமல் காத்து நின்றோம். அந்த சமயத்தில் மேனேஜரும் பூதத்தானும்தான் அப்படி துண்டில் வசூல் செய்வது வழக்கமாம். என்னவோ என் முறை வந்து நான் எட்டணா போட்டதும்,போதும் என்று நிறுத்தி விட்டார்கள். துண்டு நிரம்பி விட்டது.இரண்டு பேரால் தூக்கிக் கூடப் பிடிக்க முடியவில்லை. எனக்குப் பின் வந்த சில நண்பர்களை விடவில்லை. அவர்கள் அப்படியே ஓட்டமாக ஓடி முத்து மண்டபம் போய்விட்டார்கள்.
விக்கிரமாதித்யன் படம் கூவி விட்டது. மத்தியானம் தெருவில் கூடி அவரவர் பார்த்த தீபாவளிப் படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.எல்லோரும் முத்துமண்டபம் படமே நன்றாக இருப்பதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் அதன் முடிவில் திரையிடும், ”இப்படத்தின் முடிவை யாரிடமும் சொல்லாதீர்கள்” என்ற ’அன்பான வேண்டுகோளை’ப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். இப்படி அதுவரை எந்தப் படத்திற்கும் போட்டதில்லை. அதை சிலர் நம்பக் கூட இல்லை. இதற்காகவே மறு நாள் காலைக் காட்சிக்கு அந்தப்படத்திற்குப் போனேன். உண்மையிலேயே படத்தில் நல்ல சஸ்பென்ஸ்.படத்தின் முடிவில் போடப்பட்ட வாசகத்தைப் பார்ப்பதற்காவே நிறையப்பேர் வந்திருந்த மாதிரி இருந்தது, படம் முடிந்து எல்லோரும் அது பற்றிப்பேசிக் கொண்டு போனவிதம்.
*** ***** ****
அவர் கல்லூரியில் புதிதாக, ஆசிரியராகச் சேர்ந்திருந்தார். எனக்கு நான்கைந்து ஆண்டுகள் முந்திப் படித்தவர். அவரிடம் நிறைய பேர் டியூஷன் படித்துக் கொண்டிருந்தார்கள். பஜாரில் ஒரு அறை பிடித்து, அதில் வைத்து நடத்தி வந்தார். நன்றாகச் சொல்லித் தரக்கூடியவர். அவரிடம் நிறையப் பேர் சேர்ந்துவிட்டதால் என்னிடம் கேட்டார், ”கொஞ்சம் நல்லாப் படிக்கக் கூடிய ரெண்டு பேரை அனுப்புகிறேன் நீ வீட்டில் வைத்துச் சொல்லித் தருகிறாயா” என்று. இரண்டு பேர் பி.யு.சி படிப்பவர்கள், தயங்கித் தயங்கியே வந்தார்கள்..அவர்களுக்கு ஏதோ பிடித்துப் போயிற்று. உண்மையில் நான் பி யு சியை மறுபடி நன்றாகப் படித்தேன் என்று சொல்லவேண்டும். நான் பி.யு.சி எழுதும் போது கணக்கில் தட்டுத் தடுமாறி பாஸாகியிருந்தேன். நாங்கள்தான் மதுரைப் பலகலையில் முதல் பி.யு.சி செட், அதனால்தான் பாஸ் போட்டு விட்டார்கள் என்று பி.எஸ்.சி படிக்கும் போது ஒரு சார் கேலி செய்வார். ஆனால் அவரே வியக்கும் வண்ணம், பி.எஸ்.சியில் நன்றாகப் படித்தேன். எல்லாம் காதல் செய்கிற ரஸவாதம். ஆனால் அதுவே அதைப் பலி வாங்கியதும் நடந்தது. எல்லாம் ஏழரைச் சசி, மன்னிக்கவும் ஏழரைச் சனி.
