’திரி கருகும் நேரம்.... ’.
கோயில் பிச்சை சார் நன்றாக கணக்கு சொல்லித் தருவார். இன்னொருவரும் நன்றாகச் சொல்லித் தருவார். ஆனால் அவர் அடி பின்னி விடுவார். அவரிடம் டியூஷன் படிக்கிறவர்களையே அடிப்பார். கையை எட்டிப் பிடிப்பார், அப்புறம் பின்புறமாக வளைத்து மேல் முதுகில் ஒரு குத்து, பையன், ’அம்மா’ என்று கண்ணீர் மல்க உட்கார்ந்து விடுவான். அவ்வளவுதான்...இன்னும் ஒரு மாசத்துக்கு அவன் எந்தச் சேட்டையும் பண்ண மாட்டான். ஒழுங்கா ஹோம் ஒர்க் செய்து விடுவான். கோயில் பிச்சை சார் அப்படியில்லை. அவர் அடிக்க மாட்டார். எப்படியும் எல்லாரையும் கணக்கில் பாஸ் பண்ண வைத்து விடுவார்.
அன்று பள்ளிக்கூடத்தில் டி.ஈ.ஓ ஆய்வு. ஸ்கூல் இன்ஸ்பெக்ஷன். முந்தின நாள், அது ஞாயிற்றுக் கிழமை என்றாலும் கிளாஸுக்கு வந்து கலர் பேப்பர், சார்ட் எல்லாம் ஒட்டி அலங்காரம் செய்திருந்தோம். டி.ஈ.ஓ ஒவ்வொரு கிளாஸாக வரும்போது எங்கள் வகுப்பில் கோயில் பிச்சை சாரின் கணக்கு வகுப்பு. அதனால் சார், இருப்பதிலேயே எளிதான ’வர்க்க மூலம்’(square root) கண்டுபிடிக்கும் பாடத்தை நடத்துவது போல் ஏற்பாடு செய்திருந்தார். அதை ஏற்கெனவே கொஞ்சம் நடத்தியிருந்தார். அதோடு மட்டுமில்லாமல் மாணவர்களை கலவையாக அமர வைத்திருந்தார். வழக்கமாக நன்றாகப் படிக்கும் மாணவர்கள் முன்னடி பெஞ்சுகளிலும், படிக்காத மாணவர்கள் “மாப்பிள்ளை பெஞ்ச்’’ என்கிற கடைசி பெஞ்சிலும் இருப்பார்கள். சார், நன்றாகப் படிக்காத மாணவர்களில் உயரம் குறைந்தவர்களை முன் வரிசையில் உட்கார வைத்திருந்தார். நான், படிப்பில் சுமார் ரகம். இரண்டாவது பெஞ்சு. என்னை கடைசி பெஞ்சில் உட்கார வைத்திருந்தார். தடித்துரைராஜ் பக்கத்தில் நான் உட்கார வைக்கப்பட்டேன்.
துரைராஜுக்கு நிறைய பட்டப்பேர். ஆள், நல்ல சிகப்பாயிருப்பான். அதனால் வெள்ளைப்பாச்சா. எந்தக்காலத்திலோ சின்ன வகுப்பில், இடைவேளையின் போது வெளிக்கிருந்து கொண்டிருந்தவன் அவசரமாக மணியடித்ததும், கழுவாமலே கிளாஸுக்கு வந்து விட்டான்...அதிலிருந்து அவன் பெயர் பீ..கே துரைராஜ் (பீக் குண்டி). இந்தப்பெயரைச் சொன்னால் அநியாயக் கோபம் வந்து யாரானாலும் அறைந்து விடுவான். யாரோ ஒரு சாரையே, பீ.கே என்று கூப்பிட்டதற்கு, முகத்தில் புத்தகத்தை தூக்கி எறிந்து, ”இங்க பாரும், இன்னம இப்படிக்கூப்பிட்டேர்ன்னா, உம்ம வீட்டு பட்டாசலையே நாற அடிச்சுருவே”ன்னு. சொல்லிவிட்டு உட்கார்ந்து கொண்டானாம். மற்றப்படி எப்போதும் சிரித்தபடித்தான் இருப்பான். கோபப் பட மாட்டான். மாப்பிள்ளை பெஞ்சில் எப்போதும் நைசான சிரிப்புச் சத்தம் வரும். அவந்தான் ஏதாவது செய்திருப்பான். டிராயரை விலக்கி பக்கத்தில் உள்ளவர்களுக்கு ‘தரிசனம்’ காண்பிப்பானாம். அவனுக்கு உலக்கைப்பூண் என்றொரு பெயரும் உண்டு.