பி.யு..சி மாணவர்களின் சான்றிதழோ என்னவோ, சார் ஒரு பி.எஸ்.சி மாணவனை அனுப்பி விட்டார். அவர் தினமும் ரயிலில் கல்லூரிக்கு வருகிறவர். நாலரை மணிக்கு வந்து விட்டு ஐந்தரை மணிக்குள் ரயிலைப் பிடிக்கப் போகவேண்டும். அவருக்கு பயிற்சியில் உள்ள எல்லாக் கணக்குகளையும் செய்து கொடுத்தாலே போதுமென்றிருந்தது. பாடத்தை விளக்குவதெல்லாம் வேண்டாம். நான் பத்து வருட பல்கலைக்கழகத் தேர்வின் வினாத்தாள்களை, ஏப்ரல், செப்டம்பர் தேர்வுகள் என இருபது வருடத்திற்குரியவை, அவ்வளவையும் செய்து வைத்திருந்தேன். முதலில் அதை அவரிடம் காண்பிக்கவில்லை. அதைப் பாராமலேயே, கேட்கும் கணக்குகளை, சொல்லிக் கொடுத்து விடுவேன். மாதம் நூறு ரூபாய் என்று பேச்சு. அவருக்கும் பதினைந்து நாள் வந்து போன பின்தான் நம்பிக்கை வந்தது. வீட்டில் வள்ளிசாக அரிசி இல்லை, தயங்கித்தயங்கிக் கேட்டேன், ”தம்பி, ஐம்பது ரூபாய் முன் பணமாகத் தரலாமா” என்று. உடனே கொடுத்து விட்டார். விவசாயக் குடும்பத்திலிருந்து வருகிறவர்தான் ஆனால், கை நிறையப் பணம் வைத்திருந்தார். அஸ்ட்ரானமியும் மெக்கானிக்ஸும்தான் அதிகம் கஷ்டம் என்று கேட்டதால், முதலில் அதையே சொல்லிக் கொடுத்தேன். ஒரு மாதத்தில் இரண்டிலும் பாஸ் பண்ணும் அளவு தேறி விட்டார். அதனால் மற்ற பாடங்களையும் கேட்பார். நான் மறுபடி ஒரு தயக்கத்தோடு, “மாதம் இன்னொரு முப்பது ரூபாய் சேர்த்துத் தர முடியுமா” என்று கேட்டேன். அதற்கும் மறுப்பேதும் சொல்லவில்லை.
|
இரவில் தெருவின் நீளமான திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இப்போது தெருவின் நண்பர்கள் வட்டாரமே மாறி விட்டது. முன்னாலெல்லாம் மண்ணின் மைந்தர்கள் போல தெருவின் மைந்தர்களே அதிகம். இப்போது வேறு வேறு குடும்பங்கள் எல்லாம் வந்து விட்டன. அதில் உள்ள தோள் மட்ட நண்பர்கள் எல்லாம் ஒரு ‘ஜமா’வாகச் சேர்ந்திருந்தோம். புதிதாக வந்தர்களில் ஒருவன் என்னுடன் ஆறாம் வகுப்பு படித்தவன். ஆள் அப்பவே சரியான உருட்டல் பேர்வழி. ஒரு பிள்ளையார் சதுர்த்திக்கு முந்தின இரண்டு நாளைக்கு முன்னால், என்னிடமிருந்த ’ஸ்வான்’ கலர் பாக்ஸ், மேட் இன் இங்க்லேண்ட்’- (ஏற்கெனவே அது அநேகமாய் தேய்ந்து கரைந்த பின்தான் என்னிடம் என் ஒரு அண்ணன் தந்திருந்தான்) அதைக் கொடு, உனக்கு ஒரு அழகான பிள்ளையார் படம் வரைந்து தருகிறேன் என்று கேட்டான். கொடுத்தேன், பாக்ஸும் வரவில்லை, படமும் வரையவில்லை. ஒரு எழவும் படம் வரையத் தெரியாது என்று தெரிந்தபின், பலத்த சிபாரிசுக்குப் பின் வெறும் டப்பாவை மட்டும் கைப்பற்ற முடிந்தது. இப்போது அவன் அவ்வளவு அழகாகப் பாடுகிறான்.
|
ஒரு பக்க வாத்தியமுமில்லாமல் கல்லூரிகளுக்கிடையே நடந்த பாட்டுப் போட்டியில், “எங்கிருந்தோ வந்தாள்” படப்பாடலான ”ஒரே பாடல் உன்னை அழைக்கும்...” .பாட்டைப் பாடி பரிசைத் தட்டி வந்துவிட்டான் என்றார்கள். கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்கள் பலவித வாத்தியங்களுடன் வந்து கொட்டி முழக்கியும் பிரயோஜனமில்லை என்றார்கள். என்னுடன் படித்தவன், எங்கே தடுமாறினானோ, நான் கலூரியை முடித்து வெளியேறியபின் கல்லூரிக்கு வந்தான்..அப்புறம் அவன் லைட் மியூசிக் ட்ரூப்பில் பாட ஆரம்பித்து பெரிய லோக்கல் ஸ்டார் ஆகி விட்டான்.
தெருத் திண்ணை, தெருவின் மேற்கு முனையிலிருந்தது. திண்ணையில் ஏகக் கலாட்டாவாக இருந்தது. அவன் நல்ல பாடல்களாக நன்றாகப் பாடிக் கொண்டிருந்தான். திடீரென்று யாரோ சொன்னார்கள்,“ ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்கு, எம்.எஸ்.விக்குப் பதிலாக, முதலில் அறிவித்திருந்தது போல ‘குன்னகுடி வைத்தியனாதன்’ இசை அமைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்” என்று. அவன் உற்சாகமாக ஆரம்பித்துவிட்டான், ”உலகம் ம்ம்ம்...அழகுஉ கலைகளின் சுரங்ங்கம்....”என்று அழகான துள்ளல் நடைப் பாட்டை “ஒருநாள் போதுமா....” மாதிரியில் சாஸ்த்ரீய சங்கீதமாக இழுத்துப் பாடி ஒரே உற்சாகமாக, எல்லோரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்...சிரிப்பில் லயித்திருந்த போது, கிழக்கிலிருந்து இரண்டு மூன்று பேர் வந்து, “திருட்டு நகை விஷயமாக, பஸ் ஸ்டாண்டில் லாட்டரி டிக்கெட் விற்பவரை போலீஸ் பிடித்துக் கொண்டு போய் விட்டது” என்று. எல்லோரும் டவுன் ஸ்டேஷனுக்குப் போனோம். அங்கே எந்தச் சுவடுமில்லை. நாற்பது வாட்ஸ் பல்பு வெளிச்சத்தில் ஸ்டேஷன் அமைதியாய் இருந்தது. வெளியே நின்று கொண்டிருந்த எஸ் ஐ யிடம் ‘பாடகன்’தான் கேட்டான்., ”சார்,
இந்த மாதிரி ஒரு சந்தேக கேஸ், பிடிச்சாங்களாமே ஆள் எங்கே என்று...” அவன் இதிலெல்லாம் சமர்த்தன். அவனது அண்ணனும் இதேமாதிரித்தான்...போலீஸ் போக்குவரத்தெல்லாம் உண்டு.