ஆனால் என் ராசியோ என்னவோ, நான் எட்டாம் வகுப்பில் அவனுடன் சேர்ந்தேன். அது அவனுக்கு மூன்றாம் வருடம், அதிலிருந்து அவன் பாஸாகி என்னுடன் வருகிறான். இதோ எஸ்.எஸ்.எல்.சி வந்து விட்டன். நான் அவனருகே ஒரு எலிக்குஞ்சைப் போல் உக்காந்தேன். ”மாப்பிளை நல்லா உக்காருலே, அத்தான் தொடையில வேணும்ன்னாலும் உட்காருலே” என்றான். பக்கத்தில் பெரிய பெரிய பையன்களாக இருந்தவர்கள் சிரித்தார்கள். எனக்கு என்னவோ போலிருந்தது. மூன்று வருடப் பழக்கம் காரணமாகவோ என்னவோ அவன் அவர்களை அடக்கினான், ”சும்மாருங்கலே, இது எனக்கு உண்மையிலேயே மாப்ளைலே” என்று. அதற்குள் டி.ஈ ஓ வந்து விட்டார். சார், போர்டிலேயே எழுதிப் போட்டிருந்தார். “வர்க்க மூலம்’’ என்று.
டி.இ.ஓ கிளாசை நோட்டம் விட்டார். அவருக்கு இங்கே ஏதோ கோல்மால் நடந்திருக்கு என்று புரிந்த மாதிரி இருந்தது. வேறு சில ’அட்டெண்டண்டன்ஸ்’ ரிக்கார்டுகள, ’ஒர்க் டன்’ ரிஜிஸ்டர் போன்றவற்றையெல்லாம் பார்த்தார்.” உரியோர், உள்ளோர்” (ROLL , PRESENT) எண்ணிக்கையை கண்ணாலேயே சரி பார்த்தார். திடீரென்று, “பதினாறுக்கு ’வர்க்கம்’ என்ன” என்று கேட்டார், முதல் பையன், நன்றாகப்படிக்கும் சிவராமன்,”நாலு” என்றான் கம்பீரமாக. ’’நெக்ஸ்ட்” என்றார். அடுத்தவன், ஒன்றுமே சொல்லவில்லை. திடீரென்று என்னிடம் கேட்டார். ”இரண்டு” என்றேன். சிவராமன் சொன்னதே தப்பென்றால் நான்கின் வர்க்க மூலத்தைச் சொல்லவேண்டுமோ என்று குழப்பமாய் “இரண்டு“ என்றேன். ”நெக்ஸ்ட்”என்றார். ”போச்சு, தொரைராஜ் எங்கே சொல்லப்போகிறான்” என்று நினைக்கும் போதே, நோட்டின் ஓரத்தில் அவன் எழுதிப் பார்த்திருந்ததைப் பார்த்துச் சொன்னான், ”256” என்று.. வகுப்பில் நிறையப் பேர் சிரித்தார்கள். சிரிக்கிறவர்களையெல்லாம், டி.ஈ.ஓ ஏளனமாகப் பார்த்து விட்டு துரைராஜிடம் “குட்” என்றார். சொல்லிவிட்டு எழுந்து போய் விட்டார். கோயில்பிச்சை சார் வணக்கம் வைத்ததைக் கூடப் பார்த்தும் பார்க்காமல் சென்றுவிட்டார்.