நான் போலீஸ் ஸ்டேஷன் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அது பாலிய வயதுப் பழக்கம். ஸ்கூலுக்குப் போகும் வழியில்தான் ஸ்டேஷன். காலையில் அவசர அவசரமாக இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்குப் போகும்போது, மணி என்ன இருக்கும் என்று ஸ்டேஷன் கடிகாரத்தைத் திரும்பிப் பார்ப்பது ஒரு தினசரிப் பழக்கம். அந்த இடம் வந்ததுமே தலை தானாகக் கடிகாரத்தைப் பார்க்க, திரும்பி விடும். அன்றும் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். பாடகன், சொன்னான்,” எங்க கொண்டு போயிருக்காங்க தெரியலையாமே. அது ஜங்ஷன் க்ரைம் ப்ராஞ்சு சம்பந்தப்பட்ட கேஸாம்...அங்க கொண்டு போயிருப்பாங்க” என்றான்.” சரி பையில எவ்வளவு இருக்கு, ஒரு டாக்ஸியப் பிடிப்போம்” என்றான். அன்றுதான் டியூஷன் பீஸ் நூற்று முப்பது ரூபாய் வாங்கியிருந்தேன். ராத்திரி எட்டு மணிக்கு ஆபிரகாம் ஓட்டலில் போய் ரொட்டி சால்னா சாப்பிடலாம் என்று நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டிருந்தேன், அவன் பணம் கொடுத்துப் போன நேரத்திலிருந்து. சொன்னேன், “நூறு ரூபாய்போல இருக்கு” என்று. ”ஏயப்பா இது போதுமே கேஸே நடத்திரலாமே” என்றான். டாக்ஸி ஸ்டாண்டிற்கு வந்து டாக்ஸி கேட்டான். அவர்கள் என்ன எதற்கு என்றெல்லாம் விசாரித்தார்கள். அவனைப்பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். என்னைக் காட்டினான். சம்மத்தித்தார்கள். ஒரு வண்டியில் நான்கு பேர் ஏறிக் கொண்டு கிளம்பினோம். எதிரே அவனது அண்ணன் வந்தான். “தேடிச் சென்ற பூங்கொடி காலில் பட்டது “என்று ஊட்டிவரை உறவு பாட்டை ராகத்தோடு பாடிக் கொண்டே வண்டியை நிறுத்தி அவனிடம் விஷயத்தைச் சொன்னான்.
அவர், “ஏல இப்பதானே க்ரைம் ப்ராஞ்ச் தங்கப்பல் ஏட்டையாவைப் பார்த்தேன், வண்டிய ஓரங்கட்டு, அந்தா அந்த இருட்டுல ரெண்டு தலை தெரியுதுல்லா, அவராத்தான் இருக்கும் வா போய் பார்ப்போம்.” என்றார். போனோம். அம்மன் கோயில் நடை சாத்தி விட்டதால், கடைகளும் அடைத்து, சன்னதித் தெருவின் முன், மண்டபம் பக்கம் இருளாக இருந்தது. அண்ணாச்சி எங்களை கொஞ்சம் தள்ளி நில்லுங்க என்பது போல் கையைக் காட்டினர்.நின்றோம். தங்கப்பல் ஏட்டய்யாவை எனக்கும் பழக்கம். ஆற்றுக்கு தினமும் நாங்கள் குளிக்கும் நேரத்திற்கு அநேகமாக வருவார்.ஆள் அநேகமாக மஃப்டியில்தான் இருப்பார்.நன்றாகச் சிரிப்பார். சுருட்டை முடி, எடுப்பான பற்கள். அதிலொன்று தங்கப்பல்.
அவரருகே கூனிக்குறுகி ஒரு பெண். அவர் கேட்பது, இங்கிருந்தே கேட்டது, “ஏட்டி அவன் யாருட்டி,” அது பேசாமல் நின்றது, ஆனால் சிரிப்பொன்று வந்திருக்கும் போல,” கூதிமவளே சிரிக்கவா செய்தே..”என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே, சற்றுத்தள்ளி இருளில் ஒருவனுக்கு செவுட்டில் அடியொன்று விழுவது கேட்டது.தங்கப்பல் எங்களைப் பார்த்துவிட்டார்.என்னைப்பார்த்து “வே வாரும் என்ன இந்நேரத்தில பாடகர் கூட... “ என்றார். கொஞ்சம் வெளிச்சத்திற்கு வந்திருந்தார். பெண்ணைப் பார்க்க முடிந்தது. இருபத்தி ஐந்து, அல்லது முப்பது வயதுக்குள் இருக்கும் ஒல்லியாய், மாநிறமானாலும் ரொம்ப எடுப்பாய் இருந்தது. ’அண்ணாச்சி’ என்னைக்காட்டி விஷயத்தை சொன்னார்.”அப்படியா, இப்பதானே ஜங்ஷன் ஸ்டேஷனில விட்டுட்டு வாரோம்..., இப்ப ஒன்னும் செய்ய முடியாது...சர்க்கிள் புடிச்ச கேஸ், கோயில் ஈ.ஓ. வீட்டில களவு போன நகைய விக்க ஒருத்தி கொண்டாந்துருக்கா, அவகிட்ட பஸ் ஸ்டாண்டில புள்ளிக்காரர் பல்லை இளிச்சுருக்காரு. அதோட விட்டா பரவாயில்லை... ரெண்டு கடைக்கும் கூட்டிட்டுப் போயிருக்காரு..இவரு வந்ததும், அவ ஒரு கடையில வித்துட்டு அவ கம்பிய நீட்டிட்டா. நகைக்கடை சங்கத்தில, ஸ்டேஷன்ல இருந்து போன லிஸ்ட்டைப் பார்த்துட்டு நேரா சர்க்கிள்கிட்ட நகைய ஒப்படைச்சுட்டாங்க...பின்ன இவருதான் இங்க ஃபேமஸாச்சே... இவருதான் அவளை கூட்டிகிட்டு வந்தாருன்னும் சொல்லியிருக்காங்க.. இவ்வளவு நேரம் அவங்க சங்கத்தில வச்சுத்தான் விசாரிச்சோம், அடிக்க கிடிக்க இல்லை.., காலையில சர்க்கிளப்பாருங்க ...இப்ப போய் பிரயோசனமில்லை” என்றார். அண்ணாச்சி இதுதான் பார்ட்டியா என்றார். இல்லை ”இது வேற, எங்கயோ கருங்குளம் பக்கம்ங்கு.. அவன், அந்த நிக்கானே அவன். ஜோசியம் பாக்குறவன் போல இருக்கு.. தள்ளிகிட்டு வந்துட்டான்...இவ்வளவு நேரம் கோயில்ல டூயட் பாடிட்டு இருந்திருக்கா.. பட்டா ஒருத்தனுக்கு பாத்தியதை ஜோசியனுக்கு...நடை அடைச்சதும் எங்க போறதுன்னு ப்ளாண் பண்றாவோ” என்றார். எல்லாமே சிரித்தபடியே சொன்னது போல் இருந்தது. அவர் முக பாவமே அப்படித்தான்.
என்னிடம், ”வே உமக்கு அவரு என்ன வேணும்” என்று கேட்டார். பதில் சொல்லும் முன்பே, மற்றொரு போலீஸ்காரர், ”ஏட்டையா இவனை ஸ்டேஷன்ல விட்டுட்டு நிக்கேன், நீங்க பார்ட்டிய விசாரிச்சு அனுப்புங்க” என்று ஜோஸ்யனைத் தள்ளிக் கொண்டு போனார். நான் “ஏட்டையா...” என்று கூப்பிடும் முன்பே அண்ணாச்சி, “தம்பி, காலையில நானே வாரேன், போவோம், இப்ப வேணாம் டாக்ஸிய அனுப்பிருவோம்... ”என்றார். தங்கப்பல். “வண்டி இருக்கோ... என்று கேட்டபடியே டாக்ஸியை சைகை செய்து வரச் சொன்னார்.”ஏட்டி ஏறு வண்டில, கழுதைய எஸ்.அய்கிட்ட ஒப்படைப்போம் பசி பிராணன் போகுது” என்று சொல்லிக் கொண்டே பெண்ணை வண்டியில் ஏற்றினார்.அண்ணாச்சி பேசாம இரு என்பது போல் கையைக் காட்டினார்.பேசாமல் இருந்தேன்.எனக்கும் பசி பிராணன் போய்க் கொண்டிருந்தது. டாக்ஸி கிளம்பியது.. அண்ணாச்சி எங்க முத்துமண்டபமா...என்றார்.தங்கப்பல் சிரித்தார், டாக்சியின் ஜன்னலெட்டி.