வகுப்பில் ஒரே சலசலப்பு. கோயில் பிச்சை சார் துரை ராஜைக் கூப்பிட்டு, தன் சட்டைப்பையிலிருந்த பேனாவை எடுத்துக் கொடுத்து தட்டிக் கொடுத்தார். அதில் பெரிய நன்றியுணர்ச்சி இருந்ததாக இப்போது தோன்றுகிறது. ”என்னடா பசங்களா, ’வர்க்கம்’ (square) நடத்திட்டுத்தானே ’வர்க்க மூலம்’ (square root) நடத்தி இருக்கேன், கெடுத்திட்டீங்களேடா” என்றார். அப்புறம்தான் ”ஆஹா, வந்தவர் எவ்வளவு கெட்டிக்காரர்” என்று புரிந்தது. ஸ்கூலே இந்த வேடிக்கையான முன்னேற்பாட்டைப் பற்றியும், மூக்கறுபட்டது பற்றியும் பேசியதாகச் சொன்னார்கள். கோயில்ப்பிச்சை சாரிடம் ஏகப்பட்ட டியூஷன் மாணவர்கள் உண்டு..அதனாலேயே மற்ற வாத்திமார்களுக்கு அவர்மேல் ஒரு பொறாமை. இந்தச் சம்பவம் அவர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது.
நானும் துரைராஜும் கோயில்ப்பிச்சை சாரிடம் கடைசி மூன்று மாதங்கள் மட்டும் டியூஷன் படித்து, நான் ஒருவாறாய் பள்ளியிறுதித் தேர்வில் கணக்கில் 76 மார்க் வாங்கினேன். இல்லாவிட்டால் பெயிலாகிக் கூட இருந்திருப்பேன். துரைராஜும் பாஸாகி விட்டான். அப்புறம் என் கல்லூரி வாழ்க்கையில் துரைராஜை எப்போதாவது ஏதாவதொரு ரதவீதியில், அல்லது லைப்ரரியில் பார்ப்பேன்..அவனும் சிரிப்பான், ”நல்லாப் படிக்கியா” என்பான். அவன் படிப்பை நிறுத்திவிட்டு சும்மாதான் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் அநேகமாக காபி கிளப் நடத்தி ஓய்ந்து போன ஒருவருடன் சுற்றிக் கொண்டிருப்பான். அவருடன் எப்போதும் இருபது வயதுக்குள்ளான ‘பையன்’கள் ஒன்றிரண்டு பேர் சுற்றிக் கொண்டிருக்கக் காணலாம். அவர் பையன்கள் மேல் நாட்டம் உள்ளவர் என்று சொல்லுவார்கள். ஆனால் ஆளைப் பர்த்தால் வெள்ளையும் சள்ளையுமாய் உடுத்தி சாதுவானவராய் இருப்பார். துரைராஜ் அவருடன் இருக்கையில், என்னைப் பார்த்துச் சிரித்தால் என் மற்ற நண்பர்கள், “ஏலேய் மாப்ளை கற்பு பத்திரம்டா” என்று கிண்டலடிப்பார்கள். இதெல்லாம் கிளப்புக் கடைக்காரர் காதில் விழுந்தாலும் கண்டு கொள்ளாத மாதிரி அவரும் லேசாகப் புன்னகையொன்றை நெளிய விடுவார்.
அதை என் வாழ்வின் இருண்டகாலம் என்பதா அல்லது மறுமலர்ச்சிக்காலம் என்பதா தெரியவில்லை. கல்லூரியில் மூன்று வருடம் முடிந்து, இன்னும் டிகிரியை வாங்காமல், நானும் எழுதுகிறவனாயும் படிக்கிறவனாயும் அலைந்து கொண்டிருந்தேன். எல்லோருக்குமே ஆச்சரியம், ”காலேஜிலேயே முதல் மாணவனாய் நல்லாப் படிப்பானே, மூதேவிக்கு என்ன கெரகமோ டிகிரிய முடிக்காம சுத்துதானெ” என்று பேசிக்கொள்ளுவார்கள்.