”டாக்ஸிக்குப் பணம்” என்றேன். ”அதெல்லாம் ஏட்டைய்யா பாத்துக்கிடுவாரு....குறவர் தெரு வாய்க்கால் ஓரம் வசந்த மாளிகை, முத்துமண்டபமெல்லாம் இந்த மாதிரி அரிப்பெடுத்தவள்களுக்குத்தானே கட்டி வச்சிருக்கு., ஜோசியனாம்...மயிராம்.. சுக்கிரதசை, இவங்களுக்கில்லா இருக்கு... வந்து மாட்டுது பாரேன் இவங்களுக்குன்னு” என்று பேசியவாறே நடந்தார். வாயிலிருந்து ஜிஞ்சர்பரீசின் கெட்ட வாடை வீசியது... சாப்பிட்டு நேரமாகி விட்டது போலிருக்கிறது. ” இன்னும் மூனுநாளைக்கி முத்துமண்டபந்தான் மொத்த ஸ்டேஷனும் போய்ட்டுப்போய்ட்டு வரும்...” பேசிக் கொண்டே திண்ணைக்கு வந்து சேர்ந்தோம்..”தம்பி நைசா வீட்டில இருந்து ஒரு தம்ளரும் செம்புல தண்ணீரும் கொண்டாங்க பார்ப்போம்...” என்றார்.கொண்டு வந்தேன்.மடியிலிருந்த பாட்டிலில் இருந்து தம்ளரில் கொஞ்சம் சாய்த்து தண்ணீரை விட்டார். பாதாங்கீர் மாதிரி மஞ்சளாய் திரவம் பொங்கியது. அதற்குள் பாடகன் ஒரு சீப்பு பழம் வாங்கி வந்திருந்தான். ஏற்கெனவே என்னிடம் பத்து ரூபாய் வாங்கியதிலிருந்தோ என்னவோ.”ஏல என்னலே நல்ல கதலிப்பழமா வங்கிட்டு வந்தா என்னலே.....கோழிக்கூடு சவம் இனிப்பே இருக்காதே “ என்று சொல்லிவிட்டு ஒரு தம்ளரையும் ஒரே மூச்சில் காலி செய்தார், விக்கல் வந்தது. ” ங்கோத்தா” என்று கொஞ்ச நேரம் மூக்கைப் பிடித்துக் கொண்டார்..விக்கல் நின்றது.தம்பி சாப்பிட்டுங்க என்று பழத்தை நீட்டினார். இரண்டு பழம் சாப்பிட்டேன் அதுதான் ராத்திரி சாப்பாடு.
காலையில் பாடகன் வந்து விட்டான். வாசலில் ஒரு லேம்ப்ரெட்டா நின்றது..வா, அண்ணாச்சி நம்மளைப் போகச் சொல்லீட்டாங்க....” கொஞ்சம் பெட்ரோல் மட்டும் போட்டுகிடுவோம்” என்றான். அப்போதுதான் பெட்ரோல் விலையெல்லாம் தாறுமாறாகக் கூடியிருந்தது.....அது வேறு பயமாய் இருந்தது. என்னிடம் பணம் கேட்கவில்லை அவனே போட்டுக் கொண்டான்.
ஸ்டேஷனில் நுழையும் போதே.. லாக்கப்பிற்குள் அடி வாங்கிக் கொண்டிருந்தார்கள் நாலைந்து பேர். இவனும். வெறும் அண்டர் வேர் மட்டும் அதற்கும் நாடா கிடையாது, அதையும் உருகி விட்டுத்தான் லாகப்பில் போட்டிருப்பார்கள் போலிருக்கிறது, வேட்டி மாதிரி எப்படியோ சொருகிக் கட்டியிருந்தான். சர்க்கிள் இன்ஸ்பெகடர் எதிர்த்த லாட்ஜில் தங்கியிருந்தார். முகத்திலெல்லாம் ஏதோ ஒரு சாயம் போல பூசியிருந்தார். தூத்துக்குடியில் யாரோ திராவகம் வீசியதில் முகத்தில் வெள்ளை விழுந்து விட்டதாம். அதற்காகச் சாயம். உட்காரச் சொன்னார். பாடகன் என்னை அறிமுகப் படுத்தினான். “ எம். எஸ்,சி படிச்சிருக்கார்...ரொம்ப பெரிய ஃபேமிலி..” என்று. அப்படியா என்று கேட்டுவிட்டு மீண்டும் உட்காரச் சொன்னார்...”கூட்டிகிட்டுப் போய் சாப்பாடு வாங்கிக் கொடுங்க...” நீங்களே அவ யாருன்னு கேட்டு சொல்லுங்க... இவருக்கு தெரியும்ன்னு நம்பகமா த்கவல் வந்திருக்கு..”.என்றார். திரும்பவும் ஸ்டேஷனுக்கு வந்து அவனை அழைத்துக் கொண்டு போனோம். ஏதோ ஒரு மேஜை டிராயரிலிருந்து, ஒரு மலையாளப்போலிஸ்காரர் வேஷ்டியை எடுத்து அவன் முகத்தில் எறிந்தார்....அதை கட்டிக் கொண்டு.. பாடகன்தான் கட்ட உதவி செய்தான்... பக்கத்து பெரிய ஓட்டலுக்குப் போனோம் சாப்பிடவே இல்லை. “என்னை கூட்டிக் கொண்டு போயிருங்க....” என்று பாடகனிடம் அழுதான்.அவன், ”பிள்ளைவாள் பயப்படாதிங்க இன்னம அடிக்க மாட்டாங்க..” என்றான்.
அப்போது அருகே இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர், ”வெள்ளாளனாவே நீயி...பொறவென்ன புத்தி இப்படிப் போயிருக்கு, அது சரி சாதி என்ன வேண்டிக்கெடக்கு” என்று அவரே சொல்லிக் கொண்டார்..என்ன செய்வது என்று தெரிய்வில்லை. கொஞ்சம் செல்வாக்கான உறவினர்களுக்கு சொல்லி அனுப்பி இருந்தது.அவர்கள் வரட்டும் என்றான் பாடகன். ”அதற்குள் வா.... மீனாட்சி புரம் வரை போயிட்டு வந்திருவோம்.. நம்ம ட்ரூப் பாடகி வீட்டுக்குப் போகணும் ரெண்டு நாள் ரிகர்சல் ஆரம்பிக்கணும் ஆலங்குளத்தில், ஒரு கச்சேரி இருக்கு என்றான்.மேடையில் அப்போது அந்தப் பெண் பிரபலம். கருப்பாயிருந்தாலும் ஆள் நல்லாயிருக்கும்..... குரலும் உடலும் சூப்பர்டா என்பார்கள்.போனதும் ஏக வரவேற்பு பாடகனுக்கு....அவளுடைய அப்பா ரயில்வேயில் வேலை பார்ப்பவர்.வீட்டில் அங்கங்கே, ப்ளாட்பாரத்தில் கிடக்கும் ரயில்வே பெட்டிகளாக இருந்தது நல்ல சதுர சைசில் கனமான மரப்பெட்டிகள். அதில் .”...நாயுடு என்று அவள் அப்பா பேர் எழுதியிருந்தது”..அதன் மேல்தான் உட்காரச் சொன்னாள். குளிக்கப் போனவள் ஏதோ ஆடையைச் சுற்றிக் கொண்டு வந்தது போலிருந்தது... இன்னொரு சந்தர்ப்பமானால் சாவகாசமாக அனுபவித்துப் பார்க்கலாம்...மனம் பெட்ரோல் விலை எவ்வளவு இருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருந்தது.