|
அன்றும் காலையில் லைப்ரரி போய்விட்டு பேப்பர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ’சித்ராலயா’ என்று டைரக்டர் ஸ்ரீதர் ஒரு சினிமாப் பத்திரிக்கை நடத்தினார். ஆங்கிலத்தில் வரும் ’ஸ்க்ரீன்’ பத்திரிக்கை போல டேப்லாய்ட் மாதிரியில் வந்து கொண்டிருந்தது. வியாழக்கிழமையோ என்னவோ வரும். அதைப் பார்ப்பதற்கு, மார்க்கெட் லைப்ரரியில் அடிபிடியாய் இருக்கும். துரைராஜ் அதை லைப்ரரியன் அறைக்குள் போய் முதன் முதலாய் வாங்கிவந்து விடுவான். அவன்தான் அதை ஒரு ’டின் டாக்’கில் கோர்த்து எடுத்து வருவான். அவன் அதை வாசிக்கும் மேஜைக்கு கொண்டு வந்து விரித்துப் படிக்கும் போது அவனைச் சுற்றி நிறையப்பேர் மொய்த்து நிற்பது வேடிக்கையாய் இருக்கும். அப்போதெல்லாம் அவன் என்னைப் பார்த்து லேசாக கண்ணடிப்பான்., ”பாத்தியா எத்தனை பேர் அத்தானை உரசிக்கிட்டு நிக்கானுக” என்று சொல்கிற மாதிரித் தோன்றும்.
|
நான் எப்போதும் ஸ்க்ரீன் பத்திரிக்கையைக் கேட்டு வாங்கி வருவேன். அன்று நான் அப்படி வந்ததைப் பார்த்து ஒரு கூட்டம் வந்தது, என்னை நோக்கி. நான், யாத்தாடி என்று நினைத்து மேஜையில் போட்டுவிட்டேன். வழக்கம் போல அடுத்த நடைமுறையாக பெரிய கோயில் போனேன். அந்தப் பத்து மணி வாக்கில் கோயிலில் கூட்டமே இருக்காது. முழுக் கோயிலையும் சுற்றி வருவேன் ஒரு பிரகாரத்தையும் விட மாட்டேன். ஒரு சன்னதியையும் விட மாட்டேன். இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அது ஒரு மனோ வியாதியோ என்று தோன்றுகிறது. (ஓ.ஸி.டி. ?) சாமி சன்னதிக்கு இடப்புறமாக மகிஷாசுரமர்த்தினி சிலை அவ்வளவு அழகாய் இருக்கும். அந்தத் தனிமையில் அந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். அதில் உக்கிரமே இருக்காது. கொஞ்சங்கொஞ்சமாய் அதில் வேறொரு முகம் தெரியும்.”ம்ஹூம்...” என்று ஒரு பெரு மூச்சுடன் அதை விட்டுக் கிளம்புவேன்.அன்றும் அப்படித்தான் பார்த்துக் கொண்டே நின்றேன்..விளக்கின் திரி எண்ணெயில்லாமல் பளீரென எரிந்தது.
“ நான் தாகமும் தீராமல்
கண்ணீரும் வற்றாமல்
மெழுகு வர்த்தியாய்
எரிகிறேனே
விளக்குத் திரியாகும்
வரமாவது தாயேன்..”
என்று ஒரு கவிதை தோன்றியது மனதில். இன்னும் கொஞ்சநேரத்தில்...இதுவும் கருக ஆரம்பித்து விடுமே என்று தோன்றியது.
திரி கருகும் வாசனை, அந்த நேரத்தில் இப்படிப் பல சன்னதிகளில் இருந்து வரும் பொதுவாக முக்கியமான சன்னதிகளில்த்தான் அர்ச்சகர்கள் நிற்பார்கள். இப்படி சின்ன சன்னதிகளில் யாராவது அர்ச்சகர் வீட்டு சின்னப் பையன்கள் ஒரு கற்பூரத் தட்டோடு நிற்பார்கள். ஒரு கற்பூரம் காண்பித்து நீட்டுவார்கள். ஏதோ விழுகிற காசை பத்திரப் படுத்திக் கொள்ளுவார்கள். கோயிலில் அந்த நேரம் பல விஷயங்கள் நடக்கும். ஒருமுறை கோயில் கழுவுபவன், வாரியல் ஒன்றை கர்ப்பகிரகத்துக்குள் கொண்டு வைத்து விட்டு வந்தான். அவனாக என்னிடம் சொல்லக் கொண்டான்..”வெளிய வச்சா காணாமப் போயிருது...”