அவள் வீட்டிலொரு ஃபாண்டா கலர் கொடுத்தாள். அது அப்போதுதான் பிரபலமாகி இருந்தது.மறுபடி ஸ்டேஷனுக்கு வரும்போது நல்ல மத்தியானம். லாக் அப்பிற்குள் அடைக்காமல் எல்லோரையும் அடுத்த பின் வெரான்டாவில் உட்கார்த்தி இருந்தார்கள்.பார்க்கப் போனோம். வெராண்டாவையொட்டி ஒரு அறை. அதில் அழகான சின்னப்பெண், மலையாளத்தான், சேலையை உருவிக் கொண்டிருந்தான்..ராத்திரி பிடித்த பிராத்தல் கேஸ்... அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவர், ”சேட்டா இன்னும் ரீபட்டன் போடாத கேஸ் போல இருக்கே” என்று வியந்து கொண்டிருந்தார்.. பாவாடை ஜாக்கெட்டில் நின்ற அவளைப்பார்த்து. உள்ளபடியே எங்களுக்கும் எச்சில் ஊறியது.... ”வே, சர்க்கிள் வரேன்னிருக்காரு, வந்திராம” என்றதும் மலையாளத்தான் அவள் மேல் சேலையை எறிந்து விட்டு என்னை முறைத்தான்.. எனக்கு, ”என்னைக்காவது அதிகாரம் வந்தா உன்னைத்தான் முதலில் உதைக்கணும்” என்று தோன்றியது..
வீடு வந்த பின்னும் அந்தப் பெண்ணின் மிரண்ட பார்வையும் சேலையில்லாமல் நின்ற கோலமும் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. ”இது என்ன, எருமை ஈனிகிட்டு இருக்கும்போது கிடா என்னமோ செஞ்சுதாமே..அது மாதிரில்ல இருக்கு...” என்று கடிந்து கொண்டேன்.
அதற்குள் உறவினர்கள் வந்து விட்டிருந்தார்கள். அவர்கள் கொஞ்சம் பணம் தந்து இன்னொருவரை அனுப்பி சர்க்கிளைப் பார்க்கச் சொன்னார்கள். எப்படியோ மறு ராத்திரி வந்தது. ஆளாளுக்கு என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். பையில் இனும் அறுபது எழுபது ரூபாய் இருந்தது... என்னவெல்லாம் செலவு என்று கணக்கு போட்டுப்பார்க்கையில் தூக்கம் கண்ணைச் சுற்றியது....” வந்துட்டாரு வந்துட்டாரு என்று கனவில் கேட்ட மாதிரி இருந்தது.....” விழித்துப் பார்த்தேன்.. கையெல்லாம் ரேகை எடுத்த கரி. இரண்டு விரல் நகங்களில் ரத்தம் கன்றிய சிகப்பு.....நடுவில் அமர்ந்திருந்தான்.. உறவும் மற்றவர்களும் என்னெவே என்றார்கள். ”அந்த பொம்பளை மறுபடி நகை விக்க வந்து தானாகவே மாட்டிக்கிட்டா.. அவளாகவே அவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லைன்னதும் என்னை அனுப்பிட்டாங்க” நடந்தே வாரேன் என்று சிரித்தான். உம்மகிட்ட டவுன்பஸ்ஸுக்கு சில்லரை இல்லையா என்றதும், வெறும் பர்ஸ்தான் இருக்கு...எல்லாத்தையும் எடுத்துகிட்டாங்க என்றான்” மறுபடி சிரித்தபடி இந்த மாதிரி சந்தர்ப்பங்களில்க் கூட சிரிப்பதனாலும் அவனை எனக்கு பிடிக்கவே பிடிக்காதூ.ஆனாலும் கை நகத்தில் ஊசி ஏத்த்தினான் மலையாளத்தான் என்ற போது தானாடாத மனதைத்தாண்டி தசையாடியது. இரண்டு நாளாய்ச் சாப்பிடாத அம்மா சோற்றுப்பானையில் இருந்து பழையதைப் பிழிந்து தட்டில் வைத்து “சாப்பிடச் சொல்லுப்பா, அண்ணனை, இதான், எடாத எடுப்பு எடுத்தா படாத பாடு படணும்பாக எங்க அம்மாணூ...”(அப்பா) என்றாள் அழுதபடியே......”தாய்க்குத் தலை மகன்” என்று யாரோ சினிமா வசனம் பேசுவது மனதிற்குள், கேட்டது.
|