தாமிர சபைக்குப் பின்னால், சந்தன சபாபதி அருகே எப்போதும் இரண்டு பேர் அமர்ந்து கல்லூரிப்பாடம் படித்துக் கொண்டிருப்பார்கள். உண்மையிலேயே பாடம்தான் படிப்பார்கள். அதில் எங்கள் கல்லூரிப் பையன் ஒருவன் உண்டு. எனக்கு ஜூனியர். அவன் அவனது அக்கா வீட்டில் இருந்து படித்துக் கொண்டிருந்தான். அப்பா கிடையாது. அவனது மாமா ஒரு ஓட்டல் நடத்திக் கொண்டிருந்தார். அவனது தங்கையைத்தான் மாமா கல்யாணம் செய்து கொண்டிருந்தார். அவளுக்கு சீரும் சிறப்புமாக பூப்பெய்திய சடங்கு நடத்திய சில நாட்களிலேயே திருமணம்.வீட்டில் எப்போதும் ’கிரைண்டர்’ ஓடிக் கொண்டே இருக்கும். ஓட்டலுக்கு அரைத்தது போக வெளி வீடுகளுக்கும் மாவு அரைத்துக் கொடுப்பார்கள். அதனால் அவன் கோயிலுக்கு வந்து விடுவான். (இப்போதுதான் மத்திய அரசின் பெரிய பதவி ஒன்றிலிருந்து ரிட்டையரானான் அவன்.,ஸாரி, ரிட்டையரானார் அவர்)
தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஒரு அம்பி நின்று கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் கற்பூரம் காண்பித்து தட்டை நீட்டினான். என்னிடம் சல்லிக்காசு கிடையாது. அதை ஒற்றிக் கொள்ளக் கூட தயக்கமாய் இருந்தது. ”எடுத்துக்கோங்க சார்’’ என்ற பின், ஆரத்தியைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டேன்.” கல்லாலின் புடையமர்ந்து நான்மறையாறங்கள் வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய்.. ...”என்று. திருவிளையாடற் புராணச் செய்யுளை வாய் முனுமுனுத்தது. சன்னதிக்கு மேல் எழுதிப் போட்டிருந்ததை அவ்வப்போது படித்து ஏதோ மனப்பாடமாய் ஆகியிருந்தது. அப்படியே சங்கிலி மண்டபம் வழியாய் அம்மன் சன்னதிக்குப் போய்விட்டு அதற்குப் பின்னால் இருக்கும் ஒரு சிறிய தெப்பக் குளத்திற்குப் போனேன். அங்கே நிழலும் குளுமையுமாய் இருக்கும். எனக்குக்கூட தோன்றும் இங்கே வந்து உட்கார்ந்து நாம் கூட படிக்கலாமோ என்று. அதற்குப் போகும் பாதை யாரும் அதிகம் புழங்காமல் சற்று இருளாக இருக்கும். தேர்வடம், பல்லாக்கு, திருவிழா வாகனங்கள் எல்லாம் போட்டு வைத்திருப்பார்கள். ஒரு வாகனத்திற்குப் பின்னிருந்து, என் சத்தம் கேட்டு இரண்டு பேர் விருட்டென்று போனார்கள். “நீ நின்னு வாடே” என்று சொல்லிவிட்டு ஒருவர் விறுவிறுவென்று போனார். நான் எதையும் கண்டு கொள்ளாமல், திரும்பி விடுவோமா என்ற நினைப்பைத் தவிர்த்து, ”எவனும் எக்கேடு கெட்டுப் போறான்” என்று மனதுள் சொல்லிக் கொண்டு குளக்கரைக்குப் போய் அமர்ந்தேன்.
|
பின்னால் நிழலாடியது. துரைராஜ் “நீ எங்கே இங்கன....” என்றபடி நின்று கொண்டிருந்தான்.”நான் எப்பவாவது வருவேன்”, என்று சொன்னேன். இரண்டு நிழல்களில் ஒன்று இதுதானோ என்று தோன்றியது. துரைராஜ் குளத்தின் கடைசிப் படியில் நின்று
பக்கவாட்டில் திரும்பி ஒவ்வொரு காலாக தண்ணீரில் நனைத்து அலம்பிக்கொண்டே, கேட்டான்,”வேலைக்கி எதுவும் ட்ரை பண்ணுதியா” என்று. ”இல்லை” என்றேன்.அவனாகவே சொன்னான், ”முன்சிபாலிட்டியில ஒரு வேலைக்கு முயற்சி பண்ணுதேன்...கிடைக்கிறமாதிரி இருக்கு” என்றான்.நான் அமைதியாய் இருந்தேன். உச்சிக்கால பூசைக்குண்டான மேளம் தட்டும் சத்தமோ, சீவிலி வரும் சத்தமோ ஏதோ கேட்டது. துரைராஜ் இன்னும் காலை அலம்பிக் கொண்டே நின்றான்.இருவருமே சற்று நேரம் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.
கற்பூரம் காட்டிய அம்பி, கையில் ஒரு கும்பாவில் அழுக்குத் துண்டு மூடிய அன்றைய படித்தர அன்னக்கட்டியோடு வந்தான். கரையில் அதை வைத்து விட்டு மடியில் இருந்த திருநீற்றுப்பையிலிருந்து சில்லரைக் காசுகளை எடுத்து கடைசிப் படியில் அமர்ந்து கொண்டு பச்சையாய் இருந்த குளத்தின் நீரில் கழுவினான்.”என்னவே அம்பி, இன்னக்கி உம்ம அப்பாவோட முறையா, நீரு வந்திருக்கேரே” என்றான் துரை ராஜ் அவனிடம். “ஆமா லீவுதானேன்னு நான் வந்திருக்கேன்..” என்றவாறே மேலே வந்தான். என்னிடம், ”நம்ம வீட்டுத் தெய்வம்” மாட்னி எத்தனை மணிக்கு போடுவா..” என்று கேட்டான். ”ரெண்டு, ரெண்டரை ஆகும்” என்றேன்.” நடை அடைக்கப் போறா கிளம்புங்க” என்றான். நான் அவசர அவசரமாக கிளம்பினேன். துரைராஜிடம் ஒன்றும் சொல்லவில்லை.
ஊஞ்சல் மண்டபம் முன்னால் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிற வயசாளிகள் சபை கலையத் தொடங்கி இருந்தது. கலைந்தாலும் தள்ளித்தள்ளி பேசிக் கொண்டே இருந்தார்கள். ’விருட்டென்று போன நிழல்’ கொடர வாசலில் நடந்து கொண்டிருந்தது. ஒரு வயசாளி சொன்னார், ”கோயிலா லச்சணமா இல்லை, என்ன அசிங்கமெல்லாமோ நடக்கு, இவன்ல்லாம் கவுன்சிலரா இருந்தவன்....” என்று விரையும் நிழலைக் காட்டி திட்டிக் கொண்டிருந்தார். வெளியே சுள்ளென்ற உச்சி வெயில். கண் கூசியது.
**** *****
விடுமுறை வீணாக்காமல்
சகபாடிகள்
தெருவில் விளையாடிக் கழிக்க
கனபாடிகளுடன்
உபநயனத்தில்
மந்திரம் ஜெபித்து
தானம் வாங்கச் சென்ற
அப்பாவுக்குப் பதில்
பூஜை முறை பார்ப்பான்
கல்லாலின் புடையமர்ந்து
வல்லார்க்கு உரைக்கும்
ஞானகுருவுக்கு:
கற்பூரம் காட்டி
காணிக்கை கேட்பான்
அம்பி-
படித்தரம் வாங்கிக்
கரையில் வைத்துவிட்டு
விபூதியில் குளித்த காசுகளை
முதலைகள் இல்லாத
பொற்றாமரைக் குளத்தில்
கழுவிக் கொண்டே
மாட்னி ஷோ போக
உத்தேசிப்பான்.
என்று என்னுடைய ’எட்டயபுரம்’ குறுங்காவியத்தில் வந்து போனான், ஊரை விட்டுப் போன பல காலத்திற்குப் பின், அந்த அம்பி.
என்னதான் வெளியூரானாலும் சொந்த ஊருக்கு போகாம முடியுமா. போயிருந்த போது ஒரு திருமண வீட்டில், ஒரு உறவினர் தேடி வந்து சொன்னார், ”ஒரு ப்ளான் அப்ரூவலுக்கு முனிசிபாலிட்டிக்குப் போயிருந்தேன், அங்க இருக்கறது உன் ஃப்ரெண்டாம்லெ, செலவில்லாம காரியம் நடந்துட்டுடே” என்று. தன்னிச்சையாய், திரி கருகும் வாசனை நினைவுக்கு வந்து..... மூளை நாசியை நிறைத்தது.
|